நல்குரவு, இரவு, இரவச்சம், கயமை ஆகிய பொருட்பாலின் கடைசி நான்கு அதிகாரங்கள் குடிமக்களுக்குத் தகாதவற்றை எடுத்துக்கூறுவன. அவற்றுள்ளும் வறுமையே இரவுக்கும் கயமைக்கும் பெரிதும் காரணமாக அமைகிறது. நல்குரவு என்னும் இவ்வதிகாரத்தில் வறியவர்களின் வாழ்வை நினைந்து உருகிய உணர்வோடு வறுமையின் கொடுமையைப் புலப்படுத்துகின்றார்.
நல்குரவு என்பது பொருளில்லா நிலையைச் சொல்வது. இல்லாரை எல்லாரும் எள்ளுவர்.
பொருள் வலி ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. பொருளில்லா வறுமை மனிதனை மனிதனாக வாழவொட்டாமல் செய்துவிடுகிறது. பசி வந்தால் பத்தும் பறந்து போகும். அவ்வையார் பெரும்பசி வந்தால் பெருமை, அடக்கம், நாணம், உயர்வு, மேன்மை, கல்வி, அறிவு, முயற்சி, தவம், அன்பு எல்லாம் பறந்து விடும் என்றார்.
வறியநிலை வாழ்க்கைக்கே இடையூறானது; எவரும் எய்தக்கூடாத ஒன்று.
வறுமை உண்டாவதற்குக் காரணங்களையும் அதை நீக்குதற்கான தீர்வுகளையும் வள்ளுவர் இவ்வதிகாரத்தில் கூறவில்லை. ஆனால் கருத்தியல் வகையாகவும் உலகியல் வகையாகவும் அவற்றைக் குறள்நூலின் பிற இடங்களில் ஆங்காங்கே எடுத்துக் காட்டியுள்ளர். அவற்றிலிருந்து சில:
கருத்தியல்;
உலக இயற்கை: ஆக்கமும், கேடும் உலகத்தில் இயல்பாவைதான் என்பதை கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி (நடுவுநிலைமை 115 பொருள்: கேடும் பெருக்கமும் உலகில் இல்லாதன அல்ல; அவை காரணமாக உள்ளம் சாயாமல் இருத்தலே சான்றோர்க்கு அழகு) போன்ற குறள்கள் காட்டின. இயற்கையாக உண்டாகும் இன்ப துன்பங்களை ஒருவன் ஒத்துக்கொண்டு மேற்செல்ல வேண்டும் என்பதான சிந்தனை இது.
ஊழ்: ஊழிற் பெருவலி யாவுள? கைப்பொருள் போக்கும் ஊழ். ஒருவற்கு வறுமை அடையவேண்டும் என்றிருந்தால் அது நடந்தே தீரும். மலைபோல் உயர்ந்து தோன்றி வளமுடன் வாழ்ந்தாலும் ஊழின் செயலால் அவ்வாழ்வு மடமடவென்று சரிந்து நல்குரவால் மடுவாகிவிடும். துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின் (ஊழ் 378 பொருள்: ஊழினால் அவர் அடையக்கூடியன நேராது கழிந்தால் நுகர்பொருள் இல்லா வறியவர் துறவியாகி இருப்பார்களே?) என்று ஊழ் அதிகாரக் குறள் ஒன்று கூறியது. இதன் திரண்ட கருத்து ஒருவர் துறவு மேற்கொள்ளாதிருப்பது அவர் வறுமைத் துன்பம் அடைதல் வேண்டும் என்னும் ஊழின் முறைமையாற் போலும் என்பது.
உலகியல் காரணங்களாகக் கூறப்பட்டவை:
மழையின்மை: விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி (வான் சிறப்பு 13 பொருள்: மழை பொய்த்தால் விரிந்த நீரினையுடைய அகன்ற நிலவுலகத்தின்கண் பசி உயிர்களை வாட்டி வதைக்கும்), விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது (வான் சிறப்பு 16 பொருள்: வானின்று மழைத் துளி வீழ்ந்தால் அல்லது அவ்விடத்து பச்சைப் புல்நுனியுங் காண்பது அரிது) ஆகிய குறள்கள் பசி, வறட்சி ஆகியவற்றுக்கு மழை பொய்ப்பது ஒரு காரணம் எனத் தெரிவிக்கின்றன.
பிற காரணங்கள்: இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு (வரைவில்மகளிர் 920 பொருள்: இரண்டுமனத்தினை உடைய மகளிரும், கள்ளும், சூதும் செல்வத்தினின்றும் நீக்கப்படப்போவார்க்கு உறவு) என்னும் பாடல் பொருட்பெண்டிர் தொடர்பு, கள்ளுண்ணல், சூதாடல் போன்ற தீய ஒழுக்கங்கள் செல்வம் கடிதில் நீங்கி வறுமையுறுவதற்கான காரணங்களாம் என்கிறது.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் (ஆள்வினையுடைமை 616 பொருள்: முயற்சி செல்வத்தினை உண்டாக்கும்; முயற்சி செய்யாமல் இருத்தல் ஒருவனை வறுமையுள் செலுத்திவிடும்) போன்ற குறட்பாக்கள் முயற்சியின்மை வறுமைக்குள் புகுத்திவிடும் என்பதைச் சொல்வன.
மதிநுட்பமின்மை, வணிகத்தில் இழப்பு, பொருளாசையின்மை, தாயத்தாரும் கள்வரும் கவர்தல், இயற்கைப்பேரழிவு உண்டாதல் போன்றவற்றாலும் ஒருவர் வறுமை எய்தலாம். அறச்செய்கைகள் புரிந்து வறுமை அடைபவர்களும் உண்டு.
வறுமையைவிடத் துன்பந்தருவது வேறு இல்லை; வறுமையே கொடியது. வறுமையென்னு மாபாவி ஒருவனுக்கு மறுவுலக இவ்வுலக இன்பங்களைக் கெடுக்கும்.
வறுமை என்பது பேராவல் கொண்டது; அனைத்து பழம்மரபுகளையும் அழகினையும் ஒருசேர அழித்துவிடும். நற்குடிப்பிறந்தாரைக்கூட வறுமைத்துன்பம் இழிவுச் சொற்கள் பேசச்செய்யும்.
வறுமையின் கண் வேறு பல துன்பங்களும் தாமே வந்து சேரும்; மற்ற வன்மையுடைய பல இடும்பைகளில் உறைவிடம் நல்குரவுத் துன்பமே ஆகும்.
நல்ல பொருள்களை எண்ணிச் சொன்னாலும் வறியவரின் சொற்கள் பொருட்படுத்தப்படா. மகன் செய்யும் எல்லாத் தவறுகளையும் மன்னிக்கும் தாய் அவனது அறத்தோடு இயைபில்லா வாழ்வால் அவனுக்கு வறுமை உண்டானால் அவனை வேற்றுஆள் போலப் பார்த்து அகல்வாள்.
வறுமை என்பது உண்மையில் சாவுதான்; நேற்று வந்து கொன்றது போன்று துன்பத்தைச் செய்த பசித்துன்பம் இன்றைக்கும் என்பால் வந்துவிடுமோ? என்றும்
ஒருவன் நெருப்பிடையே கூடத் தூங்கிவிடலாம் ஆனால் வறுமையில் உறக்கம் வராது என்றும் நல்கூர்ந்தார் நாளும் அஞ்சித் துடிப்பர்.
பொருளிலார் நுகர்ச்சியை முற்றும் துறவாவிடின் உப்புக்கும் கூழுக்கும் தண்டமாக இருப்பர். இவை இவ்வதிகாரம் தரும் செய்திகள்.