இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றனுள் அரிமா நோக்குடையது பொருள். பொருள், இன்பத்துக்கும் அறத்துக்கும் இன்றியமையாதது. பொருளில்லையேல் இன்பத்துக்கும் அறத்துக்கும் ஆக்கம் ஏது?
--திரு வி க.

பொருட்பால் அரசும் சமுதாயமும் மனிதநிறைவுக்கு வழிகோலும் முறையைச் சொல்கிறது. மக்கள் யாவரும் சமம்; மனிதரிடையே ஏற்றத்தாழ்வு யாதுமில்லை; யாரும் எப்பணியையும் மேற்கொண்டு வாழ்வு நடத்தலாம்; எதுவும் ஒடுக்கப்படவில்லை; எல்லா வினைகளும் அறத்தின்பாற்பட்டனவாக இருத்தல்வேண்டும். இது பொருட்பால் கூறும் கருத்தின் சாரம் .

குறள் பகுப்பில் பொருள்

அறம், பொருள், காமம் என்ற குறளின் பெரும்பிரிவுகளுள் பொருள் நடுவில் அமைகிறது.

அறத்தால் பொருளீட்டி அப்பொருளால் இன்பம் நுகர்தலே வாழ்க்கை முறையாகும். சமுதாய வாழ்க்கை பொருள் வாழ்வு எனவும் அறியப்படும். அறம், பொருள், இன்பம் என்ற மூன்றனுள் நடுவணதாகிய பொருள் சிறப்புடையது. நடுவணது எய்த இருதலையும் எய்தும் (பொருள்: நடுவில் நின்றதான 'பொருள்' என்பதை ஒருவன் அடைய அது காரணமாக அதன் இருபக்கத்தனவான 'அறம்' 'இன்பம்' என்னும் இரண்டையும் அவன் அடைவான்.) என்கிறது நாலடியார் (114).

பொருளின் வன்மையைப் புகழ்ந்தேத்தி பொருள் இருந்தால் ஏனைய அறமும் இன்பமும் எளிதிற் கைகூடும் என்றார்கள். முதல் நின்ற அறமும் கடைநின்ற காமமும் பொருள் இல்லாவிடின் இல்லை; பொருள் நடு நாயகமாக நிற்பது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று பிறிதொரு கருத்துக்கு இடமின்றித் தெளிவாகக் குறள் பேசுகிறது. அருளும் பொருளால் வளர்வது என்கின்றது; அன்பு பெற்ற அருள் என்னும் குழந்தை பொருள் என்னும் செவிலித்தாயால் வளர்வதாகும் என்பது குறள் தரும் செய்தி. பொருள் தீதின்றி வரவேண்டும்; அப்படிச் சேர்த்த பொருள் அறத்தையும் இன்பத்தையும் தரும் என்பது வள்ளுவர் வாய்மொழி.

பொருட்பாலில் அரசன், அரசாட்சி, பொருளாதாரம், நிர்வாகம், குடிமக்கள் பண்புகள் பற்றி எழுபது அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளது. உள்ள பொருளை மேலும் பெருக்கவும் அதைத் தமக்கும் பிறர்க்கும் பயன்படும் நல்வழிகளில் செலவிடவும், அப்பொருளைப் பிறர் வஞ்சித்துக் கவராமல் காக்கவும் பொறுப்பு வாய்ந்த அரசமைப்பும் அதற்கு அறிவுரை கூறவல்ல அமைச்சரவையும் தேவை. இப்படி முறையாக அமைக்கப்பட்ட சமுதாயத்திலிருந்தே பொருள் உண்டாக்க முடியும். இவ்வாறாக அரசியலையும் அது நிலைப்பட காரணமான குடிமக்களின் நல்வழிப்பட உயர் பண்புகளையும் விளக்குவது பொருட்பாலின் உள்ளீடாகும்.

இயல் பகுப்பு

திருவள்ளுவமாலை பாடிய புலவர்களுள்ளும் உரையாசிரியர்களிடையேயும் இயல் பகுப்பு முறை செய்ததில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. திருவள்ளுவமாலை பாடியவர்களில் போக்கியார் அரசியல்-25, அமைச்சியல்-10, அரண்-2, கூழ்-1,படை-2, நட்பு-17, குடி-13; என்று ஏழு இயல்பகுப்புக் கூறி அதிகார வரைமுறையும் கூறுகிறார். இன்னொரு புலவரான தொடித்தலைவிழுத்தண்டினார் இயல்கள் எட்டு (அதிகாரப் பகுப்பு கூறவில்லை) என்றார்.
உரையாசியர்களுள்-
மணக்குடவர்- ஆறு இயல்கள் (அரசு, அமைச்சு, பொருள், நட்பு, துன்பம், குடி),
காலிங்கர் - ஏழு இயல்கள் (அரசு, அமைச்சு, அரண், கூழ், படை, நட்பு, குடி);
பர்மேலழகர் - மூன்று இயல்கள் (அரசு, அங்கம், ஒழிபு) என்று இயல்களைப் பிரித்தனர்.
இவ்விதமாக பொருட்பால் இயல்பிரிவு பற்றி மூன்று கருத்துக்கள் நிலவுகின்றன:
1. மணக்குடவர் - பரிப்பெருமாள் கருத்து.
2. போக்கியார் - காலிங்கர் கருத்து.
3. பரிமேலழகர் கருத்து.
காலத்தால் முற்பட்டவர் மணக்குடவர். போக்கியார் - காலிங்கர் இருவரும் மணக்குடவரை அடுத்து வாழ்ந்தவர்கள். காலிங்கர், போக்கியார் கருத்துப்படி இயல்பகுப்புக் கொண்டு அவருடைய பாடலையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு
(அதிகாரம்:இறைமாட்சி குறள் எண்:381)
(பொருள்: படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவன் அரசருள் ஆண் சிங்கம் போன்றவன்.)
என்பது பொருட்பாலின் தோற்றுவாயாக உள்ள குறள். இதில் கூறப்பட்டுள்ள ஏழுவகைப் பொருளின் அடிப்படையிலேயே பொருட்பால் அமைந்து செல்கின்றது. காலிங்கர் இக்குறள் உரையில், “இங்குச் சொன்ன இறை முதலாகிய எழுவகைப் பொருளுமே இப்பொருட்பால் நடைப்பொருள் என அறிக” என்று கூறியுள்ள கருத்து பொருட்பாலின் உள்ளுறையை நன்கு விளக்குவதாக உள்ளது.

தமிழ் அறிஞர்கள் பலர் பரிமேலழகரது பொருட்பாலின் இயல் பகுப்புமுறையை குறிப்பாக ஒழிபியல் என்ற பிரிவை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அவர் ஏன் குடி இயல் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்பதையும் புரிந்துகொள்ள முடியாதிருக்கிறது. இயல் பாகுபாட்டை எந்த முறையை ஒட்டி அமைத்தார் என்பதையும் பரிமேலழகர் தனது உரையில் விளக்கவில்லை. சுக்கிர நீதியுள் குடி கூறப்படவில்லை என்றதால் குறளிலும் குடி அங்கமாக இருத்தலாகாது என எண்ணி குடிமையை ஒழிபியலில் சேர்த்து வைத்துக் கூறினார் என்பதாக ஒரு விளக்கம் உண்டு.
ஆனால் குடி இயலே குறளுக்குத் தனிச் சிறப்பு தருவது ஆகும். பொருட்பாலின் இறுதிப்பகுதி 'குடி'யைப் பற்றிக் கூறுகிறது. குடிமக்கள் கொண்டதே நாடு. குடிமக்கள் நிறை மனிதர்களாக இருந்தால்தான் நாடு சிறப்புறும். குடியியலில் மனிதப் பிறவியின் மேன்மை, குடிமக்கள் அடைய வேண்டிய உயர்வு ஆகியவை கூறப்பட்டுள்ளன. 'பொருட்பாலின் இறுதியில் குடிமக்கள் முழுமைக்கு உரியதாக விளக்கப்படும்படி அவர்கள் நாட்டின் மணிமுடியாகவும் புகழாகவும் விளங்குகிறார்கள் என்பதைக் காட்டும். இதுதான் திருவள்ளுவரின் பெருங்கொடை. ஆனால் பரிமேலழகரின் உரை இப்பகுதியின் முக்கியத்துவத்தைத் தவற விடுகிறது' என்பார் தெ பொ மீ.

பொருள் குறித்தன:

'பொருள் என்றது மக்களையுடைத்தாகிய நிலம்; பகுதியாவது அந்நிலத்தை ஆளுதற்குரிய அரசரது தன்மையும், அவர் ஆளுதற்குச் செய்யும் திறன்களும், அதற்குத் துணையான அமாத்தியர் இலக்கணமும், அவர் செய்யும் திறன்களும் அவ்விருவராலும் உண்டாக்கப்பட்ட நாடும் அரணும் பொருளும் படையுமாகிய இவற்றினது திறங்களும், அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றற்கும் துணையாகிய பொருள் உடையார்க்கும் கேடு வரும் திறன்களும், அந்நிலத்து உண்டான மக்களது இயல்பும் அவர் பொருள் செய்யுமாறும் கூறுதல்' -இது மணக்குடவர் பொருட்பாலுக்குத் தரும் விளக்கமாகும் (அமாத்தியர்-அமைச்சர்). பொருள் என்றால் உலகமும் அதில் உள்ள வாழ்க்கையும் ஆகும்.

பொருள் என்பதற்குச் செல்வம் என்றும் பொருள் கொள்ளலாம். வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் அதனுள் அடங்கும். நம் உடைமைகள், நாம் வைத்து மகிழும் பொருள்கள், வீட்டுப் பண்டங்கள், குடும்பச் சொத்துகள் முதலியனவும் பொருள்களே. நாம் படைத்து நுகரும் அனைத்தும் பொருள்கள்தாம். இப்பொருள்களைப் படைத்து, பகிர்ந்து நுகர்தலை ஆய்வதே பொருளியலின் நோக்கம். இப்பொருளியலையும் மக்கள் நலனையும் ஒருங்கு அமைத்துக் காட்டுவதே பொருட்பால் ஆகும் (பா நடராஜன்).

பொருட்பாலின் சிறப்பு

பொருட்பால் அரசியலையும் ஒழுங்குமுறைச் சமுதாய வாழ்வினையும் கூறுகிறது. இது பொருள் ஈட்டுவதை மட்டும் பேசவில்லை; பொருள் சமைக்கும் சமுதாய வாழ்வையும் விவரிக்கிறது. சீரிய அரசியல் நெறியால் அமைதி பெற்றோங்கும் சமுதாயம், பண்பாட்டில் சிறக்கும் சமுதாயம்,பொருள்களை ஆக்கிப் பகுத்துண்டு பயன்பெறும் சமுதாயம்- இந்த அமைப்பே இங்கு பொருள் எனப்பெறும்.

ஒரு நாட்டின் தலைவனாக விளங்கும் அரசன் அரசனாக மட்டுமல்லாமல் அரசருள் தலைவனாய் விளங்க வேண்டும் எனக் கூறும் வள்ளுவர் அரசர்கட்குரிய பண்புகளை ஒரு மருங்கும், அவர்தம் செயல் திறங்களைப் பிறிதொரு மருங்குமாகக் அரசியலில் கூறிச் செல்கின்றார். அரசு முறை, ஆள்பவன் என்பவற்றை எல்லாம் கடந்து ஆட்சியின் பொதுத்தன்மைகளை மட்டும் கூறுவது குறட்பொருட்பாலின் தனிச் சிறப்பாகும். நல்ல குடிமக்கள் உருவாக்கப்பட்டால் அதுவே நாட்டின் அரசியலின் பெருமையும் பயனும் ஆகும். இதனாலேயே குடிச் சிறப்பை உடன்பாட்டாலும் எதிர்மறையாலும் பொருட்பாலின் இறுதிப்பகுதியாக விளங்கும் குடி இயலில் வள்ளுவர் தெள்ளத் தெளிய விளக்குகின்றார். ஆலோசனை சொல்லக்கூடிய அமைச்சருடனே, பகைவர் ஊறு செய்யலாகாத அரணிலிருந்து, படையையும் நட்பையுந் துணயாகக் கொண்டு, பொருள் செய்யப்படவேண்டும் என்பது பொருட்பாலின் முற்பகுதியின் கருத்து. கயமை ஒழிந்து, குடிகள் தங்கள் குடிமைக்கேற்ற குணங்களையுடையராய், பொருளின்மையால் நல்குரவெய்தி இரவாமல், தங்கள் குடியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது பொருட்பாலின் பிற்பகுதியின் கருத்து.

அரசியல் பற்றியே சிறப்புற சொல்லுவதனாலும் பொருட்பால் அறவழிப்பட்ட நாடு பற்றிப் பேசுகிறது. ஆட்சித் தலைவன் அறிவும் ஆற்றலும் அருளும் கொண்டு அன்பாலும் அற உணர்வாலும் உந்தப்பட்டுச் செயல்படும் ஒர் உயர்ந்த மனிதன் ஆவான். குறிக்கோள் மட்டும் அன்றி அரசின் ஒவ்வொரு செயற்பாடும் அறவழி நோக்கங்களால் உந்தப்பட்டதாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது. வினைத்திட்பம் பாராட்டத்தக்கதே யாயினும், அச்செயல் வினைத்தூய்மை கொண்டதாக இருப்பது அவசியம். தண்டிக்கும் வேல் அரசுக்கு சிறப்பு தருவதில்லை; செங்கோல் கோணாமல் இருக்குமானால் அதுவே வெற்றியாகும். குடி மக்களிடம் வலிந்து வரி வாங்குவது வழிப்பறி கொள்ளைகாரன் ஈட்டி முனையில் நின்று கொடு என்பதை ஒக்கும். குடி மக்கள் துன்பத்தில் அழுது சொரியும் கண்ணீரே அரசின் வளத்தை குலைக்கும் படையாகும். கல்வியின் சிறப்பை எடுத்து இயம்புவதோடு, கற்றபின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்கும். வாழ்க்கைக்குப் பொருள் கட்டாயமாகத்தேவை என்று கருதியதால் "செய்க பொருளை" என்று அழுத்தமாக எடுத்துரைப்பார். மேலும் காலம் அறிதல், இடம் அறிதல், வலியறிதல், ஊக்கம், சோம்பலில்லாமை, முயற்சி, துன்பத்தில் கலங்காமை, சொல்வன்மை, செயலில் தூய்மை, செயலில் உறுதி, செயல் செய்து முடிக்கும் திறமை, நட்பு, பகை, பெரியோரைப் போற்றல், விலைமகளிரிடம் சேராமை,கள் குடித்தலின் தீமை, சூதாட்டத்தின் தீங்கு, மருந்து, மானம், நற்பண்பு, உழவின் சிறப்பு, வறுமையின் கொடுமை முதலிய அதிகாரங்களின் கருத்துக்கள் குடிமக்கள் எல்லாருக்கும் பொதுவாகப் பொருந்தும் வகையில் இருப்பதாக அமைந்துள்ளன.

ஒரு நாட்டின் வளம், அது உருவாக்கும் புகழ் மிக்க மக்களைப் பொறுத்திருக்கிறது என்ற மேலான கருத்தை
வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்
(அதிகாரம்:புகழ் குறள் எண்:239)
(பொருள்: புகழ் பெறாமல் வாழ்வைக் கழித்தவருடைய உடம்பைச் சுமந்த நிலம், வசையற்ற வளமான பயனாகிய விளைவு இல்லாமல் குன்றிவிடும்.)என்ற குறள் கூறுகிறது.
அரசியலின் சிறப்பெல்லாம் குடிமக்களின் உயர்வே என்ற நோக்கில் வள்ளுவர் பொருட்பாலின் முடிவில் குடியியலில் குடி மக்கள் பெருமையும், பண்பும், சால்பும், அன்பும், நாணும், ஒப்புரவும், கண்ணோட்டமும், வாய்மையும், மானமும் உயிராகக் கொண்ட இயல்பையையும் எடுத்துரைத்து குடிமக்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதற்கு உரிய நெறிகளையும் சொல்கிறார்.
பொருட்பாலின் குடியியல் வள்ளுவரின் சிறப்புப் பங்களிப்பாகக் கருதப்படுகிறது.