ஒவ்வொரு அதிகாரத்தையும் பப்பத்துக் குறட்பாவாகக் கூறுவதனாலும் இந்நூலைக் குறளாற் கூறிய எடுத்துக் கொண்டதானாலும் எழுகின்ற
இடர்ப்பாடுகளின்றி, இந்நூலில் வழூஉச் சொற்புணர்த்தல், மயங்கவைத்தல், வெற்றெனத்தொடுத்தல், சென்று தேய்ந்திறுதல், நின்றுபயனின்மை
முதலான குற்றங்கள், பலமுறை தேடித் துருவிப் பார்த்தவிடத்தும், ஒன்றும் காணப்படா.
-திருமணம் செல்வக் கேசவராயர்-
எக்காலத்திற்கும் ஏற்றவாறு எல்லா மானுடருக்கும் பயன்படும் வகையில் படைக்கப்பட்டது குறள். தெளிந்த சிந்தனையால்
பெருநோக்குடன் உருவாக்கப்பட்ட பேரிலக்கியம் இது. பல்வேறு துறைசார்ந்த நூல்களை, பலவேறு மொழி இலக்கியங்களைப்
பயின்றவர் வள்ளுவர். தெய்வப்புலவர் என்று அவரை நாம் கொண்டாடுகிறோம். அவர் குறை செய்திருக்கமாட்டார்; செய்யவில்லை என்று குறள் பற்றாளர்கள்
கூறுவர். ஆனாலும் அவர் படைத்த குறளில் குற்றம் உண்டு என்று சொல்பவர்களும் உண்டு. குறளை
ஆழப்படிப்போர்க்கு சில குறட்பாக்கள் ஐயத்திற்குரியனவாகவும் சிக்கல் உள்ளனவாகவும் தெரியும். இவைகளும் குற்றங்களால்
ஏற்பட்டனவா? அவை என்ன வகையான குறைகள்? உண்மையிலேயே அவை குறைகள்தாமா? குறைகள் என்றால் அவற்றிற்கு
அமைதி உண்டா?
குறைகள் தோன்றக் காரணங்கள்
குறளின் மூலச்சுவடி நமக்குக் கிடைக்கவில்லை. உரைகளே மூலத்துக்குச் சான்றாக உள்ளன.
குறள் படைக்கப்பெற்று ஓராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர்தான் உரையாசிரியர்கள் தோன்றுகிறார்கள். இடைப்பட்ட காலத்தில் திருக்குறள் பலமுறை
ஏடெடுத்து எழுதப்பட்டிருக்க வேண்டும். இதனால் பாடவேறுபாடுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. பாடத்தவறுகள் கருத்துத் திரிபுக்குக் காரணமாயின.
உரையாசிரியர்கள் தம் கருத்துக்கு ஏற்ப பாடத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாக மாற்றி தத்தம் கருத்துக்களை உரைகளில் புகுத்தியுள்ளனர்.
பொருள்கோள் முறையாலும், சொற்களுக்குப் பொருள் காண்பதில் ஏற்படும் தவறுகளாலும் குறைகள் காணப்படலாம்.
மாற்றமே கூடாது எனக் கருதி வலிந்து பொருள் கண்டுள்ளமையும் குறையாகத் தெரிவதற்கு காரணமாயிற்று. குறை என்று இல்லாவிட்டாலும் குறளில்
பிழை இருக்கலாம் என்பது ஒருசாரார் கருத்து.
குறளின் அமைப்பும் குறைகள் நேரக் காரணமாயிற்று.
காலமாற்றத்தால் கருத்து விளங்கிக் கொள்ள இயலாமை.
குறள் மீது கொண்ட மிகைப்பற்றுக் காரணமாகத் திருக்குறளில் இல்லாதனவும் இருப்பதாகக் கூறப்பட்ட கருத்துக்களும்
குறைகளாகக் கொள்ளப்பட்டன.
குறள் அமைப்பு:
குறட்பா தேர்வு:
குறட்பாவால் யாக்கப்பட்டதால் குறை ஒன்று குறுக்கிடுகின்றது. அதிகாரத்துக்குட்பட்ட பொருள்களை ஒரு முடிபால் விளக்குவது விளங்கவைத்தலாக இருக்கும்.
அப்படி முடிபு ஒன்றால் முடித்துக் கூற முடியாதவாறு, பொருள் விரிவதாயின், அதனை ஒரு குறட்பாலில் விளங்கவைப்பது இயலாது.
அமைச்சு-தூது-அரண்-நட்பு என்றாற் போல்வனவற்றை விளக்குகின்ற பொழுது, இக்குறை நன்கு விளங்கும்.
அதிகாரம்-பாக்கள் வரையறை:
ஒவ்வொரு அதிகாரமும் பத்துப் பத்து குறளைக் கொண்டதாக வரையறை செய்ததினால் இரண்டு வகையான இடர்ப்பாடு நேர்ந்தது. ஒன்று, ஒரு
அதிகாரத்துக்குட்பட்ட பொருள் பத்துக்குறட்குக் குறைவதாயின், கூறியது கூறுதல், மற்றொன்று விரித்தல், மிகைபடக்கூறல் முதலான குற்றங்களுக்கு
இடமுண்டாகும். கடவுள் வாழ்த்து அதிகாரத்தில், நீடுவாழ்வார் யார் என்பது பற்றி இரண்டு குறளால் உணர்த்தினார். அவ்விரண்டு குறளையும் ஒன்றாக
இணைத்திருக்கலாம். இரண்டாவதாக ஒரு அதிகாரத்துக்குட்பட்ட பொருள் பத்துக்குறளின் மிகுவதாயின், குன்றக்கூறல், மிகைபடக்கூறல் முதலான
குற்றங்களுக்கு இடமுண்டாகும். அது மட்டுமின்றி பல அதிகாரங்களில் அவற்றைக் கூற வேண்டி வரும். நட்பு அதிகாரப்பட்ட இடத்தில் கூற
வேண்டுவனவெல்லாம் ஓரதிகாரத்தில் அடங்காமையால், அதனைப் பல அதிகாரங்களாக வகுத்துக்கொண்டார்.
இடப்பிறழ்வு:
வலியறிதல் என்னும் அதிகாரத்தின் இறுதியில் உரைத்த
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி. (477)
ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை.(478)
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.(479)
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். (480) என்னும் நான்கு பாக்களும் பொருள்செயல்வகையிலோ குடிசெயல்வகையிலோ உரைக்கத்தக்கவை. அவைகளை
வலியறிதலில் உரைத்தது இடப்பிறழ்வாக உள்ளது.
மற்றொன்று விரித்தல்:
நட்பு தொடர்பான அதிகாரத் தொகுப்பில் சூது, மருந்து என்பனவற்றை விரித்துரைத்தது மற்றொன்று விரித்தல் என்னும் குற்றமாகும்
என்பர் (திருமணம் செல்வக்கேசவராய முதலியார்).
பாடத்தவறுகள்
திருக்குறளை பலகாலங்களில் ஏடு பெயர்த்தெழுதியதால் பாடவேறுபாடுகள் நிகழ்ந்திருக்கின்றன. சிலர் தம்
சமயம், கொள்கை ஆகியவற்றிற்கு மாறானவற்றை நீக்கிவிட்டு, தம் கருத்திற்கு ஏற்ப மாற்றினர். பழைய நூல்களைப்
பதிப்பித்தவர்கள், கிடைக்காத பகுதிகளுக்கு, தாமே எழுதி அவ்விடத்தை நிரப்பியதாலலும் மூலபாடம் திருத்தம் கண்டது.
இவ்வாறான இடைச்செருகல்கள் குறைகள் ஏற்பட ஏதுவாயிற்று.
பொருட்சிறப்பு இல்லை என்று கருதி பாடதிருத்தம் மேற்கொள்ளப்பட்டது; யாப்பு அமைதிக்காவும், எதுகை மோனை நயம் என்ற காரணம் கொண்டும்,
பல்வேறு பாடத்தவறுகள் நடந்தன.
கருத்து சார்ந்தவை
காலத்தால் சொற்கள் அடைந்த பொருள் வேறுபாடுகளும் சமுதாயத்தின் பழக்க வழக்க மாறுபாடுகளும் குறைகள் உண்டாக வழியாயின.
புற நாகரிகச் சார்பும் சமயச் சார்பும் அரசியற் சார்பும் முன்னிற்க, வலிந்து கூறப்பட்ட உரைகள் கருத்துச் சிதைவு ஏற்பட காரணமாயிற்று.
மூலத்திற்கும் உரைக்கும் தொடர்பே இல்லாமல் உள்ள உரைகளும் உண்டு. இவை குழப்பத்துக்கு இடமாயின.
குறள் துறவுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை நாம் இன்று தருவதில்லை என்றொரு சிந்தனை உள்ளது. புறத்துறவுக்கு வேண்டுமானல் இக்கருத்து
பொருந்தலாம். ஆனால் அகத்துறவை எண்ணிக்கொண்டால் வள்ளுவர் கூறும் கருத்து இன்றும் என்றும் ஒத்துவரும்.
பெண்ணின் பெருமை பற்றிக் குறள் நிறையப் பேசுகிறது. ஆனாலும் அப்பெருமை வழக்கமான ஆண் மேலாண்மைக் கோணத்திலிருந்தே கூறப்படுவதாகவும்,
ஆணுடன் ஒத்த நிகர்நிலை வள்ளுவரால் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை என்றும் பெண்ணியக் கொள்கையினர் குற்றம் கற்பிக்கின்றனர்.
குறளிலிருந்து வாழ்க்கைத்துணை நலம், பிறனில் விழையாமை, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் ஆகிய அதிகாரங்களில் உள்ள குறள்கள்
சிலவற்றை நீக்கி விட வேண்டும் என்றும் திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்னாயிருந்திருந்தால் இம்மாதிரிக் கருத்துக்களைக் காட்டியிருப்பாரா
என்றும் எழுதினர். ஆனால் இது முற்றிலும் தவறான கருத்து. பெண்ணை இழித்துக் குறளில் எங்கும் கூறப்படவில்லை; ஆணுக்கு சமநிலையாகவே பெண்
பேசப்படுகிறாள்; மாறாக ஆணைப் பழித்தும் குறட்கருத்துகள் உண்டு. ஆயினும் தெய்வம் தொழாஅள் கொழுநன்
தொழுதெழுவாள் (குறள் 55) போன்ற கருத்துக்கள் இன்று மறுஆய்வுக்கு உரியனவாக உள்ளன என்பதையும் நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
முரண்பாடுகள்
குறளில் முரண்பாடுகள் உள்ளன என்ற குற்றச்சாட்டுக்கள் ஆங்காங்கே கூறப்படுகின்றன.
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.(481) எனக்கூறிப் பின்னர்
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். (1028)என்று கூறியது
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். (380) எனக்கூறிப் பின்னர்
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். (620) என்று கூறியது
போன்றவை குறளில் முரண்பாடுகள் உள்ளன போலத் தோன்றுகின்றன.
ஆனால், குறளின் திண்மையை, உண்மையை, நுண்ணிதின் உணர்ந்தால், உண்மையில் அவை முரணல்ல என்பது தெளிவாகும். வள்ளுவர் சொல்லிய இடம்,
காலம், சூழல், காரணம் ஆகியவற்றை நோக்கிக் கருத்தை உட்கொண்டால் அவை முரணே அல்ல என்று புரிந்துகொள்ளப்படும்.
இரவு, இரவச்சம் என்ற இரண்டு தலைப்புகள் அமைத்துப் பேசியிருப்பது பெரும்பாலோர்க்கு குழப்பமாகவே அமையலாம். ஆனால் சில மரபுகளை
நினைவில் கொண்டு நாம் அவற்றை நோக்கினால் அவை யாவும் முரணல்ல, இரண்டும் தேவையானதே என்று தோன்றும். இரவலர், கொடையாளர் இருவரும்
இருப்பது ஒரு நாட்டின் தேவையாகவும் அமையும். வள்ளுவர் உலகியல்படி நடந்தாக வேண்டும் என்ற கொள்கையுடையவராதலால் பெரும்பாலும் அதை
ஒட்டியே குறட்கருத்துகள் அமைந்தன.
குறைகள் உள்ளனவா?
குறள் அமைப்பால் ஏற்பட்ட இடர்ப்பாடுகள் இருந்தும், இந்நூலில் குற்றமான சொற்களை அமைத்தல், தெளிவு இல்லாமல் மயங்குமாறு கூறுதல்,
பொருளற்ற சொற்களை அமைத்தல், விரிவாகத் தொடங்கிப் போகப் போகச் சுருக்கி முடித்தல், சொற்கள் இருந்தும் பொருட்பயன் இல்லாமற் போதல்
முதலான குற்றங்கள், பலமுறை தேடிப் பார்த்தவிடத்தும், ஒன்றும் காணப்படவில்லை என்பார் திருமணம் செல்வக்கேசவராயர்.
நூலினை முழுதும் கற்று நூலின் நோக்கத்தைத் தொகுத்துப் பார்த்து நுனித்து அறிவார்க்கு முரண்பாடுகள் போன்று தோன்றுபவை குற்றங்களாகாமை
தெளிவாகும்.
கால மாற்றத்தால் சில குறள் கருத்துக்கள் குறைகளாகத் தெரிகின்றன.
குறளில் பகுத்தறிவுக்குப் பொருந்தா கருத்து எதுவும் இல்லை.
திருக்குறள் மிகமிக ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது; செய்யப்பட்டு வருகிறது. ஆயினும் பொறுக்க முடியாத குறைகளை இதனுள் எவராலும்
கண்டுபிடிக்க இயலவில்லை. ஆங்காங்கே சிறுசிறு குறை-சிறு பிழைகள் காணப்படலாம். அவை திருவள்ளுவரால் செய்யப்பட்டதாகக் கொள்ளமுடியாது.
இப்பனுவலில் குறை இருப்பின் அவை மிகவும் பொதுவானவையே; அவையும் திருக்குறளின் புனிதம் காப்பற்றப்படவேண்டும் என்னும் விருப்பத்தால்
எழுப்பப்படுவனவே.