இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0881நிழனீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்

(அதிகாரம்:உட்பகை குறள் எண்:881)

பொழிப்பு (மு வரதராசன்): இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும்; அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகளும் துன்பம் தருமானால் தீயனவே ஆகும்.

மணக்குடவர் உரை: நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாத செய்யும் நீர் இன்னாதாகும். அதுபோலச் சுற்றத்தார் நன்மை இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின் அஃது இன்னாதாயே விடும்.
இது சுற்றமென் றிகழற்க என்றது.

பரிமேலழகர் உரை: நிழல் நீரும் இன்னாத இன்னா - ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா செயின் இன்னாவாம் - அதுபோலத் தழுவவேண்டுவனவாய தமரியல்புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம்.
(நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக. இன்னா செயல் - முன் வெளிப்படாமை நின்று துணை பெற்றவழிக் கெடுதல்.)

இரா இளங்குமரனார் உரை: நிழலில் உள்ள நீர் குடிக்க இனிதே எனினும் தீமையைச் செய்யுமாயின் அது தீயதேயாம்; அதுபோல், தம்மவர் நல்லியல்பும் இனிதாயினும் அவர் தீமையைச் செய்யின் அது தீயதேயாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிழனீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னா செயின் இன்னாவாம்.

பதவுரை: நிழல்-நிழல்; நீரும்-நீரும்; இன்னாத-தீங்கு (செய்தால்); இன்னா-தீயவை; தமர்-தாயத்தார், சுற்றத்தார், உறவினர்; நீரும்-நீர்மையும், இயல்பும்; இன்னாவாம்-தீயவையாம்; இன்னா-துன்பம் தருவன; செயின்-செய்தால்.


நிழனீரும் இன்னாத இன்னா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாத செய்யும் நீர் இன்னாதாகும்;
பரிப்பெருமாள்: நிழலகத்து நீர் இனிதேயாயினும் அவற்றுள் இன்னாங்கு செய்யின் இன்னாதாகும்;
பரிதி: நிழல் சேர்ந்த நீர் அழகு ஆனாலும் வியாதியைத் தருவது போல;
காலிங்கர்: உலகத்துப் பொதுவகையாக நிழலும் நீரும் இனிய எனினும், சில நச்சுமரமும் நச்சுப் பொய்கையும் என்பன உள அன்றே; மற்று அவை ஏனை நிழலும் நீரும் போன்று இருந்தும், இருந்தோரும் அருந்தினோரும் இறந்துபடும் திறம் விளையும்;
பரிமேலழகர்: ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய் செய்வன இன்னாவாம்;
பரிமேலழகர் குறிப்புரை: நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின. [பெருங்கால் - யானைக்கால் வியாதி; பெருவயிறு - மகோதரம் என்னும் நோய்; முதலாயின - குளிர்சுரம், குட்டம், குன்மம், ஆகியனவற்றைக் கொள்ளலாம்]

நிழலகத்து நீர் இனிதேயாயினும்/நிழலும் நீரும் முன் இனியவேனும், பின் நோய் செய்வன இன்னாவாம் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'குளிர்ந்த நீரும் தீமை எனின் விரும்பத்தகா', 'இன்பம் தரும் நிழலகத்து நீரும் துன்பம் தருமாயின் தீயதாம்', 'வசிக்கின்ற இடமும் பழக்கமான தண்ணீரும்கூட நோயுண்டாக்குமானால் அவை (விலக்க வேண்டிய) தீமைகளே', 'நிழலும் நீரும் நோய் உண்டாக்கக் கூடியவானால் அவை தீயனவே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நிழலகத்து நீரும் தீமை தருமாயின் தீயதாம் என்பது இப்பகுதியின் பொருள்.

தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோலச் சுற்றத்தார் நன்மை இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின் அஃது இன்னாதாயே விடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது சுற்றமென் றிகழற்க என்றது.
பரிப்பெருமாள்: அதுபோலச் சுற்றத்தார் தன்மையும் இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின் இன்னாதாகவே விடும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சுற்றமென் றிகழற்க என்றது. இவை இரண்டினானும் இகழாமை கூறப்பட்டது.
பரிதி: உறவின் முறையும் நல்லவர்களாகில் நன்மையைத் தரும்; அல்லது கேட்டைத் தரும் என்றவாறு.
காலிங்கர்: அதனால் மற்று ஆங்குத் தமராக நட்டோரது நீர்மை, நீர்மைபோன்று இருந்து பெரிதும் இன்னாவாம், இன்னாதவற்றைச் செய்யும் இடத்து என்றவாறு.
பரிமேலழகர்: அதுபோலத் தழுவவேண்டுவனவாய தமரியல்புகளும் முன் இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம். [தமர் இயல்புகளும் - சுற்றத்தாரது குணங்களும்]
பரிமேலழகர் குறிப்புரை: 'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர் என்பது அறிக. இன்னா செயல் - முன் வெளிப்படாமை நின்று துணை பெற்றவழிக் கெடுதல். [ஞாதியர்- தாயத்தார் (பங்காளிகள்) ]

'அதுபோலச் சுற்றத்தார் நன்மை இனிதாயினும் அவர் இன்னாதவற்றைச் செய்வாராயின் அஃது இன்னாதாயே விடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறவினர் குணங்களும் கேடுதரின் பிடிக்கா', 'நன்மைக்குத் துணை நிற்கும் சுற்றத்தார் இயல்புகளும் துன்பம் தருமாயின் தீயனவேயாம்', 'அதைப் போல உடனிருந்து பழகும் உறவினரின் நடத்தையும் துன்பம் செய்வதாக இருந்தால் (அவர்களும் விலக்க வேண்டிய) தீயவர்களே', 'அதுபோலத் தீமை செய்யுந் தம்மவர் இயல்பும் பகைத்தன்மை உடையதே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சுற்றத்தார் இயல்புகளும் தீங்குகள் செய்வதாயின் தீயனவேயாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நிழனீரும் தீமை தருமாயின் தீயதாம்; சுற்றத்தார் இயல்புகளும் தீங்குகள் செய்வதாயின் தீயனவேயாம் என்பது பாடலின் பொருள்.
'நிழனீரும்' குறிப்பது என்ன?

நம்மவர் என்பதால் அவர் தீயன செய்தால் நன்மையாகிவிடுமா?

நிழல்நீரும் தீங்கினை விளைவிப்பனவாயின் அவை ஒதுக்கப்படுவனவே ஆகும்; சுற்றத்தார் இயல்புகளும் முன்பு இனியனவாய்த் தோன்றி பின் துன்பம் விளைவிப்பனவாயின் அவை தீயனவே ஆம்.
நிழல்நீர்கள் குடிப்பதற்கு நல்லனவாகவே இருக்கலாம். ஆனால் அதுவே நச்சுத்தன்மையுள்ள நீர் எனத் தெரிந்தால் அந்நீரை ஒதுக்கியே வைப்போம். அதுபோல தழுவவேண்டும் சுற்றத்தார், நிழல் போல நின்று நமக்கு உதவுவதாகக் காணப்பட்டாலும், அவர் குணங்கள் துன்பம் தருவனவாக இருந்தால் அவரைப் பகைவர் போன்று நீக்கி வைக்க வேண்டும்.
உறவினர் குணங்கள் துன்பம் தருவன என்னும்போது அவர் உள்ளத்தில் பகைகொண்டு மேலுக்கு உறவுகொள்பவராக இருப்பர்; அது உட்பகை என அறியப்படும். உட்பகை உடையவர்களை நம்மவர் என்று எண்ணிக்கொண்டு உறவைத் தொடர்ந்தால் தீமையே உண்டாகும். பயன்படுத்தும்போது பெறும் இனிமையைப் பொருட்படுத்தாமல் பிறகு வரும் நோயைக் கருதி நிழல்நீரையும் நீக்குவதுபோல, சுற்றத்தாரியல்பும் உட்பகையாயிருந்து துன்பஞ்செய்யுமாயின் கூடாவாம். அவர்களுடைய தொடர்பைத் துண்டித்தே ஆகவேண்டும். நோய்தரும் நிழல்நீரும் தீமைதான்; நோய்தரும் உறவும் கெடுதிதான்; இரண்டுமே நீக்கப்பட வேண்டியவை.
அவரால் துன்பம் உண்டாகும்போது, உறவினர்தானே என்று இகழாமல் அதாவது அலட்சியம் காட்டாமல்- கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பின்னர் பெருந்தீமையில் முடியும் என்பது கருத்து.

'தமர்' என்ற சொல்லுக்குச் சுற்றத்தார், உறவினர், தாயாதிகள் (பங்காளிகள்) எனப் பொருள் கூறுவர். சிலர் தம் வகுப்பார், தம் கூட்டத்தார், தம் ஊரார், தம் நாட்டார், தம் மொழியார் என்றிவர்களையும் சேர்த்தெண்ணுவர். இவர்களுள் தாயாதிகளே உட்பகை ஆதற்கு உரியவராகப் பெரிதும் கருதப்படுவர்.

'நிழனீரும்' குறிப்பது என்ன?

'நிழல்நீர்' என்பதற்கு நிழலகத்துநீர், நிழல்சேர்ந்த நீர் எனவும் வெயில் படாத மர நிழலில் உள்ள நீர் அல்லது நிழலில் கிடக்கும் நீர் எனவும் பொருள் கூறுவர். நிழல் நீர் இனியதா இன்னாததா? இரண்டும் ஆவது உண்டு. நிழலின் கண்ணுள்ள நீர் குளிர்ந்து சுவை தரக் கூடியதுவே. ஆனால் வெயில்படாத நீர் தூய்மையற்றதாகவும் இருப்பதற்கு வாய்ப்புண்டு. நிழலகத்து இருந்தும் வெயில் படாத குட்டையாக இருப்பின், நோய்தரும் கிருமிகள் உண்டாகி, அது நிழலிலே இருக்கும் உண்ணீரென்று அருந்துவோருக்கு, துன்பத்தையே தரும். அதுபோல் நிழற்கண் உள்ள நீர், கட்டுக்கிடையாய் இருப்பின் நோய் தருவதாகத்தான் இருக்கும்.
சில இடங்களில் தூய்மையாக உள்ள நிழல்நீர் அருந்துவதற்கு இனியதாக இருந்து பிறகு துன்பம் தருவதாக இருக்கலாம். அதில் உள்ள உள்ள நச்சுத்தன்மை, நீரில் கலந்திருக்கும் உப்பு போன்றவற்றை அறியாமல் பயன்படுத்தினால் நாளடைவில் தோல் அரிப்பு, பற்சிதைவு, எலும்பு தேய்தல், நரம்புச்சிலந்தி போன்ற நோய்கள் உண்டாகும். நோய் வருமுன் காப்பதே நல்லது; நிழல்நீர் என்றாலும் உடல்நலத்துக்கு ஊறுவிளைக்கும் நீரைப் பயன்படுத்தாமலிருப்பதே நோய்களிலிருந்து நீங்கும் சிறந்த வழி.
நிழல்நீரில் இனியதும் உண்டு, இன்னாததும் உண்டு. எவ்விதம் இன்னாத நீரை விலக்குகிறோமோ அதுபோலக் கூடவேஇருந்து துன்பம் தரும் உட்பகையான உறவினரை அறிந்து நீக்கவேண்டும் எனச் சொல்லப்படுகிறது. நன்மை செய்வன போலத் தெரிந்தாலும், அவர் உள்ளே இருக்கும் பகைமைக் குணங்கள் நமக்குத் தெரியாமலேயே செயல்பட்டு, நமக்கு கேடு விளைவித்து விடும், நீர் நல்ல உணவாயினும் நிழலின் தன்மையால் நோய் செய்தல்போலச் சுற்றங்கள் சூழ இருப்பதிலும் இனிமையுண்டெனினும் அவை துன்பந்தருமாயின் நீக்கத்தக்கவைகளே என்பது செய்தி,

'நிழனீரும்' என்ற சொற்றொடரை 'நிழல்நீர்' எனவும் 'நிழலும் நீரும்' எனவும் கொண்டு இரு திறமாக உரை கூறுவர். நிழல்நீரும் எனத் தொல்லாசிரியர்களில் மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் கொண்டனர். 'இன்னாத இன்னா' என்பதிலுள்ள பன்மை நோக்கி 'நிழல் நீரும்' என்பதனை நிழலும் நீரும் எனக் காலிங்கர், பரிமேலழகர் ஆகியோரும் பின்வந்தவர்களில் பெரும்பான்மையரும் கொள்வர். ஆனால் 'நிழல் வகைக்கு ஏற்ப, நீரும் பலவாதலின், நிழல்நீர்களும் என நீருக்கே பன்மை கொள்ளலாம்; 'தமர் நீரும்' என்று வருந்தொடர்க்குத் தமரும் நீரும் என்று கொள்ளாது தமரின் நீர்மைகள் என்றே கொள்ளக் கிடத்தல் காண்க; நிழல் நீரும் என்பதன் விளக்கமாக நீரும் நிழலது இனிதே (1309) என்னும் குறள் அமைந்திருத்தலை நோக்குக; எனவே நிழலை நீருக்கு அடையாகக் கொண்டு நிழலகத்து நீர் இனிதேயாயினும் எனக்கூறிய மணக்குடவர் போன்றோர் உரை பொருத்தமானதேயாகும்' எனத் தண்டபாணி தேசிகரும் இரா சாரங்கபாணியும் கருத்துரைப்பர். 'நிழலும் நீரும்' என்பதினும் 'நிழல்நீரும்' எனக் கொள்வதே சிறப்பாகத் தோன்றுகிறது.

நிழலகத்து நீரும் தீமை தருமாயின் தீயதாம்; சுற்றத்தார் இயல்புகளும் தீங்குகள் செய்வதாயின் தீயனவேயாம் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உடனிருந்தே துன்புறுத்தும் நோய் உட்பகை.

பொழிப்பு

நிழலகத்து நீரும் துன்பம் தருமாயின் தீயதாம். நன்மைக்குத் துணை நிற்கும் சுற்றத்தார் இயல்புகளும் தீங்குகள் செய்வதாயின் தீயனவேயாம்