இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0888அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி

(அதிகாரம்:உட்பகை குறள் எண்:888)

பொழிப்பு (மு வரதராசன்): உட்பகை உண்டான குடி, அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்புபோல் வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து போகும்.

மணக்குடவர் உரை: உட்பகையானது உற்ற குடி, அரத்தினால் தேய்க்கப்பட்ட பொன்னைப் போல, அதனால் பொரப்படவே வலி தேயும்.
இஃது உட்பகை அழகு செய்வது போலப் பலத்தைக் கெடுக்குமென்றது.

பரிமேலழகர் உரை: உட்பகை உற்ற குடி - முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி, அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தாற் பொரப்பட்ட இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும்.
('பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம் 'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின் தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை முதல்வினை ஆயிற்று. காரியஞ் செய்வதுபோன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலிதேய்ந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உட்பகை உள்ள குடி மெல்ல வலிகுறைந்து அரம் அராவிய இரும்புபோல் தேயும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உட்பகை உற்ற குடி அரம்பொருத பொன்போலப் பொருது உரம் தேயும்.

பதவுரை: அரம்-அராவும் கருவி; பொருத-அராவப்பட்ட; பொன்-இரும்பு; போல-போல; தேயும்-குறையும்; உரம்-வலிமை; பொருது-அறுக்கப்பட்டு, தேய்க்கப்பட்டு, சண்டையிட்டு, குறைந்து; உட்பகை-உட்பகை; உற்ற-உண்டாகிய; குடி-குடும்பம்.


அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரத்தினால் தேய்க்கப்பட்ட பொன்னைப் போல, அதனால் பொரப்படவே வலி தேயும்; [பொரப்பட்டு- அறுக்கப்பட்டு]
பரிப்பெருமாள்: அரத்தினால் தேய்க்கப்பட்ட பொன் போல, அவரால் பொரப்பட்டுத்தன் வலி தேயும்;
பரிதி: பெரிய அரத்திலே அராவின் பொன் போலத் தேயும்; [அராவின் -தேய்த்தல்]
காலிங்கர்: அராவுகின்ற அரம் சென்று பொருத காரிரும்பு போலத் தமது உரம் முழுவதும் ஒழுகத் தேய்ந்து விடும்; [அராவுகின்றன - தேய்கின்றன]
காலிங்கர் குறிப்புரை: பொன் என்றது இரும்பு.
பரிமேலழகர்: அரத்தாற் பொரப்பட்ட இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும். [இரும்பு போல. இரும்புக்குக் கரும்பொன் எனப்பெயருண்டு. அஃது ஐம்பொன்களுள் ஒன்று; பொரப்பட்டு - கெடுக்கப்பட்டு.
பரிமேலழகர் குறிப்புரை: 'பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம் 'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின் தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை முதல்வினை ஆயிற்று. காரியஞ் செய்வதுபோன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலிதேய்ந்து விடும் என்பதாம்.

'அரத்தாற் பொரப்பட்ட பொன்னைப் போல/இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரத்தினால் தேய்க்கப் பெற்ற இரும்பு போல வலிமை குறைக்கப் பெற்றுத் தேய்ந்தொழியும்', '(எவ்வளவு வலிமையுடையதானாலும்) அரத்தால் அராவப்பட்ட இரும்பைப் போல (அதிலுள்ளவர்கள் ஒருவரொடொருவர்) மாச்சரியம் கொண்டு சண்டையிட, சிறுகச் சிறுகத் தேய்ந்து (இறுதியில் முரிந்தும்) போய்விடும்', 'அரத்தினால் தேய்க்கப்பெற்ற இரும்பு போல, அப்பகையினாலே தேய்க்கப்பட்டு வலியழியும்', 'அரத்தால் தேய்க்கப்பட்ட இரும்புபோல, சண்டையிட்டு வலி அழியும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அரத்தினால் ராவப்பட்ட இரும்பு போல வலிமை குறைக்கப் பெற்று வலியழியும் என்பது இப்பகுதியின் பொருள்.

உட்பகை உற்ற குடி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உட்பகையானது உற்ற குடி.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உட்பகை அழகு செய்வது போலப் பலத்தைக் கெடுக்குமென்றது.
பரிப்பெருமாள்: உட்பகையானது உட்பட்ட குடி.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உட்பகை அழகு செய்வது போலப் வலியை அறுக்கும் என்றது.
பரிதி: உட்பகையுள்ள குடி என்றவாறு.
காலிங்கர்: யாதோ எனின் உட்பகை உற்ற குடி முழுவதும், மற்று அவனால் பொரப்பட்டு என்றவாறு.
பரிமேலழகர்: முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி.
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.

'உட்பகையுண்டாய குடி' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உட்பகை உள்ள குடி', 'உட்பகை தோன்றிவிட்ட குடும்பம்', 'உட்பகை உண்டாகிய குடி', 'உட்பகை பொருந்திய குடி' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உட்பகை உண்டாகிய குடி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உட்பகை உண்டாகிய குடி அரத்தினால் ராவப்பட்ட பொன் போல பொருது வலியழியும் என்பது பாடலின் பொருள்.
'பொன்' என்பதன் பொருள் என்ன?

ஒற்றுமையால் ஓங்கிய குடும்பத்தையும் உட்பகை சிறிது சிறிதாய் அறுத்துவிடும்.

உட்பகையுள்ள குடும்பமானது அரத்தினால் தேய்க்கப்பட்ட இரும்பு போன்று தேய்ந்து அழிந்து போகும்.
ஒரு குடிக்கண் தோன்றும் உட்பகை பற்றியது இப்பாடல். இது 'செப்பின் புணர்ச்சி' என்ற முந்தைய குறளின் தொடர்ச்சி போன்று உள்ளது. அங்கு உட்பகையுற்ற குடி பொருந்தியிருப்பதுபோலத் தோன்றினாலும் எளிதாகப் பிரித்துவிடக்கூடியதாய் இருக்கும் எனச் சொல்லப்பட்டது. இங்கு அவ்விதம் பிரிக்கப்படுவதனால் உண்டாகும் விளைவைச் சொல்வது போல, உட்பகை உற்ற, அக்குடும்பத்தின் அறிவு, ஆற்றல், வளமை யனைத்தும் தேய்ந்து போகும் எனக் கூறப்படுகிறது. இதற்கு அரத்தினால் ராவிய இரும்பு தேய்வதுபோல் என்ற உவமை ஆளப்பட்டது. இரும்புப் பொருள்களைத் தேய்த்து ஏற்ற வடிவம் பெறச் செய்வதற்கு அரம் எனும் கருவியைப் பயன்படுத்துவர். அரமும் இரும்பினால் செய்யப்பட்டதுதான். இரும்பினாற் செய்யப்பட்ட ஒரு கருவி இரும்பையே அழிக்க ஏதுவாகிறது. உட்பகையுள்ள குடும்பத்திலுள்ளவர்கள் செயல் ஆற்றுவார்போன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், குடியின் வலிமை குறைந்து போகும். பிரிந்து நிற்கும் ஒற்றுமையில்லாத குடும்பம் அல்லது உறவுத்தொகுதி, அரம், அராவ அராவ இரும்பு வலி குறைந்து துண்டிக்கப்படுவது போல, சிறுகச் சிறுகக் குறைந்து உடைந்து போகும்.

பொருத என்ற சொல் தேய்த்தல் என்ற பொருளைத் தருகிறது. பொருது என்ற சொல்லுக்குப் பொரப்பட்டு, தேய்ப்ப, குறைக்கப்பட்டு, குறைந்து, குறைக்கப் பெற்று, தேய்ந்து, சண்டையிட்டு, (உட்பகையால்) அராவப்பட்டு எனப் பொருள் கூறினர். இவற்றுள் குறைந்து என்ற பொருள் பொருந்தும்.

பிறபொருள்களைத் தேய்க்கும் அரத்தின் ஆற்றல் கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம் (வெருவந்த செய்யாமை 567 (பொருள்: கடுஞ்சொல்லும் அளவுகடந்த தண்டனையும் பகையை வெல்லும் ஆட்சியாளரது வலிமையை அறுக்கும் அரமாகும்) என்பதிலும் கூறப்பட்டது. அதில் வெளிப்பகையை அழிக்க முடியாதபடி ஆள்வோரின் வலிமை குறையும் எனச் சொல்லப்பட்டது.
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கள்பண்பு இல்லா தவர் (பண்புடைமை 997 பொருள்:மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர், அரம்போல் கூர்மையான அறிவு உடையவராயினும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்) என்ற பாடலில் அரத்தின் கூர்மை குறிக்கப்பெறும்.

'பொன்' என்பதன் பொருள் என்ன?

பொன் என்பதற்குப் பொன் என்றும் இரும்பு என்றும் உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர். இரும்புக்குக் கரும்பொன் எனப்பெயருண்டு. அஃது ஐம்பொன்களுள் ஒன்று. காலிங்கர் பொன் என்றது இரும்பு எனத் தனது உரையில் குறிப்பு தருகிறார். தேவநேயப்பாவாணர் 'பொன்' இங்கு இனம்பற்றி இரும்பைக் குறித்தது என்கிறார். பொன் என்பது இரும்புக்கும் பெயராதலை பொன் என்ப வனப்பிரும்பு என நிகண்டும் கூறுகிறது.

'பொன்' என்பது இங்கு இரும்பைக் குறிக்கும்.

உட்பகை உண்டாகிய குடி அரத்தினால் ராவப்பட்ட இரும்பு போலக் குறைந்து வலியழியும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உட்பகை உரச உரச குடி தேயும்.

பொழிப்பு

உட்பகை உள்ள குடி அரத்தினால் ராவப்பட்ட பெற்ற இரும்பு போல வலிமை குறைக்கப் பெற்றுத் தேயும்.