இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0349பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்

(அதிகாரம்:துறவு குறள் எண்:349)

பொழிப்பு (மு வரதராசன்): இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும்; இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமை காணப்படும்.

மணக்குடவர் உரை: ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும்.
இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.

பரிமேலழகர் உரை: பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் - ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும் - அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.
(காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். 'அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5) என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.)

தமிழண்ணல் உரை: பற்று முழுதும் அற்ற அப்பொழுதே ஒருவன் பிறப்புத் துன்பத்தினின்றும் நீங்கப்பெறுவான். அஃதின்றேல், பிறவித் துன்பங்களைத் தருகின்ற நிலையாமையையுடைய வாழ்வே முன்வந்து காணப்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும்.

பதவுரை: பற்று-விருப்பம்; அற்ற-நீங்கிய; கண்ணே-பொழுதே. வேளையே; பிறப்பு-பிறப்புத் துன்பம், பிறப்பு; அறுக்கும்-நீங்கும்; மற்று-அவ்வாறன்றி, ஆனால், பின்; நிலையாமை-நிலையில்லாத தன்மை; காணப்படும்-அறியப்படும்.


பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்;
மணக்குடவர் குறிப்புரை: இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது.
பரிப்பெருமாள்: ஒருவன் யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லாப் பற்றினையும் அறுக்கப் பிறப்பு அறுமென்றது. இத்துணையும் துன்பம் கெடும் என்றது.
பரிதி: மூன்று வகை ஆசையுந் துறந்த பேர்க்குப் பிறப்பு இல்லை;
காலிங்கர்: இங்ஙனமே பற்றற்ற இடத்து மற்று அப்பொழுதே அப்பற்றறுதலாகிய நல் துறவு தன் பிறப்பறுக்கும்;
பரிமேலழகர்: ஒருவன் இருவகைப்பற்றும் அற்ற பொழுதே அப்பற்று அறுதி அவன் பிறப்பை அறுக்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: காரணமாகிய பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார். 'அற்றது பற்றெனில், உற்றது வீடு' (திருவாய் 1-2-5) என்பதூஉம் அது பற்றி வந்தது. இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.

'யாதொரு பொருளோடும் பற்றற்ற பொழுதே அது பிறப்பையறுக்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பற்றுவிட்டபோதுதான் பிறப்பு விடும்', 'இருவகைப் பற்றையும் விட்டபோதே அவனுக்குப் பிறவித் துன்பம் நீங்கும்', 'ஆசைகளையெல்லாம் விட்டுவிட்ட நிலையே மறுபிறப்பை ஒழிக்கும்', 'ஒருவனுக்கு இருவகைப்பற்றுந் தொலைந்த பொழுதே அஃது அவன் பிறவியை ஒழிக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பற்று விட்டபோதுதான் ஒருவன் வாழ்க்கைத் துன்பத்தினின்றும் நீங்கப்பெறுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்று நிலையாமை காணப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனை விடாதபோது நிலையாமை காணப்படும்.
பரிப்பெருமாள்: அதனை விடாதவராற் காணப்படுவது நிலையாமையே.
பரிதி: இதில் ஒன்றிரண்டு துறந்தாலும் பிறப்புண்டு; கீழ்ப்படுத்தாது மேற்படுத்தும் என்றவாறு.
காலிங்கர்: எனவே முத்தியை எய்தும். மற்று ஏனைய எல்லாம் பற்றோடு வருதலால் அந்தந்தப் பொருள்பற்றி நின்ற நெஞ்சோடும் பிறந்தும் இறந்தும் திரிந்து உழல வேண்டுதலால் இந்த நிலையாமையே எப்பொழுதும் காணப்படும் இவனால்; எனவே, எஞ்ஞான்றும் முத்தியின்பம் காணமாட்டான் என்பது பொருள் ஆயிற்று என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இனி, இவ்வுலகத்து மக்கட் பிறதோரில் சிறந்தாராகிய சான்றோர் முன்னர்த் தம் குலத்தியல்பாகிய இல்லறம் இயற்றிப் பின்னர் மற்றதன் பயனாகிய துறவறமியற்றுதற்கு அதனை முனிந்து நீத்துபோந்து துறவறம் இயற்றிய பின்னர் இத்துறவறத்தின் பெரும்பயனாகிய முத்தி இன்பத்து முயன்று அமைதல் இயல்பாதலால் இதன் பின்னரே மெய்யுணர்தல் என்னும் பெயரினான் அதனை அறிவிக்கின்றது மேலை அதிகாரம்.
பரிமேலழகர்: அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.

'அதனை விடாதவராற் காணப்படுவது நிலையாமையே' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விடாதபோது இறப்பும் பிறப்பும் வரும்', 'விடாதபோது பிறந்து இறந்து மாறி மாறி வரும் சுழற்சியால் நிலையாமை தோன்றும்', 'இல்லையானால் மீண்டும் நிலையற்ற பிறவிதான் வரும்', 'பற்று அறாத பொழுது பிறந்திறந்துழலும் நிலையில்லாத் தன்மையே அவன்பாற் காணப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இல்லாவிடின், நிலையாமையையுடைய வாழ்வே தோன்றும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பற்று விட்டபோதுதான் ஒருவன் பிறப்பறுக்கும்; இல்லாவிடின், நிலையாமையையுடைய வாழ்வே தோன்றும் என்பது பாடலின் பொருள்.
'பிறப்பறுக்கும்' என்றால் என்ன?

பற்றுக்களை நீக்காவிட்டால் நிலையாமையே தொடரும்.

அகப்பற்று, புறப்பற்று என்ற இருவகைப் பற்றும் நீங்கியவுடனே அந்தப் பற்றற்ற நிலை வாழ்க்கைத் துன்பத்தை ஒழிக்கும். அந்தப் பற்றினை நீக்காவிடின் நிலையற்ற வாழ்வே நீடிக்கும்.
இல்லறம் இயற்றிப் பின்னர் உரிய காலத்தில் அதை நீத்துத் துறவு பூணுவர். அதுவே இறையொளி காண்பதற்கு அல்லது மெய்யுணர்தல் பெறுதற்கு ஏற்றவழி என்பது நம்பிக்கை. துறவு என்பது பற்றினை விடுவது. பற்றுகள் நீடிக்கும் வரை துறவு வாராது. பற்றை நீக்கினால்தான் துறவுள்ளம் பெறுவான். பற்றற்றால் அப்போதே தொடர்புகள் நீங்கும் வாழ்க்கைத் துன்பம் ஒழியும். பற்றை அறமுடியாது போனால் மனம் நிலையாமல் திரிந்து தொடர்புகளைப் பெருக்கும்; வாழ்வுத் துன்பம் விடாது தொடரும். பற்று நீங்காதவரை செல்வம், யாக்கை, இளமை போன்ற நிலையற்றவை உள்ளத்தின் அளவிலும் அறிவு நிலையிலும் தோன்றிக்கொண்டே இருக்கும்.

முன்பு பிறவித் துன்பம் நீங்க இறைவன் அடியை சேர வேண்டும் (இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; (கடவுள் வாழ்த்து 10)) என்று கூறப்பட்டது. இங்கு பற்றை முற்றிலும் விலக்கினாலும் பிறவித்துன்பத்தை நீக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

'பிறப்பறுக்கும்' என்றால் என்ன?

துறவு நிலையில், பற்றை ஒருவன் நீக்கியபோது அவனுக்குக் கிடைக்கிற பயன் சொல்வதாக உள்ளது இப்பாடல்.
தொல்லாசிரியர்கள் அனைவரும் மற்றும் பின்வந்தவர்களில் பலரும் பற்றறுத்தபோது பிறப்பையறுத்தல் என்னும் பயன் கிடைக்கும் என்றனர். பிறப்பறுக்கும் என்றதற்கு பிறப்பையறுக்கும் என்று கூறி அது பிறவிச் சுழற்சியிலினின்று விடுதலை பெறுவது குறித்தது என்றும் வீடு பேறு பெறுவது பற்றியது என்றும் எழுதினர். ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால் - பற்றை நீக்கவில்லையென்றால்- பிறப்பு இறப்பு என்று மாறி மாறி வரும் சுழற்சி, பற்றுகளை முழுவதுமாக விட்டுவிடாத வரையில் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றனர். தீரத் துறந்தார்க்கு வீடு உண்டென்றும் அவ்வாறு துறவாதவர்க்குப் பிறப்பு உண்டென்றும் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். பிறவிச் சுழற்சியையே நிலையாமை என்று கூறினர். மீண்டும் மீண்டும் பிறவி எடுக்கும் சுழற்சியிலிருந்து விடுபட வேண்டுமென்றால், 'துறவு தான் தீர்வு' என்பதை இந்தக்குறள் சுட்டுகிறது எனவும் கூறுவர்.
இன்றைய உரையாளர்களில் ஒரு சிலர் 'பிறப்பறுக்கும்' என்றதற்கு வாழ்க்கைத் துன்பத்தை ஒழிக்கும் என்ற பொருளில் உரை தந்தனர். இது பொருத்தமானதே.

'பிறப்பறுக்கும்' என்ற தொடர் பிறவித்துன்பத்தை அதாவது வாழ்வுத்துன்பத்தை நீக்கும் என்ற பொருள் தருவது.

பற்று முழுதும் விட்டபோதுதான் ஒருவன் வாழ்க்கைத் துன்பத்தினின்றும் நீங்கப்பெறுவான்; இல்லாவிடின், நிலையாமையையுடைய வாழ்வே தோன்றும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வாழ்க்கைத் துன்பம் நீங்குதல் துறவுப் பயன்.

பொழிப்பு

பற்றுவிட்டபோதுதான் வாழ்க்கைத் துன்பங்கள் நீங்கும்; இன்றேல் நிலையாமையே காணப்படும்.