இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0344இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயல்ஆகும் மற்றும் பெயர்த்து

(அதிகாரம்:344 குறள் எண்:துறவு)

பொழிப்பு (மு வரதராசன்): தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும்; பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குதற்கு வழியாகும்.

மணக்குடவர் உரை: யாதொரு பொருளும் இலதாதல் தவத்திற்கியல்பாகும்: பொருளுடைமை மீண்டும் பிறத்தற்குக் காரணமான மயக்கத்தைத் தரும்.

பரிமேலழகர் உரை: ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பு ஆகும் - பற்றப்படுவதொரு பொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல்பாம், உடைமை பெயர்த்து மற்றும் மயல் ஆகும் - அஃதன்றி, ஒன்றாயினும் உடைமை அத்தவத்தைப் போக்குதலான், மீண்டும் மயங்குவதற்கு ஏதுவாம்.
(இழிவுசிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'நோன்பு' என்பதூஉம், 'மயல்' என்பதூஉம் ஆகுபெயர். பெயர்த்தலான் என்பது திரிந்து நின்றது. 'நோன்பைப்பெயர்த்தலான' என வேற்றுமைப்படுத்துக் கூட்டுக. எல்லாப்பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாதவழியும், அது சார்பாகவிட்டன எல்லாம் மீண்டும் வந்து தவத்திற்குஇடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் 'எனது'என்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: பற்றற்ற நோம்பினை உடையார்க்கு ஒரு பொருளும் இல்லாமலிருத்தல் இயல்பாகும்; பொருள் உடைமை மீண்டும் மயக்கத்திற்குக் காரணமாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பாகும்; உடைமை மற்றும் பெயர்த்து மயல்ஆகும்.

பதவுரை: இயல்பு-தன்மை, இலக்கணம்; ஆகும்-ஆம்; நோன்பிற்கு-துறவுத்தவம் செய்வார்க்கு; ஒன்று-ஒரு பொருள்; இன்மை-இல்லாதிருத்தல்; உடைமை-உடைமை; மயல்-மயக்கம், அறியாமைக்கு ஏது; ஆகும்-ஆம் மற்றும்-பின்னும், மேலும்; பெயர்த்து-போக்குதலால்.


இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொரு பொருளும் இலதாதல் தவத்திற்கியல்பாகும்:
பரிப்பெருமாள்: யாதொரு பொருளும் இலதாதல் தவத்திற்கியல்பாகும்:
பரிதி: இப்படியோ என்று கண்டும் ஆசையை விடாத போது;
காலிங்கர்: உலகத்துத் துறப்போர் இங்ஙனம் முழுதுந் துறத்தல் கடனாதலால் மற்ற இத்துறவிற்குச் சொல்லப்பட்ட யாதானும் ஒன்றினொடு மறந்தும் ஒரு பற்றிலாமையாது, மற்று அதுவே மரபாகும்;
பரிமேலழகர்: பற்றப்படுவதொரு பொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல்பாம்,

'யாதொரு பொருளும் இலதாதல் தவத்திற்கியல்பாகும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யாதும் இல்லாமையே தவத்தின் இயல்பு', 'தவத்திற்கு ஒரு பொருளும் இல்லாதிருத்தலே இயல்பாகும்', 'துறவறத்தின் முறையே எந்த ஒரு பொருளையும் உடைமையாக வைத்துக் கொள்ளாமல் இருப்பது', 'பற்று வைத்தற்கு உரிய ஒரு பொருளும் இல்லாமையே தவத்திற்கு இயல்பாக வேண்டப்படுவது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒன்றும் இல்லாதிருத்தலே துறவுத்தவத்திற்கு இயல்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

உடைமை மயல்ஆகும் மற்றும் பெயர்த்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளுடைமை மீண்டும் பிறத்தற்குக் காரணமான மயக்கத்தைத் தரும்.
பரிப்பெருமாள்: அப்பொருள்களையுடைமை மீண்டும் பிறத்தற்குக் காரணமான மயக்கத்தைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது 'மனத்தினாற் பற்றிலாதார்க்குப் பொருளுடைமையான் வருங் குற்றமென்னை' யென்றார்க்குக் கூறப்பட்டது.
பரிதி: ஆசை தொந்திக்கும் என்றது.
காலிங்கர்: மற்று அது அன்றி இவற்றில் ஒன்றின்கண் மறந்தாயினும் சிறிதோர் பற்றுண்டாயின் அப்பற்றுடைமை பின்னும் பெயர்த்து முன்னம் மயக்கத்திற்கே காரணமாகும் என்றவாறு.
பரிமேலழகர்: அஃதன்றி, ஒன்றாயினும் உடைமை அத்தவத்தைப் போக்குதலான், மீண்டும் மயங்குவதற்கு ஏதுவாம்.
பரிமேலழகர் குறிப்புரை: இழிவுசிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'நோன்பு' என்பதூஉம், 'மயல்' என்பதூஉம் ஆகுபெயர். பெயர்த்தலான் என்பது திரிந்து நின்றது. 'நோன்பைப்பெயர்த்தலான' என வேற்றுமைப்படுத்துக் கூட்டுக. எல்லாப்பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாதவழியும், அது சார்பாகவிட்டன எல்லாம் மீண்டும் வந்து தவத்திற்குஇடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து. இவை நான்கு பாட்டானும் 'எனது'என்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.

பொருளுடைமை மீண்டும் மயக்கத்தைத் தரும் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் மீண்டும் பிறத்தற்குக் காரணமான மயக்கம் என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏதும் இருப்பது ஆசையாகி விடும்', 'பொருளுடைமை மீண்டும் ஆசையால் மயங்குதற்கு வழியாகும்', 'உடைமை என்பது இருந்தால் அது துறவறத்தைக் கெடுத்து மீண்டும் விட்டுவிட்ட ஆசைகளில் ஈடுபடுத்துவதாகும்', 'பொருளுடைமை மீட்டும் மயக்கமுறுதற் கேதுவாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உடைமை மீண்டும் மயங்குதற்கு வழியாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒன்றும் இல்லாதிருத்தலே துறவுத் தவத்திற்கு இயல்பாகும்; உடைமை மீண்டும் மயங்குதற்கு வழியாகும் என்பது பாடலின் பொருள்.
'உடைமை' குறிப்பது என்ன?

பற்றை உண்டாக்கும் ஒருஉடைமை கூட துறவுக்குக் கேடுவிளைக்கும்.

துறவுநோன்பு செய்வோர்க்கு பற்று உண்டாக்கத்தக்க ஒரு உடைமையும் இல்லாது இருத்தல் இயல்பாக வேண்டப்படுவது. பற்றுகொள்வதான ஒருபொருளாவது இருக்கும் என்றால் அது மீண்டும் மயங்குவதற்குக் காரணமாகிவிடும்.
பல ஆண்டுகள் இல்லறம் இயற்றிய பிறகு, மக்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்துவிட்டு, இறையொளி காண விழைவது குறள் கூறும் துறவாகும். துறவு வாழ்க்கை மேற்கொண்ட பின்னர் எந்த ஒரு உடைமையையும் வைத்திருத்தல் கூடாது என்று தெளிவாகக் கூறுகிறது இப்பாடல். இதன் கருத்து துறவியின் விரலில் ஒரு சிறிய கணையாழி (விரல்அணி) கூட வேண்டாம் என்பது; அப்படியொரு பொருள் இருக்குமாயின் அது மீண்டும் பற்றை விடாப் பற்றாளன் ஆக்கிவிடும்.

துறவின் இயல்பு கூறப்படுகிறது. யாதொரு பொருளும் தமக்கு என்று இல்லாமல் இருப்பதே துறவுக்கு இயல்பாகும். ஏதேனும் உடைமை என்று ஒன்று இருந்தால், அதுவே பற்றைத் தளிர்க்கச் செய்து மறுபடியும் பற்று வாழ்வுக்குள் இழுத்துக்கொண்டு சென்றுவிடும். விருப்புடன் வைத்திருக்கும் அப்பொருள் மேல் திரும்பவும் பற்றுண்டாகி. அதுவே மயக்கத்தைத் தந்து பலவாகப் பெருகி துறவு நிலையிலிருந்து நீக்கி, ஒன்றன் பின் ஒன்றாக மற்றப் பற்றுகளும், உறவுகளும் மீண்டும் ஏற்பட்டுவிடும். எனவே எந்த உடைமையும் வைத்துக்கொள்ளாதிருத்தல் நன்று.

'உடைமை' குறிப்பது என்ன?

'உடைமை' என்பதற்குப் பொருளுடைமை, பற்றுடைமை, பற்று உடையவராக இருத்தல், பற்றுவைக்கும் உடைமை எனப் பொருள் உரைத்தனர். இதற்குப் பற்றுடைமை என்றும் உரை கூறுவர். ஒன்றின்மை’ என்றவிடத்துப் பொருளின்மையைச் சுட்டுவதால் ‘உடைமை’ பொருளுடைமையைச் சுட்டுவதே இயல்பாகும் (இரா சாரங்கபாணி).

'உடைமை' என்பது பொருளுடைமையைக் குறிக்கும்.

ஒன்றும் இல்லாதிருத்தலே துறவுத் தவத்திற்கு இயல்பாகும்; உடைமை மீண்டும் மயங்குதற்கு வழியாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

துறவு நிலைக்க உடைமைப் பற்று முற்றிலும் நீக்கப்படவேண்டும்.

பொழிப்பு

ஒன்றும் இல்லாதிருத்தலே துறவுநோன்பின் இயல்பாகும்; உடைமை மீண்டும் ஆசையால் மயங்குதற்கு ஏதுவாகும்.