இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0884



மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா
ஏதம் பலவும் தரும்

(அதிகாரம்:உட்பகை குறள் எண்:884)

பொழிப்பு (மு வரதராசன்): மனம் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சீர்ப்படாமைக்குக் காரணமான குற்றம் பலவற்றையும் தரும்.

மணக்குடவர் உரை: மனம் நன்றாகாத உட்பகை தோன்றுமாயின் தனக்கு இனமாயினார் நல்லராகார்; அஃதன்றிப் பல குற்றங்களும் உண்டாம். இஃது இனம் பொருந்தாமல் கூடநின்று பகைப்பிக்கு மென்றது.

பரிமேலழகர் உரை: மனம் மாணா உட்பகை தோன்றின் - புறம் திருந்தியது போன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும் - அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
(அவை, சுற்றத்தாரை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான் தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம்.)

தமிழண்ணல் உரை: மனம் மாட்சிமைப்படாத உட்பகை ஒருவனுக்கு அவனது ஏனைய சுற்றத்தையும் மாட்சிமைப் படாமல் செய்து, அச்சுற்றத்தாரது பகையை வளர்த்துத் துன்பங்கள் பலவற்றையும் உண்டாக்கும். சுற்றத்தார் அவனை நம்பாமலும் அவன் சுற்றத்தாரை நம்பாமலும் ஆகி, அதனால் பல துன்பங்கள் விளையும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா ஏதம் பலவும் தரும்.

பதவுரை: மனம்- உள்ளம்; மாணா-மாட்சி இல்லாத; உட்பகை-உட்பகை; தோன்றின்-உண்டாவதாயின்; இனம்-சுற்றம்; மாணா-நன்றாகாத, மாட்சிமை குன்ற; ஏதம்-குற்றம்; பலவும்-பலவும்; தரும்-கொடுக்கும்.


மனம்மாணா உட்பகை தோன்றின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனம் நன்றாகாத உட்பகை தோன்றுமாயின்;
பரிப்பெருமாள்: மனம் நன்றாகாத உட்பகை தோன்றுமாயின்;
பரிதி: மனப் பொல்லாங்கினாலே உட்பகை தோன்றலின்;
காலிங்கர்: ஒருவர்க்குத் தம் மனம்மாட்சி இல்லாததோர் உட்பகை வந்து தோன்றுமாயின்;
பரிமேலழகர்: புறம் திருந்தியது போன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; [புறம் திருந்தியது போன்று அகந்திருந்தாத -வெளியில் நட்பிருப்பது போற்காட்டி, மனத்தில் நட்புக் கொள்ளாத]

'ஒருவர்க்குத் தம் மனம் மாட்சி இல்லாததோர் உட்பகை வந்து தோன்றுமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளம் ஒட்டாத உட்பகை இருந்தால்', 'ஒருவனுக்கு மனம் நன்றாகாத உட்பகை தோன்றுமாயின்', '(ஒரே கட்சியில் இருந்தும்) கருத்து வேற்றுமையினால் ஒருவன் உட்பகைவன் ஆகிவிட்டால்', 'சிறந்த மனப்பான்மை இல்லாத உட்பகைவர் அரசனுக்கு ஏற்படுவாராயின்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மனம் நன்றாகாத உட்பகை ஒருவர்க்குத் தோன்றுமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

இனம்மாணா ஏதம் பலவும் தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு இனமாயினார் நல்லராகார்; அஃதன்றிப் பல குற்றங்களும் உண்டாம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இனம் பொருந்தாமல் கூடநின்று பகைப்பிக்கு மென்றது.
பரிப்பெருமாள்: தனக்கு இனமாயினார் நல்லராகார்; அற்றன்றிப் பல குற்றங்களும் உண்டாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இனம் பொருந்தாமல் கூடநின்று பகைப்பிக்கு மென்றது. இவை நான்கினானும் அவர் செய்யும் திறன் கூறப்பட்டது.
பரிதி: இனத்தைக் கெடுத்துப் பேதையாகிய சிறுமை தரும் உட்பகையாவது உறவின் முறையார் பகை என அறிக.
காலிங்கர்: தம் குடி மாட்சிமை இல்லாதவாறு உள்ள குற்றம் பலவற்றையும் தரும் என்றவாறு.
பரிமேலழகர்: அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும். [வயமாகாமை- வசப்படாமை]
பரிமேலழகர் குறிப்புரை: அவை, சுற்றத்தாரை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான் தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம். [தான் தேறாமை - அரசனாகிய தான் சுற்றத்தாரை நம்பாமை]

'தனக்கு இனமாயினார் நல்லராகார்; அஃதன்றிப் பல குற்றங்களும் உண்டாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சுற்றம் ஒட்டாதபடி பல துன்பம் தரும்', 'அது குடிமாட்சிக்குப் பொருந்தாது; குற்றம் பலவற்றினையும் கொடுக்கும்', 'அவனால் நம்முடைய சுற்றத்தாரின் துணைபலம் குறைந்து போகும்படியான துன்பங்கள் பலவும் உண்டாகும்', 'அவன் உறவினர் அவனோடு கலவாமைக்குரிய பல துன்பங்களையும் அவர்கள் விளைப்பார்கள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது தம்சுற்றம் தமக்கு நல்லாராக இல்லாதவாறு செய்யும் குற்றம் பலவற்றையும் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனம் நன்றாகாத உட்பகை ஒருவர்க்குத் தோன்றுமாயின் அது இனம்மாணா குற்றம் பலவற்றையும் தரும் என்பது பாடலின் பொருள்.
'இனம்மாணா' குறிப்பது என்ன?

உட்பகை ஒருவன் சுற்றத்தையும் வேறுபடுத்திவிடும்.

உள்ளத்தில் கள்ளம் கொண்ட உட்பகை ஒருவனுக்குத் தோன்றுமானால் அவனது சுற்றத்தார் அவனோடு சேராமைக்குரிய குற்றங்கள் பலவற்றையும் உட்பகை விளைவிக்கும்.
உட்பகை என்பது நண்பர்போன்ற பகைவரின் அகப்பகையைக் குறிக்கும். அதாவது வெளித் தோற்றத்தில் நண்பர் போல் தோற்றமளித்து மனத்துள்ளே பகை கொண்டு பழகுவதைச் சொல்வது. அப்படிமனத்தில் வஞ்சம் வைத்து நட்புபோல் ஒழுகும் உட்பகைவன், ஒருவனது சுற்றத்தின் மனத்திலும் பகைமூட்டி ஒற்றுமையைக் குலைத்துத் துன்பங்கள் தருவான். உட்பகையால் தம் சுற்றத்தருடனான நல்லுறவு பாழ்பட்டு அவர்கள் அனைவரும் தம்மைவிட்டுப் பிரிந்து செல்வர். அதன் விளைவாக தமக்கும் அழிவு உண்டாக்குவதே உட்பகையின் நோக்கமாம். எனவே உட்பகையை உணர்ந்தவுடன் அதை உடனடியாக நீக்குவதற்கான வழிகளை ஆராயவேண்டும்.

'இனம்மாணா' குறிப்பது என்ன?

'இனம்மாணா' என்ற தொடர்க்கு இனமாயினார் நல்லராகார், இனத்தைக் கெடுத்துப் பேதையாகிய சிறுமை தரும், தம் குடி மாட்சிமை இல்லாதவாறு, சுற்றம் வயமாகாமை, சுற்றத்தார் வசமாகாமை, இனமடங்காத, சுற்றம் சீர்ப்படாமை, சுற்றத்தையும் மாட்சிமைப் படாமல் செய்து, இனம் அடங்காத நிலை, சுற்றம் ஒட்டாதபடி, குடிமாட்சிக்குப் பொருந்தாது, சுற்றத்தாரின் துணைபலம் குறைந்து போகும்படியான, இனம் சீராகாத, உறவினர் அவனோடு கலவாமைக்குரிய, தமது கூட்டம் வயமாகாமை, சுற்றத்தார் அவனோடு சேராமைக்குரிய, ஏனைச் சுற்றமும் ஒட்டி உறவாடாது, சுற்றத்தார் நல்லவராகாத, சுற்றம் துணையாகாமை, சுற்றத்தாரையும் பிரித்து, அவர்களும் வெறுக்கக்கூடிய என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உட்பகையானது உள்ளாய் நின்று தம் சுற்றத்துடனான உறவு சீர்குலைந்து போகும்படி செய்து தம் உறவினர் தம்மோடு கலவாதிருக்குமாறு செய்யும். தம்மைச் சார்ந்தவர்களையே பகைவராக்கும். இதனால் தானும் சுற்றத்தை நம்பாது சுற்றமும் தம்மை நம்பமாட்டாமல் உறவினரின் துணை இல்லாமற்போய் துன்பம் பல நேரும். இவ்விதமாகப் பலவிதக் கேடுகள் உண்டாகி குடிமாட்சிமை குன்றும்.

'இனம்மாணா' என்ற தொடர் குடிமாட்சிமை யில்லாத என்ற பொருள் தரும்.

மனம் நன்றாகாத உட்பகை ஒருவர்க்குத் தோன்றுமாயின் அது தம்சுற்றம் தமக்கு நல்லாராக இல்லாதவாறு செய்யும் குற்றம் பலவற்றையும் தரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உட்பகை குடி மாட்சிமையைக் கெடுக்கும்.

பொழிப்பு

உள்ளம் பொருந்தாத உட்பகை இருந்தால் அது சுற்றம் ஒட்டாதபடி பல குற்றங்களை உண்டாக்கும்.