இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0890உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று

(அதிகாரம்:உட்பகை குறள் எண்:890)

பொழிப்பு (மு வரதராசன்): அகத்தின் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.மணக்குடவர் உரை: மனத்தினால் பொருத்த மில்லாதாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிலகத்தே பாம்போடு கூடி வாழ்ந்தாற் போலும்.
இது பாம்பு இடம் வந்தால் கடிக்கும்; அதுபோல உட்பகைவர் இடம் வந்தால் கொல்லுவரென்றது.

பரிமேலழகர் உரை: உடம்பாடு இலாதவர் வாழ்க்கை - மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும்.
(குடங்கம் என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம், ஆகவே, அவ்வுவமையால் அவன் உயிர்க்கு இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது.

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: மனப்பொருத்தம் இல்லாதாரோடு கூடிவாழ்தல் ஒரு குடிசையுள் பாம்போடு கூடித் தங்கினால் போலும்!


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை, குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று.

பதவுரை: உடம்பாடு-பொருத்தப்பாடு, மனப் பொருத்தம்; இலாதவர்-இல்லாதவர்; வாழ்க்கை-வாழ்க்கை; குடங்கருள்-குடிலுள்; பாம்போடு-பாம்புடன்; உடன்-ஒருங்கே; உறைந்தற்று-தங்கினாற் போன்றது.


உடம்பாடு இலாதவர் வாழ்க்கை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தினால் பொருத்த மில்லாதாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை;
பரிப்பெருமாள்: மனத்தினால் பொருத்த மில்லாதாரோடு ஒத்து வாழும் வாழ்க்கை;
பரிதி: உட்பகையாளர் கூட்டுறவு; [கூட்டுறவு-கூடிவாழ்தல்]
காலிங்கர்: உள்ளத்துள் (உடம்பா)டிலாதவரோடு கூடி வாழும் வாழ்க்கை எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை;

'மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மன ஒற்றுமை இல்லாதவரோடு வாழ்தல்', 'மனப் பொருத்தம் இல்லாதவரோடு ஒருவன் கூடி வாழ்தல்', 'மனப் பொருத்தம் இல்லாதவர்கள் (உட்பகை உள்ளவர்கள்) சேர்ந்து வசிப்பது', 'மனப்பொருத்தம் இல்லாதவருடன் வாழும் வாழ்க்கை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உள்ளத்திலே ஒன்றுபடாத ஒருவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.

குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு குடிலகத்தே பாம்போடு கூடி வாழ்ந்தாற் போலும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பாம்பு இடம் வந்தால் கடிக்கும்; அதுபோல உட்பகைவர் இடம் வந்தால் கொல்லுவரென்றது.
பரிப்பெருமாள்: ஒரு குடிலகத்தே பாம்போடு கூட வாழ்ந்தாற் போலும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பாம்பு எய்த வந்தால் கடிக்கும்; அதுபோல இடம் வந்தால் கொல்வார் என்றது.
பரிதி: ஒரு குடத்திலே பாம்பும் கெருடனும் இருப்பதற்கு ஒக்கும்.
காலிங்கர்: பெரும் பேழையகத்து உறையும் பாம்பொடு தாமும் ஆண்டுக் கூடி உறையும் அத்தன்மைத்து ஆகலான் என்றவாறு. [பேழையகத்து-பெட்டியினுள்]
பரிமேலழகர்: ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: குடங்கம் என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம், ஆகவே, அவ்வுவமையால் அவன் உயிர்க்கு இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது. [கோட்படல் ஒருதலை - கடிக்கப்படுதல் உறுதி; கண்ணோடாது அவரைக் கடிக - இரக்கம் காட்டாமல் மனப் பொருத்தம் இல்லாதாரை நீக்குக]

'ஒரு குடிலகத்தே/குடத்திலே/பெரும் பேழையகத்து பாம்போடு கூடி வாழ்ந்தாற் போலும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி மாறுபாடாக 'ஒரு குடத்திலே பாம்பும் கெருடனும் இருப்பதற்கு ஒக்கும்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெட்டியில் பாம்புடன் வாழ்வதைப் போலும்', 'ஒரு குடிசையுள்ளே பாம்போடு ஒருவன் சேர்ந்து தங்கியது போலும்', 'குறுகிய அறைக்குள் பாம்போடு வசிப்பதற்குச் சமானம்', 'ஒரு குடிலுள் உள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒரு குடிசையுள்ளே பாம்போடு உடன் வாழ்ந்தாற் போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
உள்ளத்திலே ஒன்றுபடாத ஒருவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடன் வாழ்ந்தாற் போன்றது என்பது பாடலின் பொருள்.
'குடங்கருள் பாம்போடு' குறிப்பது என்ன?

இல்வாழ்க்கையில் பகை உண்டானால் அது இருவருக்கும் பாதுகாப்பற்ற நிலையாகும்.

உள்ளத்தில் பொருத்தப்பாடு இல்லாதவரோடு கூடி ஒருவன் அல்லது ஒருத்தி வாழும் வாழ்க்கை ஒரு குடிலுள் பாம்போடு கூடத் தங்கியிருத்தல் போன்றதாகும்.
உள்ளத்தால் ஒன்றுபடாத இருவர் கொள்ளும் உறவையும் உட்பகை என்றே கருதலாம் என்கிறது இக்குறள்.
நம்மவர் எனத்தக்கவர், தாயாதிகள், உறவின்முறையார், உற்றார் (நெருங்கிய நட்பினர்), குடும்பத்திலுள்ளோர் என்றிவர்களிடை உட்பகை உண்டாகாமல் காத்துக்கொள்ள வேண்டும் எனச்சொல்லிய பின்னர் இப்பாடலில் இல்வாழ்க்கை மேற்கொண்ட கணவன் - மனைவி என்ற இருவரிடை பகைமனம் கொண்ட மன வேறுபாடு தோன்றிவிட்டால் அது கொடிய சூழலாக இருக்கும் என எச்சரிக்கிறது இப்பாடல். உடம்பாடிலாதவர், வாழ்க்கை என்ற சொல்லாட்சிகள் இக்குறள் மணவினையில் ஈடுபட்டவர் பற்றியதே என்பதை அரண் செய்யும்.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஓர் குடிசைக்குள் பாம்புடன் தங்க வேண்டும் என்ற நிலை உண்டானால் அது எப்படி இருக்கும்? சிறிய இடத்தாலும் பாம்பின் இயல்பாலும் குடிசையில் நச்சுத் தன்மையுடைய பாம்பொடு உள்ளவன் உயிர்க்கு இறுதி வருதல் ஒருதலை. அதுபோல் உள்ளத்தால் ஒவ்வாதிருப்பவர்கள் - மனஒற்றுமை இல்லாமல் இரட்டைப் போக்குக் கொண்டவர்களாக இருப்பவர்கள் - கூடி வாழ்வது ஒவ்வொரு நொடியும் அச்சம் கொள்ளத்தக்கதாகவே இருக்கும். உள்ளத்தால் உடன்படாத கருத்துடையவர்கள் என்னும்போது உள்ளத்தில் பகையை ஒளித்து வளர்த்திருப்பவராக இருப்பர். அத்தகையரோடு கூடிவாழ்தல் ஊறு நிறைந்ததாக இருக்கும். நோற்பாரின் நோன்மை உடைய சூழலில் எஞ்ஞான்றும் சுழன்று கொண்டிருக்கும் இல்வாழ்வில் உடனுறைபவரும் உட்பகை கொண்டவராய் அமைந்துவிட்டால் அவ்வாழ்வு உயிரற்ற வாழ்வாகவே ஆகிவிடும். இங்கு நல்லுறவு வளராவிட்டால். உட்பகை பெருகி பெருந்தீமைதான் உண்டாகும்.
இதை விளக்கும் 'குடங்கருள் பாம்பு' என்ற தொடர் ஒரு பெரிய காட்சி உருவாக்கத்தைக் ஏற்படுத்தி, கூறப்பட்ட கருத்தின் ஆழத்தையும் நுட்பத்தையும் நன்கு உணரவைக்கின்றது.

மறைமுகப் பகைமைக்குப் பிறகு மீண்டும் இணைய முடியாது என்பதால் அப்பகைமையைத் தவிர்க்கவேண்டும் என்பது செய்தி.

'குடங்கருள் பாம்போடு' குறிப்பது என்ன?

'குடங்கர்' என்பதற்கு குடில் என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் பொருள் கூறினர்; பரிதியார் குடம் என்றார்; காலிங்கர் பேழை எனப் பொருள் கொண்டார்; இச்சொல்லுக்கு வளை எனவும் பொருள் உரைக்கப்பட்டுள்ளது. உறைந்தற்று என்று இப்பாடலில் சொல்லப்பட்டுள்ளதாலும் வசிப்பதற்கு உரிய இடம் குடிசை ஆகலாலும் குடில் என்னும் பொருளே சிறக்கும்.

பாம்பொடு பழகேல் என்று சொல்லும் ஆத்திச்சூடி 77 (பொருள்: பால் கொடுத்தவருக்கும் நஞ்சைத் தரும் பாம்புடன் பழகாதே). பாம்பு ஒன்று குடிசைக்குள் இருக்கிறது. ஏதோ ஒரு காரணத்திற்குக் கட்டுப்பட்டு அக்குடிலுள் ஒருவன் தங்கினால் என்ன ஆகும்? பாம்பும் மனிதனும் ஒன்றை மற்றொன்று எப்போது விரட்டலாம் என்று காலத்தை எதிர்பார்த்து உள்ளுக்குள் அச்சத்துடனே இருப்பர். அவ்விதமே உளப்பொருத்தம் இல்லாதவருடன் ஒன்றாகக் கூடி வாழ்பவர் எப்போது விடுபடுவோம் என அச்சத்துடன் காத்திருப்பர். மறைத்திருக்கும் பகையுள்ளோருடன் உடனுறைதல் ஊறு விளைக்கக் கூடியதாகும்,

பரிமேலழகர் "குடங்கம் என்னும் வடசொல் திரிந்து நின்றது," என்று அது வடசொல்லில் இருந்து வந்தது என்று விரிவுரையில் கூறுகிறார். ஆனால் தண்டபாணி தேசிகர் "கரும்பு, வண்டு, சாம்பல், பந்தல் போலும் தமிழ்ச்சொற்கள் 'அர்' பெறுமேயன்றி அம்மீற்று (குடங்கம் என்ற சொல்) ஆரியச் சொல் அர் பெற்றுவருதல் இல்லை என்பதைக் கரும்பு-கரும்பர், வண்டு-வண்டர் போலும் வழக்குப்பற்றி உணர்க. அன்றியும் 'குடங்கர்' என்ற சொல் குடம்-வளைவுப் பொருளைத் தரும். பகுதியாகிய 'குட' என்பதனடியாகப் பிறந்த சொல் வேறுபாடுகளே குடி, குறில் முதலாயின அனைத்தும். ஆதலால் அது தமிழ்ச் சொல்லேயாதல் தெளிவு" என்று அதை மறுத்துரைத்துள்ளார்.

உள்ளத்திலே ஒன்றுபடாத ஒருவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு உடன் வாழ்ந்தாற் போன்றது என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

உட்பகை கொண்டோரோடு வாழ்க்கை நடத்துவது மிகக் கொடியது.

பொழிப்பு

மனவேறுபாடு உடையாரோடு வாழ்தல் என்பது ஒரு குடிசையுள்ளே பாம்போடு ஒருவன் சேர்ந்து வசிப்பது போல்வதாகும்.