அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்துஎன்
மேனிமேல் ஊரும் பசப்பு.
(அதிகாரம்:பசப்புறுபருவரல்
குறள் எண்:1182)
பொழிப்பு (மு வரதராசன்): காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலைநிறம் என்னுடைய மேனிமேல் ஊர்ந்து பரவி வருகின்றது.
|
மணக்குடவர் உரை:
காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும்.
இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.
பரிமேலழகர் உரை:
(ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது.
('குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'இஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம்.)
இரா சாரங்கபாணி: உரை:
இப்பசலை நோயை உண்டாக்கியவர் அவர் என்னும் பெருமித உணர்வோடு என் உடம்பின் மேலேறிப் பசப்பு ஆட்சி செலுத்துகிறது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அவர்தந்தார் என்னும் தகையால் பசப்பு இவர்தந்து என் மேனிமேல் ஊரும்.
பதவுரை: அவர்-அவர் (காதலர்); தந்தார்-உண்டாக்கினார்; என்னும்-என்கின்ற; தகையால்-பெருமிதத்தால்; இவர்தந்து- ஏறி; என்-எனது; மேனிமேல்-உடம்புமேல், உடம்புமீது; ஊரும்-செலுத்தும், படரும்; பசப்பு-- பசலை, நிறம் வேறுபடுதல்.
|
அவர்தந்தார் என்னும் தகையால்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே;
பரிப்பெருமாள்: காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே;
பரிதி: நாயகர் வரக்காட்டின பசலை;
காலிங்கர்: நம்மைப் பிரிந்து ஏகிய அவர் இங்ஙனம் நமக்குத் தந்தார் என்னும் இவ்வுரிமைத் தகைமையாலே;
பரிமேலழகர்: (ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; [ஆற்றுவல் - பொறுப்பேன்; அவர் - தலைவர்; பெருமிதத்தால் - களிப்பு மிகுதியால்]
'காதலரால் வந்தது என்னும் தகைமையாலே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தந்தவர் அவர் என்னும் பெருமிதம் கொண்டு', 'அவரால் உண்டானது என்ற காரணத்தால்', 'அவரால் ஏற்பட்ட தென்னுஞ் செருக்கால்', 'தன்னை உண்டாக்கினவர் அவர் என்னும் பெருமிதத்தால்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
காதலர் கொடுத்தார் என்கின்ற பெருமிதத்தால் என்பது இப்பகுதியின் பொருள்.
இவர்தந்துஎன் மேனிமேல் ஊரும் பசப்பு.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.
பரிப்பெருமாள்: பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.
பரிதி: பசலை யாக்கையாலே, அது மேனி எங்கும் பரந்தது என்றவாறு.
காலிங்கர்: என்மேனிமேல் இங்ஙனம் பரந்து ஏறுகின்றது பசப்பு என்றவாறு.
பரிமேலழகர்: இப்பசப்புத்தான்; என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: 'குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'இஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம். [சிந்தாமணி விமலையார் இலம்பகம் 1 பொருள்: குருதி சிந்தும் வேலையுடைய சீவகன் கூந்தலையுடைய (பிடரிமயிர்) குதிரையின் மேலேறிப் போகா நிற்க; இப்பொருட்டு ஆதல் - மேற்கொள்ளல் என்னும் பொருளை உடையதாதல்; இஃது - பசப்பு]
'பசப்பு என் உடம்பின் மேலே பரந்து ஏறுகின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பசலை படர்ந்து என் மேனிமேல் ஏறும்', 'இந்தப் பசப்பு நிறம் என் மேனியின்மீது உரிமையோடு ஏறிச் சவாரி செய்கிறது. (அது எனக்கு மகிழ்ச்சிதான்)', 'பசலையானது என் மேனி முழுவதிலும் பரவிச் செல்லா நின்றது.', 'இப்பசலை என் மேனி மேல் ஊர்ந்து செல்கின்றது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
பசப்பு என் மேனிமேல் ஏறிச் செலுத்துகிறது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
காதலர் கொடுத்தார் என்கின்ற பெருமிதத்தால் பசப்பு என் மேனிமேல் இவர்தந்து ஊரும் என்பது பாடலின் பொருள்.
'இவர்தந்து ஊரும்' என்றால் என்ன?
|
அவரால் வந்ததுதானே இப்பசலை! அதற்கு இல்லாத உரிமையா? என்மேனி மீது நன்கு படர்ந்து ஏறட்டும்!
'அவர் தந்தார்’ என்னும் பெருமிதம் கொண்டு, இப்பசப்புத் தானும், என் உடலின் மேல் பற்றிப் படர்ந்து நிறைகின்றது' என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகப் பிரிந்து சென்ற கணவர் வரவை எதிர்நோக்கி மனைவி வருந்தி நிற்கிறாள். பிரிவை ஆற்றமுடியாமல் உண்ணாமல் உறங்காமல் இருப்பதால் அவள் உடல் மெலிந்தது. கண்களில் நீர் பெருக கவலையுற்றிருக்கிறாள். மேனி எங்கும் பசலை படர்கிறது. பசலை என்பது தலைமகனைப் பிரிந்துள்ள தலைவியின் உடலில் தோன்றும் நிற வேறுபாட்டைக் குறிப்பது. 'காதல் கொண்ட கணவர் பிரியும்போது என்னுடைய இசைவைப் பெற்றுத்தானே சென்றார்; இப்பொழுது பசப்பு உண்டானதை யாரிடம் போய்ச் சொல்வேன்' எனப் புலம்புகிறாள். முன்னர் உடன்பட்டதும் பின்னர் ஆற்றாது பசத்தலுற்றதும் பிறர் செய்தனவல்ல எல்லாம் தன்னாலே வந்தனவே எனச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
இக்காட்சி:
பிரிவின் துயரத்தில் உள்ள அந்த நிலையில் ஒரு தேறுதல் காண முயற்சிக்கிறாள் தலைமகள்.
தன் உடலை உற்று நோக்குகிறாள். மேனியெங்கும் பசலை! 'தலைவர் நீங்கியதால்தானே இப்பசப்பு உண்டானது. எனவே இது அவர் கொடுத்ததுதானே!
தலைவர் தந்தார் என்ற பெருமித உணர்வோடு தன் உடம்பின் மேலேறிப் பசப்பு ஆட்சி செய்கிறது. இருக்கட்டும்!' என்கிறாள் அவள். 'அவரால் ஏற்பட்ட பசலை என்பதனால் அப்பசலைக்கு ஒரு உரிமை உணர்வு உண்டானது. அப்பெருமிதத்தால் பசலை என் மீது ஏறி ஊர்தியாகச் செலுத்துகின்றது' எனச் சொல்வதாக உள்ளது அவளது கூற்று. பசலை தன் காதலரால் ஏற்பட்டது என்பது பெருமைக்குரியது எனப் பிரிவுத்துயரின் இடையில் கூறுகிறாள். கணவரே பசலையாக வந்து தன் மீது ஊர்வதாக எண்ணித் தன்னைத்தானே ஆற்றிக்கொள்கின்றாள். பசலை மேனியில் படர்வது வருந்துதற்குரியது; ஆனால் அதைக் களிப்பிற்கேற்றதாக மடைமாற்றம் செய்கிறாள் அவள்.
இப்பசலையை நீக்க வேண்டும் என்ற தோழிக்கு 'அதனைத் தலைவனிடம் சொல்' எனத் தலைவி கூறியது எனக் காட்சி அமைப்பார் மணக்குடவர். 'அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா'' என்று தலைவி தோழியிடம் கூறுவதாக விளக்குவார் பரிமேலழகர்.
|
'இவர்தந்து ஊரும்' என்றால் என்ன?
'இவர்தந்து ஊரும்' என்றதற்கு பரந்து ஊரும், பரந்தது, பரந்து ஏறுகின்றது, செலுத்தா நின்றது, ஊர்ந்து பரவி வருகின்றது, ஏறிப்படர்ந்து பரவுகின்றது, படர்ந்து ஏறும், மேலேறி ஆட்சி செலுத்துகிறது, உரிமையோடு ஏறிச் சவாரி செய்கிறது, ஏறிப் படர்வது ஆயிற்று, பரவிச் செல்லா நின்றது, (உடலில்) பாய்கிறது, ஊர்ந்து செல்கின்றது, ஏறித் தடையின்றிப் படர்கின்றது, ஏறி என்னைச் செலுத்துகின்றது, ஏறித் தவழ்கிறது என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இவர்தல் என்பது 'மேலேறுதல்' என்ற பொருள் தரும். இவர்தந்து (மேலே ஏறி) என்பது ஒரு சொல்நீர்மைத்தாகிய கூட்டு (இவர்ந்து என்பதே இவர்தந்து) வினையெச்சம் என்பார் செ வை சண்முகம்.
இவர்தந்து என்ற சொல்லுக்கு மேலேஏறி என்பது பொருள்; ஊரும் என்ற சொல்லுக்குச் செலுத்தும் என்பது பொருள். இவர்தந்து என்பது மேலேறிச் செலுத்தும் எனப் பொருள்படும். பசலை தலைவர் பிரிவால் உண்டானது; எனவே அதை 'அவர் தந்தது' என்கிறாள் தலைவி. அவரால் ஏற்பட்ட பசலை என்பதனால் அப்பசலைக்கு ஒரு பெருமிதம் உண்டாயிற்றாம். அப்பெருமிதத்துடன் அவள் உடம்பின்மீது ஏறி ஊர்தியாகச் செலுத்துகின்றது அப்பசலை என்கிறாள் தலைவி.
இவர்தந்து ஊர்தல் என்பது குதிரையை அடக்கி ஏறிச் செலுத்துதல் என்பதைக் குறிக்கும் போர்க்களச் சொற்றொடர் என்பர். பரிமேலழகர் தனது சிறப்புரையில் சீவக சிந்தாமணியில் வரும் 'குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல (விமலை 1) என்னும் செய்யுள் வரியை மேற்கோள்காட்டி அங்கு இவர்ந்து என்பது இப்பொருளிலேயே ஆளப்பட்டது எனக் குறித்தார். தேநேயப்பாவாணர் ஊர்தல் என்பதற்கு பசலை படர்தல் என்று பொருள் கூறி 'இப்படர்ச்சி குதிரையேற்றம் போற் கூறப்பட்டிருப்பது குறிப்புருவகம்' எனவும் உரைத்தார்.
'இவர்தந்து ஊரும்' என்ற தொடர் மேலேஏறிப் படர்கின்றது என்ற பொருள் தரும்.
|
காதலர் கொடுத்தார் என்கின்ற பெருமிதத்தால் பசப்பு என் மேனிமேல் ஏறிச் செலுத்துகிறது என்பது இக்குறட்கருத்து.
பசப்புறுபருவரலிலும் களிப்பு காணும் தலைவி.
காதலர் கொடுத்தது என்ற பெருமிதம் கொண்டு பசலை என் மேனிமேல் ஏறிச் செலுத்துகிறது
|