முந்தைய அதிகாரத்தில் வெளியாய் நிற்கும் பகைவரைத் தெரியும் வகை சொல்லப்பட்டது. இதில் உடன் வாழும் உட்பகையின் திறம் கூறப்படுகிறது.
புறத்தே தெரியும் பகையைவிட உள்ளத்தே பகைகொண்டுள்ளவரின் தொடர்பு பொல்லாததும் பெருங்கேடு விளைவிப்பதும் ஆகும் என்பது விளக்கப்படுகிறது.
மனத்திலே பகையை வைத்துக்கொண்டு தாங்கள் நினைத்த செயலில் வெற்றி கிட்டுமளவும் உறவுபோலேயிருந்து அதன் பின்னர் பகைவராகி விடுவர் இவர்கள்.
இவ்வஞ்சகப் பகைவர்கள் நண்பர்களைப் போன்று நடித்து வாய்ப்பு வரும்போது தாக்கி அழிப்பர்.
நீறு பூத்த நெருப்பாக இருக்கும் இவர்களின் வெளிப்பேச்சை நம்பி, உடன்வைத்துக் கொள்வோம்; தற்காப்புச் செய்து கொள்ளத் தவறிவிடுவோம்.
நம்முடைய உண்மை நிலையை - வலிமை, குறைபாடுகளை - மிக நன்றாக அறிந்தவர்கள் ஆதலால், பகைவரை விடவும் மிகுந்த விரைவுடன் தாக்கும் நிலையில் இருப்பார்கள். நாம் சோர்ந்திருக்கும் சமயத்தில் சாய்த்துவிடுவர்.
நம்மவர் என்று கருதத்தக்கவர், தாயாதிகள், உறவுமுறையார், உற்றார், குடும்பத்திலுள்ளோர் என்றிவர்களை ஒவ்வொன்றாகக் குறித்து அவர்கள் உட்பகை ஆகாமல் காத்துக்கொள்ள வேண்டும் எனச்சொல்லிக் கொண்டே வந்து, இல்வாழ்க்கையில் கணவன் - மனைவி என்ற இருவர் கொள்ளும் உறவிலும் உள்ளத்தால் அவர்கள் ஒன்றுபடாவிட்டால் அதை உட்பகை என்றே கருதலாம் எனக் குறிப்பாகச் சொல்லி முடிகிறது இவ்வதிகாரம்.
உவமைகள் பல நிறைந்ததாக உள்ளது இவ்வதிகாரம்.
நிழல், நீர், வாள், கேள், மட்பகை, செப்பு, அரம், பொன், எள், பாம்பு முதலியனவைகளைக் காட்டி உட்பகையின் கொடும் தீமை கூறப்படுகிறது.
நிழல்நீர் தீமை தருவதாயின் தீயதுதான்; அதுபோல் நம்மவர் எனத்தக்கவர் தீமை செய்தால் விலக்கத்தவர்களே;
வாள்போல் வெளிப்படையான பகைவர் பற்றி பயம் கொள்ளத் தேவையில்லை. நட்பினர்போல் உள்ள உடபகையினர் பற்றித்தான் கவலை கொள்ளவேண்டும்;
மண்ணுக்குப் பகையான நீர்வெள்ளம் அதை அடித்துப்போவது போல உட்பகை தப்பாமல் அழிக்கும்;
அரத்தினால் ராவப்பட்ட இரும்பு போல உட்பகை உண்டாகிய குடி தேய்ந்து வலியழியும்;
செப்பு போல ஒட்டியும் ஒட்டாமலும் இருப்பர் உட்பகையினர்;
எள்ளின் பிளவுபோல மிகச் சிறிதாக இருந்தாலும் உட்பகை தன்னுள் அழிவினை உடையதாம்;
மனஒற்றுமையில்லாதவர்கள் கூடிவாழ்தல் ஒரு வீட்டிலே பாம்போடு குடியிருந்தார் போலும் ஆகிய உவமைகள் மூலம் உட்பகையின் கொடிய தன்மையும் அளவில் சிறிதேயாயினும் உட்பகை அஞ்சப்பட வேண்டியதே என்பதும் உணர்த்தப்பட்டன.