இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0347பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு

(அதிகாரம்:துறவு குறள் எண்:347)

பொழிப்பு (மு வரதராசன்): யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டு விடாதவரை, துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

மணக்குடவர் உரை: பொருள்களைப் பற்றி விடாதவரைத் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும்.
இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.

பரிமேலழகர் உரை: பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு - இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை, இடும்பைகள் பற்றி விடாஅ - பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா.
(இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல், விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பற்றுக்களை விடாது பிடித்துக் கொள்பவரைத் துன்பங்களும் விடாது பிடித்துக் கொள்ளும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பற்றினைப் பற்றி விடாஅதவர்க்கு இடும்பைகள்பற்றி விடாஅ.

பதவுரை: பற்றி-காதல் கூர்ந்து; விடாஅ-விடமாட்டா; இடும்பைகள்-துன்பங்கள்; பற்றினை-பற்றுக்களை; பற்றி-பற்றி; விடாஅதவர்க்கு-நீங்காதவரை.


பற்றி விடாஅ இடும்பைகள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும்.
பரிப்பெருமாள்: துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும்.
பரிதி: அல்லது தவசு பலியாது என்றவாறு.
காலிங்கர்: எஞ்ஞான்றும் தம்மைச் செறியப் பற்றிக்கொண்டு விட்டு நீங்காது; யாவை எனில், பிறவி முதலாகிய துயரங்கள் என்றவாறு.
பரிமேலழகர்: பிறவித் துன்பங்கள் இறுகப்பற்றி விடா.
பரிமேலழகர் குறிப்புரை: இறுகப் பற்றுதல் - காதல் கூர்தல்,

துன்பங்கள்/ பிறவித் துன்பங்கள் விடாதே பற்றி நிற்கும் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறவித் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடவே மாட்டா', 'பிறவித் துன்பங்களும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கும்', 'பிறவித் துன்பங்கள் இறுகப் பற்றிக்கொண்டு விடமாட்டா', 'துன்பங்கள் உறுதியாகப் பற்றிக்கொள்ளும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

துன்பங்கள் பற்றிக்கொண்டு விடமாட்டா என்பது இப்பகுதியின் பொருள்.

பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள்களைப் பற்றி விடாதவரை.
மணக்குடவர் குறிப்புரை: இது பொருள்களைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.
பரிப்பெருமாள்: பொருளைப் பற்றி விடாதவர்களுக்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பொருளைத் துறவாக்கால் வினை கெடாதென்றது.
பரிதி: மூன்றுவகை ஆசையும் துறந்து தவசு பண்ணும்போது தவசு சடுதியிலே பலிக்கும்.
காலிங்கர்: பற்றாகிய மனை, மக்கள் செல்வம் முதலிய பல பற்றினையும் தமது உள்ளமானது தோய்ந்துகிடக்கின்ற காதலைக் கைக்கொண்டு விடாதிருக்கின்ற அறிவிலோர்க்கு,
பரிமேலழகர்: இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை,
பரிமேலழகர் குறிப்புரை: விடாதவர்க்கு என்பது வேற்றுமை மயக்கம். இதனான், இவை விடாதவர்க்கு வீடு இல்லை என்பது கூறப்பட்டது.

'பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யான், எனது என்னும் இருவகைப் பற்றினையும் இறுகப் பிடித்துக் கொண்டு நீங்காதாரை', 'யான் எனது என்ற அகங்காரங்களை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பவர்களைப', 'இருவகைப் பற்றினுக்கு முரிய பொருள்களை விரும்பி அவற்றைத் துறக்கமாட்டாதவரை', 'இருவகைப் பற்றினையும் உறுதியாகக்கொண்டு நீங்காதாரை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பற்றுக்களை விடாது பிடித்துக் கொள்பவரை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பற்றுக்களை விடாது பிடித்துக் கொள்பவரைத் துன்பங்கள் பற்றிக்கொண்டு விடமாட்டா என்பது பாடலின் பொருள்.
'பற்றினைப் பற்றி விடாஅ தவர்' யார்?

எவ்வளவு பற்றியிருக்கிறோமோ அவ்வளவு துன்பங்களும் இருக்கும்.

பற்றுக்களை உறுதியாக மனதில் பற்றிக்கொண்டு விடாமல் இருப்பவர்களை அவற்றால் வரும் துன்பங்கள் விடாமல் பற்றிக் கொண்டிருக்கும்.
துறவு பற்றிய அதிகாரம் இது. இல்வாழ்க்கையின் இறுதியில் உலகப் பற்றுக்கள் எல்லாவற்றையும் விலக்கி இறையொளி தேடும் துறவிகளைப் பற்றிச் சொல்வது. யான், எனது என்ற பற்றைக் கொண்டவர்களை அதாவது அகப்பற்று, புறப்பற்று என்ற இவ்விருவகைப் பற்றுக்களையும் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும் பற்றிக்கொண்டு விடாமல் தொடரும் என்கிறது இப்பாடல்.
பொருள்களின்மேல் பற்று இருந்தால், அதுவே துன்பமாதலால் புலன்களின் வழிச் செல்லும் மனத்திலிருந்தும் பற்றுக்களை நீக்கினால்தான் துறவு கைகூடும். பற்றுக்களை விலக்காவிட்டால் துன்பம் நீங்காது என்று சொல்லி பற்றுக்களைத்தளரச் செய்யச் சொல்வதாக அமைந்துள்ளது இப்பாடல். பற்றுக்களை அகற்றுதலே துன்பநீக்க வழியாம். உலகத் துன்பங்களினின்றும் விடுபடுதலே துறவின் முதற்பயன் என்பதும் இதனால் பெறப்படும்.

'பற்றி விடா' என்ற தொடர் இறுகப் பற்றிக்கொண்டு விடாமலிருப்பதையும், 'பற்றுவது இல்லை' என்ற பொருளையும் தரும். இங்கு அது பற்றிக்கொண்டு விடாது என்ற பொருளில் அமைந்துள்ளது.
பற்று என்ற ஒரே சொல், ஒரே வகையான பொருளில் திரும்பத் திரும்ப வந்து ஒருவகை ஒலிநயம் தருவதை இப்பாடலில் உணரலாம்.
இ சுந்தரமூர்த்தி 'இக்குறட்பாவில் 'விடா அ' என்னும் அளபெடை இருமுறை பயின்று வந்துள்ளதைக் காணலாம். பற்றிய துன்பங்கள் ஒருகாலிலும் விடாது தொடர்ந்து துன்பத்தை நல்கும் என்பதைக் குறிப்பால் உணர்வது போல் இவ்வளபெடை நடைநயம் அமைந்திருப்பது எண்ணத்தக்கது. துன்ப நீட்டிப்பை அளபெடை நீட்டிப்பும் உணர்த்துவது உணரத்தக்கது' என்று 'விடா அ' என்ற அளபெடையின் பயன்பாட்டை விளக்குவார்.

'பற்றினைப் பற்றி விடாஅ தவர்' யார்?

'பற்றினைப் பற்றி விடாஅ தவர்' என்ற தொடர்க்குப் பொருள்களைப் பற்றி விடாதவர், மூன்றுவகை ஆசையும் துறக்காதவர், பற்றாகிய மனை, மக்கள் செல்வம் முதலிய பல பற்றினையும் தமது உள்ளமானது தோய்ந்துகிடக்கின்ற காதலைக் கைக்கொண்டு விடாதிருக்கின்ற அறிவிலோர், இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதார், யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டு விடாதவர், உலகப் பொருள்களைப் பற்றிக்கொள்ளும் பற்றினை முற்றிலும் விடாதவர், இருவகைப் பற்றுக்களையும் விடாமல் பற்றிக் கொண்டிருப்பார், பற்றுக்களை விடாது பிடித்துக் கொள்பவர், யான், எனது என்னும் இருவகைப் பற்றினையும் இறுகப் பிடித்துக் கொண்டு நீங்காதார், பற்றுகளை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிறவர், அகப்பற்று புறப்பற்று ஆகிய பற்றுகளைப் பற்றிக் கொண்டு அவற்றை விடாமல் இருப்பவர், இருவகைப் பற்றினுக்கு முரிய பொருள்களை விரும்பி அவற்றைத் துறக்கமாட்டாதவர், இருவகைப் பற்றினையும் உறுதியாகக்கொண்டு நீங்காதார், இருவகைப் பற்றுகளையும் முற்றும் துறக்கமுடியாதவர் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

துறக்கப்போகிறேன் என்று முடிவு எடுத்தபின் பற்றுக்களை நீக்க முடியாமல் இருப்பவர்களையும் அப்பற்றுக்களை விலக்காமல் துன்பங்களை நீக்க முடியுமா என்று எண்ணுபர்களையும் நோக்கியது இப்பாடல் எனத் தோன்றுகிறது.

'பற்றினைப் பற்றி விடாஅ தவர்' பற்றினை இறுகப்பற்றி விடமுடியாதவர் என்பது பொருள்.

பற்றுக்களை விடாது பிடித்துக் கொள்பவரைத் துன்பங்கள் பற்றிக்கொண்டு விடமாட்டா என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

துறவு மேற்கொள்ளுதலின் பயன் பற்றுத்துன்பங்களை நீக்கல்.

பொழிப்பு

பற்றுக்களை விடாது பற்றிக் கொள்பவரைத் துன்பங்கள் விடாது பிடித்துக் கொள்ளும்.