யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
(அதிகாரம்:துறவு
குறள் எண்:341)
பொழிப்பு (மு வரதராசன்): ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.
|
மணக்குடவர் உரை:
எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான் அவன் அதனளவு துன்பமுறுதலிலன்.
பரிமேலழகர் உரை:
யாதனின் யாதனின் நீங்கியான் - ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அதனின் அதனின் நோதல் இலன் - அவன் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.
(அடுக்குகள் பன்மை குறித்து நின்றன. நீங்குதல் - துறத்தல். ஈண்டுத்துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலை, அஃதன்றி ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.)
குன்றக்குடி அடிகளார் உரை:
ஒருவன் யாதொரு பொருளின் நீங்குகிறானோ அந்தப் பொருளால் அந்தப் பொருளால் துன்பம் எய்துதல் இலன். துறக்க வேண்டியன பல. அவற்றையெல்லாம் ஒருசேரத் துறத்தல் இயலாதாயினும், ஒவ்வொன்றாகத் துறந்தாலும் அந்த அளவுக்குத் துன்பம் குறையும் என்பது கருத்து. இது படிமுறையால் துறவு மனப்பான்மையை அடைய வழிகாட்டும் குறள்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
யாதனின் யாதனின் நீங்கியான் அதனின் அதனின் நோதல் இலன்.
பதவுரை: யாதனின் யாதனின் - எந்த எந்தப் பொருள்களில்; நீங்கியான்-துறந்தவன்; நோதல்-வருந்துதல்; அதனின் அதனின்-அந்தந்த அளவு, அந்த அந்தப் பொருள்களினின்று; இலன்-இல்லாதான்.
|
யாதனின் யாதனின் நீங்கியான்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான்;
பரிப்பெருமாள்: எவன் யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான்;
பரிதி: மூன்று வகை ஆசைக்குள்ளே ஏதாகிலும் பற்றற்றால்;
காலிங்கர்: உலகத்து மக்கட் பண்புடையான் ஒருவன் இரு வினையுள்ளும் தீவினை நீங்கி நூல்நெறி மரபாகிய நல்வினை இயற்றும் அன்றே; மற்று அவை தம்முளும் அரசு பொருள் மக்கள் அமரருலகு என்னும் சிறுசுவை வினைப்பனவாகிய வினைகள் யாதொன்றினின்றும் தொடர் நீங்கித் துறவிகண் சென்றால்;
பரிமேலழகர்: ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான்;
'யாதொன்றினின்றும் யாதொன்றினின்றும் நீங்கினான்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'மூன்று வகை ஆசைக்குள்ளே ஏதாகிலும் பற்றற்றால்' எனப் பொருள் கூறினார்.
இன்றைய ஆசிரியர்கள் 'எந்தெந்தப் பொருளைத் துறந்தோமோ', 'ஒருவன் எவ்வெப் பொருளிலிருந்து பற்றினை விடுகிறானோ', 'எந்த எந்தப் பற்றுக்களை விடுகிறானோ', 'ஒருவன் (எல்லாப் பொருள்களையும் ஒருங்கே துறவாவிடினும்) எவ்வெப் பொருளினின்று நீங்கி விடுகிறானோ' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
எந்தெந்தப் பொருளிலிருந்து பற்றினை விடுகிறானோ என்பது இப்பகுதியின் பொருள்.
நோதல் அதனின் அதனின் இலன்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவன் அதனளவு துன்பமுறுதலிலன்.
பரிப்பெருமாள்: அவன் அதனளவு துன்பமுறுதலிலன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது 'துறந்தார்க்குப் பயன் என்னை' என்றார்க்கு பற்றினானிறைந்த துன்பத்திலே ஒரு பற்றைவிட அதனளவு துன்பம் குறைபடும் என்றது.
பரிதி: அதற்குத் தக்க சுகம் உண்டு என்றவாறு.
காலிங்கர்: மற்று அவன் அந்த அந்தப் பயனைப்பற்றித் துயருறுதல் அதனின் அதனின் இலன்; எனவே, அந்த அந்தப்பயன் விளைத்தற்குக் காரணமாகிய அந்த அந்த வினைகளின் முயற்சியை உடையனாதல் இல்லையாதலால் அவன் துறவின் கண் முயல்வானாம் என்று பொருளாயிற்று.
பரிமேலழகர்: அவன் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.
பரிமேலழகர் குறிப்புரை: அடுக்குகள் பன்மை குறித்து நின்றன. நீங்குதல் - துறத்தல். ஈண்டுத்துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலை, அஃதன்றி ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.
'அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அந்தந்தப் பொருளால் துன்பம் இல்லை', 'அவனுக்கு அவ்வப் பொருளால் வரும் துன்பம் இல்லை. (நோதல் எனப் பிரிக்காது ஓதல் எனப் பிரித்து ஒழிதல் எனப் பொருள் காண்பர் மொ அ துரையரங்கனார்.)', 'அந்த அந்தப் பற்றினால் வருந் துன்பங்கள் அவனுக்கு இல்லையாம்', 'அவ்வப் பொருளினால் உளதாந் துன்ப நுகர்ச்சி அவனுக்கு இல்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அந்தந்தப் பொருளால் வரும் துன்பம் இல்லாதவனாம் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
எந்தெந்தப் பொருளிலிருந்து பற்றினை விடுகிறானோ அந்தந்தப் பொருளால் வரும் துன்பம் இல்லாதவனாம் என்பது பாடலின் பொருள்.
'நீங்கியான்' என்ற சொல்லின் பொருள் என்ன?
|
பற்றுக்களை ஒவ்வொன்றாக நீக்க நீக்க அவற்றால் உறும் துன்பமும் குறைந்துகொண்டே போகும்.
ஒருவன் எந்த எந்தப் பொருளின்மீது தான் கொண்ட பற்றை நீக்கிக்கொள்கிறானோ அவனுக்கு அந்த அந்தப் பொருளால் உண்டாகும் துன்பம் இல்லாதவனாகிறான்.
இவ்வதிகாரத் தலைப்பான துறவு என்பது பற்றுக்களை விடுதல் பற்றியது என்பதைத் தெளிவாக்குகிறது இக்குறள்,
ஒரு பொருளின் மீது ஆசைகொண்டு அதைத் தேடுவதாலும், அதைப் போற்றிக் காப்பதாலும், அதை இழக்க நேரிட்டபோதும், ஒருவர் துன்பம் அடைகிறார்; அந்த விருப்பத்தை விட்டுவிட்டால் அத்துன்பம் நீங்கும். பற்றுக்களை எல்லாம் விடுவது என முடிவு எடுத்தபின் அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் விடுவது இயலாவிட்டால் சிறுகச் சிறுக ஒவ்வொன்றாகவும் விடலாம். எப்பொருளை விடுகின்றானோ அந்த அளவு துன்பம் இலாதவனாக இருப்பான்.
இவ்வதிகாரம் இல்லறவாழ்வின் முடிவில் ஓய்வுகண்டு இறையொளி தேடும் முயற்சியில் ஈடுபடும் துறவு பற்றியது. அதன் முதல் படிநிலையாகத் துன்பம் தரும்
பொருள்களினின்று நீங்கச் சொல்கிறது இப்பாடல்.
எந்த எந்தப் பொருளினின்றும் ஒருவன் விலகுகிறானோ அந்தந்தப் பொருள் தரும் துன்பங்களிலிருந்தும் நீங்குகிறான்.
எல்லாப் பொருள்களிலிருந்தும் விலகுதல் முடியாது. உயிர்வாழ உணவும் மானம் காக்க உடையும் தேவை. உண்பதில் நோய் தரக்கூடியவற்றை அதன் சுவைக்காகவும் நெடுங்காலம் பழகிவிட்டதாலும் விடமுடியாதிருக்கலாம். வெற்றிலை, புகைபிடித்தல், பொடிபோடுதல், கள்ளுண்ணுதல், சூது போன்ற கெட்ட பழக்கங்களுக்கு அடிமைப்பட்டுவிட்டால் அவை விரைவில் தொலையா. இது 'இல்லை' என்ற ஏக்கம் ஏற்படும்போது அங்கு எல்லாம் துன்பம் உண்டாகித் தங்கி விடுகிறது, இவற்றால் உண்டாகும் உடற்கேடு, பொருட்கேடு, இழிவு துன்பம் தருவன, இச்சார்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் விடுபட, விடுபட அந்தந்தச் சார்புகளினால் ஏற்படும் துன்பங்கள் ஒவ்வொன்றாக விடுபடும். .அதுபோலவே மற்ற உடைமைகளில் உண்டான பற்றையும் நீக்க வேண்டும். இனப்பற்று, சாதிப்பற்று, மதப்பற்று என்று இவையும் தனக்கு மட்டுமல்ல உலகுக்கும் துன்பம் தரக்கூடியனவே.
பற்றுக்களை நீக்குவதால் துன்பம் நீங்குவது மட்டுமல்ல பரிதி கூறுவதுபோல ‘அதற்குத்தக்க சுகம் உண்டு’ என்பதும் உண்மை.
மாந்தரிடம் அவர் கொண்டிருக்கும் பற்றுகளினின்றும் ஒருங்கு விடுக்குமாறு கூறின் அவர் அதனை ஏற்கமாட்டார். ஆதலால் படிப்படியாகவும் மெதுவாகவும் பற்றுகளின்றும் அவனை நீங்கச் செய்தற்கு ஒர் வழி கூறுவதாக இக்குறள் அமைகிறது.
'யாதனின் யாதனின் நீங்கியான்' என்ற அஃறிணைச் சுட்டால், பொருள் உடல் உயிர் என்னும் தன்னகத் துறவையே-மனத்துக்கண் பற்று அவிவதையே-வள்ளுவர் முடித்துக் கூறினார். ஓர் உயர்திணை மற்றோர் உயர்திணைக்கு உடைமையாதல் இல்லை. பெண்டிரும் மக்களும் உயர்திணை உறவுப் பொருளாதலால், இங்கு கூறப்பட்டது அவர்களைக் குறிக்காது (வ சுப மாணிக்கம்).
|
'நீங்கியான்' என்ற சொல்லின் பொருள் என்ன?
'நீங்கியான்' என்ற சொல்லுக்கு நீங்கினான், தொடர் நீங்கித் துறவிகண் சென்றால், நீங்கியவனாக இருக்கின்றான், நீங்கப்பெறுகின்றான், நீங்குகிறான், துறந்தோம், பற்றினை விடுகிறான், பற்றுக்களை விடுகிறான், 'வேண்டா வேண்டா' என விடுதலை அடைவான், நீங்கி விடுகிறான், நீங்கினான், ஆசையை நீக்கிக்கொள்கிறான், பற்றை நீக்கிக் கொள்கிறான், பற்றை விட்டு நீங்கினவன் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
எதை 'நீங்கியான்' என்று குறள் சொல்லவில்லை. ஆனால் அதிகாரம் நோக்கி அனைவரும் பற்று நீங்கினவன் என்று கூறினர். நீங்குதல் என்பது மனத்தால் நீங்குதலை அதாவது பற்று விடுதலைச் சொல்வது. 'நீங்கியான்' என்றது 'எதனில் எதனில் இருந்து வேண்டா என்று விலகுகின்றான்' என்ற பொருள் தருவது. ஒரு பொருளை நீக்கினால் 'துன்புறுதல், அதனில் அதனில் இருந்து இல்லாமல் இருப்பான்' என்பதை உணர்த்துகிறது. கேடானதை விலக்குதல், தேவையைச் சுருக்குதல் என்பனவற்றால் ஒருவன் பற்றுக்களைக் களைய முடியும் எனத் தெளியலாம்.
'நீங்கியான்' என்ற சொல் 'நீங்கினான்' எனப்பொருள்படும்.
|
எந்தெந்தப் பொருளிலிருந்து பற்றினை விடுகிறானோ அந்தந்தப் பொருளால் வரும் துன்பம் இல்லாதவனாம் என்பது இக்குறட்கருத்து.
பற்று விடுதலே துறவு.
எந்தெந்தப் பொருளிலிருந்து பற்றினை விடுகின்றானோ அந்தந்தப் பொருளால் துன்பம் இல்லாதவன்.
|