இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0887

செப்பின் புணர்ச்சி


செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

(அதிகாரம்:உட்பகை குறள் எண்:887)

பொழிப்பு (மு வரதராசன்): செப்பின் இணைப்பைப்போல் புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.

மணக்குடவர் உரை: உட்பகையும் அஃது உற்ற குடியும், செப்பும் மூடியும் பொருந்தினாற் போலப் பொருந்தினவாயினும், பொருத்தமில்லவாம்.
உட்பகையுற்றார் செப்பும் மூடியும் ஒன்றுபட்டாற்போல இருந்து செப்பகத்துப் பொருள் வாங்குவார்க்கு மூடி துணையாய் அகன்று நிற்குமதுபோல அகன்று நிற்பரென்றவாறு.

பரிமேலழகர் உரை: செப்பின் புணர்ச்சி போல் கூடினும் - செப்பினது புணர்ச்சி போலப் புறத்து வேற்றுமை தெரியாமற் கூடினாராயினும்; உட்பகை உற்ற குடி கூடாது - உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார்.
(செப்பின் புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி. உட்பகையான் மனம் வேறுபட்டமையின், புறப்பகை பெற்றுழி வீற்றுவீற்றாவர் என்பதாம். குடி கூடாது என்பதனை, நாடு வந்தது என்பதுபோலக் கொள்க. உட்பகை தான் உற்ற குடியோடு கூடாது என்றும், உட்பகை உண்டாய குடி அப்பகையோடு கூடாது என்றும் உரைப்பாரும் உளர்.)

இரா சாரங்கபாணி உரை: செப்பும் மூடியும் போல வெளியே வேற்றுமை தெரியாமல் நன்றாகப் பொருந்தியிருந்தாலும், உட்பகை தோன்றிய குடியிலுள்ளவர்கள் மனத்தால் பொருந்தியிருக்க மாட்டார்கள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் உட்பகை உற்ற குடி கூடாதே.

பதவுரை: செப்பின்-செப்பினது, சிமிழினது; புணர்ச்சிபோல்-சேர்ந்திருப்பது போன்று; கூடினும்-சேர்ந்தாலும்; கூடாதே-சேராதே; உட்பகை-உள்ளாய் நிற்கும் பகை; உற்ற-உண்டாகிய; குடி-குடும்பம்.


செப்பின் புணர்ச்சிபோல் கூடினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செப்பும் மூடியும் பொருந்தினாற் போலப் பொருந்தினவாயினும்;
பரிப்பெருமாள்: செப்பினது புணர்ச்சிபோலப் புறத்து வேற்றுமை தெரியாமல் கூடினாராயினும்;
பரிதி: செப்பும் மூடியும் போலக் கூடியிருந்தும்;
காலிங்கர்: செப்பு உருபு பொருந்துங் காலத்து முதலும் மூடியும் ஒரு பழுதற ஓர் உருபு என்னுமாறு இறுக முறுகப் பொருந்தா நிற்கும் அன்றே;
பரிமேலழகர்: செப்பினது புணர்ச்சி போலப் புறத்து வேற்றுமை தெரியாமற் கூடினாராயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: செப்பின் புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி.

'செப்பினது புணர்ச்சி போலப் புறத்து வேற்றுமை தெரியாமற் கூடினாராயினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தவலையும் மூடியும்போலச் சேர்ந்திருந்தாலும்', 'உட்பகை உள்ள குடும்பத்திலுள்ளவர்கள் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்தாலும்', 'உட்பகை ஏற்பட்ட குடியில் உள்ளோர் செப்பின் மூடிகள் வெளியே சேர்ந்திருப்பது போலத் தாமுங் கூடி வாழ்ந்தாலும்', 'சிமிழின் சேர்க்கை போல (மூடி பொருந்தியிருத்தல் போல) வெளியில் வேற்றுமை தெரியாது கூடியிருந்தாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செப்பினது புணர்ச்சி போலச் சேர்ந்திருந்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

கூடாதே உட்பகை உற்ற குடி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உட்பகையும் அஃது உற்ற குடியும் பொருத்தமில்லவாம்.
மணக்குடவர் குறிப்புரை: உட்பகையுற்றார் செப்பும் மூடியும் ஒன்றுபட்டாற்போல இருந்து செப்பகத்துப் பொருள் வாங்குவார்க்கு மூடி துணையாய் அகன்று நிற்குமதுபோல அகன்று நிற்பரென்றவாறு.
பரிப்பெருமாள்: பொருத்தமில்லதவராவார் உட்பகையும் அஃது உட்பட்ட குடியும் என்றவாறு,
பரிப்பெருமாள் குறிப்புரை: செப்பும் மூடியும் ஒன்றுபட்டாற்போல இருந்து செப்பகத்துப் உட்பொருள் வாங்குவார்க்கு மூடி துணையாய்க் கழன்று நிற்கும்; அதுபோல அகன்று நிற்பர் என்பதாம். செப்பிற்கு உவமை குடி; மூடிக்கு உவமை உட்பகை.
பரிதி: செப்பு இரண்டானாற் போலே உட்பகையும் இப்படி இருந்தும் பிரிந்தவர் என்றவாறு.
காலிங்கர்: அதுபோலத் தம்முள் ஒரு வேற்றுமையுறப் பொருந்தி நின்று ஓர் எல்லைக்கண் பின்னும் அச்செப்பின் புணர்ச்சிபோல் சிறிதும் கூடாது பக்குவிடுமே; யாது எனின், உட்பகை உற்ற அவரது குடி முழுதும் என்றவாறு, [பக்குவிடுமே- பிளவுபடுமே]
பரிமேலழகர்: உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார்.
பரிமேலழகர் குறிப்புரை: உட்பகையான் மனம் வேறுபட்டமையின், புறப்பகை பெற்றுழி வீற்றுவீற்றாவர் என்பதாம். குடி கூடாது என்பதனை, நாடு வந்தது என்பதுபோலக் கொள்க. உட்பகை தான் உற்ற குடியோடு கூடாது என்றும், உட்பகை உண்டாய குடி அப்பகையோடு கூடாது என்றும் உரைப்பாரும் உளர்.

'உட்பகையும் அஃது உற்ற குடியும் பொருத்தமில்லவாம்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'செப்பு இரண்டானாற் போலே உட்பகையும் இப்படி இருந்தும் பிரிந்தவர்' என்றார். காலிங்கர் 'ஓர் எல்லைக்கண் பின்னும் அச்செப்பின் புணர்ச்சிபோல் சிறிதும் கூடாது உட்பகை உற்ற அவரது குடி முழுதும் பக்குவிடுமே' எனவும் பரிமேலழகர் 'உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார்' எனவும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உட்பகை உள்ள குடியினர் மனம் ஒன்றுபடார்', 'பாண்டங்கள் ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தாலும் அவை ஒன்றோடொன்று ஒட்டாதிருப்பது போல் (குடும்பத்திலுள்ளவர்களுக்குள்) ஒற்றுமை இருக்காது', 'செப்பின் உட்பக்கம் பொருந்தாமைபோல மனத்தால் பொருந்த மாட்டார்கள்', 'உட்பகை உண்டான குடி ஒரு நாளும் கூடி வாழாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உட்பகை உண்டான குடி மனத்தால் பொருந்த மாட்டாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செப்பின் புணர்ச்சி போலச் சேர்ந்திருந்தாலும் உட்பகை உண்டான குடி மனத்தால் பொருந்த மாட்டாது என்பது பாடலின் பொருள்.
'செப்பின் புணர்ச்சி' என்றால் என்ன?

உட்பகை உள்ள குடி, சேர்ந்தும் சேராததுபோல், தளர்ந்த நிலையிலேயே இருக்கும்.

செப்பும் அதன் மூடியும் வெளிப்பார்வைக்கு ஒன்று சேர்ந்து இருப்பதுபோலத் தோன்றுவதுபோல உட்பகையுள்ளவர்கள் ஒரு குடும்பத்தில் கூடியிருந்தாலும் அந்தச் செப்பும் மூடியும் வேறுவேறாக இருப்பது போல், அக்குடியிலுள்ளோர் உள்ளத்தால் ஒட்டாமலே இருப்பர்.
பகை உணர்ச்சி, குடும்பத்துக்குள்ளும் தோன்றும். குடி என்னும்போது ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்பவர்களை மட்டும் அல்லாமல் அக்குடியிலுள்ளோர் அனைவரையும் குறிக்கும். அவர்கள் ஒன்று கூடி இருப்பதுபோல் வெளியுலகுக்குத் தோன்றினாலும் கூட மாட்டார்கள். இதை விளக்கச் செப்போடு அதன் மூடி சேர்ந்திருப்பதுபோன்று காணப்பட்டாலும் கூடாதிருப்பதுபோல, உட்பகை உள்ள குடும்பத்திலுள்ளவர்கள் ஒருவருடன் ஒருவர் ஒட்டாமலே இருப்பார்கள் என இப்பாடல் கூறுகிறது. அக்குடியின் பிணைப்பு, உட்புறம் பொருந்தாது, தளர்ந்த நிலையிலேயே இருக்கும். எனவே வெளியார் அதனுள் உட்புகுந்து அவர்களை அழிப்பது எளிதாக இருக்கும்.
'செப்பின் புணர்ச்சி' என்பது செப்பும் மூடியுமாக இரண்டாக இருந்தாலும் தோற்றத்திற்கு ஒன்றாக இருப்பதைச் சொல்வது. தத்தம்தன்மை திரியாமல் நிற்பது இது. வெளிப் பார்வைக்கு சேர்ந்திருப்பதுபோல தோன்றினாலும், செப்பும் மூடியும் வேறு வேறாவது போல உட்பகையிலுள்ளவர்கள் பிளவு பட்டவர்களாகவேத் தளர்ச்சி நிலையில் நின்று எளிதில் இலக்காகிப் பாதிக்கப்படத்தக்கவர்களாக இருப்பர் என்பது செய்தி.

உட்பகைவர் பிறந்த குடியோடு கூடார் எனவும் உட்பகை உண்டாய குடி அப்பகையோடு கூடாது எனவும் உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார் எனவும் இப்பாடற்கருத்தை விளக்கினர். உட்பகையும் உற்றகுடியும் கூடாது எனப் பொருள் கொள்வதைவிட உட்பகையுற்ற குடி கூடாது என உரைத்தலே சிறக்கும்.

'செப்பின் புணர்ச்சி' என்றால் என்ன?

செப்பு என்பது முன்பு செம்பினால் செய்யப்பெற்ற சிமிழைக் குறித்தது. பின்னர் அதுபோல மரத்தாற் செய்யப்பட்டவனவற்றிற்கும் பெயராயிற்று. உலோகத்தாலான செப்பைக் குறிக்கச் சிமிழ் என்னும் சொல் தோன்றியிருக்க வேண்டும் எனக் கூறுவர். செப்பும் சிமிழும் ஒரே பயன்பாட்டை உடையவை. செப்பு எப்போதும் மூடியோடு சேர்ந்தே இருக்கும். இணைத்த செப்பைப் பிரிப்பதற்கு மூடியின் மேற்பகுதியில் நடுவில் சிறு குமிழ் ஒன்று இருக்கும். எப்போதும் மூடியோடு செப்பு பொருந்தி நெருக்கமாக இருப்பதுபோல் காட்சியளிக்கும். செப்பின் பயன்பாடுகள் பற்றி பழம்நூல்களில் பல செய்திகள் உள்ளன. குங்குமம், அகில், சந்தனம், புனுகு போன்ற நறுமணப் பொருட்கள், பொன்னால் ஆன அணிகள், மணிகள் ஆகியனவற்றை வைப்பதற்குச் செப்பு பயன்பட்டது. சிறந்த பொருட்களை சேமித்து வைக்கும் பயன்பாட்டால் செப்பின் சிறப்பு கூடிற்று.
இங்கு சொல்லப்பட்ட உவமை மூடியுள்ள எவற்றிற்கும் பொருந்தும். பீங்கான், கண்ணாடி, மண், அலுமினியம், பித்தளை, துருப்பிடிக்காத இரும்பு போன்றவற்றிற்கும் அவற்றின் மூடிகளுக்கும் பொருந்தும். என்றாலும் மரத்தால் செய்யப்பட்ட மூடியையுடைய செப்புதான் இங்கு குறிப்பிடப்பட்டது. அதுதான் மூடியிருப்பது தெரியாமல் ஒன்றாக அதாவது செப்பும் மூடியும் பிரித்தெடுத்தல் இயலாது என்பதுபோல் கூடியிருந்து தோன்றுவது. வேற்றுமை அறியாச் சேர்க்கைக்குச் செப்பு உவமையானது.

புணர்தல், சேர்தல், கூடுதல், இணைதல், கலத்தல், ஆகியன ஒரு பொருள் பல சொல்லாகக் கருதத் தகுந்தவை. கலத்தல் நீர்மப் பொருளுக்கே உரியது. புணர்ச்சி உடல் உறவைக் குறிப்பதே பெரும்பான்மை. நண்பர்கள் ஒன்று சேர்வதையும் 'புணர்ச்சி பழகுதல் வேண்டா' (785) 'செப்பின் புணர்ச்சி' என இரண்டு பொருள் சேர்தலையும் குறிப்பது சிறுபான்மை.

மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'செப்பிற்கு உவமை குடி, மூடிக்கு உவமை உட்பகை' எனக் கூறி 'செப்பினது புணர்ச்சிபோலப் புறத்து வேற்றுமை தெரியாமல் கூடினாராயினும் பொருத்தமில்லதவராவார் உட்பகையும் அஃது உட்பட்ட குடியும்' என்றனர், 'செப்பும் மூடியும் ஒன்றுபட்டாற்போல இருந்து செப்பகத்து உட்பொருள் வாங்குவார்க்கு மூடி துணையாய்க் கழன்று நிற்கும்; அதுபோல பொருளைக் கவர வருவார்க்குத்திறந்து அகன்று நிற்பர்' எனமேலும் விளக்கினர்.
காலிங்கர் 'பொருந்துங் காலத்து முதலும் மூடியும் ஒரு பழுதற ஓர் உருபு என்னுமாறு இறுக முறுகப் பொருந்தா நிற்கும்' என செப்பின் இயல்பை விளக்குவதாக உள்ளது.
பரிமேலழகர் 'செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி செப்பின் புணர்ச்சி' என்றார். 'நாடு வந்தது என்பது நாட்டிலுள்ளோர் வந்தனர் என்பதைக் குறிப்பது போல உட்பகை என்பது உட்பகையுற்ற குடியிலுள்ளோர் அனைவரையும் குறிக்கும்; உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார்' என இவர் உரை தருவார்.

இப்பாடல் உட்பகை என்பதை ஓர் குடியில் உண்டாகும் ஒற்றுமையின்மையைத் தெரிவிப்பதாக உள்ளதுபோல் தெரிகின்றது. அதாவது தம் குடும்பத்தை அல்லது இனத்தைக் காட்டிக் கொடுக்கும் உட்பகையாக இல்லாமல் தமக்குள்ளேயே கருத்துவேறுபாட்டால் கூடாதுநிற்கும் பிளவுநிலையை அல்லது பிரிவினையைச் சொல்வதாக இருக்கிறது. செப்பின் புணர்ச்சியில் செப்பும் மூடியுமாக இரு பகுதிகளிருப்பது இதற்கு உவமாயிற்று. தேவநேயப்பாவாணரும் தமது உரையில் இக்கருத்தை வேறொரு வகையில் தொட்டுச் செல்கிறார்.
அடியிது மூடி இது என்று பிரித்தறிய முடியாதவாறு உள்ள செப்பினது புணர்ச்சியைப் போன்று பிறரால் வேறுபாடு உள்ளது என்று அறியமுடியாதவாறு மிகவும் நெருக்கமாக வெளியில் தோன்றினாலும் உட்பகையாக இருந்தால், அதனால் கேடுதான் விளையும் எனக் குடியிலுள்ளவர்களுக்கு உரைக்கப்பட்டதாகக் கொள்ளலாம்.

'செப்பின் புணர்ச்சி' என்றது செப்பும் மூடியும் ஒன்றுபட்டாற்போல என்ற பொருள் தருவது.

செப்பினது புணர்ச்சி போலச் சேர்ந்திருந்தாலும் உட்பகை உண்டான குடி மனத்தால் பொருந்த மாட்டாது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உட்பகை உற்றகுடி வடுப்படுவதற்கு ஏதுவாகிவிடும்.

பொழிப்பு

செப்பும் மூடியும் போலச் சேர்ந்திருந்தாலும், உட்பகை உள்ள குடியினர் மனம் ஒன்றுபடார்.