எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு
(அதிகாரம்:உட்பகை
குறள் எண்:889)
பொழிப்பு (மு வரதராசன்): எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும், ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
|
மணக்குடவர் உரை:
எள்ளின் பிளவு போன்ற சிறுமைத்தேயாயினும் உடனே வாழும் பகையினான் ஒருவர்க்குக் கேடு உளதாம்.
இது பகை சிறிதென் றிகழற்க வென்றது.
பரிமேலழகர் உரை:
உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் - அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்; கேடு உள்ளதாம் - பெருமையெல்லாம் அழிய வரும் கேடு அதன் அகத்ததாம்.
(எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை வருந்துணையும் எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை:
எள்ளின் பிளவுபோல் உட்பகை மிகமிகச்சிறிது என எண்ணி அலட்சியப்படுத்துதல் தவறு. அத்துணைச் சிறியதேயாயினும் அதனுள் பின்னால் விளையக் கூடிய பெருங்கேடு உள்ளடங்கியிருக்கும். உட்பகை சிறிதேனும் கேடுதரும் என்பது இது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு.
பதவுரை: எள்-எள் (என்னும் கூலவகை); பகவு-பிளவு; அன்ன-போன்ற; சிறுமைத்தே-சிறிய தன்மையுடையதே; ஆயினும்-ஆனாலும்; உட்பகை-உட்பகை; உள்ளதாம்-உளதாம், அகத்ததாம்; கேடு-அழிவு.
|
எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எள்ளின் பிளவு போன்ற சிறுமைத்தேயாயினும்;
பரிப்பெருமாள்: எள்ளின் பிளவே போன்ற சிறுமைத்தேயாயினும்;
பரிதி: எள்ளின் பாதியாகிலும்;
காலிங்கர்: எள்ளில் பிளந்த சிறுமை உடைத்தாயினும்;
பரிமேலழகர்: அவன் பெருமையை நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்;
'எள்ளின் பிளவு போன்ற சிறுமைத்தேயாயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எள்ளின் பிளவுபோலச் சிறிதாக இருந்தாலும்', 'எள்ளின் பிளவு போன்ற சிறுமையுடையது ஆயினும்', 'எள்ளின் துணுக்கு போல வெகு சிறியதே யானாலும்கூட', 'எள்ளின் பிளவுபோல மிகச் சிறியதாயிருந்தாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
எள்ளின் பிளவுபோல மிகச் சிறிதாக இருந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
உட்பகை உள்ளதாம் கேடு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடனே வாழும் பகையினான் ஒருவர்க்குக் கேடு உளதாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது பகை சிறிதென் றிகழற்க வென்றது.
பரிப்பெருமாள்: உடன் வாழும் பகையினான் ஒருவர்க்குக் கேடு உளதாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது உட்பகை சிறிதென் றிகழற்க வென்றது.
பரிதி: அந்த உட்பகையாலே கேடு வரும் என்றவாறு.
காலிங்கர்: உட்பகையுடனே வாழும் பகையின்கண்ணது ஒருவர்க்குக் கேடு என்றவாறு.
பரிமேலழகர்: அரசனது உட்பகை பெருமையெல்லாம் அழிய வரும் கேடு அதன் அகத்ததாம்.
பரிமேலழகர் குறிப்புரை: எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை வருந்துணையும் எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.
'உடன் வாழும் பகையினான் ஒருவர்க்குக் கேடு உளதாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உட்பகையால் கேடு உண்டு', 'உட்பகை அதனால் பெருங்கேடு உண்டாகும்', 'உட்பகை நாசம் உண்டாக்கக்கூடியது ஆகும்', 'உட்பகையானது அது தன்னுள் அழிவினை உடையதாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உட்பகை தன்னுள் அழிவினை உடையதாம் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
எட்பகவுபோல மிகச் சிறிதாக இருந்தாலும் உட்பகை தன்னுள் அழிவினை உடையதாம் என்பது பாடலின் பொருள்.
'எட்பகவு' என்பதன் பொருள் என்ன?
|
சிறிதான உட்பகையும் குடியைக் கெடுக்க வல்லதே.
உட்பகையானது எள்ளின் பிளவு போன்று மிகச் சிறியதாக இருந்தாலும் அது ஒரு குடியின் பெருமையை அழிக்கவல்ல தன்மையை உடையதாகும்.
கூலவகையில் ஒன்று எள் என்பது. மிகச் சிறுமையான ஒரு எள்ளைக் காணும்போதே அதன் அளவு மருட்சி தருவதாக இருக்க, பிளவு பட்ட அதன் அளவு எத்துணை சிறியதாக இருக்கும்! ஒரு குடியினுள் அத்துணைச் சிறிய அளவிற்குப் பிளவு உண்டாகிவிட்டாலும் அது அக்குடியின் ஒற்றுமையையும் அதன் புகழையும் கெடுத்துவிடும் ஆற்றல் உடையது.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் (வினைசெயல்வகை 674 பொருள்: மேற்கொண்ட செயல், நீக்கத் தொடங்கிய பகை ஆகிய இரண்டினது ஒழிவுபாடுகள், எண்ணிப்பார்த்தால் தீயினது மிச்சம் போல அழிக்கும்) என்ற பாடல், மிச்சம் மீதி வைத்து முடிக்காமல் விட்ட செயலானது, பகையை முழுமையாக அழிக்காமல் விட்டுவிட்டால் எவ்விதம் கேடு உண்டாகுமோ அவ்விதம் கேடு உண்டாக்கும் என்றது. உட்பகையையும் கண்ட அப்பொழுதே ஒழித்து, அது தீபோல் பரவவிடாமல் செய்ய வேண்டும்.
ஒரு குடம்பாலில் ஒருதுளி நஞ்சு ஊற்றினாலே போதும் அது பெருங்கேடு விளைக்க வல்லது. சிறிய உட்பகையும் உள்ளேயே வளர்ந்து பெரிதாகி அழிவை உண்டாக்கும்.
சிறிதளவுதானே என்று வாளா இருந்துவிடாமல் அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என அறிவுறுத்துகிறது இக்குறள்.
|
'எட்பகவு' என்பதன் பொருள் என்ன?
எட்பகவு என்ற தொடர் எள்+பகவு என விரிந்து எள்ளின் பிளவு என்ற பொருள் தரும்.
எள் என்பது சோளம், கொள் போன்றதொரு கூலவகை. பகவு என்பது ஒன்றில் இருந்து ஒரு பகுதியைப் பகுத்தலைச் சொல்வது. பகுப்பு, பாத்தல், பாத்தி, பாகம் என்பனவும் வள்ளுவரால் ஆளப்பட்டுள்ளது. இங்கு பகவு என்பது பிளவுப் பொருளில் வழங்கப்பட்டது,
'எட்பகவு' என்பதனை எண்ணின் பகவு எனக்கொண்டு 'ஒன்றென்னும் எண்ணின் கூறு (காணி, முந்திரி, போல்வன)' 'தம்மை அரைத்தும் பிழிந்தும் வருத்தும் எண்பகவு என்றாக்கி ஒன்றின் நூற்றில் கூறு, ஆயிரத்தில் கூறு 1/100, 1/1000 எனலுமாம்' என உரைப்பர் மு கோவிந்தசாமி. மு கோ வின் இவ்வுரைக்கு 'சிறுமைக்கு எள், கொள் முதலிய கூலங்களைக் கூறுதல் வழக்காதலின் 'எள்ளின்கூறு' எனக் கொள்ளலே ஏற்புடைத்து' எனக் கருத்துரைப்பார் இரா சாரங்கபாணி.
'எட்பகவு' என்பது எள்ளினுடைய பகுதி போன்ற சிறிய அளவைக் குறிக்க வந்தது.
|
எள்ளின் பிளவுபோல மிகச் சிறிதாக இருந்தாலும் உட்பகை தன்னுள் அழிவினை உடையதாம் என்பது இக்குறட்கருத்து.
எள்ளின் முனையளவு உட்பகையானலும் அதையும் துடைத்தெறிக.
உட்பகை எள்ளின் பிளவுபோல மிகச் சிறியதாக இருந்தாலும் அது தன்னுள் அழிவு உடையது.
|