இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0346



யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

(அதிகாரம்:துறவு குறள் எண்:346)

பொழிப்பு (மு வரதராசன்): உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

மணக்குடவர் உரை: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன், தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.

பரிமேலழகர் உரை: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் - தான் அல்லாத உடம்பை 'யான்' என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை 'எனது' என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் - வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும்.
(மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது, தேசிகர்பால் பெற்ற உறுதிமொழிகளானும்யோகப் பயிற்சியானும் அவை 'யான்' 'எனது' அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.இதனான், இவ்விருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடுஉளது என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: யான் எனது என்னும் கருவமற்றவன் தேவர்க்கும் எட்டா உயர்நிலையை அடைவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.

பதவுரை: யான்-நான்; எனது-என்னுடையது; என்னும்-என்கின்ற; செருக்கு-செருக்கு, ஆணவம்; அறுப்பான்-நீக்குபவன்; வானோர்க்கு-விண்ணவர்க்கு; உயர்ந்த-மேலான; உலகம்-உலகம்; புகும்-எய்தும்.


யான்எனது என்னும் செருக்குஅறுப்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன்;
பரிப்பெருமாள்: யானென்றும் எனதென்றும் நினைக்கின்ற மயக்கத்தை அறுக்குமவன்;
பரிதி: யான் என்றும், எனது என்றும் சொல்லுகின்ற செருக்கறுப்பான்;
காலிங்கர்: இங்குச்சொன்ன உடலும் புலன்களும் உள்ளமும் ஆகிய ஒரு தொகைப்பாட்டினை 'யான்' என்று மயங்கும் மயக்கமும் இனி மற்று இதனையும் கீழ்ச்சொன்ன மனைமக்கள் செல்வம் முதலியவற்றையும் 'எனது' என்று மயங்கும் மயக்கமும் என இவ்விரண்டு மயக்கத்தையும் தேர்ந்து உணர்ந்து செலவற விடுக்கும் அவனே;
பரிமேலழகர்: தான் அல்லாத உடம்பை 'யான்' என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை 'எனது' என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்;
பரிமேலழகர் குறிப்புரை: மயக்கம்: அறியாமை. அதனைக் கெடுத்தலாவது, தேசிகர்பால் பெற்ற உறுதிமொழிகளானும்யோகப் பயிற்சியானும் அவை 'யான்' 'எனது' அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல்.

'யான் என்றும், எனது என்றும் சொல்லுகின்ற செருக்கை/மயக்கத்தை அறுப்பான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யான் என்னும் அகப்பற்றுக்கும், எனது என்னும் புறப்பற்றுக்கும் காரணமான மயக்கத்தை அழிப்பவன்', ''நான்', 'என்னுடையது' என்ற அகங்கார எண்ணங்களை மனதிலிருந்து ஒழித்துவிட்டவன்', 'தானல்லாத உடம்பைத் தானென்றும் தன்னுடைய தல்லாத பொருளைத் தனதென்றும் எண்ணுகிற மயக்கத்தை ஒழித்தவன்', ''நான்' என்னும் அகப்பற்றினையும், 'என்னுடையது' என்னும் புறப்பற்றினையும் மயக்கமாகக் கருதி நீக்குகின்றவன்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

'யான்', 'எனது' என்னும் செருக்கு ஒழிப்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.

வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.
பரிப்பெருமாள்: தேவர்க்கு மேலாகிய உலகத்தின் கண்ணே செல்லும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அகத்துறவும் அதனாற் பயனும் கூறிற்று.
பரிதி: புகும், வானோர்க்கு உயர்ந்த சிவலோகம் என்றவாறு.
காலிங்கர்: வானோர் ஆகிய கடவுளர்க்கெல்லாம் மேற்பட்ட முழுப் பேரின்பமாகிய முத்தியைப் பெறுவன் என்றவாறு.
பரிமேலழகர்: வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும்.
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது.இதனான், இவ்விருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடுஉளது என்பது கூறப்பட்டது.

'வானோர்க்கும் மேலாகிய உலகத்தை எய்தும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தேவர்கட்கும் அடைதற்கரிய மிக உயர்ந்த வீட்டுலகம் அடைவான்', 'தேவர்கள் வசிக்கும் உலகத்துக்கும் மேலான இடத்துக்குப் போய்ச் சேர்வான்', 'வானவர் உலகிற்கும் அப்பாற்பட்ட வீட்டுலகத்தை யடைவான்', 'தேவர்க்கும் கிட்டாத உயர்ந்த உலகை அடைவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வானோர்க்கு மேலாகிய உலகத்தை அடைவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
'யான்', 'எனது' என்னும் செருக்கு ஒழிப்பவன் வானோர்க்கு உயர்ந்த உலகம் அடைவான் என்பது பாடலின் பொருள்.
'வானோர்க்கு உயர்ந்த உலகம்' என்பது என்ன?

எல்லாப் பற்றையும் நீக்கியவன் இறையொளியை நெருங்கி விடுகிறான்.

நான், எனது என்னும் ஆணவம் நீக்கியவன் விண்ணவர் வாழ்வதாகச் சொல்லப்படும் உலகத்தினும் மேலான உலகத்தை எட்டுவன்.
இக்குறள் துறவு அதிகாரத்தில் அமைந்தது. நீண்ட காலமாகத் தனக்காகவும் தன் குடும்ப வாழ்க்கையின் உயர்வுக்காகவும் வாழ்ந்த பின்னர் உலக அன்பில் ஈடுபட்டு ஒரு நிறைவைக் காண்பதற்காகவும் இறையொளியைத் தேடியும் ஒருவன் துறவு கொள்கிறான். இல்லத்தில் இருந்துகொண்டே துறவு நெறியை மேற்கொள்வதையே துறவு என்கிறது குறள். துறவு என்பது உலகைத் துறப்பது அன்று; யான், எனது என்ற பற்றுக்களை விலக்குவதுவே அது.

துறவு கொண்டவன் ஒவ்வொரு பற்றாகத் துறந்து அதனால் உண்டாகும் துன்பத்தை நீக்கிக் கொள்கிறான். ஐம்புல இன்பம், உடைமைப்பற்று ஆகியவற்றைத் துறக்கிறான். உடம்பு மட்டுமே மிஞ்சுகிறது. உடம்பும் மிகையாகிறபோது எதனை விடுவது? 'யான்' என்ற அகப்பற்றையும் 'எனது' என்ற புறப்பற்றையும் நீக்கச் சொல்கிறது இக்குறள். இச்செறுக்கறுத்தலே துறவின் இறுதிநிலை என்பதாகவும் உள்ளது இப்பாடல்.
யான் என்பது உடலும் புலன்களும் உள்ளமும் ஆகியவை சேர்ந்த ஒரு தொகைப்பாடு; எனது என்பது மனை, செல்வம் போன்ற உடைமைகள் (காலிங்கர்). இவற்றின்மீது கொண்ட பற்றுகள் அவனைப் பற்றிக்கொண்டு செருக்கை உண்டாக்குகிறது. என்றாவது ஒருநாள் அழியப்போவதுதன் இந்த உடல்; எந்த உடைமையும் நம்மிடம் நிலையாக நிற்கப்போவதில்லை. இவற்றைப் புரிந்துகொண்டவர்கள் யான், எனது என்ற மனச் செருக்கை எளிதில் நீக்கிவிடுவர். 'யான்' என்பது தன் உயிரின் மீதுள்ள பற்றையும் 'எனது' என்பது தன் உடைமைகளின் மீதுகொண்ட பற்றையும் குறிக்கும். யான் என்னும் அகப்பற்றையும், எனது என்ற புறப்பற்றையும் துண்டித்தவன் எல்லாப் பற்றுக்களையும் தொடர்புகளையும் நீக்கி முற்றிலும் துறந்தவனாகிறான். பற்றுக்களினால் உண்டாகும் மனச்செருக்கை நீக்கிய நிலை ஒருவன் மனதில் முழுவதுமாக அமைதி தழுவி நிற்கும் நிலை. அது துறவின் நிறைவு நிலையாம். அப்பொழுது அவன் எல்லாவற்றிற்கும் மேலான உலகத்தை அடைய ஆயத்தமாகிறான்; இறையொளி நெருங்கித் தெரிகிறது என்பது கருத்து.

'வானோர்க்கு உயர்ந்த உலகம்' என்பது என்ன?

'வானோர்க்கு உயர்ந்த உலகம்' என்றதற்குத் தேவர்க்கு மேலாகிய உலகம், சிவலோகம், வானோர் ஆகிய கடவுளர்க்கெல்லாம் மேற்பட்ட முழுப் பேரின்பமாகிய முத்தி, வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை, வானோர்க்கும் மேலான உயர்ந்த உலகம், தேவர்க்கும் எட்டா உயர்நிலை, தேவர்கட்கும் அடைதற்கரிய மிக உயர்ந்த வீட்டுலகம், தேவர்கள் வசிக்கும் உலகத்துக்கும் மேலான இடம், உலகில் உயர்ந்த இடம், தேவர்க்கும் கிட்டாத உயர்ந்த உலகு, விண்ணவர்க்குங் கிட்டாது மேற்பட்ட வீட்டுலகம், தேவரும் அடைய முடியாத வீட்டுலகம் என உரையாளர்கள் பொருள் கூறினர்.

நாம் உயிர் வாழ்வதற்கும் செயல் புரிவதற்கும் உரியது இவ்வுலகம். அவ்வுலகம் என்பது மனிதன் கற்பனையில் உருவான வேறொரு உலகம். வானில் இருப்பதாகக் கொள்ளப்படும் அந்த உலகத்தில் வாழ்பவர்கள் தேவர்கள், உயர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்கு அழிவே கிடையாது என்றும், மகிழ்வாகவே வாழ்வார்கள் என்றும், இவ்வுலகில் வாழும் ஒருவர் செய்வன நல்வினையானால் அவர் இறந்தபின்னர் இன்பம் துய்ப்பதற்கு அங்கு செல்வர் என்றும் தொன்மங்கள் கூறும். 'அவ்வுலகத்தை', அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை... (குறள் 247) போன்ற இடங்களில் குறள் குறித்துள்ளது. அவ்வுலகம் என்பது துறக்க உலகம், மேலுலகம், வானுலகம், தேவலோகம், சொர்க்கலோகம் எனவும் அறியப்படும். அங்கு உறைபவர்கள் வானோர், தேவர், புத்தேளிர், இமையார், அமரர் எனப்படுவர். அந்த வானுலகத்திற்கும் மேலான அடுக்கில் உள்ள ஒரு உலகத்துக்கு, இவ்வுலகில் முற்றத் துறந்தவர்கள், செல்வர் என இக்குறள் கூறுகிறது.

வானுலகத்தும் மேலான உலகம் என்றதால் இக்குறளில் சொல்லப்படுவது வீட்டுலகத்தைக் குறிக்கும் என சில உரையாசிரியர்கள் கூறினர். இறைவனைச் சார்ந்து இன்ப நிலையில் உயிர்கள் இறைவனைத் தலைப்பட்டு உணரும் இடம் வீட்டுலகம் எனப்படுகிறது. . மோட்சம், முத்தி, விடுதலை என்று சொல்லப்படுவதும் இதுவே. இது என்றும் அழியாத நிலை என்றும் இந்த நிலையை அடைந்தால்தான் மீண்டும் பிறவாத நிலையைப் பெறமுடியும் எனக் கூறுவர் சமயவாதிகள். வீடுபேறு பெறும் முயற்சியில், பற்றறுத்தல், ஒரு படிநிலை என்பர் இவர்கள்.
'வானோர்க்கு உயர்ந்த உலகம்' என்றதற்கு மணக்குடவர் நேரிய பொருளாக 'தேவர்க்கு மேலாகிய உலகம் அதாவது தேவர்கள் உறையும் உலகத்திற்கும் மேலாகிய உள்ள உலகம்' எனப் பொருள் கூறினார். ”வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகம்” என்று பரிமேலழகர் உரை செய்தார். வீடு என்ற சொல்லை வள்ளுவர் குறளில் எங்கும் குறிப்பிடவில்லை.

'வானோர்க்கு உயர்ந்த உலகம்' என்பது வானோர்கள் இருக்கின்ற இடத்திற்கும் உயர்ந்த உலகமான இடம் என்ற பொருள் தரும்.

'யான்', 'எனது' என்னும் செருக்கு ஒழிப்பவன் வானோர்க்கு மேலாகிய உலகத்தை அடைவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செருக்குத் துறவு பற்றறுத்தலின் இறுதிநிலை.

பொழிப்பு

'யான்', 'எனது' என்னும் செருக்கு இல்லாதவன் வானோர்க்கும் எட்டா உயர்நிலையை அடைவான்.