பசப்பு என்ற சொல் சங்கப்பாடல்களில் பரவலாகப் பயின்று வந்துள்ளது. அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, முல்லைப்பாட்டு ஆகியவற்றில் இச்சொல் பெரிதும் காணப்படுகிறது. மேலும் சங்கம் மருவிய காலத்து இலக்கியங்களில் திருக்குறள் மட்டுமல்லாமல் திணைமாலை ஐம்பது,திணைமாலை நூற்றைம்பது, கார் நாற்பது, கைந்நிலை, நாலடியார், ஐந்திணை எழுபது, ஆகியவற்றிலும் பசப்பு நிரம்பப் பேசப்படுகிறது.
பசலை குளத்திற் படர்ந்து கிடக்கும் பாசி போன்றது என்று ஒரு குறுந்தொகைப் பாடல் சொல்கிறது:
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலை-காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே. (குறுந்தொகை 399)
(பொருள்: ஊரால் உண்ணப்படும் நீரையுடைய கேணியின் பாசி மக்கள் நீர் கொள்ளுங்கால்
விலகியும்பின் கூடியும் நிற்றல் போலப் பசலை தலைவன் முயங்குங்கால் நீங்கியும் பிரியுங்கால் பரந்தும் நின்றதென்றாள்.)
இதே கருத்துடைய கலித்தொகைப் பாடல் கூறுவது:
விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர்
தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே (கலித்தொகை 130)
(பொருள்:படை விடவிடப் பகைவர் நீங்கினாற்போலப் பிரிந்தவர் வந்து தீண்டத்தீண்டப் பசப்பு நீங்கிற்று)
இன்றைய ஆய்வாளர்கள் பசப்பு என்ற சொல்லுக்குப் புதுப்பொருள் காண விழைகின்றனர். அவர்கள் 'காதலனின் பிரிவினால் காதலியின் மேனியில் நிறம் மாறியது என்பது நாம் எங்குமே காணாதது ஆகும்; அது உலக இயல்புக்கு ஒவ்வாதது' என்று கூறி பசலை என்பது அழுது நீர் சொரிவதை அல்லது கண் கலங்கி நிற்பதைக் குறிக்கும் என்று நிறுவ முயல்கின்றனர்.
இவ்வதிகாரத்தில் 'பசலை அவர் தந்தார் என்ற உரிமையுடன் என் உடலெங்கும் பரவுகிறது' என்றும் 'சாயலும் நாணமும் அவர் தன்னுடன் எடுத்துக் கொண்டு அதற்கு எதிர் ஈடாக நோயையும் பசலையும் தந்துவிட்டுச் சென்றுள்ளார்' எனத் தலைவி ஆற்றாமல் கூறுகிறாள். நான் அவர்க்கு ஒரு தீங்கும் நினைக்கவில்லையே- எப்பொழுதும் அவரைப் பற்றி நல்லதனமாகத்தானே பேசுகிறேன் - பின் ஏன் பசலை வருத்துகிறது? அது கள்ளத்தனமாகத் தான் வந்திருக்கவேண்டும் எனப் புலம்புகிறாள் அவள். பசலை படரத் தொடங்குவதை அவர் அங்கே வரைதான் போயுள்ளார்! இங்கே பார் என் உடலில் பசலை!' என்று பிரிந்து செல்லும் காதலரைச் சுட்டிக்காட்டித் தலைவி துடிப்புடன் சொல்கிறாள். மேலும் 'ஒளியின் வேகத்துக்கு பசலை எனக்குத் தோன்றுகிறது; அவரைத் தழுவி நின்றபோது புடைப்பெயர்ச்சியின் இடைவேளையின் போது கூட பசப்பு புகுந்து கொள்கிறது எனவும் சொல்கிறாள். இறுதி இரண்டு குறள்களும் தலைவியின் உயர்ந்த உளநிலையை இனிமைபயக்கக் கூறுகின்றன.