இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1186விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு

(அதிகாரம்:பசப்புறுபருவரல் குறள் எண்:1186)

பொழிப்பு (மு வரதராசன்): விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப்போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பசலை பார்த்துக் காத்திருக்கின்றது.மணக்குடவர் உரை: விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போலக் கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு.
இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் - விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்; கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு.
('பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம்.)

வ சுப மாணிக்கம் உரை: இருள் வெளிச்சம் மறைவதை எதிர்பார்க்கும். பசலை தலைவன் தழுவாமையை எதிர்பார்க்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு.

பதவுரை: விளக்கு-விளக்கு, விளக்கினது ஒளி; அற்றம்-இறுதி, முடிவு; பார்க்கும்-பார்த்திருக்கும், பார்த்து (நெருங்கி) வரும்; இருளே போல்-இருட்டுபோல; கொண்கன்-கணவன்; முயக்கு-தழுவல்; அற்றம்-முடிவு; பார்க்கும்-எதிர்நோக்கும்; பசப்பு-நிறம் வேறுபடுதல், பசலை.


விளக்குஅற்றம் பார்க்கும் இருளேபோல் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போல;
பரிப்பெருமாள்: விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போல;
பரிதி: விளக்குக் கெட இருள் மூடுவது போலும்;
காலிங்கர்: உலகத்து விளக்கினது அற்றம் பார்க்கும் இருளேபோல;
பரிமேலழகர்: (இதுவும் அது.) விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்;

'விளக்கினது இறுதிபார்க்கும் இருளே போல' என்றபடி மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'விளக்குக் கெட இருள் மூடுவது போலும்' என்றார். காலிங்கர் 'உலகத்து விளக்கி'னைக் குறிக்கிறார். பரிமேலழகர் 'விளக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இருளே போல்' என்று உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'விளக்கினது இறுதி பார்த்து வரும் இருட்டுப் போல', '(ஓ இப்போது தெரிந்து கொண்டேன், இதன் காரணத்தை) விளக்கு நீங்கினவுடனே உண்டாகிவிடுகிற இருட்டைப்போல்', 'விளக்கு ஒளி குறையும் நேரம் பார்த்துப் படர இருக்கும் இருளே போல', 'விளக்கினது முடிவைப் பார்க்கும் இருளேபோல்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விளக்குஒளி மறையும் வேளையை எதிர்நோக்கி இருக்கும் இருளே போல என்பது இப்பகுதியின் பொருள்.

கொண்கன் முயக்குஅற்றம் பார்க்கும் பசப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: கொண்கன் முயக்கினது இறுதிபார்த்து நின்றது பசப்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை :இஃது அவர் பிரிந்தது இப்பொழுது; இப்பசப்பு யாங்ஙன் வந்தது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: என் காதலர் பிரியப் பசலை மூடிற்று என்றவாறு.
காலிங்கர்: தானும் என் நிறம் கவர்தற்கு அவர் முயக்கு அற்றம் பார்க்கும்.
காலிங்கர் குறிப்புரை: பசப்பித்தற்கு ஒரு தீர்வு இல்லையோ என்றவாறு.
பரிமேலழகர்: கொண்கன் முயக்கினது மெலிவு பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு. [கொண்கன்-(தன்னைக் கொண்ட)தலைவன்]
பரிமேலழகர் குறிப்புரை:' பார்க்கும்' என்பன இலக்கணைச் சொல். 'முன் பிரியாதிருக்கவும் தனக்கு அவகாசம் பார்த்து வரும் பசப்பு, பிரிவு பெற்றால் என் செய்யாது'? என்பாம். [அவகாசம்-சமயம்]

கொண்கன் முயக்கினது இறுதி பார்த்து நெருங்கி வரும் இப்பசப்பு என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கணவனது தழுவலின் இறுதி பார்த்துப் பசப்பு வரும்', 'காதலருடைய தழுவல் நீங்கியவுடனே தானாக உண்டாகிவிடுகிறது இந்தப் பசப்பு', 'புணர்ச்சி முடிவைப் பார்த்துக் கொண்டிருந்து உடனே படர வருகின்றது இப்பசலை', 'கணவன் கூட்டத்தினது முடிவு பார்க்கும் பசலை நிறம்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கணவனது தழுவலின் முடிவு பார்த்து உண்டாகிறது பசப்பு என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
விளக்குஅற்றம் எதிர்நோக்கி இருக்கும் இருளே போல, கணவனது முயக்குஅற்றம் பார்த்து உண்டாகிறது பசப்பு என்பது பாடலின் பொருள்.
'விளக்குஅற்றம்-முயக்குஅற்றம்' என்றால் என்ன?

கணவரின் தழுவல் நெகிழும்போது ஒளியின் வேகத்தில் பசலை தன்னைத் தழுவுகிறது என்கிறாள் தலைவி.

விளக்கொளி எப்பொழுது மறையுமென்று பார்த்து அப்பொழுதே பரவும் இருளைப்போல் என் கணவர் தழுவல் நீங்கியவுடனே இந்தப் பசலை என்மேல் வந்து படரக் காத்திருக்கிறது என்று தலைவி கூறுகிறாள்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவர் வரவை எதிர்நோக்கி மனைவி வருந்திக் காத்திருக்கிறாள். பிரிவைத் தாங்கமுடியாமல் அவர் நினைவாகவே உண்ணாமல் உறங்காமல் இருப்பதால் அவள் உடல் மெலிகிறது. தூக்கமுமின்றி கண்களில் நீர் பெருக வருத்தத்தில் உள்ளாள். முன்னர் உடன்பட்டதும் பின்னர் ஆற்றாது பசத்தலுற்றதும் பிறர் செய்தனவல்ல எல்லாம் அவளாலே வந்தனவே என்று புலம்புகிறாள். அத்துயரத்திலும் ஒரு தேறுதல் காண முயற்சிக்கிறாள் அவள். அவர் நீங்கியதால்தானே இப்பசப்பு உண்டானது. எனவே இது அவர் கொடுத்ததுதானே! அவர் தந்த உரிமையுடன் பசலை வந்து தன் மீது ஊர்வதாக எண்ணித் தன்னைத்தானே ஆற்றிக்கொள்கின்றாள். காதல் நோயையும் பசலையும் தனக்குக் கொடுத்துவிட்டு தன் அழகையும் நாணையும் உடன் எடுத்துச் சென்றுவிட்டாரே! அவரைத்தானே எந்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்; அவர்குணங்களைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறேன். பின் ஏன் இந்தப் பசலை? அவர் அந்தப்பக்கம் சென்றார்; பசலை இந்தப் பக்கம் வந்து ஒட்டிக்கொண்டதே எனத் தன் நிறவேறுபாட்டை எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
தலைவர் பிரிந்த வேளையை நினைவு கூர்கிறாள் மனைவி. காதல் உணர்ச்சியுடன் கணவர் அவளைக் கட்டித் தழுவுகிறார். முயக்கத்தை விட மனமில்லாமல் நெடுநேரம் தழுவுகிறார். பின் அவளிடம் விடைபெற்றுச் செல்கிறார். அவர் நீங்கிய மறுகணமே மின்னல் வேகத்தில் தலைவியின் மேல் பசலை படர்ந்துவிடுகிறது.
பசப்பு என்பது பசலை என்றும் அறியப்படும். இது உணவு,உறக்கம் செல்லாது தன்மீது மிகுந்த காதலுடையவரையே நினைந்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு ஏற்படும் நோய். அது தோலில் உண்டாகும் நிற மாற்றத்தைக் குறிக்கும் என்று சொல்லப்படுவது.
கொண்கன் என்ற சொல் கணவன் என்ற பொருள் தருவது. கொண்டவன்கொள்-கொண்கு-கொண்கன் என விளக்குவர்.

இக்குறளிலுள்ள விளக்கு என்ற சொல் விளக்கொளியைக் குறித்து வந்தது. ஒளி இல்லையென்றால் இருள் வருவது இயல்பு. வெளிச்சம் மறையும்போது இருளானது விரைந்து வந்து பரவும். அதுபோல் பசலையானது தலைவனது தழுவாநிலையை எதிர்பார்த்து காதலியின் உடலில் பரவும். ஒளியின் வேகத்திற்கு இணையாக இருளின் வேகம் இருக்கிறது. உலகத்து ஒளி குறையக் குறைய இருட்டு வந்து சூழும். இரண்டும் ஒரே சமயத்தில் நிகழ்வதால். ஒளி மறைவதையும் இருள் வந்து மூடுவதையும் பிரித்து அறியமுடியாது. அதுபோல தலைவன் - தலைவி தழுவல்) நீங்கிக் கொண்டிருக்கும்போதே பசலையும் தலைவியிடம் தோன்றத் தொடங்கிவிடுகிறது என்பதாம்.

'விளக்குஅற்றம்-முயக்குஅற்றம்' என்றால் என்ன?

விளக்குஅற்றம் என்ற தொடர்க்கு நேர் பொருள் விளக்குஒளி குறையும் வேளை என்பது. அதுபோல முயக்குஅற்றம் என்பது தழுவல் நீங்கும் நேரத்தைக் குறிப்பது.
விளக்கு மறையக் காத்திருக்கும் இருள் போல தலைவன் - தலைவி தழுவல் நீங்குவதைப் பார்த்திருக்கும் பசலை என்ற ஓர் ஒப்புமையைக் குறிக்க இவ்விணைத்தொடர் பயன்படுத்தப்பட்டது. முயக்கு அற்றம் எனும் தொடர் தலைவியைப் பிரிந்து செல்லும் வரை கணவர் அவளைத் தழுவிக் கொண்டே இருந்தார் என்பதையும், மெல்ல மெல்லத் தழுவதில் இருந்து நெகிழ்ந்தார் என்பதையும் அணைப்பு முற்றிலும் நீங்கியவுடன் அவள் உடல் நிறத்தில் கலங்கல் உற்றுத் துன்புற்றாள் என்பதையும் நயம்பட விளக்குவதாகும்.
இக்காட்சியில் சொல்லப்பட்டுள்ள முயக்கு என்பது நாளும் கணவர் மனைவியைத் தழுவிக் கொள்வதைக் குறிக்காமல் அவர் பணி காரணமாக அவளிடம் விடை பெற்றுப் பிரிவதற்கு முன் உள்ள முயக்கத்தைச் சொல்வதாகக் கொள்ளவேண்டும்.
'முயக்கு அற்றம் பார்க்கும்' என்ற தொடர் அழகுணர்ச்சியுடன் சுவைநலம் நிறைந்து அமைந்திருக்கிறது.

'விளக்குஅற்றம்-முயக்குஅற்றம்' என்பன 'வெளிச்சம் குறையும்வேளை-தழுவல் நீங்கும் நேரம்' என்ற பொருள் தருவது.

விளக்குஒளி மறையும் வேளையை எதிர்நோக்கி இருக்கும் இருளே போல, கணவனது முயக்கத்தின் முடிவு பார்த்து உண்டாகிறது பசப்பு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கணவரது நெருக்கமான தழுவல்நீக்கம் தரும் பசப்புறு பருவரல்.

பொழிப்பு

விளக்கினது இறுதி பார்த்து வரும் இருட்டுப் போலக் கணவரது தழுவலின் இறுதி பார்த்துப் பசப்பு தோன்றியது.