இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0343



அடல்வேண்டும் ஐந்தின் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு

(அதிகாரம்:துறவு குறள் எண்:343)

பொழிப்பு (மு வரதராசன்): ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும். அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விடல் வேண்டும்.

மணக்குடவர் உரை: துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்: அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும்.

பரிமேலழகர் உரை: ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும், வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் - கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும்.
புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின், அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.

சி இலக்குவனார் உரை: ஐம்பொறிகட்கும் உரியவாகிய ஐம்புலன்களையும் வெல்லுதல் வேண்டும்; விரும்பிய பொருள்களின் மீது கொண்டுள்ள பற்றுதலையும் ஒருங்கே விடுதல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஐந்தின் புலத்தை அடல்வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல்வேண்டும்.

பதவுரை: அடல்-கெடுத்தல், வெல்லுதல்; வேண்டும்-வேண்டும்; ஐந்தின் -ஐந்தினுடைய; புலத்தை-ஐம்புலன்களை; விடல்-நீங்குதல்; வேண்டும்-தகும்; வேண்டிய-விரும்புபவை; எல்லாம்-அனைத்தும்; ஒருங்கு-ஒருசேர.


அடல்வேண்டும் ஐந்தின் புலத்தை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துறப்பார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்;
பரிப்பெருமாள்: பிறப்பறுக்கார்க்குப் பொறிக ளைந்தினுக்கும் நுகர்ச்சியான ஐந்தினையுங் கொல்லுதல் வேண்டும்;
பரிதி: ஐம்புலன்களையும் பொறிவழியிலே செல்லாமல் கெடுக்கவேணும்;
காலிங்கர்: இனி, இதன் உட்கருவியாகிய ஐம்புலன்களையும் துறவுநெறிக்குப் புறவழியாகிய ஐம்பொறிகளின் நுகர்ச்சியைப் பரவாமல் தனது உள்ளத்தால் செறுத்தல் வேண்டும்;
பரிமேலழகர்: வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும்;
புலம் என்றது, அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும் அன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டு நெறியாகிய யோகஞானங்களில் செலுத்தாமையின்;

'ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐம்புல உணர்ச்சிகளை அடக்க வேண்டும்', 'ஐம்புல ஆசைகளையும் அழிக்க வேண்டும், 'ஐந்து இந்திரியங்களையும் ஒடுக்க அவற்றோடு போராட வேண்டும்', 'ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும்.
பரிப்பெருமாள்: அதற்காகத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்தே விடுதல் வேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, தொடர்ப்பாடுளதாயின் நுகர்ச்சியுண்டாம்; அஃதுண்டாக மயக்க முண்டாம்; அதனானே பிறப்புண்டாம்; ஆதலால் துறக்க வேண்டும் என்றது.
பரிதி: ஐம்புலன் உணர்வுகளை விடவேணும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அங்ஙனம் செறுத்தபின் அவ்வுள்ளத்தான் (மன்னின்று விரும்புவதாகிய வேட்கைகளெல்லாம் ஒரு தன்மைப்பட விடுதல் வேண்டும்;
காலிங்கர் குறிப்புரை: எனவே அவ்வுள்ளமானது தானும் ஒருவழிப்பட்டு நிற்கவேண்டும் என்பது பொருளாயிற்று என்றவாறு.
பரிமேலழகர்: கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும்.
பரிமேலழகர் குறிப்புரை: அதனை 'அடல் வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள் மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்' என்றும் கூறினார்.

'தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லாத் தேவையையும் விடுக்க வேண்டும்', 'ஆசையால் துய்த்தற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் விலக்க வேண்டும்', 'அந்த இந்திரியங்கள் விரும்புகின்ற எல்லா ஆசைகளையும் ஒருமிக்க விட்டொழிக்க வேண்டும்', 'அதற்கு ஐம்புலன் நுகர்ச்சிக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒருங்கே விட்டுவிட வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொறிகள் நாடும் எல்லா விருப்பங்களையும் ஒருமிக்க விட்டுவிட வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும்; விடல்வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு என்பது பாடலின் பொருள்.
'விடல்வேண்டும் வேண்டிய எல்லாம்' குறிப்பது என்ன?

ஐந்தடக்கல் ஆற்றுதல் துறவுக்கு அடிப்படையானது.

ஐம்பொறிகளின் வழியாக வரும் ஐந்து புலன்களின் ஆசையினையும் அடக்கி வெல்லவேண்டும்; நுகர்ச்சிப் பொருள்களை எல்லாம் ஒட்டுமொத்தமாக நீக்கி விட வேண்டும்.
இல்லறம் நல்லறமான பின்பு, இறைவனின் தாள் நினைத்துத் துறவு வாழ்க்கை மேற்கொள்பவன் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதை விளக்குவது இப்பாடல். பற்று நீக்கமே வள்ளுவர் கூறும் துறவாகும். இங்கு உடற்பற்றுகளை அறவே நீக்கச் சொல்கிறார். பற்றற்ற வாழ்க்கை வேண்டுமானால், ஐந்து புலன்களையும் அடக்கி வெல்ல வேண்டும்; பொறிகளின் நுகர்ச்சிக்குண்டான பொருள்கள் அனைத்தையும் ஒருசேர ஒழித்து விடவேண்டும். பற்றுகளை விடவேண்டும்; பற்றி எரியச்செய்யும் ஆசைகளை முழுவதுமாக விட்டுவிட வேண்டும் என்பது கருத்து.

'விடல்வேண்டும் வேண்டிய எல்லாம்' குறிப்பது என்ன?

‘விடல் வேண்டும் வேண்டிய எல்லாம் ஒருங்கு’ என்பதற்குத் தாம் விரும்பின எல்லாவற்றையும் ஒரு காலத்திலே விடுதல் வேண்டும், நுகர்தற்பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுவதையும் ஒருங்கே விடுதல் வேண்டும். உள்ளம் தான் முன்னின்று விரும்புவதாகிய வேட்கைக ளெல்லாம் ஒருதன்மைப்பட விடுதல் வேண்டும், எல்லாத் தேவையையும் விடுக்க வேண்டும், ஐம்புலன் நுகர்ச்சிக்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒருங்கே விட்டுவிட வேண்டும், விரும்பிய பொருள்களின் மீது கொண்டுள்ள பற்றுதலையும் ஒருங்கே விடுதல் வேண்டும் எனப் பொருள் கூறினர்.

வேண்டியவற்றை விட்டுவிட வேண்டுமென்பது நுகர்ச்சிக்கான எப்பொருள் மீது பற்றுவைக்காமையைக் குறிக்கும். துறவி தனக்கெனப் பொருள் ஏதும் அற்றவனாய் உடைமைகள் யாவற்றையும் துறந்தவனாயிருத்தல் வேண்டும் என்பதையும் இது காட்டும். புலன்களை வெல்லும் அகப்போராட்டத்தில் ஈடுபடுவதும் அதில் வெற்றி பெறுதலும் எளிதன்று. ஐம்புலனையும் எதிர்த்துப் போராடி வெற்றிபெறுதல் மட்டுமன்றி, அதற்குத் துணைநின்ற தொடர்பு அத்தனையையும் ஒfருமிக்கத் துண்டித்துக் கொள்ளப்படவேண்டும் எனவும் சொல்லப்பட்டது. ஒருசேர விடவேண்டும் என்றது விடாதபொருள் இருந்தால் அது திரும்பவும் பற்றிக்கொள்ளும் என்பதால்.

இதற்கு ஐம்புல வேட்கையால் நுகரப்படும் பொருள் எல்லாம் விடுதல் வேண்டும் என்பது பொருள்.

ஐம்புலன்களையும் அடக்கி வெல்லுதல் வேண்டும்; பொறிகள் நாடும் எல்லா விருப்பங்களையும் ஒருமிக்க விட்டுவிட வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

துறவு செயற்படுத்தப்படும் வகை.

பொழிப்பு

ஐம்புல உணர்ச்சிகளையும் அடக்கி வெல்லுதல் வேண்டும்; எல்லா நுகர்ச்சிப் பொருள்களையும் ஒருசேர விட்டுவிட வேண்டும்.