அறத்துப்பாலில் கடவுள் உண்மை கூறப்பட்டுச் சமயச் சார்பற்ற அறம் போதிக்கப்படுகிறது; அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று சாற்றப்படுகிறது;
அன்புநெறி எல்லா இடங்களிலும் வலியுறுத்தப்படுகிறது; செயல்நிலை அறமே பெரிதும் வற்புறுத்தப்படுகிறது; பரந்துபட்ட பொறுமையுணர்வு அறிவுறுத்தப்படுகிறது.
குறள் பகுப்பில் அறம்
குறளின் பெரும்பிரிவுகளான பால் பகுப்பில் அமைந்த அறம், பொருள், காமம் என்பனவற்றுள் அறம் வழக்கமாக முதலில்
வைத்துப் பேசப்படுகிறது.
இயல்கள் என்று அழைக்கப்படும் நான்கு சிறு பகுதிகளாக-முதலில் பாயிரம்,-அடுத்து இல்லறம், துறவறம்- கடைசியில் ஊழ் என
அறத்துப்பால் உள்ளதாக திருவள்ளுவமாலை மூலமும் உரைசெய்தவர்கள் மூலமும் அறிகிறோம்.
பாயிரமான முதல் பகுதி கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் எனும் நான்கு அதிகாரங்களாக அமைந்து
குறளுக்கு ஒரு முன்னுரையாக வருகிறது. இந்த நான்கையும்
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே
(தொல்.புற-33)
எனத் தொல்காப்பியம் குறிப்பிடும் கடவுள் வாழ்த்து, கொடிநிலை, கந்தழி, வள்ளி ஆகிய வாழ்த்து நிலைகளோடு தொடர்புப்படுத்தி இவற்றை
மனதில் வைத்தே வள்ளுவர் பாயிரம் படைத்தார் எனச் சொல்வர்.
பாயிரத்தை அடுத்து இல்லறம் சொல்லப்பட்டுள்ளது. இல்லறத்தில் இருப்பவர்கள், வீட்டிலும் வெளியே சமுதாயத்திலும் கடைப்பிடிக்க வேண்டிய
ஒழுக்கங்களும், கடமைகளும், செய்ய வேண்டிய செயல்களாகவும், செய்யக்கூடாதவையாகவும் பிரித்துக் காட்டப்பட்டு, 200 குறட்பாக்களாக
இல்லறவியலில் இடம்பெற்றுள்ளன.
அடுத்துத் துறவறவியலில் மனித வாழ்வின் முதிர்ந்த நிலை விளக்கப்படுகிறது. முதிர் நிலையாகிய துறவறத்தில் நிலையாமை கூறி,
அருளுடைமை, கொல்லாமை, வாய்மை, அவா அறுத்தல் ஆகிய நிலைத்த அறங்களும் கூறப்பட்டுள்ளன. மேலும் துறவறவியலில்
சமயங்களின் பொய்ம்மையான கொள்கைகளுக்கும் போலித்துறவிற்கும் எதிரான கருத்துக்களையும் வள்ளுவர் பதிவு செய்துள்ளார்.
மொத்தம் 130 குறட்பாக்களில் துறவறவியல் அமைந்துள்ளது. துறவறம் இல்லறத்தின் எதிர்ப்பண்பு என்று கருதப்படவில்லை; இல்லறத்தின்
தொடர்ச்சியே துறவறம்; இல்லறத்திற்குள்ளேயும் துறவறத்தைப் பயிற்சி செய்யலாம். துறவறமென்பது வாழ்க்கையை வெறுத்து ஓடுவது அன்று;
இல்லறத்திலும் மேம்பட்ட விரிந்து பரந்த அன்பு வழியைப் பேணுவதென்பதும் வள்ளுவர் எண்ணமாதலின் அவர் துறவறவியலில் வாழ்வை
வெறுத்தலையும் உலகை மறுத்தலையும் பேசவில்லை என்பது குறிக்கத்தக்கது.
துறவறத்தில் கூறிய பல குறள்கள் இல்லறத்தாருக்கும் ஏற்றனவாய் இருக்கின்றன. இல்லறத்தாரும் துறவறவழியில் நின்றவரே என்பதையும் குறள்
நிலைநாட்டுகின்றது. இவ்வாறு மாற்றி அமைக்கத்தக்கவாறு இல்லறவியலும் துறவற இயலும் அமைந்துள்ளதாலும் இல்லறவியல் துறவறவியல்
பாகுபாடு இல்லாமலே அறத்துப்பாலின் இப்பகுதிகள் புரிந்துகொள்ளப்படுவதாலும் வள்ளுவமாலை பாடியோராலும் அவற்றை ஏற்று உரை பகன்ற
உரையாசிரியர்களாலும் செய்யப்பட்ட இந்த இயல் பகுப்புமுறை தேவைதானா என்ற வினா எழுகிறது. மேலும் இன்றைய சூழலில் நாம் துறவறத்துக்கு
அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எனவே இல்லறம் துறவறம் என்ற பகுப்பில்லாமல் அறத்துப்பாலைப் பயில்வதே பயனளிக்கும்; கள்ளாமை
ஏன் துறவறவியலில் சொல்லப்பட்டுள்ளது? என்பது போன்ற தேவையற்ற ஐயங்களும் தவிர்க்கப்படும்.
இறுதிச் சிறுபகுதி ஊழைப் பற்றிச் சொல்லும் ஓரே ஒரு அதிகாரம் கொண்டது. ஊழ் என்ற சொல் முறை அல்லது இயற்கையின் செயல் எனப் பொருள்படும்.
ஊழிற்பெருவலி யாவுள? என்று கேட்டு ஊழின் வலிமையை நமக்கு உணர்த்துகிறார் வள்ளுவர். அறத்துப்பாலின்
இறுதியில் வரும் ஊழ் அதிகாரம் உயிர்களால் ஆவது எதுவுமில்லை; நடப்பது நடந்தே தீரும் என்ற முடிவோடு நிறைவெய்துகிறது என்பதாகத் தோற்றம் அளிக்கிறது.
இவ்வாறாக பாயிரம் 4 அதிகாரங்களையும் இல்லறம் 20 அதிகாரங்களையும் துறவறம் 13 அதிகாரங்களையும் கடைசியாக ஊழ்
1 அதிகாரத்தையும் கொண்டு அறத்துப்பால் மொத்தமாக 38 அதிகாரங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது.