இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1181நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற

(அதிகாரம்:பசப்புறுபருவரல் குறள் எண்:1181)

பொழிப்பு (மு வரதராசன்): விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?

மணக்குடவர் உரை: காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன்.
இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது.

பரிமேலழகர் உரை: (முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான்; பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்?
('பிற' என்பது அசைநிலை. உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ' என்றும் கூறினாள்.)

சி இலக்குவனார் உரை: விரும்பிய அன்பர்க்கு அப்பொழுது பிரிவை உடம்பட்ட நான் அதனை ஆற்ற முடியாமல் இப்பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்.:பண்பியார்க்கு உரைக்கோ பிற.

பதவுரை: நயந்தவர்க்கு-விரும்பியவர்க்கு; நல்காமை-அருளாமை; நேர்ந்தேன்-உடன்பட்டேன், இசைந்த நான்; பசந்த-பசப்பு அடைந்துள்ள, பசலையுற்ற; என்-எனது; பண்பு-இயல்பு; யார்க்கு-எவர்க்கு; உரைக்கோ-சொல்லுவேனோ; பிற-(அசைநிலை).


நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான்;
பரிப்பெருமாள்: நம்மால் காதலிக்கப்பட்டார் அருளாமையை இசைந்தேனாக;
பரிதி: கூடிய நாயகர் பிரிந்து;
காலிங்கர்: நெஞ்சே! முன் எம்மைப் பெரிதும் நயந்து அளித்தவர் தாமே பின் இடையறவு இன்றிக் கடைபோக நல்காமையைக் கண்டு நேர்ந்தேனாகி;
பரிமேலழகர்: (முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான்;

'விரும்பியவர்க்கு அவர் அருளாமையை இசைந்த நான்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிவை விரும்பியவர் கொடுமைக்கு இசைந்தேன்', 'என்னை விரும்பியவர்க்குப் பிரிவை இசைந்த நான்', '(காமவேதனையால் தன் உடல்நிறம் பசந்துவிட்டதைப் பார்க்கும் காதலி வருந்துகிறாள்.) என் காதலர் இல்லாததால்', 'என்னை விரும்பி வேண்டிக் கொண்டவர் பிரிவதற்கு நான் உடன்பட்டேன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என்னை விரும்பியவரது பிரிவு என்னும் கொடுமைக்கு உடன்பட்டவளான நான் என்பது இப்பகுதியின் பொருள்.

பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பசந்தவெனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது.
பரிப்பெருமாள்: பசந்த எனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: காதலர் பிரிந்துழி ஆற்றியிருத்தல் பெண் கடன்' என்ற தோழிக்கு 'யானும் ஆற்றுவேனாக; இப்பசப்பை யாவரால் நீக்குவேன் என்று வெகுண்டு கூறியது.
பரிதி: நோயும் பசலையுந் தந்த வருத்தத்தை யாருக்குச் சொல்லுவேன் என்றவாறு.
காலிங்கர்: மேனி பசந்த என் பருவரலினை வேறு யார்க்குச் சொல்லி ஆற்றுவேனோ என்பதனால் இது தோழி கேட்பக் கூறிய கொடுமைக் கூற்று என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்? [ஆற்றாது-பொறுக்காமல்]
பரிமேலழகர் குறிப்புரை: 'பிற' என்பது அசைநிலை. உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ' என்றும் கூறினாள். [பசத்தல் - பசப்பு நிறமடைதல்]

'பசந்தவெனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பின் என் பசலையை யார்க்குச் சொல்வது?', 'இப்பொழுது மேனி பசந்த என் இயல்பினை யாரிடம் கூறுவேன்?', 'என் மேனி முழுதும் பசந்துவிட்டது. இதை நான் காதலிக்கிற என் நாயகனுக்குக் காட்ட அவர் இங்கில்லையே! வேறு யாரிடத்தில் காட்டி என்ன பயன்?', 'அப்பிரிவுத் துன்பத்தால் நிறவேறு பாடுற்ற என் நிலையை இப்போது யார்க்கு எடுத்துச் சொல்லுவேன்?' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மேனி பசந்த என் இயல்பினை யாரிடம் சொல்வேன்?' என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
என்னை விரும்பியவர்க்கு நல்காமை இசைந்த நான் மேனி பசந்த என் இயல்பினை யாரிடம் சொல்வேன்? என்பது பாடலின் பொருள்.
'நல்காமை' என்றால் என்ன?

நான்தான் தவறு செய்தேன், அதன் விளைவை வெளியில் சொல்லும் நிலையிலா இருக்கிறேன்!

'விரும்பி வேண்டிக் கொண்ட தலைவனின் பிரிவுக்கு அன்று உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை, யாரிடம் சென்று எடுத்துச் சொல்வேன்?' என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
தலைவன் தொழில் காரணமாகப் பிரிந்து சென்றுள்ளான். காதலியின் வேண்டா வெறுப்பான இசைவைப் பெற்றுத்தான் சென்றிருக்கிறான். சென்றபின் தனிமையைத் தலைவியால் பொறுக்க முடியவில்லை, எந்த நேரமும் அவன் வரவை எண்ணியே வருந்திக் கொண்டிருக்கிறாள்; உடல் மெலிகிறாள்; அவளது தூக்கமும் தொலைந்தது; நீர் சொரியும் கண்களைப் பழிக்கிறாள். தனக்குத் துயர் தரும் காதல்நோய் உண்டாவதற்கு தனது கண்கள் காதலரைக் காட்டியதுதான் காரணம்; கண்களே முதலில் அவரைப் பார்த்துக் காதல் கொண்டு மகிழ்ந்தன; இப்பொழுது காதல்நோயினைத் தந்து தன்னைத் தூங்கவிடாமல் செய்வதும் இதேகண்களே என்கிறாள். கொழுநரைக் காணுவதற்காக அவளது கண்கள் அமைதியற்று அலைமோதுகின்றனவாம். தனது காதல்நோயினை தமது கண்களே ஊரறிய பறை அறைவித்துச் சொல்லுகின்றனவே என வருந்திக் கொண்டிருக்கிறாள் தலைவி.

இப்பாடல்:
உணவு செல்லவில்லை உறக்கம் கொள்ளவில்லை. எந்த நேரமும் பிரிந்து சென்றுள்ள காதலரையே நினைத்துக் கொண்டிருக்கும் தலைவியின் உடலெங்கும் பசலை படர்ந்துவிட்டது. பசலை அல்லது பசப்பு என்பது தலைவனைப் பிரிந்துள்ள தலைவியின் உடலில் தோன்றும் நிற வேறுபாட்டைக் குறிப்பது. பசலை நோய் பசப்பு என்றும் அறியப்படும். பிரிவுத் துன்பத்தைத் தாங்கமுடியாமல் அவள் உடல் பசந்தது அதாவது தலைவியினது. தோலின் இயற்கையான நிறம் மாற்றம் அடைந்தது; மெலிந்து அழுது அழுது, கண் சோர்ந்து போயுள்ள தலைவி நிறவேறுபாட்டாலும் தன் மேனியழகு குறைந்தது கண்டு மேலும் வருத்தம் அடைகிறாள்.
இப்பொழுது ஆற்றமாட்டாமல் 'நான்தானே பிரிவுக்கு ஒத்துக் கொண்டேன். இப்பொழுது பசலை படர்ந்திருக்கிறது. இதை நான் யாரிடம் போய்ச் சொல்வது?' எனப் புலம்புகிறாள். முன்னர் உடன்பட்டதும் பின்னர் ஆற்றாது பசத்தலுற்றதும் பிறர் செய்தனவல்ல எல்லாம் அவளாலே வந்தனவே என்று சொல்கிறாள்.

நயந்தவர் என்ற சொல் பொருட்செறிவுடன் அழகுற அமைந்துள்ளது. விரும்பியவர் அல்லது காதல் கொண்டவர் என்று பொருள் தந்து பிரிவுக்கு வேறு காரணம் இல்லை என்பதைச் சொல்கிறது. நய என்ற வேர்ச்சொல் விருப்பம் என்ற பொருள் தரும். மேலும் நேர்ந்தேன் என்று அடுத்து வரும்சொல் இவள் உடன்பட்டதையும் சொல்கிறது.
நயந்தவர் என்ற சொல்லுக்கு விரும்பியவர் என்ற பொருள் தவிர்த்து 'காதலர் அன்பு மொழி கூறி என்னைத் தேற்றி நயந்து கொண்டார்' என்றும் 'விரும்புமாறு பக்குவாய்ப் பேசியவர்' அதாவது 'நயந்து பேசி பிரிவதற்கு என் விருப்பத்தைப் பெற்றுவிட்டார்' என்றும் பொருள் கூறுவர்.

இப்பாடலை விளக்க வந்த மணக்குடவர் 'இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது' என்றார். அதை விரித்து பரிப்பெருமாள் 'காதலர் பிரிந்துழி ஆற்றியிருத்தல் பெண் கடன்' என்ற தோழிக்கு 'யானும் ஆற்றுவேனாக இப்பசப்பை யாவரால் நீக்குவேன் என்று வெகுண்டு கூறியது' என உரை வரைந்தார். காலிங்கர் 'இது தலைவியின் கொடுமைக் கூற்று' என்று சொல்வார்.

'நல்காமை' என்றால் என்ன?

'நல்காமை' என்ற சொல்லுக்கு அருளாமை, பிரிவு, கொடுமை, தெரிவிக்காமை, இன்பம் தாராமை, கொடுக்கக் கூடாத பிரிவு, என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நல்காமை என்ற சொல்லுக்கு நேர் பொருள் அளிக்காமை. அளித்தல் என்பது அருளுதல் என்ற பொருளில் குறளில் ஆளப்படும் சொல்லாகும். இங்கு தலைவன் எனக்கு அருளாமல் பிரிந்து சென்றுவிட்டாரே எனக் கூறுகிறாள் தலைவி.
தலைவன் எப்பொழுதும் தன் அருகிலேயே இருக்க வேண்டும் என்றுதான் தலைவி விரும்புவாள். பிரிவில் அது இயலாது. அதைத்தான் நல்காமை அல்லது அருளாமை என்று தலைவி சொல்கிறாள். தலைவனைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' எனச் சொல்லப்பட்டது என்று விளக்குவார் பரிமேலழகர். அகத்திணைப் பாடல்களில் ‘நல்காமை’ என்பது அருளாமையைக் குறிப்பதே மரபாகும் என்பார் இரா சாரங்கபாணி. நல்காமை நேர்ந்தேன் என்றது அருளாமைக்கு இசைந்தேன் அதாவது பிரிவுக்கு உடன்பட்டேன் எனப் பொருள்படும்.

'நல்காமை' என்ற சொல் இங்கு அருளாமை என்ற பொருள் தரும்.

என்னை விரும்பியவரது பிரிவு என்னும் கொடுமைக்கு உடன்பட்டவளான நான், மேனி பசந்த என் இயல்பினை, யாரிடம் சொல்வேன்?' என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலர் என்னுடன் இல்லை யாதலால் என் உடல் வாட்டம் காண்கிறது எனத் தலைவி பசப்புறுபருவரலாகச் சொல்கிறாள்.

பொழிப்பு

என்னை விரும்பியவரது பிரிவு என்னும் கொடுமைக்கு இசைந்த நான் மேனி பசந்துள்ளேன்; இதை யார்க்குச் சொல்வது?