பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்
(அதிகாரம்:பசப்புறுபருவரல்
குறள் எண்:1190)
பொழிப்பு (மு வரதராசன்): பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமலிருப்பாரானால், யான் பசலையுற்றதாகப் பெயரெடுத்தல் நல்லதே.
|
மணக்குடவர் உரை:
பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின்.
இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(தலைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் - அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்; பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே - பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று.
('நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள், அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது' என்பதாம்.)
இரா சாரங்கபாணி உரை:
என்னை இசையும் வகை கூறிப் பிரிந்து சென்றவரின் அருளாமையை ஊரார் பழிதூற்றாவிடின் இவள் வேறு பசப்பு வேறு என்னாது இவளே பசப்பு எனப் பெயர் பெறுதல் நல்லது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்.
பதவுரை: பசப்பு- பசலை; என-என்ற; பேர்-பெயர்; பெறுதல்-அடைதல்; நன்றே-நல்லதே, நன்மையுடையதே; நயப்பித்தார்-காதலிக்கச் செய்தவர், விரும்புமாறு செய்தவர்; நல்காமை-அருளாமை; தூற்றார்-இகழ்ந்து சொல்லார்; எனின்-என்றால்.
|
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று;
பரிப்பெருமாள்: பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று;
பரிதி: பசப்பென்று பெயர் பெறுதல் நன்று;
காலிங்கர்: நெஞ்சே! நமது பசப்புருபு தானே இவ்விடத்துப் பெயர் பெற்றிருந்தாலும் சால நன்றே;
பரிமேலழகர்: (தலைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி தலைமகனை இயற்பழித்தவழி அவள் இயற்பட மொழிந்தது.) பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று.
'பசந்தாளெனப் பேர்பெறுதல் நன்று' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பசலைப்பேர் பற்றிக் கவலையில்லை', 'நான் பசந்து போனவள் என்பதைப் பற்றி ஊரார் ஏளனம் செய்வதில் எனக்குப் பெருமைதான்', 'பசப்பேயாயினாள் என்று யான் பேர் பெறுதலும் நல்லதே', 'பசப்படைந்தாள் என வேறுபடுத்திக் கூறாது பசப்புத்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல் எனக்கு நன்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பசப்பே ஆயினாள் என்று பெயர் பெற்றாலும் நல்லதே என்பது இப்பகுதியின் பொருள்.
நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின்.
மணக்குடவர் குறிப்புரை: இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு அவ்வளவாய்க் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: நம்மைக் காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நின்மேனி பசந்ததென்ற தோழிக்கு இவ்வளவு ஆயின் குற்றமில்லையென்று தலைமகள் கூறியது.
பரிதி: நாயகரை நாம் பொல்லாதவர் என்று சொல்லாமல் என் பசலையே சொல்லியது என்றவாறு.
காலிங்கர்: எப்பொழுது எனின், நம்மை இங்ஙனம் தமது அருட்குணங்களாற் காதலுறுத்தியவர் பின் ஒரு காலம் நினைந்து வந்து அருளாமையைப் பிறர்க்குச் சாற்றாதாயின் என்றவாறு.
பரிமேலழகர்: அன்று தாம் குறை நயப்பித்துக் கூடியவர்க்கு இன்று நல்காமையை நட்டோர் தூற்றாராயின்; [குறை நயப்பித்து- தம் குறைகளை விரும்பி ஏற்குமாறு சொல்லி; நல்காமை அருளாமை]
பரிமேலழகர் குறிப்புரை: 'நட்டார்' என்பது அவாய்நிலையான் வந்தது. இயற்பழித்தல் பொறாது புலக்கின்றாளாகலின், இகழ்ச்சிக் குறிப்பால் கூறினாள், அவரை அருளிலர் என்னாது 'இன்னும் பசந்தாள் இவள் என்கையே யான் ஆற்றும் நெறியாவது' என்பதாம்.
'காதலிப்பித்தவர் அருளாமையை இவ்வூரார் கூறாராயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் ஊரார் என்னாமல் நட்டோர் தூற்றாராயின் என உரைத்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'தோழி அவர் கொடுமையைத் தூற்றாளெனின்', 'என் காதலை இங்கில்லாததைப்பற்றி யாரும் அவரை இகழ்ந்து பேசாமலிருந்தால் அதுபோதும்.(என் காதலர் சுகமாக வரட்டும்)', 'என் பசலையைப் பார்த்தும் பிரிவிற்கு இணங்குவித்துச் சென்றவரது அருளின்மையை ஊரார் தூற்ற மாட்டாரென்றால்', 'அன்று குறையைக் கேட்டு விரும்பிக் கூடியவர் பிரிந்துள்ளமையை நண்பர்கள் பலரறியச் சொல்லாமலிருப்பாரானால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
நயமாகப் பேசிப் பிரிவிற்கு என்னை இணங்கச் செய்த காதலரது அருளாமையை ஊரார் தூற்றார் என்றால் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நயமாகப் பேசிப் பிரிவிற்கு என்னை இணங்கச் செய்த காதலரது அருளாமையை ஊரார் தூற்றார் என்றால் பசப்பெனப் பேர்பெறுதல் ஆயினும் நல்லதே என்பது பாடலின் பொருள்.
'பசப்பெனப் பேர்பெறுதல் 'என்ற தொடர் குறிப்பது என்ன?
|
என் உடல் முழுவதும் பசப்புறட்டும்!; அதற்காக அவரை ஏன் தூற்றவேண்டும்?
காதலர் பிரிவால் வாடும் தலைவி தனக்கு பசப்பானவள் என்று பெயர் வந்தாலும் அவர் அருளாமை தூற்றப்படாமல் இருந்தால் போதும் எனச் சொல்கிறாள்.
காட்சிப் பின்புலம்:
கணவர் தொழில் காரணமாகப் பிரிந்து சென்றுள்ளார். தலைவியின் வேண்டா வெறுப்பான இசைவைப் பெற்றுத்தான் சென்றிருக்கிறார். சென்றபின் தனிமையைத் தலைவியால் பொறுக்க முடியவில்லை, எந்த நேரமும் அவர் வரவை எண்ணியே வருந்திக் கொண்டிருப்பதால் அவள் உடல் மெலிந்து தூக்கம் தொலைந்து, நீர் சொரியும் கண்களுடன் காட்சி தருகிறாள். கணவரையே நினைத்துக் கொண்டிருக்கும் தலைவியின் உடலெங்கும் பசலை படர்ந்துவிட்டது. நிறவேறுபாட்டாலும் தன் மேனியழகு குறைந்தது கண்டு மேலும் வருத்தம் அடைகிறாள் அவள்.
இப்பொழுது ஆற்றமாட்டாமல் 'நான்தானே பிரிவுக்கு ஒத்துக் கொண்டேன். இப்பொழுது பசலை படர்ந்திருக்கிறது. இதை நான் யாரிடம் போய்ச் சொல்வது?' எனப் புலம்புகிறாள்.
தலைவர் தந்த உரிமையுடன் பசலை என்மீது படர்கிறது; துன்பத்தையும் பசலையையும் கொடுத்து என் அழகையும் நாணையும் உடன் எடுத்துக் சென்று விட்டாரே; அவரை எந்த நேரமும் நினைத்துக் கொண்டிருப்பதால் அவர் என்னுடனேதானே இருக்கிறார், பின் ஏன் பசலை? இப்பொழுதானே பிரிவில் அந்தப் பக்கம் சென்றுள்ளார், அதற்குள் ஒளியின் வேகத்தில் பசலையா? பள்ளியில் அவர் என்னைத் தழுவியிருக்கும்போது புரண்டு படுக்கும் இடைவெளியிலும் படர்ந்ததே! என்றும் பிரிவு அவர்க்கு நன்மை செய்யும் என்றால் என் மேனியும் பசப்பதாக! எனத் தலைவியின் எண்ண ஓட்டங்கள் உள்ளன.
இக்காட்சி:
நயப்பித்தல் என்றதற்குக் காதலுறுத்தியவர், நயமாகப் பேசி உடம்படுவித்துப் போனவர், என்னை இசையும் வகை கூறிப் பிரிந்து சென்றவர், என்னை நயமாக இணங்கச் செய்த காதலர் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர். இவற்றுள் நயமாகப் பேசி உடம்படுவித்துப் போனவர் அதாவது தாம் விரும்பியதை, பிறர் விரும்புமாறு சொல்லி உடன்பட வைத்தல் என்பது பொருத்தமாக உள்ளது.
நல்காமை என்ற சொல்லுக்கு அருளாமை என்பது பொருள். இது அருளின்றிக் கணவர் தலைவியைப் பிரிந்து சென்றதைக் குறிப்பதாக உள்ளது.
பிரிவை ஆற்றமுடியாமல், உணவு உறக்கம் செல்லாது, அவரையே நினைத்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு உடம்பில் நிறவேறுபாடு தோன்றுவது பசலை அல்லது பசப்பு என்றும் அறியப்படும். இது பெண்களுக்கு மட்டுமே வரும் காதல் நோயாம்.
பிரிவுத் துன்பத்தைத் தாங்கமுடியாமல் உடல் மெலிந்து அழுது அழுது, கண் சோர்ந்து போயுள்ள அவளது தோலின் இயற்கையான நிறம் மாற்றம் அடைந்தது. உடம்பு முழுக்கப் பசலை படர்கிறது. அவளே பசலை என்னும் அளவுக்கு நிறம் வேறுபடுகிறாள்.
பசலை கணவர் பிரிந்து சென்றுள்ளமையை ஊரார்க்கு அறிவிப்பதாகிறது. தலைவர் அருகில் இருந்து அவளுக்கு அருள் செய்யாமல் சென்றுவிட்டாரே என்று ஊரார் அவரை இகழ்ந்து விடுவார்களே என அப்பொழுது எண்ணுகிறாள். அப்படியான பழி அவர்க்குச் சேரக்கூடாது என நினைக்கிறாள். 'என்ன கொடுமை இது! கொஞ்சநாள் பிரிவைக் கூடத் தாங்கிக்கொள்ளமாட்டாளா இவள். அதற்குள் பசப்பாகவே ஆகிவிட்டாளே' என்று ஊரார் என்னைக் குறை கூறினாலும் எனக்கு அதனால் ஒன்றுமில்லை; 'இப்படி இவளைத் தவிக்கவிட்டு அந்த மனிதர் அவர்பாட்டுக்குப் போய்விட்டாரே' என அவரைப் பழிதூற்றாமல் இருந்தால் போதும் என்கிறாள். பிரிவில் சென்ற காதலர் 'குற்றத்தை'யும் தனதாக ஏற்றுக்கோள்ள விரையும் காதல் உள்ளம் கொண்டவளாகக் காட்சி அளிக்கிறாள் தலைவி.
|
'பசப்பெனப் பேர்பெறுதல்' என்ற தொடர் குறிப்பது என்ன?
'பசப்பெனப் பேர்பெறுதல்' என்றதற்குப் பசந்தாளெனப் பேர்பெறுதல், பசப்பென்று பெயர் பெறுதல், நமது பசப்புருபு தானே இவ்விடத்துப் பெயர் பெற்றிருத்தல், பசப்புற்றாள் என வேற்றுமையானன்றிப் பசப்புந்தான் ஆயினாள் என ஒற்றுமையால் தாம் சொல்ல அப்பெயரைப் பெறுதல், இவள் பசப்பாயினாள்' எனப் பசலைநோயுடன் தன்னை ஒன்றாக இணைத்துப்பேசும் பெயரைப் பெறுதல், பசலைப் பேர் பெறுதல், இவள் வேறு பசப்பு வேறு என்னாது இவளே பசப்பு எனப் பெயர் பெறுதல், பசலை என்னும் பெயர் பெறுதல், பசலை நிறம் உற்றாள் என்னும் பெயரைப் பெறுதல், பசலை என்று பெயர் வருதல் என்றாவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.
'பசப்பெனப் பேர்பெறுதல்' என்பது பசப்பு வடிவமாக ஆகிவிட்டாள் எனப் பெயர் அடைதலைக் குறிக்கிறது.
இது இவள் வேறு பசப்பு வேறு என்னாது இவளே பசப்பு எனப் பெயர் பெறுதலைச் சொல்வது; இகழ்ச்சி மொழியாகக் கூறப்படுவது. அவள் தன் இயல்பான அழகை இழக்கிறாள்; அப்பொழுது அதோ 'பசலை போகிறது' என்றுகூட ஊரார் கூறலாம். அந்த இகழ்வையும் பெறுகிறேன் என்கிறாள் தலைவி.
தலைவர் விரைந்து திரும்பி வந்து அருளாமையை ஊரார் பழிதூற்றார் என்றால், பசலைநோயுடன் என்னை ஒன்றாக இணைத்துப்பேசும் பெயரைப் பெற்றாலும் அதை நான் பொருட்படுத்தப் போவதில்லை. பிரிவுக்கு உடன்பட்டது தானாகையால் பழி தலைவனுக்கு வரக்கூடாது என அவர் பழியையும் தான் ஏற்றுக்கொள்ள முன்வருகிறாள். ஆனாலும் ஊரார் அவரைத் தூற்றும்படி இப்பசப்பு என்னிடம் பரவுகிறதே என வருந்தவும் செய்கிறாள்.
|
நயமாகப் பேசிப் பிரிவிற்கு என்னை இணங்கச் செய்த காதலரது அருளாமையை ஊரார் தூற்றார் என்றால் பசப்பே ஆயினாள் என்று பெயர் பெற்றாலும் நல்லதே என்பது இக்குறட்கருத்து.
தான் பசப்புறு பருவரல் கொண்டாலும் தன் தலைவரை யாரும் திட்டக்கூடாது.
நயமாகப் பேசிப் பிரிவிற்கு என்னை இணங்கச் செய்த காதலரது அருளாமையை ஊரார் தூற்றாவிடின் பசப்பானவள் இவள் எனப் பெயர் பெற்றாலும் கவலையில்லை.
|