இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1188



பசந்தாள் இவளென்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்

(அதிகாரம்:பசப்புறுபருவரல் குறள் எண்:1188)

பொழிப்பு (மு வரதராசன்): 'இவள் பிரிவால் வருந்திப் பசலைநிறம் அடைந்தாள்` என்று பழி சொல்வதே அல்லாமல், 'இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார்` என்று சொல்பவர் இல்லையே!

மணக்குடவர் உரை: இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவர் என்று அவரது கொடுமையைச் சொல்வார் இல்லை என்றவாறு.
இஃது இப்பசப்பு வரலாகாது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: ('நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை.
('என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின்.)

வ சுப மாணிக்கம் உரை: பசலையுற்றாள் இவள் எனப் பழிக்கின்றனர்; பிரிந்தாரே அவர் எனச் சொல்வார் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இவள் .பசந்தாள் என்பது அல்லால் அவர் இவளைத் துறந்தார் என்பார் இல்

பதவுரை: பசந்தாள்--பசப்புற்றாள்; இவள்-இவள் (இங்கு தலைவி குறித்தது); என்பது-என்றல், கூறுவது; அல்லால்-அல்லாமல், அன்றி; இவளை-இவளை; துறந்தார்-பிரிந்து போயினார்; அவர்-அவர் (இங்கு கணவர் குறித்தது); என்பார்-என்று சொல்லுபவர்; இல்-இல்லை.


பசந்தாள் இவளென்பது அல்லால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது;
பரிப்பெருமாள்: இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது;
பரிதி: பசந்தாள் என்று சொல்லுவர் அல்லது;
காலிங்கர்:) நெஞ்சே! இவள் பசந்தாள் பசந்தாள் என்று எப்பொழுதும் என்னைக் குறைசொல்வது அல்லாமல்;
பரிமேலழகர்: ('நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; [பசக்கற்பாலை அல்லை- பசப்பு நிறம் அடைதற்கு உரியை அல்லை]

'இவள் பசந்தாள் என்று என்னைக் குறைசொல்வது அல்லாமல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவள் பசப்பெய்தினாள் என்று என்னைப் பழி கூறுகின்றாரே யன்றி', 'இவள் என்ன இப்படிப் பசந்துவிட்டாளே என்று எல்லாரும் ஏளனம் செய்கிறார்களே அல்லாமல்', 'இவள் பொறுத்திராது பசப்படைந்தாள் என்று என்னைக் குறைகூறுவதல்லது', 'இவள் ஆற்றியிராமல் பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லாமல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இவள் ஆற்றமாட்டாது பசப்படைந்தாள் என்று என்னைக் கூறுவதல்லாமல் என்பது இப்பகுதியின் பொருள்.

இவளைத் துறந்தார் அவரென்பார் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவளைத் துறந்தார் அவர் என்று அவரது கொடுமையைச் சொல்வார் இல்லை என்றவாறு.
மணக்குடவ குறிப்புரை: :இஃது இப்பசப்பு வரலாகாது என்று தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: இவளைத் துறந்தார் அவர் என்று அவரது கொடுமையைச் சொல்வார் இல்லை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை : இப்பசத்தலாகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: நாயகியைத் துறந்தார் இவர் என்று சொல்லுவாரில்லை என்றவாறு.
காலிங்கர்:) இவளைப் பிரிந்து நின்றார் அவர் மற்று இது காரணமாகத்தன்மேனி பசந்தாள் இவள் என்று இங்ஙனம் சொல்லுவார் எமக்கு ஒருவரும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை.
பரிமேலழகர் குறிப்புரை: 'என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின். நெருங்குதல் - பொறுத்திருக்க வேண்டும் என்று பலமுறையும் கண்டித்துக் கூறுதல்]

'இவளைப் பிரிந்து நின்றார் அவர் என்று சொல்லுவார் ஒருவரும் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர் இவளைப் பிரிந்து சென்றார் என்று அவரைப் பழி கூறுவார் யாருமில்லை', 'அவர் இவளை இப்படிப் பசக்கவிட்டுப் பிரிந்திருக்கிறாரே என்று பச்சாதாபபடுகிறவர்கள் யாருமில்லையே', 'அவர் இவளை விட்டுப் போயினாரென்று பழிப்பார் ஒருவருமில்லை', 'இவளை அவர் விட்டு நீங்கினார் என்று அவரைக் குறை கூறுவார் ஒருவரும் இலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

இவளை நீங்கிச் சென்றிருக்கிறாரே என்று அவரைச் சொல்வார் ஒருவருமில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இவள் ஆற்றமாட்டாது பசப்படைந்தாள் என்று என்னைச் சொல்வதல்லாமல் இவளைத் துறந்தார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்பட்ட 'துறந்தார்' யார்?

என்ன உலகமிது! நான் பசலையுற்றதற்கு என்னை மட்டும்தான் குறைகூறுகிறார்கள்; அவரை யாரும் ஒன்றும் சொல்வதில்லையே!

‘இவள் பசந்தாள்’ என்று என்னைக் குறைசொல்லுமாறு பேசுவது அல்லாமல், 'இவளைத் தலைவர் நீங்கிச் சென்றுவிட்டார்' எனச் சொல்வார் யாரும் இல்லை என்கிறாள் தலைவி.
காட்சிப் பின்புலம்:
கடமை கருதித் தலைவர் மனைவியிடம் விடைபெற்றுத் தொலைவு சென்றிருக்கிறார். அவரது பிரிவை ஆற்றமுடியாமல் அவர் நினைவாகவே உண்ணாமல் உறங்காமல் இருப்பதால் அவள் உடல்நலம் கெடுகிறது. உறக்கமுமின்றி இருந்ததால் அவளது உடல் பசலையுற்றது.
கணவரது பிரிவை உடம்பட்டு பின் அதனை ஆற்றமுடியாமல் பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்?; கணவர் பிரிந்து சென்றதால்தானே இப்பசப்பு உண்டானது என்பதால் அவர் கொடுத்தது என்ற பெருமிதத்தால் பசலை வந்து தன் மீது படர்கிறது; காமநோயையும் பசலையும் எனக்குக் கொடுத்துவிட்டு என்அழகையும் நாணினையும் அவர் உடன் எடுத்துக்கொண்டுவிட்டார்; அவரைத்தான் எப்பொழுதும் நினைத்துக் கொண்டும் அவர் குணங்களையே உரைத்துக்கொண்டிருக்கும் எனக்கு ஏன் இந்தப் பசலை வந்தது?; அவர் பிரிந்து அங்குதான் இருக்கிறார், அதற்குள் பசலை இங்கும் வந்து ஊர்ந்ததே; விளக்கு ஒளி நீங்குவதற்காகக் காத்திருக்கும் இருள்போல கணவரின் தழுவல் நீங்கும் நேரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பசலை; பள்ளியில் கணவரை இறுகத் தழுவியிருந்தபோது சிறிது புரண்டேன், அதற்குள்ளாகவே அள்ளிக்கொள்ளத்தக்க அளவு பசலை திரண்டுவிட்டது, பிரிவின்கண் என்னாகுமோ?;
இவ்வாறு தன் உடலில் ஏன் பசலை ஊர்ந்தது என்பதையும் பசப்பின் விரைவையும் அதன் தன்மைகளையும் நினைத்து வருந்திக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
பிரிவுத் துன்பம் தாங்கமாட்டாமல் பசலை எய்திய தலைவியைக் கண்ட ஊரார் 'இவள் கணவர் வரும்வரை ஆற்றியிருக்க மாட்டாளா, எந்நேரமும் கணவருடன் ஒட்டிக் கொண்டே இருக்க வேண்டுமாக்கும்' என எள்ளிப் பேசுகிறார்கள். இதைக் கேட்ட தலைவி 'என் உடல்நிறம் கலங்கல் உற்றதற்கு அவர் தானே காரணம்? அவர் பிரிவால்தானே நான் துயருறுகிறேன். அதைப்பற்றி ஏன் ஒருவரும் வாய் திறப்பதில்லை' என உணர்ச்சி வயப்பட்டுக் கூறுகிறாள்.

கணப்பொழுதும் கொண்கனை விட்டுப் பிரிய நினையாத காதலியின் உணர்வுகளைச் சொல்லும் பாடல் இது. ஊரார் பேச்சு எப்போதும் ஒரு சார்பாகவே இருக்கிறதே என்கிறாள் தலைவி. இவள் பசந்தாள் பசந்தாள் என்று எப்பொழுதும் தன்னைக் குறைசொல்வது அல்லாமல், இந்தப் பெண்ணை இங்கேயே விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று யாரும் சொல்வதில்லையே ஏன்? என இவ்வுலகியலை நினைந்து நொந்து கொள்கிறாள் அவள். தலைவியைப் பார்க்கிறவர்கள் எல்லாரும் அவளையே பொறுத்திருக்க வேண்டும் என்று கடிந்து கூறுவதாக நினைக்கிறாள். இருப்பினும் அவளது ஆற்றமையான கூற்றிலும் நாகரிகம் தென்படுகிறது. காதலர் பழிக்குரியவர் என்றோ அவர் குற்றமானவர் என்றோ அவள் இங்கு சொல்லவில்லை; ஊரார் இப்படிப் பேசுகிறார்களே என்று மட்டுமே உரைக்கிறாள்.

இங்கு சொல்லப்பட்ட 'துறந்தார்' யார்?

'துறந்தார் என்ற சொல்லுக்குத் துறந்து போயினார், தவிக்கவிட்டுப் பிரிந்து போனவர், பசக்கவிட்டுப் பிரிந்திருப்பவர், விட்டுப் பிரிந்து போனார், கைவிட்டுப் போய்விட்டவர், பிரிவை உண்டாக்கியவர், விட்டுவிட்டுப் போய்விட்டவர், விட்டுப் பிரிந்தார் என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

துறந்தார் என்ற சொல் இங்கு விட்டு நீங்கியவர் என்ற பொருளில் உள்ளது. தலைவியின் மீது பசலையைக் கண்டு அவள் பிரிவாற்றாமையைப் பழிக்கின்றவர்கள் அவளது கணவர் அவளை விட்டுப் பிரிந்து சென்றுள்ளமையைக் கூறி அவர் குற்றத்தை எடுத்துக் காட்டுவாரில்லை என வருந்துகின்றாள்.

துறந்தார் என்பது நீங்கிச் சென்ற கணவரைச் சுட்டும்.

இவள் ஆற்றமாட்டாது பசப்படைந்தாள் என்று என்னைச் சொல்வதல்லாமல் இவளை நீங்கிச் சென்றிருக்கிறாரே என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பசலைக்கு அவர்தானே காரணம் என்னும் தலைவியின் பசப்புறு பருவரல்.

பொழிப்பு

இவள் பசப்பெய்தினாள் என்று என்னைச் சொல்கின்றார்களேயன்றி இவளைப் பிரிந்து சென்றார் என்று அவரைக் கூறுவார் யாருமில்லை.