இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0886



ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது

(அதிகாரம்:உட்பகை குறள் எண்:886)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.

மணக்குடவர் உரை: தன் ஒன்றினார்மாட்டு ஒன்றாமை உளதாயின், எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது.
இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது.
(பொருள் படை முதலிய உறுப்புக்களாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: உட்பகை ஒருவனது உற்றாரிடத்தில் தோன்றுமானால் அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்பொழுதும் அரிதாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது.

பதவுரை: ஒன்றாமை-பகைமை; ஒன்றியார் கண்- தன்னை ஒட்டியுள்ளாரிடம், தனக்கு உள்ளாயினார் மாட்டு; படின்-பட்டால்; எஞ்ஞான்றும்-எப்போதும்; பொன்றாமை-அழிந்து போகாமை, இறவாதிருத்தல்; ஒன்றல்-நேருதல், பொருந்தல்; அரிது-அருமை.


ஒன்றாமை ஒன்றியார் கண்படின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன் ஒன்றினார்மாட்டு ஒன்றாமை உளதாயின்;
பரிப்பெருமாள்: தன்னோடு ஒன்றார் மாட்டு ஒன்றாமை உளதாயின்;
பரிதி: ஒன்றுபட்ட மனமாக இருக்கையிலே இருமனப்பட்டவர் உட்பகையாகில்;
காலிங்கர்: தம்மோடு நட்டார்மாட்டும் உட்பகை உளதாம் ஆயின்;
பரிமேலழகர்: பகைமை, தனக்கு உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்;

'தனக்கு உள்ளாயினார் மாட்டே பகைமை பிறக்குமாயின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூடஇருப்பவர்பால் கூடாமை ஏற்படின்', 'ஒன்றே போல் சேர்ந்திருக்கின்றவர்களுக்குள் உட்பகை வந்துவிட்டால்', 'பகைமை இனத்தார்பால் ஏற்படுமாயின்', 'பகைமை தம்மோடு நட்பாகப் பொருந்தியவரிடம் உண்டாகுமானால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒருவரது உற்றாரிடத்தில் உட்பகை ஏற்படுமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது.
மணக்குடவர் குறிப்புரை: இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.
பரிப்பெருமாள்: எல்லா நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நட்டோராகிய உட்பகையினால் வரும் தீமை கூறிற்று.
பரிதி: எந்நாளும் கேடானது மேன்மேலே தழைக்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்று ஒன்றுகூடியும் அதனால் தான் எஞ்சாமை கூடுதல் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது.
பரிமேலழகர் குறிப்புரை: பொருள் படை முதலிய உறுப்புக்களாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது. [முதலிய என்றமையின் அரண், நட்பு முதலியவற்றையும் கொள்ளலாம்]

'எந்நாளினும் சாவாமையைக் கூடுதல் அரிது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருநாளும் அழிவிலிருந்து தப்ப முடியாது', 'நாசமில்லாமல் இருப்பது ஒரு நாளும் முடியாது', 'எப்போதும் அழியாத நிலைமை பெறுதலை ஒருவன் அடைய முடியாது', 'தான் அழியாமல் இருத்தல் எப்பொழுதும் இல்லை (அழிவது உறுதி)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

ஒருபொழுதும் அழிவு நேராமலிருப்பது முடியாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒருவரது ஒன்றியார் இடத்தில் உட்பகை ஏற்படுமாயின் ஒருபொழுதும் அழிவு நேராமலிருப்பது முடியாது என்பது பாடலின் பொருள்.
'ஒன்றியார்' யார்?

உற்றார் மனவேறுபாடுற்றால் கேடு உறுதி.

ஒருவனுக்கு அவனுடன் ஒன்றி இருப்போரிடமே உட்பகை தோன்றுமானால் அந்த உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
ஒன்றாமை இங்கு பகைமை எனப்பொருள்படும். ஒன்றியார் என்பது உள்ளானவரை அல்லது உற்றவரைக் குறிக்கும் சொல். 'ஒன்றாமை ஒன்றியார் கண்படின்' என்பது உற்றாரிடம் உட்பகை தோன்றினால் என்ற பொருள் தரும். 'ஒன்றாமை ஒன்றியார்' என்ற தொடர் உள்முரண் (Oxymoron) என்பார் தேவநேயப்பாவாணர்.
உற்றார் என்பவர் உற்றதுணையானவர்கள் என அறியப்படுபவர்கள். தனது உள்வட்டத்தில் இருப்பவர் இடமே மனப்பகைமை தோன்றினால், அவர் அதனால் உண்டான பிளவைப் பெரிதாக உணர்வர். அதன் விளைவாக, ஒன்றி இணைந்து பழகியவரே, பகைவர் போல் பகை தீர்க்க, எந்த எல்லைக்கும் செல்வர். தம்மைப் பற்றி எல்லாம் அறிந்தவராதலால் நெருங்கி இருந்தே வஞ்சகமாய்த் தன்னை அழித்துவிடுவது அவர்க்கு எளிதாம்.
ஷேக்ஸ்பியர் நாடகத்தில் ஜூலியஸ் சீசர் தன் நெருங்கிய நண்பன் புரூட்டஸ் கையாலேயே கொல்லப்படுவதும் 'நீயுமா புரூட்டஸ் 'Et tu, Brute?' (Even you, Brutus?)' என்று சீசர் கூறும் புகழ்பெற்ற சொற்களும் நினைவிற்கு வரலாம்.

'ஒன்றியார்' யார்?

'ஒன்றியார்' என்றதற்கு தன் ஒன்றினார், நட்டோர், ஒன்றுபட்ட மனமாக இருப்பவர், தம்மோடு நட்டார், தனக்கு உள்ளானவர், பொருந்தியவன், ஒருவனுடைய உற்றார், நம்மோடு ஒன்றிப் பழகுகின்ற நமக்கு உள்ளந்தரங்கமானவர், கூடஇருப்பவர், ஒருவனது உற்றார், ஒன்றே போல் சேர்ந்திருக்கின்றவர், நெருங்கியவர், இனத்தார், தம்மோடு நட்பாகப் பொருந்தியவர், உறவின்முறை போல் ஒன்றுபட்டு இருப்போர், நெருங்கிய நட்புடையார், தனக்கு உட்பட்டவர், நம்மோடு பிரியாது கூடி வாழ்பவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஒருவரிடம் மிக நெருங்கிப் பழகும் உரிமை உடையவர் ஒன்றியார் எனலாம். அவர் உற்றார் எனவும் வழங்கப்படுவார். ஒன்றியார் என்ற சொல்லே அவர்களிடையேயான நெருக்கத்தைச் சொல்லும். அவர்களிடையே ஒளிவு மறைவு இருக்காது. எல்லாவற்றையும் ஒருவர்க்கொருவர் கலந்து ஆலோசிப்பர். இத்துணை நெருக்கமாக இருந்தவர் எந்தக் காரணத்தாலும் பகை கொண்டால் அது உட்பகையுற்றார் உயிர்க்கு இறுதி உண்டாக்கிவிடும் அளவு சென்றுவிடும்.

'ஒன்றியார்' என்ற சொல் ஒன்றிப் பழகும் நட்புடையார் என்ற பொருள் தரும்.

ஒருவரது உற்றாரிடத்தில் உட்பகை ஏற்படுமாயின் ஒருபொழுதும் அழிவிலிருந்து தப்ப முடியாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

உள்ளானவரிடம் உட்பகை தோன்றினால் உயிர் மிஞ்சாது

பொழிப்பு

உற்றாரிடத்தில் பகைமை தோன்றுமானால் அவ்வுட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்பொழுதும் முடியாது.