இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

திருக்குறளைப் பாராட்டும் திருவள்ளுவ மாலையென்ற ஒரு நூல் இருக்கின்றது. அதிலுள்ள செய்யுட்களைப் பல புலவர்கள் பாடியுள்ளார்கள். அந்நூலைப் பாடியவர்கள் யாராயினும் அது பல நூற்றாண்டுகட்கு முன்பே உண்டாயிற்றென்பதற்கு நேமிநாதயுரை முதலிய நூல்களில் போதிய ஆதாரம் இருக்கின்றது. இங்ஙனம் ஒரு நூலைச் சிறப்பித்துப் பாடிய தனி நூலொன்று வேறு எந்த நூலுக்கும் முற்காலத்து அமையவில்லை
-உ வே சாமிநாதைய்யர்

வள்ளுவமாலை தோன்றியது எங்ஙனம்? காலந்தோறும் குறளைப் பற்றிய பாடல்கள் பல புலவர்களால் இயற்றப்பட்டிருக்க, பிற்காலத்து வந்த கவிஞரொருவர் அவற்றுள் சிறந்தனவற்றை எடுத்து ஒருங்கு சேர்த்து ஒழுங்குபடுத்தி, அந்நாளில் நன்கு அறியப்பட்ட பழம்புலவர்கள் படைத்ததாக அவர்கள் பெயர்களில் ஒரு நூலாகத் தொகுத்திருக்கலாம். இவற்றுடன் அவரே தாமும் சில பாக்களை இயற்றி இதுபோலவே புகழ்பெற்ற பாவலர்கள் எழுதியதாக அவர்கள் பெயரில் சேர்த்து இத்தொகுப்பை வழங்கியிருக்கலாம்.

திருவள்ளுவமாலை

திருவள்ளுவமாலை என்பது திருக்குறளைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களின் கோவை என்று பொருள்படும். மொத்தம் ஐம்பத்து மூன்று வெண்பாக்களாலான பாக்களையுடையது.

இதில், பல பாக்கள் கருத்துச் செறிவுடனும், மேற்கோளாக ஆளத்தக்கனவுமாகமும் உள்ளன. சில பாக்கள் குறளின் முப்பாலின் இயற்பகுப்புகளை எடுத்தோதுகின்றன; கவிதை நலம் நிறைந்து கற்பனையால் குறளைச் சிறப்பிக்கின்றன சில; வடமறைநூலுக்கும் இதற்கும் வேற்றுமை காட்டி ஏற்றம் கூறுகின்றன சில; குறள் ஆசிரியரைப் பாராட்டுகின்றன சில; வள்ளுவரின் இதயத்தின் ஆழத்தையும், அவரது அறிவின் ஆற்றலையும் தெளிவையும் உணர்ந்து தாங்கள் பெற்ற இன்பத்திற்குக் கனிந்த கற்பனையுடன் செய்த பாக்கள் பிற.

காலம்

வள்ளுவமாலை திருக்குறள் அரங்கேற்றத்தின்போது சங்கப் புலவர்களால் பாடப்பெற்றது என்பர் ஒருசாரார். கல்லாடத்தில் கூறப்பட்டுள்ள குறள் அரங்கேற்ற நிகழ்ச்சி இத்தொகுப்பின் முதல் பாட்டுக்கு ஆதாரமாக இருக்கலாம். அப்பாடல் மதுரையில் உள்ள சங்கப்பலகையில் திருவள்ளுவரோடு ஒத்து இருத்தற்கு உருத்திரசன்மரே ஏற்றவர் என்று குறிப்பது. ஆனால் பழங்கதைகளில், குறள் அரங்கேறிய காலத்தில், சங்கப்புலவர் நாற்பத்தெண்மரும் திருவள்ளுவரோடு ஒக்க இருக்கத் தகுதியற்றவராய்ப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்து மூழ்கினர் என்று கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு வள்ளுவமாலை குறள் ஆசிரியர் காலத்தது அல்ல; பிற்காலத்தே தோன்றியதே என்பர்.

காலத்தால், பண்டைய குறள் உரை ஆசிரியர்கள் பதின்மருக்கு முந்தியது திருவள்ளுவமாலை என்பது பல அறிஞர்களின் முடிவு. இப்பாடல்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டு வரையில் உள்ள காலகட்டத்தில் தொகுக்கப்பட்டதெனச் சில அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர் இதன் காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதாக அமையும் என்று கூறியுள்ளனர்.
எவ்வாறாயினும் திருவள்ளுவமாலை வரலாறு பன்னிரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தியதென்பதில் ஐயம் இல்லை என்பார் தெ பொ மீ.

தொடுத்தது யார்?

அசரீரி, நாமகள், இறையனார், உக்கிரப்பெருவழுதி உரைத்த பாக்களுடனே சங்கப்புலவர் நாற்பத்தொனபதின்மரும் பாடிய பாடல்களுமாகக்கூடி ஐம்பத்து மூன்று பாக்களைக் கொண்டதாக அறியப்படுவது வள்ளுவமாலை. இவ்வாறாக விண்ணிலிருந்து வந்த ஒலியாகவும் உடல்கொண்டோராலும் பாடப்பட்ட பாடல்களுடன் மேலும் ஔவையார், இடைக்காடர் ஆகியோர் பாக்களையும் சேர்த்து இப்பொழுது திருவள்ளுவமாலை ஐம்பத்தைந்து பாடல்கள் கொண்டதாக உள்ளது.

வள்ளுவமாலையில் இடம்பெற்றுள்ள புலவர் பெயர்களை அறிவதற்குரிய ஆதாரங்கள் சங்க நூல்கள் அன்றி வேறு ஒன்றுமில்லை. அவ்வாறு நோக்கும்போது இதில் காணப்படும் பெயர்களுள் சில சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கவில்லை. இறையனார் களவியலுரையின்படி கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் நாற்பத்தொபதின்மர் ஆவர். இவர்களில் சேந்தம் பூதனார், அறிவுடையரானார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மருதன்இளநாகனார் ஆகிய இவர்கள் பெயர் வள்ளுவமாலையில் காணப்படவில்லை. வள்ளுவமாலையில் காணப்படும் உருத்திரசன்மர், நத்தத்தனார், முகையலூர்ச் சிறுகருந்தும்பியார், எறிச்சனூர் மலாடனார், போக்கியார், நாகன் தேவனார், செங்குன்றூர்க் கிழார், கவிசாகரப் பெருந்தேவனார், செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார், வண்ணக்கஞ் சாத்தனார், களத்தூர்க் கிழார், நச்சுமனார், அக்காரக்கனி நச்சுமனார், குலபதி நாயனார், தேனீக்குடிக் கீரனார், கொடிஞாழன் மாணிபூதனார், கௌணியனார், மதுரைப் பாலாசிரியனார் என்பவர்களைச் சங்க இலக்கியங்களில் காண முடியவில்லை. சங்கப் புலவர்கள் வாழ்ந்தது ஒரே காலத்தில் அல்ல. அவர்கள் வாழ்ந்த கால இடைவெளி சில நூற்றாண்டுகள் ஆகும். எனவே பாடல்கள் ஒரே காலத்தில் தோன்றியன என்பதும் ஏற்க இயலாது. வள்ளுவமாலைப் பாக்கள் சங்ககாலத்தில் அமைந்துள்ள ஓசை தராமல் பிற்கால இலக்கணமமைந்த ஓசை தருகின்றன என்றும் சங்கநுல்களில் காணப்படாத சொற்சிதைவு இப்பாடல்களில் காணப்படுவதையும் ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். எனவே குறளைப் பற்றிச் சங்கப் புலவர்கள் பாடிய பாடல்களின் திரட்டே வள்ளுவமாலை என்பது பொருந்தாதாகிறது.

இந்நூல் அனைத்தும் ஒரே புலவரால் பாடி இயற்றப்பட்டிருக்கூடும் என்னும் கருத்தையும் ஆராய்ச்சி அறிஞர்கள் மறுத்துள்ளனர். இந்தப் பாராட்டு மாலை யாரோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ வெவ்வேறு காலங்களில் எழுதிய பாடல்களின் தொகுப்பாக இருக்கலாம் என்பது பொதுவான கருத்து. வள்ளுவமாலையிலுள்ள பாடல்களுள் சில சங்கப் புலவர்களாலும், சில பிற்காலப் புலவர்களாலும் பாடப் பெற்றிருக்கலாம்; பின்னர் இவை நுலாகத் தொகுக்கப் பெற்றிருக்க வேண்டும் எனவும் கொள்ள முடிகிறது.
சங்கப்புலவர்கள் பாடியதுபோலப் பிற்காலத்தவர் பாடிவைத்த பாடல் தொகுப்பே வள்ளுவமாலை என்பது மற்றொரு கருத்து. வள்ளுவமாலையை இயற்றியவர் தமது பல்வேறு பாடல்களுக்குத் தம் விருப்பத்திற்கேற்பப் புகழ்வாய்ந்த சங்கப் புலவர்களின் பெயர்களை அமைத்துக் கொண்டிருக்கலாம். பாடல்களின் அமைப்பையும் பாடுபொருளையும் காணும்போதும் இம்மாலையை ஒருவரே தொகுத்தார் என்பதற்கான காரணம் வலுப்படும்.

தாக்கங்கள்

பண்டைத் தமிழ் இலக்கியத்தில் காணப்பெறும் ஒரே திறனாய்வு நுல் திருவள்ளுவமாலையே என்பர் அறிஞர். திருக்குறள் பற்றிய ஆராய்ச்சிக்கு வள்ளுவமாலையில் ஓரு தொடக்கம் உண்டானது எனலாம். இது திருக்குறளுக்குச் செய்யப்பட்ட சிறப்பு எனவும் கொள்வர். வள்ளுவமாலை திருக்குறளின் நயத்தையும் சிறப்பையும் ஆராய்ந்துரைக்கும் திறனாய்வு மாலையாக விளங்குகிறது.
இதிலுள்ள ஒவ்வொரு பாடலும் குறளை அணுகிய முறை வெவ்வேறாக உள்ளது. இப்பாடல்கள் வள்ளுவரை தெய்வ வாக்கு கொண்டவர் என்று வாழ்த்தும்; குறள் மறைநூலுக்கு மேலானது, இணையானது எனவும் வடமொழியின் சிறப்பிற்கு மறைநூல்; தமிழ்மொழியின் பெருமைக்குக் குறள், முப்பாலில் நாற்பால் மொழியப்பட்டது எனவும் ஒப்பாய்வு செய்யும்; பால், இயல், அதிகாரத் தொகுப்பு இவற்றைக் கூறி குறளின் சொற்பொருள், யாப்பின் அமைப்பு ஆகியவற்றின் சிறப்புபற்றிப் பேசும்; உள்ளத்து இருளை நீக்கும் வாழ்வியல் நூல் என்றும் இருவினை நீக்கும் மாமருந்தாகிய ஆன்மநூல் இது என்றும் போற்றும். இவ்வாறு பல்வேறு நிலைகளில் திருக்குறளின் பாடுபொருளும் பாடுமுறையும் ஆராயப்பட்டுள்ளன.

வடமொழியில் தோன்றிய வேதம் மூலநூல், குறள் அதன் வழிநூல் என்று ஒரு பாடல் கருத்து உரைக்க அதற்கு மாறாகத் திருக்குறள் மூலநூலே, திருக்குறளோடு எந்த நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தல் பொருத்தமாகாது என்பதை வேறு ஒரு பாடல் உணர்த்துகிறது.
வடமொழிநூல்களோடு திருக்குறளை ஒப்பிட்டுப் பேசுதல் ஒவ்வாது என்பதனை வலியுறுத்தும் போக்கு அக்காலச் சூழலிலேயே தோன்றியமையும், திருக்குறள் தமிழில் எழுந்த மூலநூல் என்பதனை வள்ளுவமாலை மூலமும் நிறுவப் பெற்றமையையும் காணலாம்.
வள்ளுவமாலை எழுந்த காலத்தில் மாந்தர் பெரிதாக மதித்து வந்ததாகக் கருதப்படும் வைதீக நூல்களுடன் திருக்குறளை ஒப்பிட்டுப் பாராட்டிக் கூறியதன் நோக்கம் தமிழின் ஆற்றலை மற்றவரும் உணர வேண்டும் என்பதே என்று ஒரு கருத்து உள்ளது. ஆனால் காலப்போக்கில் இந்த ஒப்பீடே பிறழ உணரப்பட்டுப் பின்னையோர் திருக்குறள் கருத்துகள் வடநூற் கருத்துக்களின் பிழிவாகக் கருதத் தொடங்கி விட்டனர்; பின்வந்த உரையாசிரியர்களின் வெவ்வேறு அணுகுமுறைக்கு மாலைப்பாடல்கள் அடித்தளமாக அமைந்து விட்டன என்பதும் தெளிவாகும் என்பர் ஆய்வாளர்கள்.
வள்ளுவமாலை தரும் பாராட்டுரைகளே வள்ளுவத்திற்கு வேறுபொருள் காணத்தூண்டியிருக்கலாம்; அல்லது குறள் தோன்றிய காலத்திலிருந்து பின்னர் பல நூற்றாண்டுகளாகப் பல்வேறு கருத்துகள் அதில் ஏற்றியுரைக்கப்பட்ட பின் அக்கருத்துரைகளே வள்ளுவமாலை தரும் கருத்துரைகளாக மாறின எனவும் கொள்ளலாம். எவ்வாறாயினும் மூலம் கொண்டிருந்த கருத்துகள் காலப்போக்கில் வள்ளுவமாலையாலும், உரைகளாலும் மாறிப்போயின என்பது உண்மை.

வள்ளுவம் பெற்ற திரிபிற்கு வள்ளுவமாலையும் அடிப்படை என்னும் நிலையில் பல காரணங்களைக் காட்டுவார் கு ச ஆனந்தன். திருக்குறளின் உண்மைப் பொருளையும் உள்ளுறை நோக்கையும் அமைப்பையும் மூலத்திலிருந்து மாற்றியமைத்து வேறுவிளக்கம் தரும் பல பாட்டுகள் வள்ளுவமாலையில் இடம் பெற்றுள்ளன; தொன்மை நூலாகிய தொல்காப்பியம், சங்க நூல்கள், திருக்குறள் முதலியவற்றில் 'வீடு' பற்றிப் பேசும் நான்காம் உறுதிப்பொருள் இல்லை; அறம், பொருள், காமம் என்ற மூன்று மட்டுமே பேசப்படுகின்றன; ஆனால் வள்ளுவமாலையின் பல பாடல்களில் (7,8,20,22,33,38,40,50) திருக்குறளில் இல்லாத நாற்பால் வலியுறுத்திச் சொல்லப்பட்டுத் திருக்குறளின் ஆராய்ச்சிப் போக்கை அல்லது திருக்குறள் உணரும் நெறியை மாற்றிவிட்டது என்பார் இவர்.

அடுத்து வள்ளுவமாலை திருக்குறளுக்குத் தரும் இன்னொரு மதிப்பீட்டுரை வேதப்பொருளும் குறட்பொருளும் ஒன்றேயாம் என்பது. இது தவறான ஒப்பீடு. ஏனென்றால் வேதங்கள் இயற்கை சக்திகளையும் தெய்வங்களையும், யாகம்-சடங்குகள் செய்யும் முறைகளையும் விளக்குபவை; குறள் போல வாழ்வியல் நெறி; காதல் நெறிகளை விளக்குவன அல்ல. மேலும் குறளை இராமாயணம் போன்ற காப்பியங்களோடு ஒப்பிட்டதும் பொருத்தம் இல்லை.

வள்ளுவமாலைக் கருத்துக்கள் அந்தணர்-அந்தணர் அல்லாதவர் என்று வேற்றுமை பாராட்டும் கொள்கையைக் காட்டுவதாக உள்ளன என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தொகுப்புரை

முன்னர் வள்ளுவமாலை திருக்குறளின் சிறப்புப் பாயிரமாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று யாரும் அதைக் குறளின் சிறப்புப் பாயிரம் என்று கருதவில்லை; இது இப்போது சில உரைகளின் பிற்சேர்க்கையாகவும் தனி நூலாகவும் படிக்கப்படுகிறது.

பொறுப்பற்ற நாடோடிகளின் கற்பனையில் உருவான கதையே வள்ளுவமாலை என்று ஒரு புறம் கூறப்பட மறுகோடியில் சிலர்க்கோ இது நல்லதோர் திறனாய்வு மாலையாகத் தோன்றியது. வள்ளுவமாலைப் பாடல்களே திருக்குறளைத் திரித்துப் பொருள் கொள்வதற்குப் பயன்பட்டன என ஒருசாரார் கூற மற்றவர்கள் இது கவித்துவம் மிக்க பாராட்டுப் பாடல் தொகுதி எனப் போற்றினர். எவ்வாறாயினும் குறளைப் பற்றி அறிதற்கு இது ஓர் பண்டைக் கருவி நூலாகத் திகழ்கிறது என்பதிலும் திருக்குறளின் சிறப்பை நன்கு சுவைத்துப் பிறரையும் சுவைக்கச் செய்கின்றது என்பதிலும் ஐயமில்லை.

இதன் காலம் கல்லாடர் காலமாகிய கி பி 11-ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என்பது பலரின் முடிவு.

வள்ளுவமாலையில் உள்ள பாடல்களுக்குள்ளேயே, குறள் அமைப்பு பற்றிய பால், இயல், அதிகாரம் என்ற கூறுகளைப் பற்றி மாறுபட்ட கருத்துகள் கூறப்பட்டுள்ளன. அதுபோலவே முப்பாலில் நாலு உறுதிப் பொருளையும் கூறியது என்று ஒரு பாட்டு கூற, நாலு உறுதிப் பொருளையும் நேரடியாகக் கூறியது என்கிறது இன்னொரு பாடல். திருக்குறளை அதனுடன் ஒப்புமையற்ற வேதம், வடமொழி இலக்கியங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகியவைகளோடு இணைத்துக் கூறியது ஒப்பிலக்கிய நோக்கில் பிழையானது. திருக்குறள் முதல்நூல் அல்ல; அது வழிநூல்; குறள் வடமொழி வேதத்தைத் தழுவியது போன்ற வள்ளுவமாலைக் கருத்துக்கள், இதனுள் குறளின் புகழுரை மட்டுமே அடங்கியிருக்கவில்லை, குறளின் வரலாற்றைத் திரிக்கும் பாடல்களும் இருக்கின்றன என்பதையும் உணர்த்துகின்றன.

திருக்குறள் பற்றிய பாராட்டுரைகள், புகழுரைகள், திறனாய்வுரைகள் கொண்ட பாடல் தொகுப்பு வள்ளுவமாலை.
வானொலி, தெய்வம், வேந்தன் பாராட்டுரை - இவை குறளுக்குத் தெய்வத்தன்மை தரும் நோக்கில் புனையப்பட்டதாகத் தோன்றுகின்றன.
குறளாசிரியரின் மீது வழங்கி வந்த பழியை நீக்க வேண்டும் என்ற எண்ணம் சில பாடல்களில் தெரிகிறது.
எந்த ஒரு நூலினும் மேம்பாடனது குறள் என்பதைக் காட்டவேண்டும் என்ற ஆர்வம் சில பாக்களில் காணப்படுகிறது.
இயலும் அதிகாரமும் இத்தனையென்று அரண் செய்ய விரும்பிய நோக்கம் சில பாடல்கள் மூலம் வெளிப்படுகிறது.
திருவள்ளுவரைக் கொண்டாடவும் திருக்குறளைப் புகழ்ந்தேத்தவும், குறள் பற்றிச் சுதந்திரமாக மொழியப்பட்ட பல புலவர்களின் கருத்துக்களின் தொகுப்பாக ஆக்கப்பெற்ற நூல் இது.