இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0885



உறன்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்

(அதிகாரம்:உட்பகை குறள் எண்:885)

பொழிப்பு (மு வரதராசன்): உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: உறவு முறையோடே வுட்பகை தோன்றுமாயின், அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும்.
இது சுற்றத்தாராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.

பரிமேலழகர் உரை: உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
(அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புக்களைத் தேய்த்தலும் முதலாயின.)

இரா இளங்குமரனார் உரை: நெருங்கிய உறவு முறையினால் ஒருவனுக்கு உட்பகை தோன்றினால் அஃது அவனுக்கு இறக்கும் முறையால் துன்பம் பலவற்றைத் தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உறன்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும்.

பதவுரை: உறல்-உறவு; முறையான்-முறைத்தன்மையோடு; உட்பகை-உட்பகை, உள்ளாய் நிற்கும் பகை; தோன்றின்-உண்டாவதாயின்; இறல்-இறுதி, சாதல்; முறையான்-முறையோடு கூடிய; ஏதம்-குற்றம்; பலவும்-பலவும்; தரும்-கொடுக்கும்.


உறன்முறையான் உட்பகை தோன்றின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உறவு முறையோடே வுட்பகை தோன்றுமாயின்;
பரிப்பெருமாள்: உறவின் முறையோடே வுட்பகை தோன்றுமாயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: உறவு-உறுதல் ஆயிற்று.
பரிதி: உறவின் முறையான் உட்பகையாகில்;
காலிங்கர்: தம்மோடு வந்து உறுதல் பண்பினான் யாவன் மாட்டு உட்பகை தோன்றுவதாயின்; [உறுதல்- வந்து பொருந்துதல்-நட்பாதல்]
காலிங்கர் குறிப்புரை: உறல் என்பது தம்மோடு வந்து உறுதல் என்றது. முறைமை என்பது மரபு.
பரிமேலழகர்: புறத்து உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; [உறவுமுறைத் தன்மை - சுற்றாமாம் தன்மையோடு]

'உறவு முறையோடே வுட்பகை தோன்றுமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறவு முறையில் பகை உண்டாகின்', 'உறவு முறை உடையானிடம் உட்பகை தோன்றினால்', 'உறவு முறை உள்ளவன் உட்பகை ஆகிவிட்டால்', 'ஒருவனுக்கு உறவினனது உட்பகை ஏற்படுமாயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உறவினனது உட்பகை உண்டாகிவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

இறல்முறையான் ஏதம் பலவும் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது சுற்றத்தாராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.
பரிப்பெருமாள்: அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சுற்றத்தாராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.
பரிதி: தனக்குக் கேடு; அதனால் அனேகம் விதனம் வரும் என்றவாறு.
காலிங்கர்: அதனான் இறுதல் பண்பினான் வரும் குற்றம் ஒன்று இரண்டு அல்ல பலவும் விளையும் என்றவாறு. [இறுதல் - விலகுதல்]
காலிங்கர் குறிப்புரை: இறல் என்பது உயிர்க்கு இறுதி, பொருட்கு இறுதி வருதல் என்றது.
பரிமேலழகர்: அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புக்களைத் தேய்த்தலும் முதலாயின. [கோறல் - கொல்லுதல்; தேய்த்தல் - நாளுக்கு நாள் தம்மளவில் குறைதற்குரிய செயல்களைச் செய்தல்]

'அது கெடுதல் முறைமையோடே கூடப் பல துன்பத்தினையும் தரும்/இறத்தல் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சாகும்படியான பல துன்பம் தரும்', 'இறுதியைத் தரும் முறையில் துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும்', 'உயிருக்கே அபாயம் வரக்கூடிய துன்பங்களும் பல உண்டாகும்', 'அவன் கெட்டொழிதற்கு உரிய குற்றங்கள் பலவற்றையும் அது விளைக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சாகும்படியான முறையில் துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உறவினனது உட்பகை உண்டாகிவிட்டால் அது சாகும்படியான முறையில் துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.
'இறல்முறையான்' என்றால் என்ன?

உறவுக்காரர் உட்பகை ஆகிவிட்டால் சாவடித்து விடுவார்.

உறவினர் உள்ளத்தில் பகைமைக் குணத்துடன் இருப்பார்களானால் அந்தப் பகைமை ஒருவனுக்கு, அவன் இறந்துபடுவதற்கு ஏதுவாய குற்றங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
உறவின்முறையார் இயல்பில் உதவி செய்வதற்குரியவர். அவர் உறவின்முறையில் உள்ளோரது இன்பதுன்பங்களைப் பங்கிட்டுக்கொள்பவராக அறியப்படுபவர்; குடிக்குள் உரிமையோடு வலம் வருபவர்; அங்குள்ள உட்குட்டெல்லாம் தெரிந்தவராக இருப்பார். அந்த உறவினரே உட்பகை ஆகிவிட்டால்? ஒருவர்க்கு யார் வேண்டுமானாலும் உட்பகையாகலாம். உட்பகை என்பது வெளியில் நட்பாக உறவாடிக்கொண்டு உள்ளே பகைத் தீயை வளர்த்துக்கொண்டிருப்பது. உறவினர் உட்பகையாவது வெளியார் உட்பகையாவதிலிருந்து வேறுபட்டது. இந்த உறவினர் உட்பகையுற்றவரது அருகிருந்தே குற்றங்கள் பல புரிந்து கொண்டு அவர் சாகும்படியான துன்பங்களைத் தருவார்.
குற்றங்கள் என்பன: புறப்பகைக்குத் துணையாய் நின்று அது வெளியே தோன்றாமல் கொல்லுதல் போன்ற வஞ்சனைகளில் ஈடுபடுதல், உடைமைகள், ஏனைப்பொருள்வகைகள், நட்பினர் இவற்றை நாளுக்கு நாள் தம்மளவில் குறைதற்குரிய செயல்களைச் செய்தல், பகைவர்க்கு காட்டிக் கொடுத்தல், தனியனாக்கி ஓடச் செய்தல் போன்றன. உட்பகையுற்றவரது சோர்வையும் அவரை வெல்லும் செயலையும் அதற்குரிய இடத்தையும் பகைவர்க்குத் தெரிவித்தல் முதலிய குற்றங்களையும் அவர் செய்வார். இதனால் உட்பகை கொண்ட உறவுமுறையினரை அடையாளம் கண்டு, விலகி, தம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.

'இறல்முறையான்' என்றால் என்ன?

'இறல்முறையான்' என்றதற்குக் கெடுதல் முறைமை, கேடு, இறுதல் பண்பு (இறல் என்பது உயிர்க்கு இறுதி, பொருட்கு இறுதி வருதல்), பிராண ஹானிபரியந்தம் (உயிர்க்கிறுதி வரை), இறத்தல் முறையான, இறக்கும் வகையான, அழிவைத் தரும்படியான, சாகும்படியான, இறுதியைத் தரும் முறையில், இறத்தல் முதலாய, அழிவு வரக்கூடிய தன்மையுள்ள, இறக்கும் முறையால், கெட்டொழிதற்கு உரிய, இறத்தல் முறையோடு, இறக்குந் தன்மையான, இறப்பு வரும்வரை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இறல் முறையான் ஏதம் என்பது இறத்தலை ஒத்த துன்பம் எனப் பொருள்படும். உள்ளத்தில் பகையோடு பழகிக்கொண்டே வெளிப்படையாக ஏதும் தெரியாதவாறு பல குற்றங்களைச் செய்யும் உறவினன் 'இறக்கும் வகையான' துன்பங்களைச் செய்துகொண்டே இருப்பான்.

'இறல்முறையான்' என்ற தொடர் இறக்கும் வகையான் என்ற பொருள் தருவது.

உறவினனது உட்பகை உண்டாகிவிட்டால் அது சாகும்படியான முறையில் துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உறவினன் உட்பகையாக மாறினால் குடிகெடும்.

பொழிப்பு

உறவினனது உட்பகை தோன்றினால், அது சாகும்படியான முறையில் துன்பங்கள் பலவற்றையும் கொடுக்கும்