இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0883உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்

(அதிகாரம்:உட்பகை குறள் எண்:883)

பொழிப்பு (மு வரதராசன்): உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; தளர்ச்சி வந்தபோது மட்கலத்தை அறுக்கும் கருவிபோல் அந்த உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.

மணக்குடவர் உரை: உடனே வாழும் பகைவரை அஞ்சித் தன்னைக் காக்க: அவர் தனக்குத் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் கலத்தை அறுங்குங் கருவிபோலத் தப்பாமல் கொல்லுவர்.
மட்பகை தான் அறுக்குங்கால் பிரறியாமல் நின்று அறுக்கும்.

பரிமேலழகர் உரை: உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகையாயினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண் டொழுகுக; உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் - அங்ஙனம் ஒழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவி போல, அவர் தப்பாமற் கெடுப்பர்.
('காத்தல்' அவர் அணையாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். மண்ணைப் பகுக்கும் கருவி 'மட்பகை' எனப்பட்டது. பகைமை தோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின்,கெடுதல் தப்பாது என்பதாம்.)

இரா இளங்குமரனார் உரை: உட்பகை உடையவர்க்கு அஞ்சி, விழிப்பாக இருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; ஒரு சோர்வு உண்டாகியபோது அளற்று மண்ணாகிய (புதை சேறாகிய) பகையினும் (அது உள்வாங்கி) மிக அழிக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்.

பதவுரை: உட்பகை-உள்ளாய் நிற்கும் பகை; அஞ்சி-கவலைகொண்டு, பயந்து, ; தன்-தன்னை; காக்க-காப்பாற்றிக் கொள்க; உலைவு-தளர்ச்சி; இடத்து-இடத்தில்; மட்பகையின்-நீர்ப்பெருக்கு போல, மண்ணைப் பகுக்கும் கருவி போல, மண்பகையைப் போல; மாண-தப்பாமல், அறவே; தெறும்-அழிக்கும்.


உட்பகை அஞ்சித்தற் காக்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடனே வாழும் பகைவரை அஞ்சித் தன்னைக் காக்க:
பரிப்பெருமாள்: உடனே வாழும் பகைவரைத் தான் அஞ்சித் தன்னைக் காக்க:
பரிதி: உட்பகை செய்கிறபேரை நன்றாக விசாரித்து;
காலிங்கர்: உட்பகை சிறிதும் உறுவழிப் பெரிதும் அஞ்சித் தன்னைப் பரிகரித்துக் கொள்க;
பரிமேலழகர்: உட்பகையாயினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண் டொழுகுக;
பரிமேலழகர் குறிப்புரை: 'காத்தல்' அவர் அணையாமலும் அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். [பரிகரித்தல் - விலக்குதல்]

'உட்பகையாயினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண் டொழுகுக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உட்பகையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்க', 'உட்பகை உடையாரை அஞ்சி விழிப்புடன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்', 'உட்பகையை நீக்கித் தற்காப்பு செய்து கொள்ள வேண்டும்', 'உட்பகையினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண்டு நடக்க' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

உட்பகைக்கு கவலைகொண்டு தன்னைக் காத்துக்கொண்டு நடக்க என்பது இப்பகுதியின் பொருள்.

உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் தனக்குத் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் கலத்தை அறுங்குங் கருவிபோலத் தப்பாமல் கொல்லுவர்.
மணக்குடவர் குறிப்புரை: மட்பகை தான் அறுக்குங்கால் பிரறியாமல் நின்று அறுக்கும்.
பரிப்பெருமாள்: தனக்குத் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் வனைகலத்தை அறுங்கும் கருவிபோலத் தப்பாமல் கெடுக்கும் ஆதலான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மண்பகை தான் அறுக்குங்கால் பிறரறியாமல் நின்று அறுக்கும். இது தன்னைக் காக்கவேண்டும் என்றது. இவை இரண்டினாலும் அஞ்சவேண்டும் என்பதூஉம், காக்க வேண்டும் என்பதூஉம் கூறப்பட்டன.
பரிதி: தங்களுக்கு ஒரு தறுவாய் வந்தவிடத்தில், மேலே மட்கலத்தைக் கீழே அறுக்கிற ஊசி போலக் கெடுப்பர் என்றவாறு. [தறுவாய்-இறுதி]
காலிங்கர்: என் எனின் தனக்கு ஓர் தளர்ச்சி வந்த இடத்தே கரைபடக் கட்டிய மண் உறுதிக்கு ஒரு தளர்ச்சி வந்த இடத்து மற்று அதனை முழுவதும் முரித்து எறியும் வெள்ளம் போல் இதுவும் தன் குடி முழுதும் குலைத்து எறிந்து விடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: உலைதல் என்பது தளர்தல்; மண்பகை என்பது நீர் வெள்ளம் என்றது.
பரிமேலழகர்: அங்ஙனம் ஒழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவி போல, அவர் தப்பாமற் கெடுப்பர்.
பரிமேலழகர் குறிப்புரை: மண்ணைப் பகுக்கும் கருவி 'மட்பகை' எனப்பட்டது. பகைமை தோன்றாமல் உள்ளாயிருந்தே கீழறுத்தலின்,கெடுதல் தப்பாது என்பதாம். [மண்ணைப் பகுக்குங் கருவி-குயவர் ஊசி; உள்ளாய் இருந்தே - நட்பாயிருந்தே; கீழறுத்தலின் - புறப்பகைக்கு இடமாக்கிக் கொடுத்து வருதலால்]

'தளர்ச்சி வந்தவிடத்து குயவன் கலத்தை அறுங்குங் கருவிபோலத் தப்பாமல் கொல்லுவர்/ கரைபடக் கட்டிய மண் உறுதிக்கு ஒரு தளர்ச்சி வந்த இடத்து மற்று அதனை முழுவதும் முரித்து எறியும் வெள்ளம் போல் இதுவும் தன் குடி முழுதும் குலைத்து எறிந்து விடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தளருங்கால் மண்வெட்டி போலச் சாய்ந்துவிடும்', 'காவாது தளர்ச்சி வந்த இடத்து அந்த உட்பகை புதைமண் போல அறவே அழிக்கும். (மட்பகை புதைமண். புறத்தே நல்ல மண்ணாகத் தோன்றி அடிவைத்தால் உள்ள இழுத்துப் புதைப்பது.)', 'இல்லாவிடில் ஏமாந்த சமயம் பார்த்து, குயவன் மண்பாண்டத்தை அறுத்தெடுக்கும் கருவிபோல உட்பகை அடியோடு அறுத்தழித்துவிடும்', 'இல்லையேல் தனக்கு ஒரு தளர்ச்சி வந்தவிடத்து மட்கலத்தை அறுக்கும் கருவிபோல நன்றாக அழிப்பர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தனக்கு ஒரு தளர்ச்சி வந்தபொழுது மண்ணை அதன் உட்பகையான நீர்வெள்ளம் அடித்துப்போவது போல அறவே அழிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உட்பகைக்கு கவலைகொண்டு தன்னைக் காத்துக்கொண்டு நடக்க; தனக்கு ஒரு தளர்ச்சி வந்தபொழுது மண்ணை அதன்பகையான நீர்வெள்ளம் அடித்துப்போவது போல உட்பகை தப்பாமல் அழிக்கும் என்பது பாடலின் பொருள்.
'மட்பகை' என்பது என்ன?

தளர்ச்சிக் காலம் பார்த்து முற்ற அழித்து விடும் உட்பகை.

உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ளுதல் வேண்டும். இல்லையானால் மண்ணோடு கலந்திருந்த நீர் மண்ணை அழித்தெடுத்துச் சென்றுவிடுவதுபோல அவனுக்குத் தளர்ச்சி வந்தபோது உள்ளிருந்தே அப்பகை முற்றிலும் அவனை அழித்துவிடும்.
மண்ணிற்குப் பகை நீர். திண்ணிய மண்ணினை இயல்பாகக் கரைக்கும் தன்மையுடைது நீர். நீர் மண்ணுடன் கலந்திருந்தே அதை நெகிழச்செய்து கொண்டிருக்கும். தம்மினமாகிய நீர்ப்பெருக்கு திரண்டு வெள்ளமாக வரும்போது, அதனுடன் சேர்ந்து மண்ணை ஒன்றுமில்லாமல் செய்துவிடும். அதுபோல உட்பகைவர் தன் கூடவே இருந்து கொண்டு பகைமை தோன்றாமல் கீழறுப்பர். உரிய சமயம் வரும்பொழுது முனைந்து நின்று அவனை மிக்கு அழித்துவிடுவர். எனவே உட்பகைக்கு அஞ்சி அவர்க்கு உடம்படாமலிருப்பது, அவரோடும் அவரோடு சேர்ந்தாரொடும் எவ்வகைத் தொடர்புமின்றி விலகியிருப்பது போன்ற வழிகளில் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும்.

'மட்பகை' என்பது என்ன?

மட்பகை என்பது மண்+பகை என விரியும்.
மண்ணுக்கு எது பகை? மணக்குடவர் குயவன் கலத்தை அறுங்குங் கருவியாகிய ஊசி மடப்கை என்று முதலில் உரைத்தார். குயவர்கள் திகிரியில் (சக்கரத்தில்) வைத்த மண்ணுருண்டையிலிருந்து வினைமுடிந்த கலத்தை அறுப்பதற்கு இவ் ஊசியைப் பயன்படுத்துவர். இது குலாலர் ஊசி எனவும் அறியப்படும். குயவர்கள் இன்றும் இதனை ஊசியென்றே வழங்குகின்றனர். மட்கலம் வனைதற்றொழில் முற்றுப்பெற்றவுடன் அதைத் திகிரியிலிருந்து சரியான நேரத்தில் வெட்டி எடுப்பதற்கு இதைப் பயன்படுத்துவர். இதை உவமையாகச் சொல்லி மட்பகையான குயவன்ஊசி தான் அறுக்குங்கால் பிறரறியாமல் நின்று அறுக்கும் என விளக்கமும் கூறினார் மணக்குடவர். உரிய சமயத்தில் வெட்டப்படாவிட்டால் மண்ணுருண்டையை மறுபடியும் முதலிருந்து வனையத் தொடங்க வேண்டும். பரிப்பெருமாள் கருத்தும் இதுவே.
பரிதி 'மேலே மட்கலத்தைக் கீழே அறுக்கிற ஊசிபோலக் கெடுப்பர்' என மணக்குடவர் உரையைத் தழுவியே பொருள் கூறினார். இவரும் மட்பகை என்பதற்கு குயவர் ஊசி எனவே பொருள் கொண்டார்.
பின் வந்த பரிமேலழகரும் குயவர் ஊசி எனவே பொருள் கொள்கிறார். இவர் பகை என்ற சொல்லை பகு+ ஐ எனப்பிரித்து, 'மண்ணைப் பகுக்குங் கருவி' மட்பகை என்றார். ஆனால் 'பகுக்குங் கருவிக்குப் பகையென்ற பெயர் வழக்கில் இல்லை; மட்பகை ஊசிக்குப் பெயராதலை, இன்று கிடைக்கும் துணை நூல்களிலிருந்து அறியக் கூடவில்லை' எனச் சொல்லித் தண்டபாணி தேசிகர் மட்பகை என்பதற்கு குயவர் ஊசி என்றதை மறுப்பார். மேலும் அவர் 'சக்கரத்தை விட்டுக் கலத்தைப் பிரிக்கும் ஊசி, கலம் பயன்பெறவும், வேற்றுக்கலம் வனைய இடந்தரவும் செய்வதன்றிக் கேடுசெய்வதில்லை' எனவும் கூறுவார்.
இன்றைய உரையாசிரியர்களிலும் பெரும்பான்மையர் மணக்குடவர் உரையைப் பின்பற்றியே பொருளுரைத்துள்ளனர்.

இத்தொல்லாசிரியர்கள் உரையிலிருந்து முற்றிலும் மாறுபாட்டதாக உள்ளது காலிங்கரது உரை. இவர் மண்ணுக்குப் பகை நீர்ப்பெருக்கு எனக் கொண்டு 'தனக்கு ஓர் தளர்ச்சி வந்த இடத்தே, கரைபடக் கட்டிய மண் உறுதிக்கு ஒரு தளர்ச்சி வந்த இடத்து மற்று அதனை முழுவதும் முரித்து எறியும் வெள்ளம் போல், இதுவும் தன் குடி முழுதும் குலைத்து எறிந்து விடும்' என இக்குறட்பாவில் சொல்லப்பட்ட உவமையை விளக்குவார். கீழே மண்ணுடன் கலந்திருந்தே நெகிழச்செய்தலானும், பின் வெள்ளம் வந்தகாலத்து மண்ணை உருத்தெரியாமலே கரைத்தலானும், நீரை உட்பகை எனச் சொல்வது முற்றிலும் பொருந்துவதாகவும் உட்பகையின் கருத்தை நன்கு விளக்குவதாகவும் உள்ளது. இவ்வுரையின் சிறப்பையறிந்து டி.பி. பழனியப்ப பிள்ளை 'இறுகச் செறிந்த கரைகளை வெள்ளப் பெருக்கால் முரித்து எடுத்து எறிந்து செல்லுதல் கண்கூடு ஆதலால், ‘மண்பகை’ என்ற தொடர்க்கு நீர்வெள்ளம் என்பது பொருட்பேறு உடைத்தாவது காண்க. அன்றியும் ஊசி, வனைந்த பாண்டத்தை வனையா மண்ணிற் பகுக்குங்கால் உலைவிடத்துப் பயனாவது இன்றாய் நிலையிடத்துப் பயனாவது. நீர் வெள்ளம் உலைவிடன் உடைய கரையை முற்றி மோதியுடைத்தல் எளிதாகலின் உலைவிடத்துச் செயலுடைமை உட்பகைக்கும் மட்பகைக்கும் பொருந்தும் அன்றி, குயவன் ஊசிக்குப் பொருந்தாமை அறிந்து கொள்க' என குயவர் ஊசி பொருந்தாமையையும் காலிங்கர் கூறியுள்ள உவமப் பொருத்தத்தையும் விளக்குவார்.

இரா இளங்குமரன் 'உட்பகை உடையவர்க்கு அஞ்சி, விழிப்பாக இருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; ஒரு சோர்வு உண்டாகியபோது அளற்று மண்ணாகிய (புதை சேறாகிய) பகையினும் (அது உள்வாங்கி) மிக அழிக்கும்' என வேறுபட்ட பொருளில் ஓர் உரை தருகிறார். இவர் மட்பகை என்பதற்குப் புதைசேறு எனப் பொருள் கண்டு 'அளறு என்பது சேறு; அது சில இடங்களில் ஆழ்ந்து புதை சேறாகக் கிடக்கும். அவ்விடங்களில் சிக்கிக் கொண்டார் வெளிவரார் என்பது விளங்கும். புறத்தே புலப்படாமல் அழிக்கும் பகை உட்பகை. ஆதலால் உள்வாங்கும் அளறும், புதை மண்ணும், புதை மணலும், ஆகியவை மண்ணே பகையாய்-உள்வாங்கும் கேடாய் இருந்து தப்ப இயலா வகையில் அழித்தலால் மட்பகை ஆயிற்று. அதற்கு மண்ணாகிய பகை என்பதே நேரறி பொருளாம்' என விளக்கமும் கொடுக்கிறார்.

'மட்பகை' என்றதற்கு காலிங்கர் கூறும் 'மண்ணுக்குப் பகை நீர்வெள்ளம்' என்பது சிறந்து நிற்கிறது.

உட்பகைக்கு கவலைகொண்டு தன்னைக் காத்துக்கொண்டு நடக்க; தனக்கு ஒரு தளர்ச்சி வந்தபொழுது மண்ணை அதன்பகையான நீர்வெள்ளம் அடித்துப்போவது போல உட்பகை தப்பாமல் அழிக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

விலக்கப்படாத உட்பகை தப்பாமல் கெடுக்கும்.

பொழிப்பு

உட்பகையிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; தளரும்பொழுது அது மண்ணை வெள்ளம் அடித்துப்போவது போல அறவே அழிக்கும்.