மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை
(அதிகாரம்:துறவு
குறள் எண்:345)
பொழிப்பு (மு வரதராசன்): பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள்; ஆகையால் அதற்குமேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?
|
மணக்குடவர் உரை:
பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க, மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?
பரிமேலழகர் உரை:
பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை - பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், மற்றும் தொடர்ப்பாடு எவன் - ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்?
('உடம்பு' என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை:
பிறவித் துன்பத்தை முற்ற நீக்க முயல்பவர்கட்கு, பற்றுக்களுக்குக் காரணமான உடம்பும் மிகையாம்; அவ்வாறிருக்க மேலும் சில தொடர்ப்பாடுகள் எதற்காக?
இந்த உடம்பே மிகையான உடைமையெனில், அதற்கு மேலும் உடைமைகள் இருக்கலாமா?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை; மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்.
பதவுரை: மற்றும்-வேறுபிற, மற்றைய, பின்னும், மேலும்; தொடர்ப்பாடு-தொடர்பு; எவன்-என்ன பயன் கருதி? கொல்-(அசைநிலை); பிறப்பு-உயிர்வாழ்க்கை, பிறவி (த்துன்பம்); அறுக்கல்-அறுத்தல், நீக்குதல்; உற்றார்க்கு-மேற்கொண்டவர்க்கு; உடம்பும்-உடம்பும்; மிகை-அளவின் மீறுதல்.
|
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?
பரிப்பெருமாள்: மற்றுஞ் சில தொடர்ப்பாடுகளை உளதாக்குவது யாதனைக்கருதியோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: சிறிதாயினும் தொடர்ப்பாடுளதாயின் அதனைத் துறவென்று கொள்ளப்படாதென்றது; அது நோன்பிற்கியல்பின்மையால்.
பரிதி: மூன்று வகை ஆசையும் விட்டு என்ன பயன்;
காலிங்கர்: மற்று இப்பிறவி யென்னும் துயரினை மறுத்தலை முயன்றுள்ளோர்க்குக் கீழ்ச் சொன்னவை அனைத்தினும் உள்ளதொடர்ச்சியை இனி அது அன்றி வேறும் ஒரு தொடர்ச்சிப்பாடு யாது கொல்லோ;
பரிமேலழகர்: ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்? [அதற்கு - பிறப்பறுத்தற்கு]
'மற்றுஞ் சில தொடர்ப்பாடு உளதாவது யாதினைக்கருதியோ?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிற தொடர்பு பற்றி என்ன சொல்வது?', 'எனவே அதற்கு மேல் உடம்பு கொண்டு துய்க்கும் ஏனைப் பொருள்களுடன் தொடர்பு கொள்வது எதற்காக?', 'அங்ஙனமாயின், உடம்பு கொண்டு துய்க்கும் ஏனைப் பொருள்களின் தொடர்பு எதற்கு வேண்டும்?', 'அங்ஙனமாகவும் வேறு பொருளோடு தொடர்பு கொள்ளுதல் எதற்கு?' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பிற தொடர்புகள் எதற்காக? என்பது இப்பகுதியின் பொருள்.
பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்க.
பரிப்பெருமாள்: பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகையாயிருக்கும்.
பரிதி: தேகம் அன்றோ தபசுக்கு அநேகம் பகையாவது என்றவாறு.
காலிங்கர்: எனவே இதுவன்றி மற்று யாதும் இல்லை; அஃது யாதோ எனின் தமது உடம்பும் சீவர்க்கு மிகை என்றவாறு.
பரிமேலழகர்: பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், [கருவியாகிய உடம்பு - நாம் பிறந்ததே வீட்டின்பத்தைப் பெறுதற்கே. ஆதலின், உடம்பு பிறப்பிற்கு ஏதுவாகிய மாயையை நீக்கும் கருவி எனப்பட்டது]
பரிமேலழகர் குறிப்புரை: 'உடம்பு' என்ற பொதுமையான் உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்து வகை இந்திரிய உணர்வோடும் ஐவகை வாயுக்களோடும் காமவினை விளைவுகளோடும் கூடிய மனம், இது நுண்ணுடம்பு எனவும் படும். இதன்கண் பற்று நிலையாமையுணர்ந்த துணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றான் ஆய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்பும் மிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை யெய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும். இதனான், அகப்பற்று விடுதல் கூறப்பட்டது. [உரு உடம்பு -பருவுடல்; அரு உடம்பு -நுண்ணுடல்; முன்னர்க் கூறுப- இவ்வதிகாரத்தின் பத்தாம் குறள். அக்குறளின் சிறப்புரையில் அப்பற்று விடுதற்கு உபாயம் இதனாற் கூறப்பட்டது என்று கூறியிருப்பது அறியத்தக்கது; கட்டு - பாசபந்தம்; இறைப் பொழுது - கணப் பொழுது]
'பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு உடம்பும்மிகை ஆம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பிறப்பற முயல்வார்க்கு உடலும் கூடாதெனின்', 'பிறவித் துன்பத்தை நீக்க முயல்பவர்க்கு உடம்பும் மிகையாகும்', 'பிறப்பறுத்தலை மேற்கொண்டவர்க்கு உடம்பே வேண்டாத பொருளாகும்', 'பிறவியை நீக்குவதற்கு உறுதி பூண்டவர்க்கு உடம்பும் வேண்டப்படாத ஒன்றாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பிறவித் துன்பத்தை நீக்க முயல்பவர்க்கு உடம்பும் வேண்டப்படாத ஒன்றாகும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பிறவித் துன்பத்தை நீக்க முயல்பவர்க்கு உடம்பும் மிகை; பிற தொடர்புகள் எதற்காக? என்பது பாடலின் பொருள்.
'உடம்பும் மிகை' என்ற தொடர் குறிப்பதென்ன?
|
தன் உடம்பே தேவையில்லாத ஒன்றென ஆகிவிட்டபின் வேறு ஒட்டும்உறவும் எதுக்கு?
வாழ்வுத் துன்பத்தை நீக்க முயல்வார்க்கு இந்த உடம்பு வேண்டாத ஒரு பொருளாகும். அவ்வாறு இருக்க மற்றைப் பொருள்களொடு தொடர்பு வைத்துக்கொள்வது எதற்காகவோ?
இல்லற வாழ்வின் இறுதியில் அகத்திலும் புறத்திலும் முற்றத் துறத்தவராய் வாழ்ந்து இறையொளி தேடுவதே வள்ளுவர் கூறும் துறவு.
இத்துறவு மேற்கொண்டோர் ஐம்புலன்களை அடக்கி வாழ்வர். ஐம்பொறிகளின் இயக்கத்திற்கு அடிப்படையாக அமைவது உடம்பு. யாக்கையின் ஒடுக்கமே புலன்களின் அடக்கமாதலால் துறவியருக்கு உடம்பு நனி சுருங்கல் வேண்டும் என வற்புறுத்துவதாக உள்ளது இப்பாடல். தம் உடம்பையும் நீக்கிக்கொள்ளல் துறவுநிலையுள்ளார்க்கு எளிதுதான்.
பிறப்பறுக்கல் என்றது பிறப்பு+அறுக்கல் என விரியும். பிறப்பறுக்கல் என்பது பிறப்பறுத்தல் குறித்தது. பிறப்பு என்ற சொல்லுக்குத் தோற்றம் என்ற பொருள் கொண்டு பிறப்பறுத்தல் என்பதற்குத் தீமையின் தோற்றங்களை நீக்கல், தீய ஒழுக்கங்களின் தோற்றுவாய்களை விலக்கல் எனப் பொருள் கூறினர். பிறப்பு என்ற சொல்லை உயிர்வாழ்க்கை என்ற பொருளிலும் வள்ளுவர் குறளில் ஆண்டுள்ளதால் பிறப்பறுத்தல் என்பதற்கு பிறப்புத் துன்பம் நீக்கல் என்றும் உரை கூறுவர். இப்பொருள் பொருத்தமாக உள்ளது. பிறப்பறுக்கலுற்றார் தம் உயிர் தங்கியிருக்கும் உடல் மீதான பற்றையே நீக்கியவர்களாவர். அதனால் அவர்களுக்கு வேறு தொடர்புகள் ஒன்றும் தேவையில்லை.
வேண்டிய வெல்லாம் ஒருங்குவிடல் வேண்டும் என அனைத்து விருப்பங்களையும் விடவேண்டும் (குறள் 343) எனக் கூறி, நோன்பிற்கு ஒன்று இன்மை என்று உடைமைப்பற்றை (குறள் 344) நீக்கச் சொல்லியபின் இங்கு உயிர்ப்பற்று விலக்குவது பற்றிச் சொல்லப்படுகிறது.
‘மற்றுந் தொடர்ப்பாடு எவன்கொல்? என்பதிலுள்ள தொடர்ப்பாடு என்ற சொல்லைத் தொடர்ச்சியெனக் கையாண்டு அதற்கு விளக்கமாகக் கம்பர் ஒரு பாடலில் மக்கள் முதலாக உதவி செய்தோர் இறுதியாகப் பட்டியலுந் தந்து, அத்தனை பேரையும் துறத்தலும் துறவு என்கிறார் என்பதைச் சுட்டியுள்ளனர்.
மக்களை, குரவர்தம்மை, மாதரை, மற்றுளோரை,
ஒக்கும் இன் உயிர் அன்னாரை, உதவி செய்தாரோடு ஒன்ற,
"துக்கம், இத் தொடர்ச்சி" என்று, துறப்பரால், துணிவு பூண்டோர்;
மிக்கது நலனே ஆக, வீடுபேறு அளிக்கும் அன்றே! (கம்பராமாயணம் யுத்த காண்டம் 142. 7414 பொருள்: உறுதியான துறவு எண்ண வலிமை உள்ளவர்கள் பெற்ற மக்களையும் இருமுது குரவரையும் மனைவியரையும் மற்றுமுள்ள உறவினர்களையும் இனிய உயிரை ஒத்த நண்பர்களையும் உதவி செய்தவர்களையும் முழுமையாக இந்த உலகியல் பந்தத் தொடர்ச்சி துன்பம் விளைவிக்கும் என்று எண்ணித் துறந்து விடுவார்கள். சிறந்ததாகிய அத்துறவு நற்செயலாக ஆகி வீட்டுலகத்தைத் தருமல்லவா?)
என்ற இப்பாடல் உடம்பும்மிகை எனக் கொண்டோர் கைவிடத் தக்கார் யாவரென அறிய உதவுகிறது என்பர். இது எல்லாவகை உறவுகளையும் துறத்தலைச் சொல்கிறது. உறவுத் தொடர்ச்சி துன்பம் விளைவிப்பதா? தொடர்ப்பாடு என்பதற்குத் தொடர்ச்சி என்று கொள்வதினும் பொருள்களின் தொடர்பு என்ற பொருள் சிறக்கிறது.
ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களில் மற்றொன்றான வளையாபதியில் ஒர் செய்யுளில் இக்குறள் முழுவதும் அமைந்திருத்தல் அறியத்தக்கது. அப்பாடல்:
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பும்மிகை யவையுள் வழிப்
பற்றா வினையாய்ப் பலபல யோனிக
ளற்றா யுழலு மறுத்தற் கரிதே. (வளையாபதி துறவு 42 பொருள்: பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவிமாகிய உடம்புதானும் மிகையாம்; அங்ஙனமானபின் மேலே இயைபில்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்; அவையிற்றின் தொடர்ப்பாடுளவாய விடத்து மேலும் மேலும் அவற்றின்பாற் பற்றுண்டாகி அப்பற்றுக் காரணமாக வினைகளுமுண்டாகி உயிர்தானும் அவ்வினைகள் காரணமாக எண்ணிறந்த பிறவிகளிடத்தும் இன்ப துன்பங்களிற் கிடந்துழலா நிற்கும்; இவ்வாறு வளர்ந்துவிட்ட பற்றினை மீண்டும் அறுத்தற்கு மியலாது கண்டீர்! என்பதாம்).
|
'உடம்பும் மிகை' என்ற தொடர் குறிப்பதென்ன?
'உடம்பும் மிகை' என்றதற்கு உடம்பும் மிகையாயிருக்க, உடம்பும் மிகையாயிருக்கும், தேகம் அன்றோ தபசுக்கு அநேகம் பகை, உடம்பும் பிறப்பறுத்தலுக்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், உடம்பும் மிகையான பொருள், தமது உடம்பும் சீவர்க்கு மிகை, பற்றுக்களுக்குக் காரணமான உடம்பும் மிகையாம், உடலும் கூடாதாதலால், உடம்புகூட பாரம், உடம்பே வேண்டாத பொருளாகும், உடம்பும் வேண்டப்படாத ஒன்றாகும், உடம்பும் அதிகப்படியாம், உடம்புங்கூட சுமையாகும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
பரிதி 'மற்றைத் தொடர்புகளை விட்டுப் பயனென்? பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பன்றோ பகை' என்று கருத்துவாங்கி இத்தொடர்க்குப் பொருள் கூறினார்.
கா சுப்பிரமணியம் பிள்ளை 'பிறப்பறுத்தலை மேற்கொண்டவர்க்கு உடம்பே வேண்டாத பொருளாகும்' என உரைத்து, 'அங்ஙனமாயின், உடம்பு கொண்டு துய்க்கும் ஏனைப் பொருள்களின் தொடர்பு எதற்கு வேண்டும்?' என முடிக்கிறார்.
குன்றக்குடி அடிகளார் 'உடம்பே மிகை என்றதால், உடம்பை இழித்துப் பேசுதல் நோக்கம் அல்ல. உடம்பை நோக்கத்துடன் கூடிய கருவியாகக் கருதாமல் அதனிடத்தில் அதிக அக்கறை காட்டி உழைக்காது பேணுதலாகிய குறிப்பிலேயே இயங்குதல் கூடாது என்பது குறிப்பு' என்கிறார்.
உடம்பு காரணமாகவே அவா உண்டாவதால், தனது உடலைக்கூட ஓர் மிகையான உடைமை எனப் பிறவித்துன்பம் நீக்க நினைப்பவர் கருதுவர்.
பிறவித்துன்பத்தைப் போக்க முனைந்தவர்களுக்கு உடம்பும் மிகையாகும் அதாவது உடம்பு ஒரு பொருட்டன்று; தம்முடலைப் பொருளாகக் கொண்டு பேணாது தாம் மேற்கொண்டுள்ள தவத்திற்குக் கருவியாமளவே அதனைப் போற்றுவர். இவர்கள் சாவை எந்த நேரமும் எதிர்கொள்ள ஆயத்தம் கொண்டவர்களயிருப்பர். உயிர்ப்பற்றும் அறுவதே உண்மைத் துறவு. அம்முழுத்துறவு பிறவித் துன்ப நீக்கத்திற்கு உதவும். முற்றத் துறந்து விடுதல் எனும் நிலையில் உற்றிருப்பவர்களுக்கு உடம்பும் தேவையற்றது. எல்லாப் பற்றையும் துறந்தாயிற்று; எஞ்சி இருப்பது உடல் ஒன்றுதான். அது மிகைதானே!
'உடம்பும் மிகை' என்ற தொடர் 'உடம்பும் வேண்டப்படாத ஒன்று' எனப்பொருள்படும்.
|
பிறவித் துன்பத்தை நீக்க முயல்பவர்க்கு உடம்பும் சுமையாகும்; பிற தொடர்புகள் எதற்காக? என்பது இக்குறட்கருத்து.
துறவுநிலை கொண்டோர் உயிர்ப்பற்றையும் நீக்குவர்.
பிறவித் துன்பத்தை நீக்க முயல்வார்க்கு உடம்பும் மிகையாகும்; அதற்கு மேல் உடம்பு கொண்டு துய்க்கும் பிற தொடர்பு கொள்வது எதற்காக?
|