உரையாசிரியர்கள் உரையினுள் புகுந்தால் உண்மையைக் காண்பது அரிது; உரைகள் மதியை மயக்குவன; உண்மையை ஒளிப்பன; குழப்பமே
தருவன என்பது அவர்கள் மீது கூறப்படும் பொதுவான குறைகளாகும். ஆயினும் ஏனைய சங்கத்தமிழ் நூல்களுக்கும் மற்றும் குறளுக்கும்
உரை எழுதி அவற்றைக் காத்துத்தந்தவர்கள் உரையாசிரியர்களே. குறளுக்கு உரை செய்த புகழ்பெற்ற அறிஞர்கள் பல துறை அறிவுக்கூறுகள்,
பல்கலைப் புலமை கொண்டவர்கள். அவர்கள் அகராதித் தொண்டாற்றினர்; இலக்கண ஆராய்ச்சி செய்தனர்; இலக்கியச் சுவை நல்கினர்;
திறனாய்வாளராகத் திகழ்ந்தனர்; குறளுக்குக் களங்கம் சேர்க்கும் நோக்கில் அமைந்த வஞ்சன உரைக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பினர்; நம்
நாகரிகம், பண்பாடு, பழக்க வழக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தினர். இவர்கள் செய்த பணி போற்றிப் புகழத்தக்கது.
உரையாசிரியர்கள்
மு வை அரவிந்தன் "உரையாசிரியர்கள்" என்ற தனது அரிய விரிவான ஆய்வு நூலில் தமிழ் இலக்கண, இலக்கிய, சமய நூல்கள் பலவற்றின் உரையாசிரியர்களைப் பற்றி பரந்துபட்ட செய்திகளைத் தெளிவாகத் தருகிறார். அவர் நூலில் காணப்படும் கருத்துக்கள் இப்பக்கத்தில் நிறையப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தம் ஆராய்ச்சிக்கு வடிவம் தரும் நோக்கிலும், தாங்கள் பெற்ற இலக்கிய இன்ப அனுபவங்களை மற்றவர்களும் நுகரும் முகத்தானும் உரையாசிரியர்கள் அவற்றை எழுதி வைத்து நூல் இயற்றினர்.
தோன்றிய காலத்தில் புகழுடன் விளங்கிய சில நூல்கள், காலப்போக்கில் ஏற்பட்ட மாறிய அரசியல் சூழல், சமூகச் சிந்தனை மாற்றம்,
சமயக் கோட்பாடுகளின் தாக்கம் ஆகியவற்றால் செல்வாக்கு இழந்தன. இலக்கிய மரபும் இலக்கணக் கோட்பாடும் மாறியதால் சில நூல்கள்
தமக்குரிய இடத்தை இழந்து பின்தங்கின. தமிழ் மொழியில் பழையன கழிந்து புதியன புகுந்து, பழஞ்சொற்களின் பொருள் மாறியதால் சில
நூல்கள் புரியாத நிலையை அடைந்தன. அயல் நாகரிகத்தை ஏற்றுக் கொண்ட மக்களின் புதுமை நாட்டத்தால் சில நூல்கள் அழிந்தன. இவ்வாறு தமிழ்
நூல்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வந்துள்ள தடை, எதிர்ப்பு, புறக்கணிப்பு ஆகியவற்றை அகற்றி அவை இழந்த விட்ட
செல்வாக்கை மீட்டுத் தர உரையாசிரியர்கள் பெருமுயற்சி செய்தனர். இலக்கணக் கொள்கைகளை விளக்கி மொழியை வரம்புகட்டிக்
காத்தும், இலக்கியக் கருத்துக்களை விளக்கிக் காலந்தோறும் பண்பாட்டை வளர்த்தும் தமிழ் மரபிற்குத் தொண்டு செய்ததில்
உரையாசிரியர்களின் பங்கு நிறைய உண்டு.
ஒரு நூலின் கருத்தையோ பாட்டின் பொருளையோ காண்பதற்குப் பல அறிவுக்கூறுகள் வேண்டும். உரையாசிரியர்கள் மொழியியல்,
அறிவியல், உளவியல், சமூகவியல், வரலாற்றியல், சட்டவியல், நாட்டுப்புறவியல் எனப் பல்துற அறிவுக்கூறுகளைக்
கொண்டிருந்தனராகக் காணப்படுகின்றனர். திறனாய்வின் கூறுகளும் பண்டைய உரையாசிரியர்களின் உரைகளில் காண்கிறோம். இது
இன்ன காலத்துத் தோன்றிய நூல் என்ற கால அறிவும், இக்காலத்து இச் சொல்லுக்கு இப் பொருள் என்ற சொல்லறிவும், இன்ன காலத்து
இருந்த பழக்க வழக்கங்கள் இவை என்ற சமுதாய அறிவும், இத்தொடர் ஓடிக்கிடக்கும் முறை இது என்ற நடையறிவும், இன்ன பிறவும்
இருந்தால்தான் பொருளை முரணின்றிக் காண முடியும்.
உரையாசிரியர்களின் பணி பழைய நூல்களுக்கு உரை கண்டதோடு நின்றுவிடவில்லை. அவர்கள் பழைய நூல்களில் பிற்காலத்தவர் எழுதிச்
சேர்த்த/திருத்திய பொருந்தாப் பாடல்களை/இடைச்செறுகல்களை ஆராய்ந்து நீக்கினர். ஏடு எழுதியவரால் நேர்ந்த பிழைகளையும் களைந்தனர்.
உரையாசிரியர்களின் துணை இல்லாவிடின் பழம்பெரும் நூல்களில் பொதிந்து கிடக்கும் கருத்து வளங்களை நாம் பெற முடியாமலேயே
போய் இருக்கும்.
"உரையாசிரியர்கள் பண்டைத் தமிழ் நூல்களுக்குச் செய்த ஒரு பெருந்தொண்டு மூலச் செம்மையாகும்" என்பார் வ சு ப மாணிக்கம்.
உரைகள் தோன்றியிராவிட்டால் திருக்குறள் மூலம் பல மூலங்களாயிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இலக்கண நூல்களுக்கு
உரை எழுதிய ஆசிரியர்கள் விளக்கங்களில் பொருள் தெளிவைத் தருகிறார்கள். குறள் போன்ற இலக்கிய நூல்களின் உரைகளிலோ
பொருள் தெளிவோடு நயங்களும் பெருகிக் காணப்படுகின்றன.
குறள் உரையாசிரியர்கள் வள்ளுவர்மேல் மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். காலிங்கர் 'வள்ளுவக் கடவுள்' என்று சொன்னார். பரிமேலழகர்
'தெய்வப் புலமைத் திருவள்ளுவர்' என்று உயர்த்திக் குறிப்பிடுகிறார். சிவப்பிரகாசர் இறைவன் திருவடியோடு ஒத்த மதிப்பு திருக்குறளுக்குத் தந்தார்.
உரை இலக்கணம்:
உரையின் பொது இலக்கணத்தை நன்னூலின் பொதுப்பாயிரம் இவ்வாறு கூறுகின்றது:
பாடம் கருத்தே சொல்வகை சொற்பொருள்
தொகுத்துரை உதாரணம் வினாவிடை விசேடம்
விரிவு அதிகாரம் துணிவு பயனோடு
ஆசிரிய வசனம்என்று ஈரேழ் உரையே. (பொதுப்பாயிரம்-20)
(பொருள்: பாடம் சொல்லலும், கருத்துரைத்தலும், சொல்வகுத்தலும், சொற்பொருள் உரைத்தலும், பொழிப்புரைத்தலும்,
உதாரணம் காட்டலும், வினாத் தோற்றலும், விடை கொடுத்தலும், விசேடம் காட்டலும்(சூத்திரத்து உட்பொருளன்றி ஆண்டைக்கு
வேண்டுவன தந்து உரைத்தல்), விரிவு காட்டலும் (வேற்றுமை முதலிய தொக்கு நிற்பனவற்றை விரிக்க வேண்டியதிருந்தால்
விரித்து உரைத்தல்), அதிகார வரவு காட்டலும் (அவ்வதிகாரத்தோடு பொருந்த உரைக்க வேண்டும் வகையில் உரைத்தல்), துணிவு
கூறலும் (ஐயுறக் கிடந்தவழி இதற்கு இதுவே பொருள் என உரைத்தல்), பயனொடு படுத்தலும், ஆசிரிய வசனம் காட்டலும் என்னும்
இப்பதினான்கு பகுதியானும் உரைக்கப்படும் சூத்திரப் பொருள்.)
உரை வகைகள்:
உரைகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துவர்:
பதவுரைகள்:
சொற்கள், தொடர்கள் அனைத்திற்கும் ஒன்று விடாமல் தனித்தனியே பொருள் கொள்ளுமாறு அமையும்.
பொழிப்புரைகள்:
சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர் பொருள் கண்டு, அப்பொருள்கள் கூடியோ, குறைந்தோ, சிதையாமல் அவற்றை
ஒருங்கிணைத்துப் பொருள் கொள்வது.
விரிவுரைகள்:
பதவுரை, பொழிப்புரை என இவற்றுள் ஒன்றோ அல்லது இரண்டையுமே அமைந்து அந்த குறள் பற்றி பல நோக்கிலான விளக்கங்களும் அமையும்.
விளக்கவுரைகள்:
வரலாற்று நிகழ்வுகள், புராணக்கதைகள், சமயத்தத்துவங்கள், நடைமுறை நிகழ்வுகள் போல்வன தந்து, அல்லது அவற்றின் அடிப்படையில் பொருளை விளக்குவதாக அமையும்.
கருத்துரைகள்:
சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர் பொருள் சொல்லுதல் என்று இல்லாமல், குறளின் திரண்ட கருத்தைச் சொல்லும் வகையில் அமையும்.
ஒரு வரி உரைகள்:
சொல்லுக்குச் சொல், தொடருக்குத் தொடர் பொருள் காணுதல் என்று இல்லாமல், குறளின் திரண்ட கருத்துரைகள் கண்டு அவற்றை
மேலும் சுருக்கி ஒரு வரியில் உரை காணும் முயற்சி.
நூலுக்கு உரை காணுதல் என்பதோடு, தேவை கருதி, உரைக்கும் விளக்க உரை காண வேண்டிய சூழல்கள் உருவாக்கம் பெற்றுள்ளது.
அவை உரை விளக்க உரைகள் எனப்படும்.
ஒரு செய்யுள் நூலுக்கு உரைநடையில் கூறுவதோடு செய்யுள் உருவத்திலேயே உரை இயற்றுதலும் உண்டு.
உரை திறனாய்வாளர்கள் நல்லுரை, கவியுரை, தற்சார்புரை, மிகையுரை, குறையுரை, பொருந்தா உரை என்று வகை கண்டு ஆய்வு செய்வர்.
பல உரைகள் ஏன்?
குறளுக்குப் பத்தாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை நூற்றுக்கணக்கில் உரை கண்டிருக்கிறார்கள்; இன்னும்
உரைகள் வந்த வண்னமே உள்ளன. பெரும்பான்மைக் குறட்பாக்களுக்கு உரைகளில் ஒப்புமை உண்டு. சில பாக்களுக்கு உரை சிறிய
வேறுபாட்டோடு உள்ளன. இன்னும் சில பாடல்களுக்கு உரை வேற்றுமை மிகையாக உள்ளன. இது ஒர் பெரிய குறைபாடே ஆகும்.
ஒரு குறளுக்கு ஒரு கருத்துத்தான் இருக்கமுடியும் என்பதை மறுப்பதற்கில்லை. வள்ளுவர் அவ்வாறெல்லாம் விரும்பினாரோ
இல்லையோ, அவரது மொழி ஒரு பாடலுக்குப் பல வகையாய்ப் பொருள் கொள்ள இடந்தருகின்றது.
திருக்குறளுக்குப் பல உரைகள் தோன்றியதற்குரிய காரணங்களை ஆராய்ந்த வ.சுப.மாணிக்கம் கூறுவதாவது:
1. பாட வேற்றுமையால் சில உரை வேற்றுமைகள் காணப்படும். இவை ஆராய்ந்து ஏற்கத்தக்கன.
2. பாடம் கற்பித்துக்கொண்டு ஓரிருவர் புதுப் பொருள் காட்டியுள்ளனர்; இவர் பொறுக்கத் தகார்; கண்டிக்கத் தகுவர்.
3. இலக்கண வறுமையாலும் இலக்கணச் செருக்காலும் எழுந்த உரைவேற்றுமைகளும் உள; இவை பழிக்கத் தகும்.
4. முன்னோன் எழுதிய உரைப்பொருளைப் பெரிதும் தழுவக்கூடாது; தாம் ஒரு தனியுரை எழுதத் துணிந்ததற்குச் சான்றாக எங்ஙனமேனும் பல
குறட்குப் புத்துரை சொல்ல வேண்டும் என்னும் முனைப்பு.
திருக்குறள் உரை வேற்றுமைகளை நன்கு ஆராய்ந்துரைத்த இரா சாரங்கபாணி உரை வேற்றுமைக்குரிய காரணங்களைப்
பின்வருமாறு கூறுகின்றார்: “ஏடெழுதுவோர் பிழையால் புகுந்த பாட வேறுபாடுகளும், குறளைப் பிரிக்கும் முறைகளும் சொற்களைக்
கொண்டு கூட்டும் நெறிகளும், காலத்தால் சொற்கள் எய்திய பொருள் வேறுபாடுகளும் சமுதாயத்தின் பழக்க வழக்க மாறுபாடுகளும்
இயல்பாகவே உரை வேற்றுமைகட்கு இடங்கொடுத்து விட்டன. புற நாகரிகச் சார்பும் சமயச் சார்பும் அரசியற் சார்பும் முன்னிற்க,
வலிந்து வேறுபட்ட உரைகளை எழுதினோரும் உளர்."
நூலாசிரியரே உரை எழுதிவிட்டால் உரைவேற்றுமை எழ வாய்ப்பில்லையே என்ற எண்ணம் எழுகிறது. மூல ஆசிரியரே உரையையும்
எழுதிவிடும் வழக்கமும் உண்டு. வடமொழி நூல்களில் இவ்வாறு ஆசிரியரே உரை எழுதும் முறை பெரிதும் உள்ளது. நூலாசிரியரே தம்
கருத்தைத் தாமே இது என்று திட்டவட்டமாக விளக்கி விடுகின்றார். பின் வருவோர் தம் கருத்தை மாறுபடக்கொள்வாரோ, தாம் கூறியுள்ள
அரிய கருத்து விளங்காமல் போய்விடுமோ என்று நூலாசிரியர் அஞ்சியதாலேயே இவ்வாறு உரை எழுதியிருக்கலாம். ஆகையால்
நூலாசிரியரே உரை எழுதிவிட்டால், மற்றோர் உரை தோன்ற வாய்ப்பு இல்லை. நூலைப் படிப்பவர்களுக்கு வேறுவகையான விளக்கமோ,
கருத்தோ தோன்றினாலும் அவற்றைக்கொள்ளத் தடையாக இருக்கும்.
ஆனால் காலந்தோறும் தோன்றும் புதிய கருத்திற்கு அந்நூலில் இடமிருக்காது. நூலின் சிறப்பு, பாடலின் நயம், கருத்தழகு ஆகியவற்றை
நூலாசிரியரே வியந்து, தம் உரையில் பாராட்டிக் கொள்வது சிறப்பாக இருக்காது. தம் புலமை மாண்பைத் தாமே பாராட்டிக்கூறும்
ஆசிரியரை உலகம் எள்ளி நோக்கும் நிலை வரும். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, நூலாசிரியரே உரை எழுதுவதால் பயன்
மிகுதியாக இல்லை என்றே தோன்றுகிறது.
தோன்றியுள்ள பல உரைகளைத் தொகுத்து உரை வேற்றுமைகளை அறிந்து உண்மை காணும் ஆய்விலும் ஆய்வில் கண்ட
முடிவுகளைப் படித்து உணரும்போதும் ஓர் இன்பம் உண்டாகின்றது. ஏதேனும் ஒரு சொல், ஏதேனும் ஓர் இலக்கணக் குறிப்பு, ஏதேனும்
ஒரு விளக்கம் ஆகியவை பற்றி வெவ்வேறு காலத்தில் தோன்றிய வெவ்வேறு நூலின் உரையாசிரியர்கள் என்ன என்ன கருதினர்
என்பதை அறிந்து இன்புறலாம். குறளுக்குப் பல உரைகள் தோன்றியமை நன்மைகளே மிகவும் செய்துள்ளன.
குறள் உரைகளை ஒப்பிட்டு நோக்கும்போது மாறுபட்ட கருத்துகள் வெளிப்படுகின்றன. நூலின்அமைப்பு, உரையாசிரியர்களின் நோக்கு,
பால்தோறும் அமைந்துள்ள இயல்கள், குறள் வைப்புமுறை, ஒரே குறளுக்குப் பலவேறு கருத்துக்கள், ஒரே சொல்லுக்கு வேறுவேறு
பொருள்கள் ஆகியவற்றினால் உரைவேற்றுமைகளை அறியமுடிகின்றது.
குறள் - பழைய உரையாசிரியர்கள்
திருக்குறளுக்கு முன்னர் உரை செய்தவர்கள் பத்து பேர். இதை
தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிமேலழகர் பரிதி-திருமலையர்
மல்லர் கலிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்கு
எல்லை யுரையெழுதினோர். என்ற வெண்பா தெரிவிக்கிறது.
[எல்லை உரை - மிகாமலும் குறையாமலும் அளவோடு அமைந்த உரை]
அக்காலத்திலேயே குறளுக்கு பத்து உரைகள் தோன்றியதை அறிஞர்கள் பெருமையாகப் போற்றிக் கொள்வர்.
இப் பதின்மருள் இன்று மணக்குடவர், பரிமேலழகர், பரிதி, பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய ஐவர் இயற்றிய உரைகள் கிடைத்து அச்சில்
வெளி வந்துள்ளன. ஏனையோர் உரைகள் கிடைக்கவில்லை. கடவுள் வாழ்த்தில் இரண்டு குறள்களுக்குத்(5.6) தாமத்தர் நச்சர் தருமர்
ஆகிய மூவர் உரைகள் கிடைத்துள்ளன.
தருமரைப்பற்றி அபிதானகோசம், “வள்ளுவருக்கு உரை செய்த பதின்மருள் முற்பட்டவராகிய தருமர் (தரும சேனர்) உரையில் ஆருகத
மதக் கொள்கைகளே பிரசங்கிக்கப்பட்டன” என்று கூறுகின்றது. இவரைப்பற்றி வேறு செய்தி எதுவும் தெரியவில்லை. நச்சர் என்பவர்
நச்சினார்க்கினியர் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் பெயரில் உள்ள சில எழுத்துக்களின் ஒற்றுமை தவிர்த்து, நச்சர்தான்
நச்சினார்க்கினியர் என்பதற்குப் போதிய சான்றுகள் இல்லை; நச்சினார்க்கினியரைப்பற்றிய சிறப்புப் பாயிரம் அவர் குறளுக்கு உரை
இயற்றியதாய்க் குறிப்பிடவில்லை. திருமலையர் என்பவர் சமணராய் இருத்தல் கூடும். திருமலை என்பது, வேலூர் மாவட்டத்தில்
உள்ளது; சமணர்க்குரிய இடமாய்த் திகழ்ந்து வருகின்றது. தாமத்தர், மல்லர் ஆகியோரைப்பற்றி எந்தச் செய்தியும் வெளிப்படவில்லை.
பத்து உரைகளே அன்றி, செய்தவர் பெயர் தெரியாத இரண்டு தொல் உரைகளும் உள்ளன. அவற்றுள் ஒன்றினை ‘திருக்குறள்
பழையவுரை’ என்ற பெயருடன் டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் வெளியிட்டுள்ளது. மற்றோர் உரை பரிதியாரின் உரையைத் தழுவி
எழுதப்பட்டுள்ளது. முதல் பதினோரு அதிகாரங்களுக்குமேல் இப்பழைய உரைக்கும் பரிதியார் உரைக்கும் வேறுபாடில்லை. கடவுள்
வாழ்த்துப் பகுதியில் சைவ சமயக் கருத்திற்கு ஏற்பக் கடவுளின் தன்மை கூறப்பட்டுள்ளது. வழக்குச் சொற்களும் வடசொற்களும்
மிகுதியாக உள்ளன. சைவ சமயச் சார்புடைய புராணங்கள் மேற்கோள் காட்டப்பெறுகின்றன. நடைச் சிறப்பு இல்லாவிட்டாலும் கருத்துச்
சிறப்பிற்காகக் கற்று மகிழவேண்டிய இடங்கள் பல உள்ளன.
குறளுக்குத் தனியாக உரை எழுதாமல் வேறு நூல்களுக்கு உரை இயற்றியவர்கள் தம் உரைகளில் தேவையான இடங்களில் குறட்பாக்கள்
சிலவற்றிற்கு உரை எழுதியுள்ளனர். இலக்கிய இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய புகழ்பெற்ற உரையாசிரியர்கள் சிலர்
தமது உரைகளில் குறளை தகுந்த இடங்களில் பயன்படுத்தினர். அவர்கள் வள்ளுவரின் வாக்கை மேற்கோளாகக் காட்டி அவற்றின்
சொற்பொருள் நயங்களிலும் இலக்கண முடிவுகளிலும் பெரிதும் ஈடுபட்டனர். அவ்வுரைகள் புதிய கருத்துகளுடன் மற்ற உரைகளோடு
மாறுபட்டு உள்ளன. தொல்காப்பிய சொல்லதிகாரத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர் இரண்டு இடங்களிலும்,சேனாவரையர் இருபது
இடங்களிலும், நச்சினார்க்கினியர் நாற்பத்தொன்பது இடங்களிலும்,கல்லாடர் மூன்று இடங்களிலும், பெயர் தெரியாத ஒருவர் ஐந்து
இடங்களிலும் குறட்பாக்களை மேற்கோளாகக் காட்டி நயம்பட உரை எழுதியுள்ளனர். குறளை இவ்வுரையாசிரியர்கள் மிக நன்றாக ஊன்றிக்
கற்றுள்ளமை தெளிவாகின்றது. தொல்காப்பிய இலக்கணத்தோடு ஒத்து நடப்பது குறள் என்பது இவ்வுரையாசிரியர்களின் கருத்தாகும்.
சங்கர நமச்சிவாயர் தமது நன்னூல் உரையில் ‘இசையெச்சம் என்னும் இலக்கணத்துக்கு உதாரணமாக,
‘இணரெரி தோய்வன்ன.......’ என்னும் குறளை எடுத்துக்காட்டி மிக அழகாக விரிவுரை எழுதியுள்ளார்.
பழைய உரையாசிரியர்களில்
- மணக்குடவர் உரை இயல்பாகவும் எளிமையாகவும் அமைந்துள்ளது.
- பரிப்பெருமாள் உரை பெரிதும் மணக்குடவரைச் சொல்லிலும் பொருளிலும் தழுவிச் செல்கிறது.
- பரிதியார் உரை பல இடங்களில் மூலத்தோடு தொடர்பில்லாமல் தனித்து நிற்கும்.
- காலிங்கர் உரை நல்ல நடையழகோடு அமைந்திருக்கிறது.
- பரிமேலழகர் உரை செறிவும் நுண்மையும் இலக்கணத் திட்பமும் உடையதாய் இருக்கிறது.
சமண, பெளத்த, வைதிக சைவ, வைணவ, அத்வைத, துவைத, கிருத்தவ, சாங்கிய, பகுத்தறிவு, இயற்கை நெறி, காந்திய,
பொதுவுடைமை நோக்கில் பலர் பலவிதமாக உரை கண்டிருக்கிறார்கள். மதங்களின் நோக்கில், கோட்பாடுகளின் பார்வையில், குறளை
இவ்வுரையாசிரியர்கள் மறு விளக்கம் அளித்துக்கொண்டார்கள். சார்புகளே அற்ற குறளை, விரும்பியோ விரும்பாமலோ, சார்பு நூல்
ஆக்க முயற்சித்தனர்.
இன்றைய உரையாசிரியர்கள்
இக்காலத்தில் பழம்பெரும் நூல்களுக்கு மிக எளிய உரைகள் எழுதி அவற்றை மக்களிடம் பரப்பும் முயற்சி நடைபெறுகிறது.
பழைய உரைகளைத் திருத்தமாக வெளியிடுதல், உரையில் வழுவுள்ள இடங்களை ஆராய்ந்து உண்மை உரைகாணுதல், சிறந்த பாடம்
கண்டு போற்றுதல், உரைக்கு விளக்கம் தரல், கடினமான உரைப் பகுதிக்கு எளிய நடையில் விளக்கம் எழுதுதல் போன்ற நல்ல
முயற்சிகள் நடை பெறுகின்றன. மாணவர்க்கு ஏற்ற வகையில் அடிக்குறிப்பும், வினாவிடைகளும் அமைத்துத் தரல்; உரையில்
வந்துள்ள நயமான பகுதி, உவமைகள், மேற்கோள், பழமொழி ஆகியவற்றைத் திரட்டித் தருதல் போன்ற பயனுள்ள பணிகளும்
நடைபெற்று வருகின்றன.
ஒரு நூலுக்கு வழங்கிய பல்வேறு உரைகளையும் தொகுத்துக் காணவேண்டும் என்ற ஆர்வம் இக்காலத்தில் ஏற்பட்டுள்ளது.
பலருடைய கருத்துக்களையும் ஒரே இடத்தில் காணும் வேட்கை பிறந்துள்ளது; உரை வேற்றுமைகளைக் கண்டு நல்லனவற்றையும்
அல்லனவற்றையும் சீர்தூக்கும் நோக்கம் வளர்ந்து வருகின்றது. செல்வாக்கு உடையவர்களின் சொல்லை அப்படியே ஏற்கும் நிலை
மாறி, நல்லது எது, சிறந்தது எது, பொருத்தமானது எது - என்று ஆராயும் திறன் பெருகி வருகின்றது. புகழ்பெற்ற உரையாசிரியர்களின்
பொருந்தாக் கருத்துக்களை மறுக்கும் துணிவு தலை தூக்கியுள்ளது. யார் சொல்கின்றார்கள் என்று பார்க்கும் நிலை மாறி என்ன
சொல்லுகின்றார் என்று நுணுகி நோக்கும் நிலை ஏற்பட்டு வருகின்றது. (மு.வை. அரவிந்தன்).
இத்தளத்தில்....
குறட்பொருளை வேறுபட்ட கோணங்களில் புரிந்து கொள்ளவும் உரைத் திறனை ஒப்பு நோக்கிப் பாராட்டவும் வெவ்வேறு கால
கட்டங்களில் வாழ்ந்த மணக்குடவர், பரிமேலழகர், மு வரதராசன் (பொழிப்புரைப் பகுதி)ஆகிய மூவரது உரைகளும் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
இம்மூன்று உரையாசிரியர்களைப் பற்றிய சிறு குறிப்புகள்:
மணக்குடவர் (கி பி 10-11-ம் நூற்றாண்டு):
இப்பொழுது நமக்கு முழுதாகக் கிடைத்திருக்கிற குறள் உரைகளின் ஆசிரியர்களில் காலத்தால் முற்பட்டவர் இவர். ஆயினும் இவரே
மற்ற உரைகளைப் பற்றித் தம் உரையில் குறிப்பிடுவதால் இவருக்கு முன்னும் உரையாசிரியர் இருந்தமை புலனாகும்.
இவரது உரை தெள்ளிய தமிழில் எளிய நடையில் பொழிப்புரையாக உள்ளது; தேவையான இடங்களில் மிகச் சுருக்கமாக விளக்கம்
எழுதுகின்றார். மேற்கோள் காட்டி கருத்துரையும் செய்கிறார். குறட்கருத்தை முடிபுரையாகவும் கூறும் போக்கு இவர் உரையில் உண்டு.
குறளின் கருத்து இது என்று கூறுகின்றார். குறள் இருக்கும் அமைப்பிலேயே பொருள் உரைக்கின்றார். தமிழ்ப் பண்பாடு தழுவி
எழுதப்பட்ட தெளிவுரை என்று இவரது உரையைப் போற்றுவர். வலிந்து வட நூற் கருத்தைத் தம் உரையில் புகுத்துவதில்லை.
பரிமேலழகர் உரையை மறுப்பவர்களும் அவரது கருத்தை ஏற்காதவர்களும் மணக்குடவர் உரையையே நோக்குவது மரபாகிவிட்டது.
"இவரிடம் ஆரவாரமோ புலமைச் செருக்கோ காணப்படவில்லை. கற்று அறிந்து அடங்கிய அறிஞராக இவர் காணப்படுகின்றார்." என்று
மு வை அரவிந்தன் குறிப்பிடுகிறார். மேலும் இவர் கூறுவதாவது: "பரிமேலழகருக்குச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் மணக்குடவரே.
இவர் அமைத்துச் செப்பனிட்ட பாதையிலேயே பரிமேலழகர் முன்னேறிச் செல்கின்றார். அதிகாரந்தோறும் அமைந்துள்ள குறட்பாக்களை,
கருத்து இயைபு நோக்கிப் பிரித்துப் பொருள்கூறும் முறையைப் பரிமேலழகர் மணக்குடவரிடமிருந்தே பெற்றுள்ளார். பல குறட்பாக்களின்
உரையும் விளக்கமும்கூடப் பரிமேலழகர், மணக்குடவரைத் தழுவியே உரைக்கின்றார்."
பரிமேலழகர் (கி பி 13-ம் நூற்றாண்டு):
பழைய உரையாசிரியரிகள் பத்துப் பேரினுள் காலத்தால் பிற்பட்டவர். பரிமேலழகர் தமக்குமுன் தோன்றிய ஒன்பது உரைகளையும் கற்கும்
வாய்ப்புப் பெற்றார். முந்தைய உரையாசிரியர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சிறப்பியல்பு காணப்படுகின்றது. எல்லா உரைகளிலும்
உள்ள நல்ல இயல்புகளை அறிந்தார். ஒவ்வொரு உரையிலும் காணப்பட்ட குறை நிறைகளை உணர்ந்தார். இதன் பயனாய் நல்லனவற்றை
மேற்கொண்டு குற்றங்குறைகளை நீக்கி, சிறந்த உரை காணும் வாய்ப்புக் கொண்டார். பாலின் தொடக்கத்தில் எழுதும் விரிவுரை,
இயல்பற்றிய ஆராய்ச்சியுரை, அதிகாரம் தோறும் எழுதும் முன்னுரை, அதிகார வைப்பு முறை பற்றிய விளக்கம், அதிகாரத்திற்குள்
குறட்பாக்களைப் பொருள் தொடர்போடு தொகுத்து நோக்குதல் ஆகியவற்றைப் பரிமேலழகர் தமக்கு முற்பட்ட உரையாசிரியர்களிடமிருந்து
பெற்றார்.
பிற நான்கு பழைய உரையாசிரியர்களும் பொழிப்புரை மட்டுமே வரைந்தார்கள்; மணக்குடவர் சில இடங்களில் விரிவுரை தந்துள்ளார்.
ஆனல் பரிமேலழகர் குறளுக்குப் பதவுரை, பொழிப்புரையோடு விளக்கவுரை கலந்து உரையெழுதியுள்ளார். இவர் சொல்நயம்,
பொருள்நயங்களை எடுத்துக்காட்டுவதோடு தேவையான இடங்களில்(ஏறக்குறைய 500) இலக்கணக் குறிப்புகளும் எழுதியுள்ளார்.
அகப்பொருள் இலக்கணத்தைக் காமத்துப்பாலில் நன்கு பொருத்திக்காட்டி நயமாகப் பொருள் எழுதுகின்றார். இவரது இலக்கண
விளக்கங்கள் இவரது உரைக்கு மிகப்பெரிய வலு சேர்த்தன. பரிமேலழகர் உரையை இலக்கணவுரை என்றும் கூறுவர்.
நம்மால் விரும்பப்படுபவர் என்பதற்காகவோ, பலரால் போற்றப்படுபவர் என்பதற்காகவோ அவர்களிடம் உள்ள தாழ்வான
சிந்தனைகளையும் ஏற்கமுடியாது. பரிமேலழகர் உரையாசிரியர்களில் சிறந்தவர் என்பது உண்மையானாலும் சமயக்கருத்துக்களையும்
ஆரியக் கொள்கைகளையும் இயல்பாகவோ வலிந்தோ புகுத்தி உரையெழுதினார் என்று குற்றம் சாட்டுவோர் பலர் உண்டு. சில
இடங்களில் வள்ளுவர் புகழுக்கு மாசு கற்பிக்கும் வகையிலும் உரை தந்துள்ளார். பெண்கள் இயல்பு பற்றியும் குறளில் இல்லாத,
தவறான, விளக்கம் தந்துள்ளார். குறள் 61-உரையில் 'அறிவறிந்த மக்கட்பேறு' என்ற தொடருக்கு ''அறிவறிந்த' என்றதனான்
'மக்கள்' என்னும் பெயர் பெண்ணொழித்து நினறது' என்று கூறி, 'இதனால் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது' எனவும்
மேலும் ஒரு பொருந்தாக் கருத்தையும் கூறி இருக்கிறார். குறள் 68-இல் 'கேட்ட தாய்' என்பதற்கு 'பெண்ணியல்பால் தானாக
அறியாமல் கேட்ட தாய்' என விசேட உரையில் கூறியுள்ளார். அதாவது பெண்ணிற்கு கல்வி, கேள்விகளால் வரும் அறிவில்லை
எனவும் அதனால் தாய் தன் மகன் சான்றோனாய்த் திகழும் சிறப்பத் தானே அறிய மாட்டாள் எனவும் ஊர்ப்பெரியோர் வாயிலாகக்
கேட்டே அறிவாள் எனவும், அவ்வுரை கேட்டமையால் பெரிதும் மகிழ்வாள் எனவும் கொள்வது பரிமேலழகர் கூற்றாகிறது. இது முற்றிலும்
வள்ளுவத்திற்கு எதிரான கருத்து ஆகும்.
"திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக்கொள்ளப்பட்டது. அது தான் நால்வகை நிலைத்தாய் வருணந்தோறும்
வேறுபாடு உடைமையின்" எனவும் "அஃதாவது - தத்தம் வருணத்திற்கும் நிலைக்கும் ஓதப்பட்ட ஒழுக்கத்தினை உடையரால்" எனவும்
ஆங்காங்கே குறட்பாக்களின் உரைவிளக்கங்களில் வருணாசிரம கருத்துக்களை - வள்ளுவர் கருதாததை-நுழைத்து எழுதுகிறார்.
காமத்துப் பாலில் 'பரத்தையிற் பிரிவு ஊடலுக்கு ஒரு காரணம்' என்று, வள்ளுவர் சொல்லாததைச் சொல்லி புலவி, புலவிநுணுக்கம்,
ஊடலுவகை அதிகாரங்களுக்கு துறை வகுக்கும்போது உரை காண்கிறார்.
'பலவிடங்களில் பரிமேலழகர் இலக்கண அமைதிக்காக இலக்கியத்தை முறித்து இயற்கைக்கு மாறான பொருள் கொண்டுள்ளார்' என்று ரா பி சேதுப்பிள்ளை
கருதுகிறார்.
பரிமேலழகர் கொண்ட சில பாடங்கள் மணக்குடவருடைய பாடங்களினும் வேறுபட்டுள்ளன. அவற்றுள் சில மணக்குடவரினும் சிறந்தவை. பிற பாடங்களில்
பரிமேலழகர் உரை ஏற்கமுடியாதனவாக உள்ளன.
இவைபோன்று பரிமேலழகர் பல குறைகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளானாலும் வள்ளுவரின் கருத்தறிந்து உரை எழுதியவர் பரிமேலழகரே என்றும்
பரிமேலழகர் இன்றேல் வள்ளுவரின் பெருமையை நாம் இன்று அறிந்தது போல அறிய இயலாது என்றும் பலரால் புகழப்படுபவர். பரிமேலழகர்
உரையாசிரியர்களுள் நுண்மான் நுழைபுலம் மிக்கவர். இவர் பெருங்கல்வியாளர். வடமொழியிலும் தேர்ந்தவர் என்பது அவரது உரைமூலம் அறிகிறோம்.
இவரது பொருள்வன்மையையும், செஞ்சொற் சிறப்பையும், இலக்கணங் கூறும் திறமையையும், மேற்கோளெடுத்து விளக்கம் செய்யும் வழியையும், வடமொழிச்
சொற்களைச் செந்தமிழ் மொழியாக்கும் திறமையையும், தமிழ்ச்சொற் செல்வமுடைமையையும், வடநூற் பயிற்சியோடு முத்தமிழ்ப் பரப்பெல்லாம் நன்குணர்ந்த
நுண்புலமையையும் இவர்தம் உரைநூல் பறைசாற்றுகின்றது. பரிமேலழகரை நச்சுக்கருத்துகளை விதைத்தவர் என்று குறைகூறும் தேவநேயப்பாவாணர், குழந்தை
போன்றோர்கூட அவருடைய நுட்பவுரைகளை அப்படியே ஏற்று ஆண்டுகொள்கின்றதைக் காணலாம்.
மு வரதராசன்(கி பி 1912 - 1974);
மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன் 20ம் நூற்றாண்டின் நன்கு அறியப்பட்ட தமிழ் அறிஞர்களுள் ஒருவர்.
இக்கால நடையில் எளிய பொழிப்புரை தந்துள்ளார். அவரது கையடக்க உரைப்பதிப்பில் வெளிவந்துள்ள திருக்குறள் தெளிவுரை மக்களிடம் பெரும் வரவேற்பைப்
பெற்றது. "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்", "குறள் காட்டும் காதலர்" என்ற இவருடைய மற்ற குறள் பற்றிய நூல்களும் சிறப்புப் பெற்றன.
புதினம், சிறுகதை, நாடகம், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மொழிவரலாறு ஆகிய துறைகளில் 85 நூல்கள் எழுதி, சாகித்ய அகாடெமி,
தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சிக் கழகம் இவற்றில் பரிசும் பாராட்டும் பெற்றார். இவரது "தமிழ் இலக்கிய வரலாறு" என்னும் நூல் அனைவரும் படித்துப்
பயன்பெறத்தக்கது.
இவரது குறட்புலமை குறித்து திரு வி க கூறுவதாவது: 'வரதராசனார் திருவள்ளுவர் சுரங்கத்தில் பன்முறை மூழ்கி மூழ்கிப் பலதிற மணிகளைத் திரட்டிக்
கொணர்ந்தவர். அவரது நெஞ்சம் திருவள்ளுவர் நெஞ்சுடன் உறவாடி உறவாடிப் பண்பட்டது. அறநெஞ்சினின்றும் அரும்பும் கருத்துச் சிந்தனைக்குரியதே.'