இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0342வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல

(அதிகாரம்:துறவு குறள் எண்:342)

பொழிப்பு (மு வரதராசன்): துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால், எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயே துறக்க வேண்டும். துறந்தபின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

மணக்குடவர் உரை: தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின், தன்னுடைமையெல்லாவற்றையுந் துறக்க; துறந்தபின் இவ்விடத்தே யியலும்பகுதியின பல.
இஃது இம்மைப் பயன் கூறிற்று.

பரிமேலழகர் உரை: துறந்த பின் ஈண்டு இயற்பால பல - எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல, வேண்டின் உண்டாகத் துறக்க - அவ் இன்பங்களை வேண்டின், அவற்றைக்காலம் பெறத் துறக்க.
(அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள், அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன. இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக்கண் துன்பங்கள் என்பதும் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: இன்பத்தை விரும்பினால் தக்க காலத்தில் பற்றினை விடுக. பற்றினை விட்ட பிறகு இவ்வுலகில் அடையக்கூடியன பலவுள.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின் ஈண்டு இயற்பால பல.

பதவுரை: வேண்டின்-விரும்பினால்; உண்டாக-உளதாக; துறக்க-பற்றறுக; துறந்தபின்-துறவு கொண்டால்; ஈண்டு-இங்கு, இப்பிறவியில், இம்மையிலேயே; இயல்பால-இயலக்கூடியவை; பல-பல.


வேண்டின்உண் டாகத் துறக்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின், தன்னுடைமையெல்லாவற்றையுந் துறக்க;
பரிப்பெருமாள்: தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின், தன்னுடைமையெல்லாவற்றையுந் துறக்க;
பரிதி: வேண்டின செல்வம் உண்டாயிருக்கத் துறக்க வேணும்;
காலிங்கர்: முதற்சொன்ன நிலையாமையைக் குறிக்கொண்டு பிறவிக்கு வித்தாகிய வினையும் பயனும் என்பனவற்றை நுமக்கு இயன்ற விடுத்தலை விரும்புவீராயின் அதனையும் முற்சொன்ன உண்மையாகத் துறக்க;
பரிமேலழகர்: அவ் இன்பங்களை வேண்டின், அவற்றைக்காலம் பெறத் துறக்க.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள், அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன. இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன. இம்மைக்கண் துன்பங்கள் என்பதும் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.

'உயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின், தன்னுடைமையெல்லாவற்றையுந் துறக்க' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களுள் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'வேண்டின செல்வம் உண்டாயிருக்கத் துறக்க வேணும்' என்றார் பரிதி. 'பிறவிக்கு வித்தாகிய வினையும் பயனும் என்பனவற்றை நுமக்கு இயன்ற விடுத்தலை விரும்புவீராயின் அதனையும் முற்சொன்ன உண்மையாகத் துறக்க' என்பது காலிங்கர் உரை. பரிமேலழகர் 'இன்பங்களை வேண்டின், அவற்றைக்காலம் பெறத் துறக்க' எனக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் உள்ளபோதே துறக்க', 'தன் உயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டினால் பொருள் மேலுள்ள பற்றினைக் கைவிடுக', 'துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால் பற்றுகளை முற்றிலும் விட்டுவிட வேண்டும்', 'அவற்றை விரும்பினால் அவை உண்டாதற்குக் காலம் இருக்கும்படியாகத் துறத்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மேன்மையுற வேண்டுமானால் பற்றுக்களைத் துறக்க என்பது இப்பகுதியின் பொருள்.

துறந்தபின் ஈண்டியற் பால பல:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துறந்தபின் இவ்விடத்தே யியலும்பகுதியின பல.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இம்மைப் பயன் கூறிற்று.
பரிப்பெருமாள்: துறந்தபின் இவ்விடத்தே யியலும்பகுதியின பல.
பரிப்பெருமாள் குறிப்புரை: அவை நீத்தார் பெருமையுட் கூறப்பட்டன. இஃது இம்மைப் பயன் கூறிற்று.
பரிதி: துறந்தபின் செனனம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: இங்ஙனம் துறந்ததற்பின் இவ்விடத்து மற்று அத் துறவற முயற்சியான் ஈண்டு ஆகற்பாலன பல என்றவாறு.
பரிமேலழகர்: எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல,

துறந்தபின் இவ்விடத்தே யியலும்பகுதியின பல என்ற பொருளில் பழைய ஆசிரியர்களான மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'துறந்தபின் செனனம் இல்லை' என்பது பரிதியின் கூற்று. காலிங்கர் 'துறந்ததற்பின் இவ்விடத்து மற்று அத் துறவற முயற்சியான் ஈண்டு ஆகற்பாலன பல' என்றார். பரிமேலழகர் 'எல்லாப் பொருள்களையும் துறந்தால், ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையை உடைய இன்பங்கள் பல' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'துறந்தால் இப்பிறப்பில் வரும் நன்மைகள் பல', 'கைவிட்டால் இங்குச் செய்யக் கூடிய துறவுக்குரிய செயல்கள் பல', 'விட்ட பிறகுதான் பல நன்மைகள் கிடைக்கும்', 'துறவடைந்தபின் இம்மையிலே நிகழற்பாலவாகிய நன்மைகள் பல உள்ளன' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

துறந்தபின் இங்கு நிகழற்பாலவாகிய நன்மைகள் பல என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வேண்டின் உண்டாகத் துறக்க; துறந்தபின் நிகழற்பாலவாகிய நன்மைகள் பல என்பது பாடலின் பொருள்.
'வேண்டின் உண்டாகத் துறக்க' குறிப்பது என்ன?

துறவில் இன்பங்களும் பல உண்டு.

மேன்மையுற வேண்டுமானால் பற்றுக்களைத் துறக்க; அவ்வாறு துறந்தபின் இங்கே பெறக்கூடிய இன்பம் ஒருவர்க்குப் பல உண்டு.
துறவு அதிகாரம் இல்லறவாழ்வின் கடமைகளை எல்லாம் முடித்தபின் யான் எனது என்ற பற்றுக்களை நீக்கி இறையொளி தேடி அமைதியான வாழ்க்கை மேற்கொள்வதைச் சொல்வது. இத்துறவு வாழ்க்கையில் பல நன்மைகள்- வேறு உலகத்தில் அல்ல- இவ்வுலகத்திலே உண்டு என்று சொல்கிறது இக்குறள்.

வேண்டுமானால் என்ற பொருளில் 'வேண்டின்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் என்ன வேண்டினால் என்பது சொல்லப்படவில்லை. இதற்கு தன்னுயிர்க்கு ஆக்கம் வேண்டின், வேண்டின செல்வம், விடுத்தலை விரும்புவீராயின், இன்பங்களை வேண்டின், துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால், துறக்க விரும்பினால், இளமையில் இன்பம் வேண்டின், துன்பங்களிலிருந்து விடுபட வேண்டுமானால், துறவினை விரும்பினால், துறவினாலாய நன்மைகளை விரும்பினால், இன்பத்தை விரும்பினால், துன்பம் இல்லாத நிலையை ஒருவன் விரும்பினால், வீடுபேற்றை விரும்புவாயானால் என உரைகாரர்கள் பொருள் கூறினர். இவற்றுள் தன்னுயிர்க்கு ஆக்கம் வேண்டுமானால் என்ற பொருள் பொருத்தம்.
'இயற்பால' என்றதற்கு இயலும் பகுதியின, செனனம் இல்லை, ஆகற்பாலன, முறைமையை உடைய இன்பங்கள், பெறக்கூடும் இன்பங்கள், அடையக்கூடிய நன்மைகளும் இன்பங்களும், வந்து அடையக்கூடியன, நன்மைகள், செய்யக் கூடிய துறவுக்குரிய செயல்கள், இயல்பாகவே துறவுக்குரியவையாய் விடும், நிகழற்பாலவாகிய நன்மைகள், அடையக்கூடியன, செய்யவேண்டிய தவ ஞானங்கள் என்றவாறு வேறுபட்ட பல பொருள்களில் உரை கூறியுள்ளனர். இவற்றுள் பெறக்கூடும் நன்மைகள் என்ற பொருள் தகும். 'இயற்பால' என்ற தொடர்க்குத் துறவின்கண் நின்று செய்யவேண்டிய துறவொழுக்கங்கள் எனவும் பொருள் கூறுவர்; செய்ய வேண்டியனவாக ஐந்தன் புலத்தை அடுதல், யாக்கையில் பற்றில்லாதிருத்தல், யான் எனது என்னும் செருக்கறுத்தல் முதலியனவும் கொள்ளலாம்; 'உயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின் துறக்க; அங்ஙனம் துறந்தால் இங்குச் செய்யவேண்டிய துறவொழுக்கங்கள் பல உள என்பது பொருளாகும்' என அவர்கள் உரை செய்தனர்.
'ஈண்டு' என்ற சொல்லுக்கு இவ்விடத்தே, இம்மைக்கண்ணே, இங்கு, இவ்வுலக வாழ்வில், இப்பிறப்பில், இங்கு, இம்மையிலே, இவ்வுலகில், இந்த உலகத்திலேயே எனப் பொருள் கூறுவர். துறவு என்றால் இறந்தபின் செல்லக்கூடிய உலகில் நல்வாழ்வு பெறலாம் என எண்ண வேண்டாம்; இவ்வுலகிலேயே நன்மைகள் பலவுண்டு எனக் கூறுகிறது பாடல் எனவே ஈண்டு என்பதற்கு இவ்வுலகில் என்பது சிறந்த பொருள்.

தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டுமானால் பற்றுக்களைத் துறக்க வேண்டும், பற்றுக்களைத் துறந்தால் இன்பம் பறிபோய்விடுமே என்று கருதவேண்டியதில்லை. துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல. அதாவது துறவினால் இன்பமும் கிடைக்கும் எனச் சொல்கிறது பாடல். அந்த இன்பம் வேறானது.
துறந்த பொருள்கள் காரணமாக மனம், மொழி, மெய்கள், அலையாது நிற்பதும், அவை நன்னெறிக்கண் சேர்வதும் இன்பம் உண்டாக்கும் எனப் பரிமேலழகர் கூறுவார். கள்ளுண்ணுதலைப் பழகியவர்க்கு அதை அருந்தும்போது களிப்பு உண்டாகும்தான். ஆனால் அதை நீக்கியபின் எய்தும் உடல்நலம் மனநலம் ஆகியன ஒரு புதிய தனியான இன்பத்தைத் தரும். அதுபோல் மற்றப்பற்றுக்களை விடும்போதும் பல சிறப்பான இன்பங்களும் நன்மைகளும் கிடைக்கும்.

'உண்டாகத் துறக்க' குறிப்பது என்ன?

'உண்டாகத் துறக்க' என்ற தொடர்க்கு தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக தன்னுடைமையெல்லாவற்றையுந் துறக்க, செல்வம் உண்டாயிருக்கத் துறக்க, உண்மையாகத் துறக்க, அவற்றைக் காலம் பெறத் துறக்க, எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயே துறக்க, காலத்தே இளமையிலேயே செல்வம் வாய்ப்பு வசதியாவும் இருக்கும்போதே துறக்க, இளமையில் இன்பம் உண்டாகத் துறந்திடுக, பொருள் உள்ளபோதே துறக்க, ஆக்கம் உண்டாக பொருள் மேலுள்ள பற்றினைக் கைவிடுக, வாய்ப்புகள் எல்லாமும் உள்ளபோதே அவற்றை வேண்டா' என விடுவானாக, உண்டாதற்குக் காலம் இருக்கும்படியாகத் துறத்தல் வேண்டும், தக்க காலத்தில் பற்றினை விடுக, இளமைப் பருவத்திலேயே துறத்தல் வேண்டும், காலம் இருக்கும்படி விரைவில் துறக்க, காலம் உளவாகத் துறவு மேற்கொள்வாயாக.என உரையாசிரியர்களுள் ஒற்றுமை இன்றிப் பல பொருள் கூறப்பட்டன.

'காலம் பெறத் துறக்க' 'தக்ககாலத்தில் துறக்க' எனப் பொருள் கூறி 'உண்டாகத் துறக்க' என்பது இளமைக்காலத்தில் துறக்க எனச் சொல்கிறது என்பதாகச் சிலர் உரை வரைந்தனர். துறவின் இன்பங்களைப் நெடுங்காலம் எய்த வேண்டுமானால் இளமையிலேயே துறக்க எனக் குறள் சொல்கிறது என்பது இவர்களின் கருத்து. இளமையிலே துறவு என்ற கருத்தும் அதற்குச் சொல்லப்பட்ட காரணமும் சிறப்பாக இல்லை. வள்ளுவர் இளமையிலேயே துறவு பூணுதலைப் பரிந்துரைக்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டத்தக்க குறிப்புகளும் குறளில் இல்லை. இல்லறத்தில் ஈடுபட்டுக் குழந்தைகளைப் பெற்று வளர்த்து தம் மக்கள் குடும்பப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பின்னர் துறவு மேற்கொள்வதே வள்ளுவரின் துறவுக் கோட்பாடு. எனவே 'வேண்டினுண்டாகத் துறக்க' என்னும் தொடர் இளமையில் துறத்தலைக் குறிக்கின்றது என்பதாகப்படவில்லை.

'உண்டாகத் துறக்க' என்றதற்கு மணக்குடவரின் தன்னுயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டின் தன்னுடைமை எல்லாவற்றையும் துறக்க என்பது சிறந்த பொருளாய் நிற்கிறது.

மேன்மையுற வேண்டுமானால் பற்றுக்களைத் துறக்க; துறந்தபின் இங்கு நிகழற்பாலவாகிய நன்மைகள் பல என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

துறவு எஞ்சியுள்ள வாழ்க்கைக்கு நன்மையே பயக்கும்.

பொழிப்பு

தன் உயிர்க்கு ஆக்கம் உண்டாக வேண்டினால் துன்பந்தரும் பொருள் மேலுள்ள பற்றினைக் கைவிடுக; துறந்தபின் இப்பிறப்பில் நிகழற்பாலவாகிய நன்மைகள் பல.