புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு
(அதிகாரம்:பசப்புறுபருவரல்
குறள் எண்:1187)
பொழிப்பு (மு வரதராசன்): தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவிவிட்டதே
|
மணக்குடவர் உரை:
முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை.
இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) புல்லிக் கிடந்தேன் புடை பெயர்ந்தேன் - முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வற்று - அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது.
('கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ'? என்பதாம்.)
இரா சாரங்கபாணி உரை:
முன் ஒரு நாள் காதலரைத் தழுவிக் கிடந்தேன். அப்பொழுது சிறுது புரண்டு படுத்த அளவிலே பசப்பு என்னை அள்ளிக் கொள்வது போலப் பரவிச் சொறிந்தது.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
பதவுரை: புல்லி-தழுவி; கிடந்தேன்-படுத்திருந்தேன்; புடை-பக்கம்; பெயர்ந்தேன்-மாறினேன்; அவ்வளவில்- அவ்வளவிலே, அதற்குள்; அள்ளிக்கொள்வற்றே- அள்ளிக் கொள்ளும் அளவிற்கு செறிந்தது; பசப்பு-பசலை, நிறம் வேறுபடுதல்.
|
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன்
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முயங்கிக்கொண்டு கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தனன்;
பரிப்பெருமாள்: முயங்கிக்கொண்டு கிடந்தேன் புடை பெயர்ந்தேன்;
பரிதி: நாயகரைப் புல்லியிலிருந்து ஒருபுடைப் பெயர்ந்தேன்;
காலிங்கர்: தோழி! அவர் நம்மைப் பிரியாது உடன் வாழ் காலத்து ஒருஞான்று பெரிதும் இறுக இறுகத் தழுவிக் கிடந்தேன். அவ்விடத்து என் கண் சிறிது அயர்ந்தனவாகப் புடை பெயர்ந்தேன்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) முன்னொரு ஞான்று காதலரைப் புல்லிக்கிடந்த யான் அறியாது புடை பெயர்ந்தேன்; [புல்லிக் கிடந்த- முயங்கிக் கிடந்த; புடை பெயர்ந்தேன் - சிறுது விலகினேன்]
'இறுகத் தழுவிக் கிடந்தேன். அவ்விடத்து யான் அறியாது புடை பெயர்ந்தேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தழுவிக் கிடந்த நான் சிறுது தள்ளிப் படுத்தேன்', '(இப்போது நினைவுக்கு வருகிறது). என் காதலனைத் தழுவி அணைத்துக் கொண்டு நெடுநேரம் முயங்கியிருந்துவிட்டு', 'முன் ஒருநாள் காதலரை நெருங்கித் தழுவியிருந்தேன். சிறுது விலகினேன்', 'முன்னொரு பொழுதில் காதலரைத் தழுவிக்கிடந்த நான் அறியாது சிறுது விலகினேன்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
இறுகத் தழுவிக் கிடந்த நான் புரண்டு படுத்தேன் என்பது இப்பகுதியின் பொருள்.
அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகனால் சொல்லாது பிரியப்பட்ட தலைமகளைப் பிற்றைஞான்று இவள் வேறுபாடு கண்டு இஃதெற்றினாயிற்று என்று குறித்து நோக்கிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: அதற்குள்ளே என்மேனி அள்ளிக்கொள்ளப் பசப்பாயிற்று.
காலிங்கர்: அவ்வளவில் என் மேனி மேல் கையினாலே வாரிக் கொள்வதுபோல வந்து பசந்தது பசப்பு. எனவே இன்று இனி உரைப்பது என் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அப்புடைபெயர்ந்த அளவிலே பசப்பு அள்ளிக் கொள்வது போல வந்து செறிந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: 'கொள்வது' என்பது குறைந்து நின்றது. அள்ளிக் கொள்வது - அள்ளிக் கொள்ளப்படும் பொருள். 'அப்புடைபெயர்ச்சி மாத்திரத்திற்கு அவ்வாறாயது, இப்பிரிவின்கண் ஆமாறு சொல்ல வேண்டுமோ?' என்பதாம். [அவ்வாறாயது - அளிக்கொள்ளப்படும் பொருள் போல வந்து நிறைந்த பசப்பு; ஆமாறு - ஆகும் வகை]
'அவ்வளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது பசலை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவ்வளவிற்கே பசலை கொட்டிக் கிடந்தது', 'அந்தத் தழுவலை விட்டு நீங்கின உடனே என் மேனி நிறத்தைப் பசலை அள்ளிக் கொண்டது போல் இருப்பது வழக்கம். (அதனால்) இந்தப் பசப்பு அவருடைய அணைப்பு இல்லாத போதெல்லாம் தானாகவே உண்டாவது.)', 'அந்த அளவிலேயே பசலை என்னை முழுவதும் வாரிக்கொள்வது போன்று படர்ந்தது', 'அவ்வளவில் பசப்பு அள்ளிக் கொள்வதுபோல் வந்து செறிந்தது ' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
அந்த அளவிலேயே அள்ளிக் கொள்ளும்படி உடலில் பசலை செறிந்தது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தலைவரை இறுகத் தழுவிக் கிடந்த நான் புடைபெயர்ந்தேன்; அந்த அளவிலேயே அள்ளிக் கொள்ளும்படி உடலில் பசலை செறிந்தது என்பது பாடலின் பொருள்.
'புடைபெயர்ந்தேன்' என்றால் என்ன?
|
'தலைவரின் தழுவலைவிட்டுச் சிறிது புரண்டு படுத்தேன். அவ்வளவுதான் என் உடல் முழுதும் கொள்ளைப் பசலை!' - மனைவி.
கணவருடன் தழுவியிருந்த நேரத்தில் சிறிது விலகிப் படுத்ததன் இடைவெளியிலே பசலை கையால் வாரிக்கொள்ளும் அளவிற்கு என் உடலில் நிறைந்து படர்ந்தது என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகத் தலைவர் மனைவியிடம் விடைபெற்றுத் தொலைவு சென்றிருக்கிறார். பிரிவை ஆற்றமுடியாமல் அவர் நினைவாகவே உண்ணாமல் உறங்காமல் இருப்பதால் அவள் உடல்நலம் கெடுகிறது. தூக்கமுமில்லாமல் இருந்ததால் உடல் நிறம் மாறிற்று.
அவர் பிரிவதற்கு உடன்பட்டதையும் அதனால் பின்னர் பிரிவாற்றாது பசத்தலுற்றதையும் யான் யாரிடம் சொல்வேன்? என்று புலம்புகிறாள்;
அவர் நீங்கியதால்தானே இப்பசப்பு உண்டானதாதலால் இது அவர் கொடுத்தது என்ற உரிமையுடன் பசலை வந்து தன் மீது படர்கிறது என எண்ணித் தன்னைத்தானே தேற்றிக்கொள்கின்றாள்;
தன் அழகையும் நாண்குணத்தையும் அவர் உடன் எடுத்துக்கொண்டு, அதற்குப் பதிலாகக் காதல்நோயையும் பசலையும் தனக்குக் கொடுத்துவிட்டார்! என்கிறாள்;
அவரையே எஞ்ஞான்றும் நினைத்துக் கொண்டும் அவர் குணங்களையே சொல்லிக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் இந்தப் பசலை?;
அவர் பிரிந்து அந்தப்பக்கம் சென்றார், பசலை இந்தப் பக்கம் வந்து ஊர்ந்தது எனத் தன் மேனியில் பசலைவந்து ஒட்டிக்கொண்டதைச் சொல்கிறாள்;
விளக்குஒளி நீங்கியவுடன் எவ்விதம் இருள் சூழ்ந்துகொள்கிறதோ அதுபோல பிரிவுவேளையில் தலைவன் - தலைவி தழுவல் நீங்கியவுடன் பசலை படர்ந்தது;
இவ்வாறு தன் உடல் நிறவேறுபாடுற்றது பற்றி வருந்திக்கொண்டிருக்கிறாள் தலைவி.
இக்காட்சி:
பிரிவுக்கு முன் படுக்கையில் கணவரைத் தழுவியிருந்தது இப்பொழுது தலைவியின் நினைவுக்கு வருகிறது.
இறுகத் தழுவிக்கிடந்தேன். சிறிது புரண்டேன். அவ்வளவுதான். அந்தச் சிறு பொழுதிலேயே வாரிக் கையில் அள்ளிக்கொள்ளத்தக்க அளவு தன் உடலில் மிகுதியாகப் பரவிவிட்டது பசப்பு என்கிறாள் அவள்.
தழுவலின் இறுக்கத்தில், வரப்போகும் பிரிவை உணர்ந்த பசலை, புடைப்பெயர்ச்சி வேளையைப் பயன்படுத்தி நெருங்கி ஊர்ந்தது என்கிறாள்.
அப்புடை பெயர்ச்சிக்கே அள்ளிக்கொள்ளும் அளவாகப் பசலை வந்துதிரண்டுவிட்டதென்றால் தலைவன் திரும்பி வரும்வரை உள்ள நீண்ட பிரிவின்கண் என்னாகுமோ என்ற வருத்தம் அவளை வாட்டத் தொடங்கியது.
விளக்கொளி எப்பொழுது மறையுமென்று பார்த்து அப்பொழுதே பரவும் இருளைப்போல் கணவர் தழுவல் நீங்கியவுடனே பசலை வந்து தன்மேல் படரக் காத்திருக்கிறது என முற்குறள் கூறியது. இங்கு புடைப்பெயர்ச்சிக் காலஅளவிலே அள்ளிக்கொள்ளலாம்படி செறிந்தது முயக்கு அற்றம் பார்த்திருந்த அப்பசலை எனச் சொல்லப்படுகிறது.
தலைவரோடு கூடியிருக்கும்போது இன்பமாய் இருக்கிறது. அவரை விட்டு சிறிதுநேரம் பிரிந்தாலும் உடல் துன்புறுகிறது. அவரோடு எப்பொழுதும் உடனிருக்கத் தலைவி விரும்புகிறாள்.
தலைவருடன் எப்போதும் இடைவெளி இல்லாத மிக நெருக்கத்திலிருந்து அணைத்து இன்பம் துய்ப்பதை விரும்புவதையும், பசலையின் விரைவுத் தன்மையையும் வெளிப்படுத்துகின்றாள் தலைவி.
|
'புடைபெயர்ந்தேன்' என்றால் என்ன?
'புடைபெயர்ந்தேன்' என்றதற்குப் புடை பெயர்ந்தேன், ஒருபுடைப் பெயர்ந்தேன், கண் சிறிது அயர்ந்தனவாகப் புடை பெயர்ந்தேன், பக்கத்தே சிறிது அகன்றேன், என்னையறியாது சற்றுத் தள்ளிப் படுத்தேன், சிறுது தள்ளிப் படுத்தேன், சிறுது புரண்டு படுத்த அளவிலே, நிலை பெயர்ந்தேன், சிறிதே விலகினேன், சிறுது விலகினேன், அறியாது சிறுது விலகினேன், ஒரு சிறிது தள்ளிப்படுத்தேன், ஒரு சிறுது அவரைப் பிரிந்தேன் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'புடைபெயர்ந்தேன்' என்றதற்குப் புரண்டு படுத்தேன் என்பது பொருத்தம்.
ஒருவர் படுக்கையில் புரண்டு படுத்தல் இயல்பு. இங்கு தலைவி கணவரைத் தழுவி இருக்கும்போது பக்கம் மாறிப் படுக்கிறாள். அப்பொழுது தழுவலிலிருந்து சிறுது விலகியே ஆக வேண்டும். அப்புடைப் பெயர்ச்சி அவள் அறியாமல் நிகழ்ந்தது. நொடியில், அவரை மீண்டும் தழுவிக் கொண்டாள். இந்தச் சிறுபொழுதான இடைவெளியில் பசலை வந்து உடலெங்கும் கொட்டிவிட்டதுபோலப் பரவிவிட்டது எனச் சொல்கிறாள்.
'புடைபெயர்ந்தேன்' என்றதற்குப் ஒருபக்கம் புரண்டு படுத்தேன் என்பது பொருள்.
|
தலைவரை இறுகத் தழுவிக் கிடந்த நான் புரண்டு படுத்தேன்; அந்த அளவிலேயே அள்ளிக் கொள்ளும்படி உடலில் பசலை செறிந்தது என்பது இக்குறட்கருத்து.
தலைவரின் தழுவலிருக்கும்போது புடைப்பெயர்ச்சியிலேயே பசலை திரண்டு வந்தது என்னும் தலைவியின் பசப்புறு பருவரல்.
இறுகத் தழுவிக் கிடந்த நான் புரண்டு படுத்தேன்; அவ்வளவிற்கே பசலை அள்ளிக்கொள்ளும் அளவு கொட்டியது.
|