இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1184உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு

(அதிகாரம்:பசப்புறுபருவரல் குறள் எண்:1184)

பொழிப்பு (மு வரதராசன்): யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

மணக்குடவர் உரை: யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே, இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன்.
இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.

பரிமேலழகர் உரை: ('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது.
(பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.)

இரா சாரங்கபாணி உரை: அவர் கூறிய மொழிகளையே மனத்தால் நினைக்கின்றேன். அவரது பண்புத் திறங்களையே கூறுகின்றேன். அங்ஙனம் இருப்பினும் பசப்பு வரக் காரணம் வஞ்சனையோ? வேறோ? (அறிகிலேன்)


பொருள்கோள் வரிஅமைப்பு:
யான் உள்ளுவன் (மன்) உரைப்பது அவர்திறம் (ஆல்) .பசப்பு கள்ளம் பிறவோ

பதவுரை: உள்ளுவன்-நினைப்பேன்; மன்-(ஒழியிசை- சொல்லாதொழிந்த சொற்களால் பொருளை இசைப்பது); எக்காலமும்; யான்--நான்; உரைப்பது-சொல்வது; அவர்-அவர்; திறம்-குணத்திறம்; ஆல்-(அசைநிலை); கள்ளம்-வஞ்சனை; பிறவோ- வேறோவா?; பசப்பு-பசலை(நிற வேறுபாடு).


உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே;
பரிப்பெருமாள்: யான் எக்காலமும் நினைப்பேன், என்றும் சொல்லுவது அவர் திறமே;
பரிதி: நினைப்பதும் உரைப்பதும் நாயகரையேயன்றி வேறுரையேன்;
காலிங்கர்: தோழி! யான் முதுகுரவர் ஆகிய பெரியோரையும் முகம் நோக்குதல் இன்றி எப்பொழுதும் மற்று அவரையே என் நெஞ்சினால் நினைத்திருப்பது பெரிது. மற்று என் நாவினால் உரைப்பது எப்பொழுதும் அவரது குணத்திறமே. இங்ஙனம் அவரிடை அற்றம் இன்றி எனது உரையும் மனமும் ஒருங்கு கலந்திருப்பவும் இவ்விடத்து வருகின்றது அற்றம் பார்த்தல் செய்வது அல்லாமையும்;
பரிமேலழகர்: ('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்' என்ற வழிச் சொல்லியது.) அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; [அறிதி ஆகலின் - அறிவாய் ஆதலால்; நீட்டியாது - காலஞ்தாழ்த்தாமல்]

'யான் எக்காலமும் நினைப்பேன், சொல்லுவதும் அவர் திறமே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் நினைப்பது அவர் சொற்கள்; உரைப்பது அவர் நல்திறங்கள் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நினைப்பதும் பேசுவதும் எல்லாம் அவரையே', 'எந்நேரமும் அவரை என் உள்ளத்திலேயே வைத்திருக்கிறேன். நான் பேசுவதெல்லாம் அவரைப் பற்றியே!', 'அவரை மனத்தில் நினைக்கின்றேன். நான் பேசுவது அவர் நலங்களையே', 'அவர் சொற்களை உள்ளத்தால் நினைக்கின்றேன். வாயினால் சொல்லுவதும் அவர் நற்குணங்களையே', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நான் நினைப்பதும் சொல்வதும் அவர் குணத்திறங்களையே என்பது இப்பகுதியின் பொருள்.

கள்ளம் பிறவோ பசப்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இத்தன்மையேனாகவும் பசலை வஞ்சனையாகப் பரவா நின்றது. இதற்கு நிலை யான் அறிகிலேன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது
பரிப்பெருமாள்: இத்தன்மையேனாகவும் பசலை பரவா நின்றது. இதற்கு நினைவு யான் அறிகின்றிலேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: முன்பு களவுக்காலத்து வேட்கையால் அவரது செயலைக் கூறவும் நினைக்கவும் ஆற்றாமை நீங்கும்; இப்போது அதுபோல் அன்றி ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது.
பரிதி: பசலை ஏன் வந்தது என்றவாறு.
காலிங்கர்: மற்றிது ஓர் வஞ்சனையாம். இத்துணையே பசக்கின்ற பசப்பு.
பரிமேலழகர்: அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று. [பிறவோ என்பதிலுள்ள பிறவும் ஓவும் அசைநிலை; அதன் கண்ணும் - மெய்யின் உடம்பின் இடத்தும்]

'அங்ஙனம் இருக்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இருந்தும் பசலைவந்தது கள்ளத்தனமா? வேறா?', '(அப்படியிருக்க நான் எப்படி அவரைப் பிரிந்தவளாவேன்?) அதனால் இந்தப் பசப்பு நிறம் வேறு சூதாக இருக்குமோ', 'அங்ஙனமிருக்கவும் இந்தப் பசப்பு எவ்வாறு வஞ்சமாய் வந்துவிட்டது', 'அங்ஙனமாகவும் பசப்பு வந்துவிட்டது. இது வஞ்சனையாக இருந்தது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

இருந்தும் பசலை வந்தது வஞ்சனையா? வேறோவா? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நான் நினைப்பதும் சொல்வதும் அவர் குணத்திறங்களையே; இருந்தும் பசலை வந்தது கள்ளம் பிறவோ? என்பது பாடலின் பொருள்.
'கள்ளம் பிறவோ' குறிப்பது என்ன?

ஏன் இந்தப் பசலை எனக்கு? அவர் எப்போது என்னைப் பிரிந்தார்? புரியவில்லையே!

என் நினைவு பேச்சு எல்லாம் அவரது திறம் குறித்தேயாதலால் அவர் என்னைவிட்டுப் பிரியவில்லைதானே; பசலை வந்தது கள்ளமாகத்தான் இருக்க வேண்டும் எனத் தலைவி கூறுகிறாள்.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகச் சென்றுள்ள தலைவர் வரவை எதிர்நோக்கி மனைவி காத்திருக்கிறாள். பிரிவைத் தாங்கமுடியாமல் அவர் நினைவாகவே உண்ணாமல் உறங்காமல் இருப்பதால் அவள் உடல் மெலிகிறது. தூக்கமுமின்றி கண்களில் நீர் பெருக உள்ளாள். உடலெங்கும் பசலை படர்ந்தது. முன்னர் பிரிவுக்கு உடன்பட்டதும் பின்னர் அதனை ஆற்றாது பசத்தலுற்றதும் பிறர் செய்தனவல்ல எல்லாம் தன்னாலேயே வந்தனவே என உரைக்கிறாள். அத்துயரத்திலும் ஒரு தேறுதல் காண முயற்சிக்கிறாள் அவள். அவர் நீங்கியதால்தானே இப்பசப்பு உண்டானது. எனவே இது அவர் கொடுத்ததுதானே! அவர் தந்த உரிமையுடன் பசலை வந்து தன் மீது ஊர்வதாக எண்ணித் தன்னைத்தானே ஆற்றிக்கொள்கின்றாள். 'காதல் நோயையும் பசலையும் தனக்குக் கொடுத்துவிட்டு தன் அழகையும் நாணையும் உடன் எடுத்துச் சென்றுவிட்டாரே!' எனத் தலைமகள் இப்பொழுது புலம்பிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
தலைவி கூறுகிறாள்: அவரைத்தானே எந்நேரமும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்; அவர்குணங்களைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறேன். பின் ஏன் இந்தப் பசலை? 'என் நினைவிலும் மொழியிலும் அவர் என்னுடன்தானே எந்நேரமும் இருக்க எனக்கு எப்படி பசலை வந்தது?' எனக் கேட்கிறாள் அவள். அவரையே நினைத்துக் கொண்டும், அவர் நற்குணங்களையே சொல்லிக் கொண்டும் இருக்கும் எனக்கு பசலை எவ்வாறு வருதல் இயலும்? இது வஞ்சனையாக இருக்குமோ அல்லது வேறு ஏதோவோ இருக்குமா எனத் தலைவி தனக்குப் பசலை வந்ததை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள்.

நான் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன்; சொல்வதும் அவர் திறமே; இருந்தும் பசலைபடர்வது வஞ்சனையோ பிறவோ என மூன்று வாக்கியங்களைக் கொண்ட பாடல் இது.
பசலை என்பது காதலர் பிரிவில் வருவது. ஆனால் நினைவாலும் மொழியாலும் என்னுடனே அவர் எக்காலத்தும் இருக்கும்போது பசலை எனக்கு எப்படி வருதல் கூடும்? என வியக்கிறாள். இது கள்ளத்தனமாக இருக்கலாம் அல்லது வேறு எதுவாகவோ இருக்கலாம் என்கிறாள். அதனாலேயே அதைப் பொறுத்துக்கொள்கிறாள் என்பது குறிப்பு.
உரையாசிரியர் பரிப்பெருமாள் 'முன்பு களவுக்காலத்து வேட்கையால் அவரது செயலைக் கூறவும் நினைக்கவும் ஆற்றாமை நீங்கும்; இப்போது அதுபோல் அன்றி ஆற்றாமை மிகாநின்றதென்று கூறியது' எனக் கூடுதல் விளக்கம் ஒன்று தருகிறார்.

'கள்ளம் பிறவோ' குறிப்பது என்ன?

'கள்ளம் பிறவோ' என்றதற்கு வஞ்சனையாகப் பரவா நின்றது, ஏன் வந்தது?, மற்றிது ஓர் வஞ்சனையாம், இது வஞ்சனையாயிருந்தது, வஞ்சனையோ? வேறு வகையோ?, அதன் கள்ளத்தனமோ? வேறோ? அறிகிலேன், கள்ளத்தனமா? வேறா?, வஞ்சனையோ? வேறோ? (அறிகிலேன்), வேறு சூதாக இருக்குமோ!, வஞ்சகமாக என் மேல் வந்துள்ளதே!, எவ்வாறு வஞ்சமாய் வந்துவிட்டது, இது வஞ்சனையாக இருந்தது, கள்ளத்தனத்தாலா? வேறு காரணத்தாலா?, எப்படியோ கள்ளத்தனமாக வந்துள்ளது, .என்ன வஞ்சனை? என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இத்தொடரிலுள்ள கள்ளம் என்ற சொல்லுக்கு கள்ளத்தனம் அல்லது வஞ்சனை எனப் பொருள் உரைத்தனர். பிறவோ என்பது வேறே ஏதோவோ என்ற பொருள் தரும். 'கள்ளம் பிறவோ' என்ற தொடர் வஞ்சனையோ வேறே ஏதோவா எனப் பொருள்படும்.
பசப்பு உடம்பிலே வருவது; மனம் மொழியினிடத்து வருவது இயலாது. எந்நேரமும் என் காதலரையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நான் பேசுவதெல்லாம் அவரைப் பற்றியேதாம்; ஆதலால் நான் அவரைப் பிரிந்தவளும் இல்லை. அதனால் பிரிவினால் வருவதென்கிற இந்தப் பசலை நிறம் என் உடம்பினிடத்தே வந்துள்ளது எப்படி? இப்பசப்பின் செயல் கள்ளமாய் இருக்கலாம் என்று தலைவி எண்ணுகிறாள்.
பிறவும், ஓவும் அசைநிலை என்று பரிமேலழகரும் பிறரும் கொண்டனர். ஆனால் 'கள்ளம் பிறவோ என்பதில் உள்ள ஓகாரத்தைக் கள்ளத்தோடு கூட்டிக் கள்ளமோ பிறவோ எனக் கொண்டு வஞ்சனமோ வேறு வகையோ எனப் பொருள் காண்கிறார் மு வரதராசன். இதுவே ஏற்றதொரு உரையாக அமையும்.

'கள்ளம் பிறவோ' என்ற தொடர் வஞ்சனையோ வேறு ஏதாவதா என்ற பொருள் தரும்.

நான் நினைப்பதும் சொல்வதும் அவர் குணத்திறங்களையே; இருந்தும் பசலை வந்தது வஞ்சனையா? வேறோவா என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எனது மனமும் உரையும் அவரிடை ஒருங்கு கலந்திருக்க இது எப்படி வந்தது என்று தலைவி பசப்புறுபருவரல்.

பொழிப்பு

அவரையே நினைக்கின்றேன். அவர் பற்றியே பேசுகிறேன். இருந்தும் பசலைவந்தது கள்ளத்தனமா? வேறா?