இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0341 குறள் திறன்-0342 குறள் திறன்-0343 குறள் திறன்-0344 குறள் திறன்-0345
குறள் திறன்-0346 குறள் திறன்-0347 குறள் திறன்-0348 குறள் திறன்-0349 குறள் திறன்-350

அருளுணர்வு மிகுந்து தன்னலம் தேய்ந்து அழிந்தபின், வாழ்க்கையில் பற்று எல்லாம் அற்றுப் போகும். அப்போதும் இல்லறத்தில் இருந்து பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து கடமையைச் செய்வோர் உண்டு. அவர்களுடைய நிலை அகத் துறவு என்று கூறப்படும். சிலர் அப்போது இல்லறத்தை விட்டுத் தன் வீடு தன் பொருள் என்பவை இல்லாமல் வாழ்வார்கள்; அது புறத்துறவு என்று கூறப்படும்.
- மு வரதராசன்

இல்லறம் இயற்றிப் பின்னர் உரிய காலத்தில் அதை நீத்துத் துறவுவாழ்க்கை மேற்கொண்டு இறையொளி காண்பதற்கு முயல்தல் துறவு எனப்படும். பற்றுக்களையும் தொடர்புகளையும் நீக்கி ‘யான்', 'எனது’ என்னும் செருக்கறுத்தலே துறவாகும். இல்லறத்தின் குறிப்பிட்ட செயல் எல்லைக்குள்ளேயே துறவறத்தை அடைய முடியுமென்பதால் துறவறம் இருவகை அறத்துக்கும் பொருந்துகிறது என்பர்.

துறவு

காமஞ் சான்ற கடைக்கோட் காலை..(தொல்காப்பியம் கற்பியல் 51) எனத் தொடங்கும் நூற்பாவில் தொல்காப்பியர் 'வாழ்க்கையின் இறுதிக் காலத்தில், காமம் அல்லது இன்பத்தை முழுமையாக அடைந்த பிறகு தலைவனும் தலைவியும் தம்பிள்ளைகளோடு சேர்ந்து பாதுகாப்பும் இன்பமும் கொண்ட வழியில் சென்று, அறத்தின் தூண்டுதல்படி சுற்றம் சூழ எது சிறந்ததோ அதைக் கடைப்பிடித்து வாழவேண்டும். இதுவே அவர்களின் கடந்தகால வாழ்க்கையின் பயனாகும்' எனத் துறவுமுறையை விளக்கினார். இங்கு மணவாழ்க்கையின் இறுதிக் குறிக்கோளான தனிமனித வாழ்வு அல்லது குடும்ப வாழ்வின் நிறைவு குறிப்பதையும் தந்நலம் துறந்து பிறர் நன்மைக்காகப் பணி செய்யும் தூய வாழ்வே துறவறம் என்பது சொல்லப்பட்டதையும் காணலாம். அக்காலத்தில் துறவு, அருள் என்ற தொடர்ச்சி கிடையாது. மனைவி மக்களைத் துறந்து காட்டிலோ மலையிலோ சென்று தனித்துறையும் துறவற வாழ்க்கை இல்லை. காம உணர்ச்சி மறைந்துபோன கடைசிக் காலத்தில்தான் -இல்லற இன்பத்தைப் பரிபூரணமாக அனுபவித்த பிறகுதான்- துறவறத்தை மேற்கொள்வர். அன்றைய மரபில் ஸ்மரண வைதீக துறவுகளுக்கு இடமில்லை.

அதன் பின்னர் 'இவ்வுலகிலே இன்பம் இல்லை இறந்தபின் நாம் அடையும் உலகம் வேறு. அவ்வுலகிலே இன்பம் நுகர வேண்டுமானால் இவ்வுலக இன்பத்தைத் துறக்கவேண்டும். இவ்வுலக இன்பத்தை வெறுத்து இறைவனை நோக்கித் தவம் புரிய வேண்டும். தவந்தான் அடுத்த பிறவியிலே செல்வத்தைத் தரும். செல்வராகப் பிறந்து சிறந்த இன்பங்களைச் சுவைக்கலாம். இப்பொழுது செல்வமும் செல்வாக்கும் பெற்று வாழ்கின்றவர்கள் எல்லாம் சென்ற பிறவியிலே சிறந்த தவத்தைச் செய்தவர்கள்; தவம் செய்யாதவர்களே இன்று வறியவர்களாய் வாழ்கின்றனர். ஆதலால் துறவு பூண்டு தவம் புரிய வேண்டும். பிறவிச்சுழற்சியிலே இருந்து விடுபட்டு வீடுபேறு அடைய கடுந்துறவு வாழ்க்கை மேற்கொள்ளப்படவேண்டும்' என்ற துறவறத்தைப் பற்றிய மாறுபட்ட கருத்தியல் இங்கு வேரூன்றத் தொடங்கியது.
முதுமை, வாழ்நாள் நிலையாமை, ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி விடுதலை அதாவது வீடுபேறு பெறுதலுக்காகத் துறவு மேற்கொள்ளப்படவேண்டும் எனச் சொல்லப்பட்டது. குடும்பவாழ்க்கை விடுதலைக்கு இடையூறாகக் கூறப்பட்டுள்ளது. இறப்பதற்கு முன்பே இந்த உலகை முழுமையாகத் துறந்து விடுதலைக்குரிய வினைகளைச் செய்ய வேண்டும் என்றனர்.

ஆனால் துறவறத்தைவிட இல்லறமே சிறந்தது என்ற கருத்துள்ளவர் வள்ளுவர். அவர்க்குத் துறவறம் என்பது இல்லறத்து உட்பட்ட அதன் பரந்த அடிப்படை மீதமைந்த ஒரு சிறப்புப் பண்பே. இதனால் இரண்டின் பண்புக்கும் அடிப்படை இல்லறத்தின் பண்புதான்.அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று (இல்வாழ்க்கை 49) என்றும் அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவது எவன்? (இல்வாழ்க்கை 49) என்றும் வள்ளுவர் அறத்தின் சிறப்பு முழுவதையும் இல்லறத்துக்கு அளித்துத் துறவறத்தால் அடையும் பயனையும் இல்லறத்திலேயே பெற்றுவிடலாம் எனவும் கூறினார். எனவே, இயற்கைத் துறவானது இயல்பாக வளருமிடமாகிய இல்லறத்திற்கே வள்ளுவர் ஏற்றம் கூறுகின்றார். மற்றைய நூல்கள் எல்லாம் பெண்ணிழிவினையும், புணர்ச்சி விழையாமையினையும் துறவறத்திற்கு இன்றியமையா ஒழுக்கமாகக் கூறியிருக்க, வள்ளுவர் அவற்றைப்பற்றி ஒன்றும் சொல்லாமை நோக்கத்தக்கது. இங்கே மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்வது என்பதும் வற்புறுத்தப்படவில்லை. இளமைத் துறவு சொல்லப்படவில்லை. துவராடை, காடு தேடிப்போதல், இல்லறத்தை விடுதல் என எதனையும் சுட்டிக்கூறவில்லை. மனத்தளவில் அனைத்தையும் முற்றத்துறந்து பற்றின்றி வாழும் துறவே இங்கு விளக்கப்படும் துறவாகும். வினை, பிறப்புஇறப்பு என்ற சுழற்சி என்பன பேசப்படவில்லை.

இயல்பாகும் நோன்பிற்கு ஒன்றின்மை.... (344) என உடைமைப் பற்றும், அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை.... (343) என உடற்பற்றும், ....பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை (345) என உயிர்ப்பற்றும் நீங்கி, யான், எனது என்னும்..(346) தற்பற்று அறுவது வள்ளுவர் கூறும் துறவு. தீரத்துறந்தவர்க்கே துறவு கைகூடும் என்றும் பற்றினை விட்டு விலகுதற்கு இறைவனை மனங்கொண்டு அதனையே பற்றிக்கொண்டிருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

துறவு அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 341 ஆம்குறள் எந்தெந்தப் பொருளிலிருந்து பற்றினை விடுகிறானோ அந்தந்தப் பொருளால் வரும் துன்பம் இல்லாதவனாம் என்கிறது.
  • 342 ஆம்குறள் மேன்மையுற வேண்டுமானால் பற்றுக்களைத் துறக்க; துறந்தபின் இங்கு நிகழற்பாலவாகிய நன்மைகள் பல எனச் சொல்கிறது.
  • 343 ஆம்குறள் ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும்; பொறிகள் நாடும் எல்லா விருப்பங்களையும் ஒருமிக்க விட்டுவிட வேண்டும் என்கிறது.
  • 344 ஆம்குறள் ஒன்றும் இல்லாதிருத்தலே துறவுத் தவத்திற்கு இயல்பாகும்; உடைமை மீண்டும் மயங்குதற்கு வழியாகும் எனக் கூறுகிறது.
  • 345 ஆம்குறள் பிறவித் துன்பத்தை நீக்க முயல்பவர்க்கு உடம்பும் சுமையாகும்; பிற தொடர்புகள் எதற்காக? எனக் கூறுகிறது.
  • 346 ஆம்குறள் 'யான்', 'எனது' என்னும் செருக்கு ஒழிப்பவன் வானோர்க்கு மேலாகிய உலகத்தை அடைவான் எனச் சொல்கிறது.
  • 347 ஆம்குறள் பற்றுக்களை விடாது பிடித்துக் கொள்பவரைத் துன்பங்கள் பற்றிக்கொண்டு விடமாட்டா என்கிறது.
  • 348 ஆம்குறள் பற்றினை முழுதும் விட்டவரே துறவு கைகூடியவராவர்; மற்றவர்கள் அறியாமையால் துன்பவலையுள் அகப்பட்டவராவர் எனச் சொல்கிறது.
  • 349 ஆம்குறள் பற்று முழுதும் விட்டபோதுதான் ஒருவன் வாழ்க்கைத் துன்பத்தினின்றும் நீங்கப்பெறுவான்; இல்லாவிடின், நிலையாமையையுடைய வாழ்வே தோன்றும் எனக் கூறுகிறது.
  • 350 ஆவது குறள் யாதொரு பற்றும் இல்லாத இறைவனைப் பற்றிக் கொள்க; பற்றினை விட்டு விலகுதற்கு அப்பற்றினையே பற்றிக் கொள்ள வேண்டும் என்கிறது.

துறவு அதிகாரச் சிறப்பியல்புகள்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் என்ற பாடல் (341) ஒருவன் யாதொரு பொருளின் நீங்குகிறானோ அந்தப் பொருளால் துன்பம் எய்துதல் இலன் என்கிறது. துறக்க வேண்டியனவற்றையெல்லாம் ஒருசேரத் துறத்தல் இயலாதார் ஒவ்வொன்றாக நீக்கிப் படிமுறையால் துறவு மனப்பான்மையை அடையலாம் என்று வழிகாட்டுகிறது.

'யான்' என்பது உடலும் புலன்களும் உள்ளமும் ஆகியவை சேர்ந்த ஒரு தொகைப்பாடு; 'என்னுடையது' என்பது மனை, செல்வம் போன்ற உடைமைகள். இவற்றை நீக்கிவிட்டால் துறவின் இறுதி நிலைக்கு ஒருவன் செல்கிறான்; அவன் எல்லாவற்றிலும் மேலான உலகத்திற்குள் செல்ல ஆயத்தமாகிறான் என்று யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்என்ற பாடல் (346) கூறுகிறது. இது பலருக்கும் இயல்வதுதானே.

சிறந்த ஒலிநயம் மட்டுமல்ல கருத்தாழமும் கொண்ட பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்ற குறளில் (350) பற்று என்ற ஒரு சொல் பாட்டு முழுவதும் மறித்து வந்தது.




குறள் திறன்-0341 குறள் திறன்-0342 குறள் திறன்-0343 குறள் திறன்-0344 குறள் திறன்-0345
குறள் திறன்-0346 குறள் திறன்-0347 குறள் திறன்-0348 குறள் திறன்-0349 குறள் திறன்-350