வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு
(அதிகாரம்:உட்பகை
குறள் எண்:882)
பொழிப்பு (மு வரதராசன்): வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை; ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
|
மணக்குடவர் உரை:
வாள்போலக் கொல்லுந் திறனுடைய பகைவரை அஞ்சாதொழிக; புறம்பு நட்டாரைப் போல மனத்தினாற் பகைத்திருப்பார் தொடர்பை அஞ்சுக.
இது பகை அஞ்சுவதினும் மிக அஞ்சவேண்டுமென்றது.
பரிமேலழகர் உரை:
வாள் போல் பகைவரை அஞ்சற்க - வாள்போல எறிதும் என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர் பகையினை அஞ்சாதொழிக; கேள் போல் பகைவர் தொடர்பு அஞ்சுக - அங்ஙனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சுக.
(பகைவர் : ஆகுபெயர். முன்னே அறிந்து காக்கப்படுதலான், 'அஞ்சற்க' என்றும், அங்ஙனம் அறியவும் காக்கவும் படாமையின் கெடுதல் ஒருதலை என்பது பறறி 'அஞ்சுக' என்றும் கூறினார். பின் செய்யும் பகையினும் கொடிதாகலானும் காக்கலாகாது ஆகலானும், அஞ்சப்படுவது முன் செய்த அவர் தொடர்பாயிற்று. இவை இரண்டு பாட்டானும் உட்பகை ஆகாது என்பது கூறப்பட்டது.
சி இலக்குவனார் உரை:
வாள்போல துன்பம் செய்யும் தன்மையை அறிவித்து நிற்கும் பகைவரைக் கண்டு அஞ்சவேண்டாம்; ஆனால் உறவினர்போல் நடித்துத் துன்பம் செய்யும் பகைவர் நட்பினை அஞ்சுக.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
வாள்போல் பகைவரை அஞ்சற்க; கேள்போல் பகைவர் தொடர்பு அஞ்சுக.
பதவுரை: வாள்போல்-வாட்படை போன்ற; பகைவரை-பகைவரை; அஞ்சற்க-பயம் வேண்டா; அஞ்சுக-நடுங்குக; கேள்போல்-சுற்றம் போன்று; பகைவர்-பகைவர்; தொடர்பு-உறவு, நட்பு.
|
வாள்போல் பகைவரை அஞ்சற்க:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வாள்போலக் கொல்லுந் திறனுடைய பகைவரை அஞ்சாதொழிக;
பரிப்பெருமாள்: வாளைப்போலக் கொல்லுந் திறத்தினையுடைய பகைவரை அஞ்சாதொழிக;
பரிதி: வாள்போலே வெட்டுகிற பகைவர்க்குப் பயப்பட வேண்டா;
காலிங்கர்: வாள்போலக் கடியராகிய புறப்பகைவரை அஞ்சாது ஒழியினும் ஒழிக;
பரிமேலழகர்: வாள்போல எறிதும் என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர் பகையினை அஞ்சாதொழிக; [எறிதும்-வெட்டுவோம்]
'வாள்போலக் கொல்லுந் திறனுடைய/வாள்போல எறிதும் என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர் பகையினை அஞ்சாதொழிக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வாள்போல் கொடிய பகைக்கு அஞ்சவேண்டாம்', 'வாள்போல் வெளிப்படையான பகைவரின் பகையை அஞ்ச வேண்டாம்', 'வாள்போல (எதிராகப் போரிடும் போதன்றி மற்ற காலத்தில் துன்பம் செய்யாத) புறப் பகைவர்களுக்குப் பயந்து கொண்டே இருக்க வேண்டியதில்லை', 'வாள்போல வெட்டுவோம் என்று எதிர்க்கும் வெளிப்பகைவர்க்குப் பயப்பட வேண்டியதில்லை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
வாள்போல் வெளிப்படையான பகைக்கு அஞ்சவேண்டியதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.
அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புறம்பு நட்டாரைப் போல மனத்தினாற் பகைத்திருப்பார் தொடர்பை அஞ்சுக.
மணக்குடவர் குறிப்புரை: இது பகை அஞ்சுவதினும் மிக அஞ்சவேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: முகம் நட்டாரைப் போன்று மனத்தினால் பகைத்திருப்பார் தொடர்வு அஞ்சுக.
பரிப்பெருமாள் குறிப்புரை: பகைவரை அஞ்சுவதினும் மிக அஞ்சவேண்டும் என்றவாறாயிற்று. உட்பகையாவது இது என்பதூஉம், அதற்கு அஞ்ச வேண்டும் என்பதூஉம் கூறிற்று.
பரிதி: உறவுபோல இருந்து வினைசாதிக்கிற உட்பகைக்குப் பயப்படவேண்டும் என்றவாறு.
காலிங்கர்: மற்று உள்புகுந்து கேள் போன்று கேளாகப் பகைவரது நட்பினை அதனினும் குறிக்கொண்டு அஞ்சுக என்றவாறு. [கேள்-சுற்றத்தார்]
பரிமேலழகர்: அங்ஙனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சுக.
பரிமேலழகர் குறிப்புரை: பகைவர்: ஆகுபெயர். முன்னே அறிந்து காக்கப்படுதலான், 'அஞ்சற்க' என்றும், அங்ஙனம் அறியவும் காக்கவும் படாமையின் கெடுதல் ஒருதலை என்பது பற்றி 'அஞ்சுக' என்றும் கூறினார். பின் செய்யும் பகையினும் கொடிதாகலானும் காக்கலாகாது ஆகலானும், அஞ்சப்படுவது முன் செய்த அவர் தொடர்பாயிற்று. இவை இரண்டு பாட்டானும் உட்பகை ஆகாது என்பது கூறப்பட்டது. [அவர் தொடர்பு - கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் தொடர்பு]
'முகம் நட்டாரைப் போல மனத்தினாற் பகைத்திருப்பார் தொடர்பை அஞ்சுக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உறவுபோல் நடிக்கும் உட்பகைக்கு அஞ்சுக', 'உறவினர்போல் நடிக்கும் உட்பகை உடையவர் நட்பினை அஞ்சுக', 'ஆனால் (உடனிருந்து கொண்டே துன்பம் கருதுகின்ற) நண்பர் போன்ற அகப் பகைவருடைய சம்பந்தத்தைப்பற்றி எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்', 'ஆனால், நண்பர்போல் வெளியே இனிமையாகப் பேசி மறைவாய்ப் பகைமை கருதுவாரது தொடர்புக்கு அஞ்சவேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உறவுபோல் நடிக்கும் உட்பகையின் தொடர்பை அஞ்சுக என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
வாள்போல் வெளிப்படையான பகைக்கு அஞ்சவேண்டியதில்லை; உறவுபோல் நடிக்கும் உட்பகையின் தொடர்பை அஞ்சுக என்பது பாடலின் பொருள்.
'வாள்போல் பகைவர்' என்றால் என்ன?
|
உட்பகை எதிர்பாராத நேரத்தில் தாக்கித் திகைக்கச் செய்யும்.
வாளைப்போல வெளிப்படையாக பகைவராக இருப்பவர் குறித்து ஒருவர் அஞ்ச வேண்டுவதில்லை; ஆனால், உறவினரைப் போலத் தன்னோடு நெருங்கி இருந்துகொண்டே தனக்குத் தீங்கு புரியும் உட்பகைவரின் தொடர்புக்குத்தான் அவர் அஞ்சுதல் வேண்டும்.
வாள் போல் பகைவர் என்பது வெளிப்படையாகப் பகைத்து நிற்பவர் குறித்தது. ஒருவர் பகைவர் என்பது வெளிப்படையாகத் தெரிந்தால் அவர் பற்றித் தற்காப்புடனேயே இருப்போம். நேருக்குநேர் எதிர்க்கும் பகைவர் இன்ன வலியுள்ளவர், இப்படிப்பட்ட இயல்பு கொண்டவர், இன்ன கருத்தினர் என்பன தெரியுமாதலால் அவரை மோதிப் பார்க்கலாம், பகைவர்கள் என்று அறிந்து எப்போதும் தற்காப்பு செய்து கொள்ள முடியுமாகையால் தீமை விளைவதை இயன்ற அளவு தடுத்துக் கொள்ளலாம். வீரத்தால் புறத்தே எதிர்த்து நிற்கும் பகைவரை வீழ்த்தவும் முடியும். புறப்பகை எதிர்த்து நின்று வெல்லக்கூடியது.
ஆனால் உள்ளத்தில் பகைமை உணர்ச்சியுடன் உதட்டில் நட்போடும் உறவாடிக் கெடுக்கும் உட்பகைவர்கள் எப்பொழுது தாக்குவர் என்பதைக் கணிக்கவே இயலாது. கூட இருந்து குழிபறிக்கும் குணம் படைத்தவர்கள் இவர்கள். நட்பு நாடுபவராக உள்ளே வரும் இவர்கள் நீறு பூத்த நெருப்பாக மனத்துள் பகையோடு காத்திருப்பர். நம்மவர்கள் என்ற எண்ணத்தால் அவர்களிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்ளத் தவறிவிட்டால், சோர்ந்திருக்கும் சமயத்தில் இவர்களின் தாக்குதலுக்கு ஆளாகிக் கேட்டிற்கு உள்ளாவோம். எனவே உட்பகையுள்ளவர் உறவினராயினும் அவருடனான தொடர்புக்கு அஞ்சுக எனச் சொல்லப்பட்டது.
முன்னே அறிந்து தற்காத்துக் கொள்ள முடிவதால் 'அஞ்சற்க' என்றும், அவ்விதம் அறிய இயலாததாலும் அதனால் காக்கப் படாமையாலும், கேடுறுவது திண்ணம் என்பதால் 'அஞ்சுக' என்றும் கூறப்பட்டது. தம்மொடு நெருங்கிப் பழகித் தம்மைச் சார்ந்தவர்போல் ஒழுகிப் பின் தமக்கு மாறாகச் சூழ்ச்சி செய்யக்கூடியவரிடத்துடனான தொடர்பை விழிப்புடன் கையாள வேண்டும் என்பது கருத்து.
பகைவர்க்கு அஞ்சற்க என்பது பகைவரை அஞ்சற்க எனச் சொல்லப்பட்டது.
|
'வாள்போல் பகைவர்' என்றால் என்ன?
'வாள்போல் பகைவர்' என்ற தொடர்க்கு வாள்போலக் கொல்லுந் திறனுடைய பகைவர், வாள்போலே வெட்டுகிற பகைவர், வாள்போலக் கடியராகிய புறப்பகைவர், வாள்போல எறிதும் என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர், வாளைப்போல் கொல்லுகிறோமென்று வெளியாயிருக்கிற பகைவர், வாள்போல வெல்லுது மென்று வெளிப்பட நிற்கும் பகைவர், வாள்போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர், வாள்போல் தோன்றும் பகைவர், வாள்போல் கொடிய பகை, வாள்போல் வெளிப்படையான பகைவர், வாள்போல (எதிராகப் போரிடும் போதன்றி மற்ற காலத்தில் துன்பம் செய்யாத) புறப் பகைவர், வாளைப்போல் வெளிப்படையாகத் தாக்கும் பகைவர், வாள்போல வெட்டுவோம் என்று எதிர்க்கும் வெளிப்பகைவர், வாள்போல துன்பம் செய்யும் தன்மையை அறிவித்து நிற்கும் பகைவர், வாளைப்போல வெளிப்படையாகத் துன்பம் புரியும் இயல்புடைய பகைவர், (உறைவிட்டு உருவிய) வாள்போல் வெளிப்படையான பகைவர், கொல்லும் வாள்போல வெளிப்படையாகப் பகைக்கும் பகைவர், வெளிப்படையாக எதிரே வரும் பகைவர், கொலைக்கருவியாகிய வாளைப் போல வெளிப்பட்டு நின்று துன்பம் செய்யும் பகைவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'வாள்போல் பகைவர்' என்றதற்கு மணக்குடவர் 'வாள்போலக் கொல்லுந் திறனுடைய பகைவர்' எனப் பொருள் கூறினார்.
பரிமேலழகர் 'வாள்போல எறிதும் (வாள்போல் வெட்டுதும்) என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர்' என உரைத்தார். மறைந்து நின்று தாக்கும் உட்பகைக்கு நேரெதிரான பொருள் தருவதாக 'வாள்போல வெட்டுதும்' என்று வெளிப்பட்டுத் தோன்றும் பகைவர் என்ற கருத்தில் அமைந்துள்ளது பரிமேலழகரது உரை. இதில் வாளில் காணும் வெளிப்படு பொருள் நுட்பமாய் அமைந்துள்ளது.
கொடுவாள் ஒரு கொலைக்கருவி என்பது வெளிப்படை. புறப்பகைவர் இன்னாசெய்வார் என்பதும் வெளிப்படை. அவர் எச்சரிக்கை யின்றித் தாக்க மாட்டாராதலால் அதை அறிந்து மோதலாம்; எனவே அஞ்சற்க எனச் சொல்லப்பட்டது. வெளிப்படையாகப் பகை கொண்டோரிடம் தெளிவாகப் பகைமையைக் கண்டு கொள்ளலாம் என்பதை விளக்குவது வாள்போல் பகைவர் என்ற தொடர்.
வாள்போல பகைவர் என்பது வெளிப்படையாகத் தெரிகின்ற பகை குறித்தது.
|
வாள்போல் வெளிப்படையான பகைக்கு அஞ்சவேண்டியதில்லை; உறவுபோல் நடிக்கும் உட்பகையின் தொடர்பை அஞ்சுக என்பது இக்குறட்கருத்து.
உறவாடிக் கெடுக்க நினைக்கும் உட்பகை அஞ்சிக் காக்கத்தக்கது.
வாள்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டாம்; உறவுபோல் நடிக்கும் உட்பகையின் தொடர்பை அஞ்சுக.
|