பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
(அதிகாரம்:துறவு
குறள் எண்:350
பொழிப்பு (மு வரதராசன்): பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும்; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.
|
மணக்குடவர் உரை:
பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக; அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக.
பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது.
பரிமேலழகர் உரை:
பற்று அற்றான் பற்றினைப் பற்றுக - எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க, அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு - கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தான் செய்க, விடாது வந்த பற்று விடுதற்கு.
(கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் பற்றற்றான் என்றார். பற்று அற்றான் பற்று என்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் பற்று என்றது, பற்றப்படுவதனை. அதன்கண் உபாயம் என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.)
குன்றக்குடி அடிகளார் உரை:
யாதொரு பற்றுமில்லாத இறைவனைப் பற்றுக. பற்றுக்களை விடுதலுக்கு உதவியாக இறைவனைப் பற்றுக. இறைவனைப் பற்றுதல், பற்றறுத்தலுக்காகவே யாதல் வேண்டும். பிறவற்றை யாசித்துப் பெறுதலுக்காக இருத்தல் கூடாது என்பது கருத்து.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பற்று அற்றான் பற்றினைப் பற்றுக; அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு.
பதவுரை: பற்றுக-மனத்துக் கொள்க; பற்றற்றான்-பற்று இல்லாதவனது; பற்றினை-பற்றப் படுவதாகிய(கடவுட்) பற்றினை; அப்பற்றைப்-(விரும்ப வேண்டிய)உபாயத்தை; பற்றுக-(தொடர்ந்து) பற்றிக்கொண்டிருக்க, பிடித்துக்கொண்டிருக்க; பற்று-(உலகப்பொருள்கள் மீதான) பற்று; விடற்கு-நீங்குதற்காக.
|
பற்றுக பற்றற்றான் பற்றினை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக;
மணக்குடவர் குறிப்புரை: பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்படக் கூறப்பட்டது. [தியானம் - கடவுளிடத்து விட்டு விட்டுச் செல்லும் மன முதலிய அகக் கருவிகளின் ஓட்டம்; சமாதி - மனம் முதலியன ஒருமுகப்படுதல்.]
பரிப்பெருமாள்: பற்றறுத்தான் பற்றினவதனைப் பற்றுக;
பரிப்பெருமாள் குறிப்புரை: பற்றற்றான் பற்றாவது தியான சமாதி. பின் மெய்யுணர்தல் கூறுதலான், இது பிற்கூறப்பட்டது.
பரிதி: காரணவுபாதி எழுகாரியத்தில் பற்றற்றான் ஸ்ரீபாதத்தைப் பற்றுக;
காலிங்கர்: ஒருவர் தமதுள்ளத்தால் பற்றுடையராக வேண்டும்; மற்று யாதினை எனின் முன்னஞ் சொன்ன முறைமையின் எப்பற்றும் அற்றேன் யாதோர் இன்பத்தைப் பற்றி நின்றான்; மற்று அதனைத் தானும் உறுதற்கு மற்று இனி முன்னம் தனது உள்ளத்தினால் முயல்வதாக வந்து பற்றினானன்றே;
பரிமேலழகர்: எல்லாப் பொருளையும் பற்றி நின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறி என்று மனத்துக் கொள்க;
பரிமேலழகர் குறிப்புரை: கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையால் பற்றற்றான் என்றார். பற்று அற்றான் பற்று என்புழி ஆறாவது செய்யுட் கிழமைக்கண் வந்தது. ஆண்டுப் பற்று என்றது, பற்றப்படுவதனை. அதன்கண் உபாயம் என்றது, தியான சமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.
'பற்றறுத்தானது பற்றினைப் பற்றுக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி பற்றற்றான் என்றது இறைவனைக் குறித்ததாகக் கொள்கிறார். இதைப் பரிமேலழகர் 'பற்றற்ற இறைவன்' என விளக்குவார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பற்றில்லாத இறைவனைப் பற்றிக் கொள்க', 'அவ்வகைப் பற்று இல்லாதவனாகிய இறைவனை இறுகப் பற்றிக் கொள்க', 'ஆசைகளினின்று விடுபடுவதற்கு ஆசைகளே இல்லாதவனாகிய பகவானுடைய தொடர்பைப் பிடித்துக் கொள்க', 'ஒரு பொருளிலும் பற்றில்லாத முதல்வனை அடைதற்குரிய அன்பினை மேற்கொள்ளுக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
யாதொரு பற்றும் இல்லாத இறைவனைப் பற்றிக் கொள்க என்பது இப்பகுதியின் பொருள்.
அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக.
பரிப்பெருமாள்: அதனைப் பற்றுங்கால் பயன் கருதிப் பற்றாது பற்று விடுதற்காகப் பற்றுக.
பரிதி: இந்தப் பற்றினையே உறுதியாகப் பற்றுக. ஆத்மாவுக்கு உபாதியாகிய காரியமும் உபாதி ஏழும் விடவேண்டில் என்றவாறு.
காலிங்கர்: அதன் பயன் முற்றுத்துணையும் அதனை முறுக நின்று முயலுக; யாதற்கோ எனின் மற்றிதனால் வரும் இன்பம் அன்றி மற்று எப்பற்றும் விடுதற்கே காரணம் என்றவாறு.
பரிமேலழகர்: கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தான் செய்க, விடாது வந்த பற்று விடுதற்கு.
பரிமேலழகர் குறிப்புரை: 'விடாது வந்த பற்று' என்பது அநாதியாய் வரும் உடம்பின் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.
'பற்றுங்கால் பற்று விடுதற்காகப் பற்றுக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'அப்பற்றைப் பற்றுக' என்றதற்குப் பரிமேலழகர் 'அதன்கண் உபாயத்தை அம்மனத்தான் செய்க' எனப் பொருள் கூறுகிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அப்பிடிப்பே உலகைப் பற்றை விடுதற்கு வழி', 'இருவகைப் பற்றினையும் விடுவதற்கு அதனையே தொடர்ந்து செய்க', 'அதை விட்டுவிடாமல் பின்பற்றுக', 'உலகப்பற்றினை ஒழித்தற்கு அவ் அன்பினைக் கடைப்பிடித்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அப்பற்றினையே பற்றிக் கொள்ள வேண்டும் பற்றினை விட்டு விலகுதற்கு என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பற்றற்றானைப் பற்றிக் கொள்க; பற்றினை விட்டு விலகுதற்கு அப்பற்றினையே பற்றிக் கொள்ள வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'பற்றற்றான்' யார்?
|
இறைப்பற்றே பற்றுக்களை விடத் துணை செய்யும்.
பற்றேயில்லாத கடவுளைப் பற்றிக் கொள்க. பற்றினை விடுதற்கு கடவுட்பற்றைத் தொடர்ந்து கொள்க.
இல்லறவாழ்வின் இறுதியில் துறவு மேற்கொள்வோரைப் பற்றியது துறவு அதிகாரம். எல்லா வகைப் பற்றுக்களையும் அறுத்து இறையுணர்வு பெறச் சொல்வது துறவு அதிகாரம்.
பற்றுக்களைப் பற்றி நின்று உயிர்வாழக் கற்றுக் கொண்டுவிட்டோம். இப்பொழுது அவற்றையெல்லாம் எங்ஙனம் உதறிவிடுவது? பற்றுகளை விட வேண்டுமானால் அவை எல்லாவற்றையும் விட வலிய, சிறந்த ஒரு பொருளைப் பற்றினால்தான் முடியும். அத்தகைய பற்று, பற்றற்ற இறைவனுடைய பற்றே ஆகும். மற்ற பற்றுக்களையெல்லாம் விடுவதற்காக அந்த இறைவனுடைய பற்றைப் பற்றிக் கொள்ள வேண்டும் என வழிமுறை சொல்கிறார் வள்ளுவர்.
கடவுள்வாழ்த்து அதிகாரத்தில் 'அடிசேர்தல்' என்றது இடைவிடாது நினைத்தல் என்ற பொருள் தந்தது; அதுபோல் இங்கு 'பற்று' என்பது இறைவனை விடாது மனத்துள் கொள்ளுதலைக் குறிக்கும். பற்றற்ற இன்பம் தருமாறு கடவுளை எப்பொழுதும் வேண்டிநிற்க வேண்டும் என்பது கருத்து.
‘பற்றற்றான் பற்று’ என்பதற்கு பற்றற்ற இறைவன்பால் அன்பு எனப் பொருள் கொள்ளுதல் தெளிவுபயக்கும். பற்று விடச் சொல்லும் துறவதிகாரத்தில், பற்றத் தகும் புதிய பற்று ஒன்றைக் காட்டுகிறார் வள்ளுவர். பற்று என்பது எதையும் உறுதியாகப் பிடித்துக் கொள்வதை உணர்த்தும்; கையால் பற்றினாலும் கருத்தால் பற்றினாலும் அது பற்று ஆகும். பற்று என்பது 'யான்' என்ற அகப்பற்றையும், 'எனது' என்ற புறப்பற்றையும் குறிக்கும். யான் என்பது உடலும் புலன்களும் உள்ளமும் ஆகியவை சேர்ந்த ஒரு தொகைப்பாடு. 'எனது' என்பது மனை, செல்வம் போன்றவை. பற்றுக்களை நீக்குதற்கு இறைவன் மீது பற்றுக்கொள் என்கிறார் வள்ளுவர். ஏதாவது ஒன்றைப் பற்றினால்தான் ஏற்கனவே பற்றியவற்றை விடமுடியும் என்ற நிலை இருந்தால், அப்பற்றுக்களை விடுவதற்கு இறைவனைப் பற்றுக என்கிறார் அவர்.
வினா-விடை போல அமைத்துக் கொண்டால் இக்குறட்பொருள் எளிதில் புரியும். கைவிடவேண்டியது எது? பற்று. அதற்கு முதலில் என்ன செய்ய வேண்டும்? வேறொன்றைப் பற்றவேண்டும். அந்த வேறொரு பற்று எது? பற்றற்றான் பற்று. இப்பொழுது, இன்னொன்றைப் பற்ற வேண்டும் என்றால் இறைவனைப் பற்றுதலும் ஒரு பற்றுதானே என்ற கேள்வி எழுகிறது. 'பற்றற்றவனுக்குப் பற்று கிடையாது; எனவே அவனைப் பற்றியதாலே ஒருவன் பற்றுள்ளவன் என்பது ஆகாது' என்று இதற்கு விளக்கம் தருவர்.
வள்ளுவரது கவிதை உத்திகள் இப்பாடலில் மிகத் தோன்றுவதைத் திறனாய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இப்பாடல் முழுக்க வெளிப்படும் சொல் விளையாட்டு ஒலி நயம் மிகுந்து வாசிப்பவர் நெஞ்சில் கருத்தை அழுத்தமாகப் பதிய உதவுகிறது. இந்தக் குறளில் பற்று என்ற ஒரு சொல்லே கவிதை முழுவதும் மறித்து வருகிறது. இச்சொல் பெயராகவும் வினையாகவும் ஆளப்பட்டுள்ளது. பற்றை விடவேண்டும் என்பதைச் சொல்லவரும் வள்ளுவர் முதலில் “பற்றுக” என்றே தொடங்குகிறார். முதலடியில் நாலு "பற்று", ஈற்றடியில் இரண்டு "பற்று"-ஆக மொத்தம் ஆறு பற்று. பாடலில் ஒரு சொல் தவிர ஏனையவை பற்று என்ற சொல்லாகவே
அமைந்திருக்கக் காண்கிறோம். இறைவன் திருவடிகளை ஒவ்வொரு நிலையிலும் விடாது பற்ற வேண்டும் என்பதற்காகப் பற்று என்ற சொல்லை
திரும்பத் திரும்பக் கூறியவர் பற்றை விடத் தொடங்கியதை நயமாகச் சுட்டும் வண்ணம் நிறைவுச் சீராக 'பற்றுவிடற்கு' என்று முடித்தார்.
ஒரே சொல் திரும்பத் திரும்ப ஒரே பொருளில் வருமாறு பாட்டியற்றினால், அதைச் 'சொற்பின் வருநிலை யணி'ச் செய்யுள் என்பர் இலக்கணநூலார்.
பாவியச் சுவையூட்டுவதில் தனிச்சிறப்புடையது வண்ணம் ஆகும். இக்குறள் வல்லெழுத்துப் பயிலும் வல்லிசை வண்ணம் என்பார் இரா இளங்குமரன்.
ஒரு சொல் பாட்டு முழுவதும் மறித்து வருவதை ஏந்தல் வண்ணம் என்று யாப்பிலக்கணம் குறிப்பிடும் என்கிறார் செ வை சண்முகம்.
இவ்வாறாக, சொற்சுவையுடனும் கவிச்சுவையுடனும் யாக்கப்பட்டுள்ளது இக்குறள்.
'பற்றற்றான்' யார்?
உரையாசிரியர்கள் 'பற்றற்றான்' என்றதற்கு இறைவன், எப்பற்றும் அற்றோன், ஞானி, ஞானாசிரியன், பற்றற்ற உண்மைத் துறவி, அறிவாற்றலில் சிறந்த சான்றோர்,
யான் எனது என்னும் செருக்கை அறுத்தவன், எதிலும் பற்றில்லாதவன் என்று பொருள் கூறியுள்ளனர்.
''பற்றுக பற்றற்றான் பற்றினை' என்று சொல்லிவிட்டு ஏன் மீண்டும் 'அப் பற்றைப் பற்றுக' என்று சொல்லவேண்டும்? இக்குறளுக்குப் 'இவ்வுலகப்பற்று விடுவதற்கு
இறைவன் திருவடியைப் பற்று' என்று பொருள் கொண்டால், 'பற்றுக பற்றற்றான் பற்றினை பற்று விடற்கு என்பதே போதுமல்லவா? அப்படியானால் 'அப்பற்றைப் பற்றுக' என்ற கூடுதல் தொடர்க்குப் பொருள் என்ன?' இவைபோன்ற வினாக்களை எழுப்பி, பின்னர் 'பற்றற்ற துறவியைப் பற்று' பின் அவன் பற்றியிருக்கும் இறைப்பற்றைப் பற்று. அப்போது உலகப் பற்று எளிதில் விடும்' என்ற பொருளே இதன் உண்மையான பொருள்' என்ற விளக்கமும் தருகிறார் கி ஆ பெ விசுவநாதம். இவர் கருத்துப்படி பற்றற்றான் என்ற சொல் 'பற்றற்ற துறவி'யைக் குறிக்கும். இவர் போன்று வேறு சிலரும் பற்றற்றான் என்பது வேறொரு துறவியை அல்லது குருவைக் குறிக்கும் என உரைத்தனர். ஆனால் 'பற்றற்றான் என்பது கடவுளைக் குறித்ததாகவே இருத்தல் கூடும். இத்தொடர் யாரேனும் ஒரு குருநாதனைக் குறிப்பதாகக் கொள்ளினல்லது கடவுளைக் குறிப்பதாகக் கொள்வதே பொருந்தும். குருமூலம் சமய நூல்களைக் கற்றல், குருமூலம் மெய்யுணர்வு பெறல் ஆகிய கருத்துக்கள் குறளில் பிறவிடத்துத் தெளிவாகக் கூறப்படவில்லையாகலால் பின்னதே ஏற்ற கருத்தாகத் தோன்றும்' என்று இத்தொடர் ஞானாசிரியன் போன்றோரைச் சொல்லவில்லை, கடவுளையே குறித்தது என்று காமாட்சி சீனிவாசன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
'‘பற்றற்றான்’ என்பதற்குத் துறவியெனப் பொருள் கொள்ளின், துறவிக்கு அறங்கூறியலாகாது. பிறர்க்குக் கூறியதாக முடியும். பற்றற்றான் என்பதற்குத் துறவி எனக் கொண்டபின் ‘அப்பற்றை’ என்பதற்குத் துறவியிடமுள்ள பற்று எனக் கொள்வது இயல்பேயன்றித் துறவி பற்றியிருக்கிற இறைப்பற்று எனக் கொள்வது இயல்பன்று' எனச் சொல்லி 'ஆகவே, ‘பற்றற்றான்’ என்பது இறைவனைக் குறிக்கும் என்பது இழுக்காகாது' என முடிப்பார் இரா சாரங்கபாணி. இதுவே வள்ளுவர் கருத்தாக இருக்க முடியும்.
'பற்றற்றான்' என்பது கடவுள் குறித்த சொல்.
|
|
யாதொரு பற்றும் இல்லாத இறைவனைப் பற்றிக் கொள்க; பற்றினை விட்டு விலகுதற்கு அப்பற்றினையே பற்றிக் கொள்ள வேண்டும் என்பது இக்குறட்கருத்து.
மீண்டும் பற்று பற்றாதிருக்க துறவு பூண்டோர் எஞ்ஞான்றும் இறைவனை மனத்துட்கொள்க.
பற்றில்லாத இறைவன் பற்றைப் பற்றிக் கொள்க; உலகைப் பற்றை விடுதற்கு அப்பற்றினையே பற்றிக் கொண்டிருக்க.
|