இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1045



நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்

(அதிகாரம்:நல்குரவு குறள் எண்:1045)

பொழிப்பு (மு வரதராசன்): வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.

மணக்குடவர் உரை: வறுமை யெனப்படும் இடும்பையுள் பலவாகிய வன்மையுடைய துன்பங்கள் வந்து சோர்வுபடும்.
இது துன்பங்கள் சென்றுளவாமென்றது. பல்குரைத் துன்பம்- இரப்பார்க்கு உரைக்கத் துன்பம்.

பரிமேலழகர் உரை: நல்குரவு என்னும் இடும்பையுள் - நல்குரவு என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே; பல் துன்பங்கள் சென்றுபடும் - பல துன்பங்களும் வந்து விளையும்.
(குரை - இசை நிறை. செலவு - விரைவின்கண் வந்தது. துன்பமுந் தானும் உடனே நிகழ்தலின் நல்குரவைத் துன்பமாக்கியும் அத்துன்பமடியாகச் செல்வர் கடை நோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாள்தொறும் வேறுவேறாக வருதலின், எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: வறுமை எனப்படும் கடுந்துன்பம் ஒன்றினுள்ளே, பலவகைப்பட்ட துன்பங்களும் உடன்வந்து குவியும். கடன், நோய், வசை எனப் பல துன்பங்கள் வறுமையுடன் கூடி வரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும்.

பதவுரை: நல்குரவு-வறுமை; என்னும்-என்கின்ற; இடும்பையுள்-பெருந்துன்பத்துள், நெருக்கடியில்; பல்-பலவாகிய; குரை -(இசை நிறை, குரை என்பதற்கு இங்கே பொருள் இல்லை); துன்பங்கள்-துயரங்கள்; சென்று-வந்து; படும்-விளையும்.


நல்குரவு என்னும் இடும்பையுள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வறுமை யெனப்படும் இடும்பையுள்;
பரிப்பெருமாள்: நல்குரவாகிய துன்பத்தின் உள்ளே;
பரிதி: மிடியன் என்கிற விதனத்தினாலே;
காலிங்கர்: வறுமை என்று சொல்லப்படுகின்ற இத்துன்பத்தின் கண்ணே;
பரிமேலழகர்: நல்குரவு என்று சொல்லப்படும் துன்பம் ஒன்றனுள்ளே;

'வறுமை என்று சொல்லப்படுகின்ற துன்பத்தின் கண்ணே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வறுமையாகிய நெருக்கடியில்', 'வறுமை என்று சொல்லப்படும் பெருந்துன்பம் ஒன்றிலேயே', 'தரித்திரம் என்ற ஒரு துன்பத்தினால்', 'வறுமை என்னும் பெருந் துன்பத்துள்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வறுமை என்று சொல்லப்படும் பெருந்துன்பத்துள் என்பது இப்பகுதியின் பொருள்.

பல்குரைத் துன்பங்கள் சென்று படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பலவாகிய வன்மையுடைய துன்பங்கள் வந்து சோர்வுபடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது துன்பங்கள் சென்றுளவாமென்றது. பல்குரைத் துன்பம்- இரப்பார்க்கு உரைக்கத் துன்பம்.
பரிப்பெருமாள்: பல துன்பங்களும் சென்று தோற்றும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: குரை-அசை. மேல்கூறியவே அன்றி எல்லாத் துன்பமும் உண்டாகும்.
பரிதி: பல பல துன்பம் உண்டாகும் என்றவாறு.
காலிங்கர்: மற்றும் பல தன்மையாகிய துயரம் ஆவது தான் இனிது உண்ணப்பெறாத துயரமும், தன் சுற்றம் ஒம்பப் பெறாத துயரமும் சான்றோர்க்கு உதவப்பெறாத துயரமும், வருவிருந்து ஓம்பப் பெறாத துயரமும் பிறவும் சென்று சேரும்; எனவே வறுமைத்துயர் உற்றோன் மற்று உறாத்துயர் ஒன்றும் இல்லை; எல்லாத் துயரும் உறுவன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: பல துன்பங்களும் வந்து விளையும்.
பரிமேலழகர் குறிப்புரை: குரை - இசை நிறை. செலவு - விரைவின்கண் வந்தது. துன்பமுந் தானும் உடனே நிகழ்தலின் நல்குரவைத் துன்பமாக்கியும் அத்துன்பமடியாகச் செல்வர் கடை நோக்கிச் சேறல் துன்பமும், அவரைக் காண்டல் துன்பமும், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பமும், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பமும், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பமும் முதலாயின நாள்தொறும் வேறுவேறாக வருதலின், எல்லாத் துன்பங்களும் உளவாம் என்றும் கூறினார். இவை ஐந்து பாட்டானும் நல்குரவின் கொடுமை கூறப்பட்டது. [தானும்- வறுமையும்]

'பல துன்பங்களும் வந்து விளையும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பல துன்பங்கள் வந்து சேரும்', 'பலவகைத் துன்பங்களும் சென்று அடங்கும்', 'பலவிதமாகச் சொல்லப்படுகிற மற்றெல்லாத் துன்பங்களும் வந்து சேரும்', 'பல வகைப்பட்ட சிறு துன்பங்களெல்லாம் சென்று அடங்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பலவகைத் துன்பங்களும் வந்து சேரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வறுமை என்று சொல்லப்படும் பெருந்துன்பத்துள் பல்குரைத் துன்பங்கள் வந்து சேரும் என்பது பாடலின் பொருள்.
'பல்குரைத் துன்பங்கள்' என்னும் தொடர் குறிப்பது என்ன?

வறுமை தனித்து வரும் துன்பமல்ல.

வறுமை என்னும் பெருந்துன்பத்துள் பலவகைப்பட்ட வன்மையுடைய துன்பங்கள் சேர்ந்து விளையும்.
வறுமையானது ஒப்புக் கூற முடியாத அளவு இன்னாதது. இன்மை மென்மேலும் பல புதிய துயரங்களைத் தோற்றுவிக்கும். நுகரப்படுவனயாவும் இல்லாமை வந்துவிட்டால் அதனுடன் சேர்த்து வேறு பலவகையான துன்பங்களும் தாமே திரண்டு வந்து ஒருவனை அழுத்தி அவனை மேலும் வருத்தும். நல்குரவால் முன்னமே நலிந்து இருப்பவனை மேலும் மேலும் பல துன்பங்கள் விரைவுடன் சூழ்ந்துகொள்ளும் என்கிறது பாடல்.
இல்லாமை என்ற துன்பம் வந்துவிட்டால், பொருள் இல்லாமையால் உண்டாகும் உணவுக்குறைபாட்டால் உடற்பிணிகள் வரும், உற்ற நோய்க்கு மருத்துவம் செய்ய வழியில்லாமல் செய்யும். பொறாமை பிறக்கும்; பேராசை வரும்; சினம் பொங்கும்; இயலாமை தோன்றும்; இழி சொற்கள் வெளிப்படும்; இரப்பிற்கு இட்டுச் செல்லும். அச்சத்தையும் கயமையையும் தோற்றுவிக்கும். பிறர் பொருளைக் கவர்ந்து கொள்ளச் செய்யும் நிலையை உருவாக்கி விடும். இவ்விதம் எல்லாவகையிலும் சொல்லவொண்ணாத் துன்பங்களைத் தொடர்ச்சியாகச் சந்திக்க நேரிடும். பட்ட காலிலே படும் என்பது பழமொழி.

இக்குறளிலுள்ள 'படும்' என்ற சொல்லுக்கு பலர் விளையும் எனப் பொருள் கூறினர். அதற்கு அதனுள் அடங்கும் என்றும் அழியும் என்றும் வேறு சிலர் பொருளுரைத்தனர். ‘இடும்பையுள் சென்று படும்’ என்ற பகுதியை நோக்கும்போது அழியும் என்ற பொருளே சிறப்பாக உள்ளது. வறுமைத் துன்பத்தின் முன் மற்றத் துன்பங்கள் இல்லை-அழியும் என்பர்.
'வறுமைக் கொடுமையின் முன் ஏனைய துன்பங்களின் கொடுமை சூரியன் முன் மின்மினிபோல் மாயும்' என்பது தண்டபாணி தேசிகரது விளக்கம்.

'பல்குரைத் துன்பங்கள்' என்னும் தொடர் குறிப்பது என்ன?

'பல்குரைத் துன்பங்கள்' என்றதற்கு பலவாகிய வன்மையுடைய துன்பங்கள், பல துன்பங்களும், பல பல துன்பம், பல தன்மையாகிய துயரம், பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும், பலவகைப்பட்ட துன்பங்களும், பலவகைத் துன்பங்களும், பலவிதமாகச் சொல்லப்படுகிற மற்றெல்லாத் துன்பங்களும், பலப்பல துன்பங்களும், பல வகைப்பட்ட சிறு துன்பங்களெல்லாம், பல பெருந்துன்பங்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பரிமேலழகர் பல், குரை எனப் பிரித்துக் குரை-இசைநிறை எனச் சொல்லி பல்குரைத் துன்பங்கள் என்பதற்குப் 'பல துன்பங்கள் எனப் பொருள் கூறினார். நாமக்கல் இராமலிங்கம் பல்குரை என்பதனைப் பல்கு+உரை எனப் பிரித்துப் பலவகையில் விரித்துரைத்தல் என உரை கண்டுள்ளார்.
பல்குரைத் துன்பங்கள் எவை எவை எனச் சில உரையாளர்கள் முயன்று கூறியுள்ளனர். அவை:

  • இரப்பார்க்கு உரைக்கத் துன்பம்.
  • தான் இனிது உண்ணப்பெறாத துயரம், தன் சுற்றம் ஒம்பப் பெறாத துயரம் சான்றோர்க்கு உதவப்பெறாத துயரம், வருவிருந்து ஓம்பப் பெறாத துயரம்.
  • செல்வர் கடை நோக்கிச் சேறல் துன்பம், அவரைக் காண்டல் துன்பம், கண்டால் மறுத்துழி நிகழும் துன்பம், மறாவழியும் அவர் கொடுத்தது வாங்கல் துன்பம், அது கொடுவந்து நுகர்வன கூட்டல் துன்பம்.
  • தரித்திரனானவன் ஐசுவரியவான்கள் வாசலிலே நிற்கிற துன்பம், அவர்களைக் காண்கிற துன்பம், கண்டால் அவர்கள் இன்று நாளை என்று மறுக்கிற துன்பம், அவர் கொடுக்கிற துன்பம், கொடுத்தால் அது கொண்டுவந்து சாப்பிடத்தக்கது, உடுக்கத்தக்கது இவற்றைத் தேடுகிற துன்பம்.
  • கடன், நோய், வசை.
  • பொய், களவு, விபசாரம், கொலை முதலிய பலவிதமான குற்றங்கள்.
  • செல்வரைச் சேர்தல், அவரைக் காணுதல், ஏற்றல்.
  • பெற்றதாயும் விரும்பாமை, மனைவியின் சுடுசொல், மக்கள் உணவின்றிப் படுந்துன்பம், வெயிற்கும் மழைக்கும் பாதுகாப்பின்மை, உறவும் நட்புமின்மை, கற்ற கல்வி பயன்படாமை, ஈயென இரத்தல், இரந்தும் பெறாமை, பெற்றும் போதாமை, ஈவாரைத் தேடியலைதல், கவலை கரைகடத்தல்.
  • பசி, பிணி போன்ற துன்பங்கள், அந்தத் துன்பங்களைப் போக்குகின்ற துன்பம்.

'பல்குரைத் துன்பங்கள்' என்பதற்குப் பல தன்மையாகிய துயரம் என்பது பொருள்.

வறுமை என்று சொல்லப்படும் பெருந்துன்பத்துள் பலவகைத் துன்பங்களும் வந்து சேரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நல்குரவு என்பது துன்பங்களின் கொள்கலம்.

பொழிப்பு

வறுமையாகிய பெருந்துன்பத்துள் பல துன்பங்கள் வந்து சேரும்.