இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1189



பசக்கமன் பட்டாங்குஎன் மேனி நயப்பித்தார்
நல்நிலையர் ஆவர் எனின்

(அதிகாரம்:பசப்புறுபருவரல் குறள் எண்:1189 )

பொழிப்பு (மு வரதராசன்): பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலைநிறம் அடைவதாக

மணக்குடவர் உரை: என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக: நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின்.
இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் - இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்; என் மேனி பட்டாங்கு பசக்க - என் மேனி பட்டதுபடப் பசப்பதாக.
(நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்'? என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.)

இரா சாரங்கபாணி உரை: பிரிவை யான் இசையும் வகை கூறிச் சென்றவர் இப்பொழுது நல்லநிலையில் இருப்பாராயின் என் உடம்பு உண்மையாகவே நிலைத்துப் பசப்பதாகுக.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நயப்பித்தார் நல்நிலையர் ஆவர் எனின் என்மேனி பசக்கமன் பட்டாங்கு.

பதவுரை: பசக்க-பசப்பதாக, பசலை உண்டாகட்டும்; மன்-(ஒழியிசை-ஒழிந்த பொருளைத் தருவது); பட்டாங்கு--உள்ளபடி, உண்மையாக; என்மேனி-எனது உடல்; நயப்பித்தார்-உடம்படும் வகை சொல்லியவர், விரும்புவித்தவர் அதாவது விரும்புமாறு செய்தவர்; நல்நிலையர் ஆவர் - நல்ல நிலையில் இருப்பார்; எனின்-என்றால்.


பசக்கமன் பட்டாங்குஎன் மேனி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக:
பரிப்பெருமாள்: என்னுடம்பு நிலையாக என்றும் பசப்பதாக;
பரிதி: என் மேனி பசலையாகக் கடவது;
காலிங்கர்: தோழி! என் மேனியானது பெரிதும் பசப்பதாக. மற்று இது பட்டாங்கு எய்துதலால்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) என் மேனி பட்டதுபடப் பசப்பதாக; [பட்டது பட - துன்பமடைவது அடைய]

'என்னுடம்பு பசப்பதாக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பட்டாங்கு என்ற சொல்லை விளக்குவதில் உரையாசிரியர்கள் வேறுபடுகின்றனர். மணக்குடவர்/பரிப்பெருமாள் 'நிலையாக என்றும்' எனவும் காலிங்கர் 'பட்டாங்கு எய்துதலால் பெரிதும்' எனவும் பரிமேலழகர் 'பட்டதுபட' எனவும் இச்சொல்லுக்குப் பொருள் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பட்டுப் போலும் என் மேனி பசக்கட்டும்', '(என் மேனி எவ்வளவு வேண்டுமானாலும் பசக்கட்டும்)', 'என் மேனிமேல் முன்னே படர்ந்ததுபோல இப்போதும் பசலை படர்வதாக', 'என் மேனியும் விரும்பியவாறு பசப்பதாக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் உடல் துன்பமுற மேலும் பசக்கட்டுமே என்பது இப்பகுதியின் பொருள்.

நயப்பித்தார் நல்நிலையர் ஆவர் எனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் (‘நம்நிலையர்’ பாடம்): நம்மைக் காதலித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகனது கொடுமையை உட்கொண்டு கூறியது.
பரிப்பெருமாள் (‘நம்நிலையர்’ பாடம்): நம்மைக் காதலிப்பித்தவரும் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: நீ இவ்வாறு ஆற்றாய் ஆகின்றதனை நம் காதலர் கேட்பாராயின் செய்வினை முகத்தலாற்றாது வருந்துவர் என்ற தோழிக்கு 'அவர் அத்தன்மையர் ஆகப்பெறின் என்றும் பசந்தால் ஆகாதோ' என்று தலைமகனது கொடுமை உட்கொண்டு கூறியது.
பரிதி: நமக்கு மயல் தந்த நாயகர் நெஞ்சறிய என்றவாறு.
காலிங்கர்: முன்பு என்னைத் தமது அருட்குணங்களால் பெரிதும் விரும்புதல் செய்த அவர் மற்றுயான் பசப்பினால் பருவரல் உற்ற இழிநிலை ஒழிக்க வந்து தலையளிக்கும் நன்னிலையர் ஆவாராயின் என்றவாறு. நயப்பித்தல் -விரும்புவித்தல் என்று அறிக.
பரிமேலழகர்: இப்பிரிவை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தான் நல்ல நிலையினர் ஆவாராயின்.
பரிமேலழகர் குறிப்புரை: (நன்னிலையராதல் - நன்மைக்கண்ணே நிற்றலை உடையராதல். 'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க. 'முன் இப்பிரிவின் கொடுமையறியாத என்னை இதற்கு உடம்படுத்திப் பிரிந்தவர் தவறிலராகவே வேண்டுவது, என் மேனியும் பசப்பும் யாது செய்யின் என்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. [நன்மைக் கண்ணே - நல்லொழுக்கத்தினிடத்தே; இதற்கு உடம்படுத்தி - இப்பிரிவிற்கு இசையச் செய்து; மன் என்னும் இடைச்சொல் ஒழியிசைப் பொருளில் வந்தது. ஒழியிசை - ஒழிந்த பொருளைத் தருவது]

மணக்குடவரும் பரிப்பெருமாளும் நல்நிலையர் என்பதற்கு நம்நிலையர் எனப் பாடங்கொண்டதால் காதலித்தவர் நம்மைப்போலத் துன்பமுறுவாராயின் என இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'விரும்புவித்தல் செய்தவர் தலையளிக்கும் நன்னிலையர் ஆவாராயின்' என் உரை செய்தார். பரிமேலழகர் 'உடம்படும் வகை சொல்லியவர் நல்ல நிலையினர் ஆவாராயின்' என உரை வரைந்தார்

இன்றைய ஆசிரியர்கள் ''பிரிவை இசைவித்த தோழி நலம் எனின்', 'என்னைப் பிரிந்திருப்பதால் என் காதலருக்கு நன்மை வருமென்றால் யார் பரிகாசம் செய்தாலும் சரி, என் மேனி இன்னும் பசக்கட்டும்', 'நான் பிரிவிற் குடன்படும்படி உறுதிமொழி பேசிய காதலர் நல்ல தன்மையர் (குற்றமில்லாதவர்) என்றால்', 'இப்பிரிவினை யானே உடம்படும் வகை சொல்லியவர் இன்று நின் கருத்தால் நல்ல நிலையினர் ஆவாராயின்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பிரிவினை நானும் உடன்படும் வகை செய்து சென்றவர் நல்லநிலை எய்துவாராயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிரிவினை நானும் உடன்படும் வகை செய்து சென்றவர் நல்லநிலை எய்துவாராயின், என் உடல் துன்பமுற மேலும் பசக்கட்டுமே என்பது பாடலின் பொருள்.
'பட்டாங்கு' என்ற சொல் குறிப்பதென்ன?

'கடமை கருதிச் சென்ற கணவர் நல்லநிலை அடைவாரென்றால், என் உடல்நலம் கேடுறுவது பற்றி எனக்குக் கவலையில்லை' - தலைவி.

பிரிவினை நானும் உடன்படும் வகை செய்து சென்றவர் நல்லநிலை எய்துவாராயின் என் உடல் மேலும் பசக்கட்டுமே என்கிறாள் மனைவி.
காட்சிப் பின்புலம்:
கணவர் சேயிடைப் பிரிந்து சென்றுள்ளார். தொழில் காரணமாகச் சென்றவர் தலைவியின் இசைவோடுதான் பிரிந்தார். ஆனாலும் நெடிய பிரிவைத் தாங்க முடியாத தலைவி உடல் மெலிந்து உறக்கமின்றி, கண்கள் நீர் சொரிந்து சொரிந்து மிகவும் துன்புறுகிறாள்; மேனியும் பசலையுற்றது.
அவர் பிரிந்து செல்வதற்கு உடன்பட்டதையும் அப்பிரிவைத் தாங்காது தன் உடல் பசத்தலுற்றதையும் யான் யாரிடம் சொல்வேன்? என்று வருந்துகிறாள்; அவர் நீங்கியதால்தானே இப்பசலைநோய் உண்டானதென்பதால் இது அவர் தந்தது என்ற உரிமையுடன் பசலை வந்து தன் மீது ஊர்கிறது என எண்ணித் தன்னைத்தானே தேற்றிக்கொள்கின்றாள்; தன்னுடைய அழகையும் நாண்குணத்தையும் அவர் எடுத்துக்கொண்டு, அவற்றிற்குப் பதிலாகக் காமநோயையும் பசலையும் தனக்குக் கொடுத்துவிட்டார்! எனச் சொல்கிறாள்; அவரைத்தானே எப்பொழுதும் நினைத்துக் கொண்டும் அவர் குணங்களையே போற்றிக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் இந்தப் பசலைநோய்? எனக் கேட்கிறாள்; அவர் பிரிந்து அந்தப்பக்கம் சென்றார், பசலை இந்தப் பக்கம் வந்து ஊர்ந்தது எனத் தன் மேனியில் விரைந்துவந்து பசலை தோன்றியதைச் சொல்கிறாள்; விளக்குஒளி நீங்கியவுடன் எவ்விதம் இருள் விரைவில் சூழ்ந்துகொள்கிறதோ அதுபோலவே அவரது தழுவல் நீங்கியவுடன் பசலை என் மேனியில் படர்ந்தது; பிரிவுக்கு முன் கணவரை இறுகத் தழுவிப்படுத்திருந்தபோது சிறிது புரண்டேன், அதற்குள்ளாகவே அள்ளிக்கொள்ளத்தக்க அளவு பசலை திரண்டுவிட்டது, பிரிவின்கண் என்னாகுமோ? என வருந்தினாள்; தான் ஆற்றமாட்டாமல் பசந்தேன் என்று சொல்கிறார்களே அன்றி, அவர் தன்னை விட்டு நீங்கிச் சென்றார் என்று யாரும் கூறுவதில்லை. ஏன்?; இவ்வாறு பிரிவின் துயர் தாங்கமாட்டாது கூறிக்கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
கடமை கருதித் தலைவர் பிரிந்து நீண்ட தொலைவு சென்றிருக்கிறார். சென்ற நோக்கத்தில் அவர் வெற்றி பெறுவாரானால் என் உடல் இன்னுமே பசக்கட்டும் என்கிறாள் மனைவி. உலகியல் தெரிந்தவளாதலால் கணவர் நன்மை பெறுவதற்காகத்தான் சென்றுள்ளார் என்பதை அறிவாள். பிரிவின் துன்பத்தில் உழலும் அவளது உணர்வுகளை அறிவு வெல்கிறது. எனவே சென்ற செயலில் வெற்றி பெறவேண்டும் என்ற விழைவில் உள்ளவள் அவர் நல்நிலையர் ஆவார் அதாவது நன்மை பெறுவார் எனக் கூறுகின்றாள். அவ்விதம் அவர் நன்மை பெறும்போது தன் மீது பசலை ஊர்ந்தால் என்ன? அது நன்றாகப் படர்ந்து கிடக்கட்டுமே! என்கிறாள்.
கணவர் நலமாக இருப்பார் என்றால் பசலை வந்தாலும், தலைவி அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறாளாம். படரும் பசலை என்னும் தீமையிலும் நன்மை காணும் இயல்பு இங்கு வெளிப்படுத்தப்பட்டது. தலைவருடைய நன்மையைக் கருதிய மனைவியின் பெருமை கூறப்பட்டது.

நயப்பித்தார்:
காமத்துப்பாலில் இரண்டு குறள்களில் (1189, 1190) இச்சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு உரையாசிரியர்கள் விரும்பிவித்தல், தான் உடன்படு வகையில் சொல்லியவர், இப்பிரிவினை எனக்கு உடன்படுத்தினார், பிரிவுக்கு உடம்படச் செய்த காதலர், தம் பிரிவைத் தம்மை ஏற்குமாறு செய்த துணைவர், தம்மிடம் நமக்கு நம்பிக்கை ஏற்படுமாறு பேசி நம் இசைவு பெற்றுப் பிரிந்து சென்றவர், பிரிவை நாம் இசையும் வகைக் கூறிச் சென்றவர், என்னை நயமாக இணங்கச் செய்தவர், நயமாகச் சொல்லிப் பிரிவதற்கு என்னை உடம்பட வைத்துப் பிரிந்தவர் என்றவாறு பொருள் கூறினர். 'நய' என்னும் சொல் விருப்பம் என்னும் பொருளின் அடிப்படையில்தான் குறளில் வருகிறது. ஆகவே 'நயப்பித்தார்' என்பதற்கு 'விரும்ப வைத்தவர்' என்னும் பொருள் கிடைக்கிறது. அதாவது 'பிறர் விரும்புமாறு பக்குவமாகச் சொல்லி உடன்பட வைத்தவர்' என்பதாம்.
நல்நிலையர்:
இதற்கு நம்நிலையர் என மணக்குடவர்/பரிப்பெருமாள் பாடம் கொண்டதால் 'காதலித்தவரும் நம்நிலையினர் ஆனால் அதாவது நம்மைப்போலத் துன்பமுறுவாராயின்' என உரை வழங்கினர்.
பலர் 'நல்லநிலையில் இருப்பாரா'யின் என்மேனிபசந்து படுவதுபடட்டும் என்ற பொருளில் உரை செய்தனர். இத்தொடர்க்குப் பரிமேலழகர் தவறிலராக அதாவது ஒழுக்கம் குன்றாதவராக எனப் பொருள் கூறினார். நல்ல நிலையர் என்ற பொருள்படும்படி 'பொருள் சம்பாதிப்பதிலோ புகழ் அடைவதிலோ உத்தியோகம் உயர்வதிலோ சிறப்பு அடைவாரானால்' என ஓர் உரை சொல்கிறது. வேறுசில உரைகள் 'பசப்புற்ற இழிநிலை ஒழிக்க வந்து தலையளிக்கும் நன்னிலையர் ஆவாராயின்', 'காதலர் நல்ல தன்மையர் (குற்றமில்லாதவர்) என்றால்', 'அவர் கூறிய உரையின்படியே நடக்கும் நிலையர் ஆவார் என்றால்', 'நயமாகப் பேசி என்னைப் பிரிந்தவர்க்கு நன்மை ஏற்படப் போகிறது என்றால்' என்கின்றன. இப்பிரிவினால் அவர் நல்ல நிலை எய்துவர் என்றால், என் உடலில் உள்ளபடியே பசலை படரட்டும் என்ற பொருள் சிறந்தது. தலைவருடைய நன்மைக்காகத் தான் எந்த துயரையும் தாங்கிக் கொள்வேன் என்ற தலைவியின் கூற்று அவளது உயர்ந்த உள்ளத்தை புலப்படச் செய்து நிற்கிறது.

'பட்டாங்கு' என்ற சொல் குறிப்பதென்ன?

'பட்டாங்கு' என்ற சொல்லுக்கு நிலையாக, பெரிதும், பட்டதுபட, உள்ளபடி, உள்ளபடி இயல்பாக, பட்டுப் போலும், உண்மையாகவே நிலைத்து, யார் பரிகாசம் செய்தாலும் சரி, என்றும், முன்னே படர்ந்ததுபோல, விரும்பியவாறு, எவ்வாறேனும், இன்று பசந்தபடியே, உண்மையாகவே, படுவதுபடட்டும் எனப் பலவாறாக உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'பட்டாங்காக' என ஆக்கம் விரித்து உரைக்க என்றார் பரிமேலழகர். பட்டாங்கு என்ற சொல் உண்மையாகவே என்ற பொருளில் 'பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில்' (சிலம்பு, காதை, 21:31) எனச் சிலப்பதிகாரத்தில் ஆளப்பட்டதை நோக்குக என்பார் இரா சாரங்கபாணி.

'பட்டாங்கு' என்றது என் உடம்பு உள்ளபடியே பசப்பதாகுக என்பதைக் குறிக்க வந்தது.

பிரிவினை நானும் உடன்படும் வகை செய்து சென்றவர் நல்லநிலை எய்துவாராயின், என் உடல் துன்பமுற மேலும் பசக்கட்டுமே என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

என் மீது பசலை படர்ந்தால் படரட்டும், நல்லது நடந்தால் சரி என்னும் தலைவியின் பசப்புறு பருவரல்.

பொழிப்பு

பிரிவினை உடன்படும் வகை செய்து சென்றவர் நல்ல நிலை எய்துவாராயின் என் உடம்பு உள்ளபடி பசக்கட்டுமே.