இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1047



அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்

(அதிகாரம்:நல்குரவு குறள் எண்:1047)

பொழிப்பு (மு வரதராசன்): அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்ற தாயாலும் அவன் அயலனைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.

மணக்குடவர் உரை: ...................................................

பரிமேலழகர் உரை: அறம் சாரா நல்குரவு - அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்; ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.
(அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர். சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம்.)

தமிழண்ணல் உரை: அறநெறியோடு பொருந்தாத வறுமை ஒருவனிடம் ஏற்பட்டால், அவன் யாராலும் மதிக்கப்படமாட்டான்; தன்னை ஈன்ற தாயாலும் அவன் அயலான்போலப் பார்க்கப்படுவான். நல்லவர், கற்றறிந்தவர் வறுமை வேறு எனப்பிரிப்பதற்காக, இதனை 'அறம் சாராத நல்குரவு' என்றார். தீயன செய்து வறுமைப்படுபவர் இரக்கத்திற்குரியவர் அல்லர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்.

பதவுரை: அறஞ்சாரா-அறத்தொடு இயைபில்லாத; நல்குரவு-வறுமை; ஈன்ற-பெற்ற; தாயானும்-தாயாலும்; பிறன்-மற்றவன், பகைவன், ஏதிலார்; போல-போன்று, ஒக்க; நோக்கப்படும்-பார்க்கப்படும்.


அறஞ்சாரா நல்குரவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: அறத்தைப் பொருந்தாத நல்குரவாளன்;
பரிப்பெருமாள் குறிப்புரை: அறம் சாரா நல்குரவாவது, பொருளும் இன்பமும் சிந்தித்து நல்கூர்தல். இது சுற்றத்தாரும் கைவிடுவர் என்றது.
பரிதி: மிடி வந்தால் தன்மம் சாராது;
காலிங்கர்: பிறர்க்கு உதவியாகிய அறத்தோடு தனக்கு ஓர் இயைபில்லாத நல்குரவு ஆகின்ற இது பின்னும் யாதுசெய்யுமோ எனில்;
பரிமேலழகர்: அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான்;
பரிமேலழகர் குறிப்புரை: அறத்தோடு கூடாமை - காரண காரியங்களுள் ஒன்றானும் இயையாமை. நல்குரவு - ஆகுபெயர்.

'அறத்தைப் பொருந்தாத நல்குரவாளன்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாழ்வுக்குப் பொருந்தாத வறுமை வரின்', 'அறத்தோடு இயைபில்லாத வறுமையுடையவன்', 'புண்ணியப் பலன் சிறிதேனும் வந்து சேர்வதற்கில்லாத தரித்திரமுள்ளவன்', 'நன்னெறி யொழுகாமையால் ஏற்பட்ட வறுமையை உடையவன்', என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறத்தோடு இயைபில்லா வாழ்வால் வறுமை உண்டானால் என்பது இப்பகுதியின் பொருள்.

ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: தன்னைப் பெற்ற தாயாயினும் ஏதிலாரைப் போல நோக்கப்படுவான் என்றவாறு.
பரிதி: பெற்ற தாயாகிலும் பிறர்போலப் பாராமுகம் பண்ணுவாள் என்றவாறு. [பாராமுகம்- (அலட்சியம்) விரும்பி நோக்காமை]
காலிங்கர்: மற்று நல்கூர்ந்தானைப் பெற்ற தாயானும் உட்படப் பிறன் ஒருவனைப் போலக் காணப்படும்; எனவே இவனால் என்னை; இனி இதுவும் யாம் முன் செய்த பாவத்தில் ஒன்று என்று இகழப்படும் என்றவாறு.
பரிமேலழகர்: தன்னை ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போலக் கருதி நோக்கப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை, அவளது இயற்கையன்புடைமை விளக்கி நின்றது. கொள்வதின்றாதலேயன்றிக் கொடுப்பது உண்டாதலும் உடைமையின், அதுநோக்கிச் சுற்றத்தார் யாவரும் துறப்பர் என்பதாம். [அது நோக்கி-கொடுப்பது கருதி]

'தன்னைப் பெற்ற தாயாயினும் ஏதிலாரைப் போல நோக்கப்படுவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெற்ற தாயும் யாரோ எனப் பார்ப்பாள்', 'தன்னைப் பெற்றெடுத்த தாயாலும் அயலானைப்போலக் கருதி நோக்கப்படுவான்', 'பெற்றெடுத்த தாயாலும் அன்னியன் போல அசட்டை செய்யப்படுவான்', 'அவனைப் பெற்ற தாயாராலும் கூட அயலான் போலக் கருதப்படுவன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பெற்ற தாயாலும் வேற்றுஆள் போலப் பார்க்கப்படும் நிலை ஏற்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறஞ்சாரா வாழ்வால் வறுமை உண்டானால் பெற்ற தாயாலும் வேற்றுஆள் போலப் பார்க்கப்படும் நிலை ஏற்படும் என்பது பாடலின் பொருள்.
'அறஞ்சாரா நல்குரவு' என்றால் என்ன?

அறமல்லாவழியில் சென்றதால் வறுமையுற்ற மகனைப் பெற்றவளும் பொருட்படுத்தாள்.

அறம்சாராத வாழ்க்கையின் மூலம் வறுமையுற்றவன் பெற்றெடுத்த தாயாலும் தொடர்பிலாதான் போல நோக்கப்பட்டு கைவிடப்படுவான்.
ஒரு தாய் எந்த நிலையிலும் தான் ஈன்ற மகனை வெறுப்பது இல்லை. ஆனால் தன் மகன் அறமல்லாத வாழ்க்கை நடத்தி வறுமையடைந்தான் என்றால் அவனை வெறுப்பாள். அறம்சாரா நல்குரவு என்பது இத்தகைய வாழ்க்கை முறையால் உண்டான இன்மைநிலையைக் குறிக்கும்.
அறத்தொடு பொருந்தாமையான் விளைந்த நல்குரவாளனைப் பெற்றதாயும் பிறன்போல நோக்குவாள். எவ்வளவு தவறு செய்தாலும் ஒருவனை அவனது தாய் மன்னித்துவிடுவாள். எந்த இழிவையும் கருதாது மகன்மை பாராட்டும் பண்பு அது. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் (மக்கட்பேறு 69 பொருள்: தன் மகனைப் பண்பு நிறைந்தவன் எனப் பிறர் புகழ்ந்து கூறக் கேட்ட தாய், அவனைப் பெற்ற பொழுதினும் பெரிது மகிழ்வாள்), ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை (வினைத்துய்மை 656 பொருள்: பெற்ற தாயின் பசி போக்க இயலாத வறிய நிலை இருப்பினும், சான்றோரால் பழிக்கப்படும் தீய வினைகளை ஒருவன் செய்யாமல் இருப்பானாக), என ஈன்றபோது உவந்தவள், தன் மகன் சான்றோன் எனக் கேட்டபோது அதனினும் மகிழ்ந்தவள், தனது பசியை நீக்குததற்காகப் பழிச்செயலை நாடாத தன் மகனைப் பார்த்துப் பெருமிதம் பெற்றவள், அவன் வறியோனாகி விட்ட காரணத்தினால், அவனைப் பிறன் போலக் கருதிப் புறக்கணித்து விடுவாளா என்ன? தாயன்பின் மேன்மையைப் பலவகையில் போற்றும் குறள் பத்துத் திங்கள் சுமந்து பெற்ற மகனையே 'இவன் யாரோ' எனப் பார்ப்பாள் என்று இங்கு கூறுவது அவன் வறுமைநிலையடைந்த வழியைச் சுட்டவேயாம்.

'ஈன்ற தாயானும்' என்ற உயர்வு சிறப்பும்மை அவளது இயற்கை அன்புடைமையை விளக்கி நின்றது. 'தாயானும்' என உம்மை கொடுத்து அன்பில் திரியாத தாயும் முகம் திரும்புவாள் எனச்சொன்னது அறம்சாரா வாழ்வியலால் நேர்ந்த இல்லாமையின் கொடுமையை வெளிப்படுத்துகிறது. அறநெறிக்கு மாறுபட்டு நடந்து ஒருவன் வறுமையுற்றால், அவனைத் தான் பெற்ற மகன் என்று எண்ணிப்பார்க்கவும் மாட்டாள்; அவனது வறுமைநிலைக்காக இரக்கப்படவும் மாட்டாள். 'நீ எனக்குப்பிள்ளை இல்லை' என்று ஒரு தாய் ஒதுக்குவது எத்துணை கொடுமை! தாயாலும் புறக்கணிப்படும் நிலைமை நேருமானால், மற்றவர்களின் புறக்கணிப்பைப் பற்றிக் கூறவேண்டியதே இல்லை. தாயே உதவ முன்வராதபோது உலகோர் உதவுவரா? ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி (கள்ளுண்ணாமை 923 பொருள்: பெற்ற தாய் முன்பாயினும் இன்னாதாம்; அவ்வாறு இருக்க, பெரியோர் எதிரில் கள்ளுண்டு மகிழ்தல் எப்படியிருக்கும்?), என மகன் கள்ளுண்டு மயங்கித் திரியும்போது அத்தகைய வெறுப்பு அந்தத் தாய்க்கும் ஏற்படுவதாக முன்பு கூறப்பட்டது.

'அறஞ்சாரா நல்குரவு' என்றால் என்ன?

'அறஞ்சாரா நல்குரவு' என்றதற்கு அறத்தைப் பொருந்தாத நல்குரவாளன், மிடி வந்தால் தன்மம் சாராது, பிறர்க்கு உதவியாகிய அறத்தோடு தனக்கு ஓர் இயைபில்லாத நல்குரவு ஆகின்ற இது, அறத்தோடு இயைபில்லாத நல்குரவு உடையான், தருமத்துடனே கூடாத தரித்திரத்தையுடையவன், புண்ணியஞ் சாரா வறுமையாளன், அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால், அறநெறியோடு பொருந்தாத வறுமை ஒருவனிடம் ஏற்பட்டால், புண்ணியம் சேராத வறுமையுடையான், வாழ்வுக்குப் பொருந்தாத வறுமை, அறத்தோடு இயைபில்லாத வறுமையுடையவன், புண்ணியப் பலன் சிறிதேனும் வந்து சேர்வதற்கில்லாத தரித்திரமுள்ளவன், அறநெறிப்படாத வறுமையாளன், நன்னெறி யொழுகாமையால் ஏற்பட்ட வறுமையை உடையவன், அறத்தோடு தொடர்பில்லாத வறுமையாளன், அறஞ்செய்தற்குப் பொருந்தாத வறுமை ஒருவனை அடையுமானால், நன்னெறி சாராமையால் ஏற்படும் ஏழ்மைக்கு உரியவன், அறத்தோடு பொருந்தாத வறுமையை யுடையவன், ஒருவனிடம் அறம் செய்யமுடியாத வறுமை வந்து தங்குமானால் என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

'நல்குரவு என்றதற்கு நல்குரவாளன் எனப் பண்பின் பெயரை ஆகுபெயரான் பண்பியின் மேலதாக்கினார் பரிப்பெருமாள். பின்வந்த பலரும் அவ்வாறே உரைத்தனர்.
'அறஞ்சாரா நல்குரவு' என்பதற்குப் பரிப்பெருமாள் 'அறம்சாரா நல்குரவாவது, பொருளும் இன்பமும் சிந்தித்து நல்கூர்தல்' என்று பொருள் கூறினார். அதாவது பொருளையும் இன்பத்தையும் மட்டுமே கருதி வறுமையடைதல் என்றார். காலிங்கர் 'பிறர்க்கு உதவியாகிய அறத்தோடு தனக்கு ஓர் இயைபில்லாத நல்குரவு ஆகின்ற இது' என்கிறார். இவர் இக்குறள் நல்குரவின் இயல்பு சுட்டியதாகக் கொண்டு பிறர்க்குதவும் அறத்தோடு தனக்கு இயைபில்லாத நல்குரவு என உரைக்கிறார். பரிமேலழகர், அறஞ்சாரா என்பதற்கு காரண காரியங்களோடு ஒன்றானும் இயையாமை என்பார். அதாவது இன்ன காரணத்தினால் இதைச் செய்தேன் என்று தம் செயல்களுக்கான அறம் சார்ந்து கூறவியலாமை என்பது.
பெற்ற தாயாலும் கூட அயலானைப் போலப் பார்க்கப்படுகிற நிலைக்கு ஆட்படுத்தக் கூடிய வறுமை அறத்தைச் சாராதது என ஓர் உரை உள்ளது. அறஞ்செய்ய முடியாத வறுமை என்கிறது மற்றொரு உரை. வறுமை வந்தால், அறநெறியில் வாழ்வைச் செலுத்தும் பொறுமை போய்விடலாம்; அவ்வாறு அறநெறி விலகி ஒருவன் வாழ்ந்தால், அவனை ஈன்ற தாய் கூட, பிறன் ஒருவனைப் பார்ப்பது போலவே, அவனைப் பார்ப்பாள் என வறுமை வந்துற்றபின் அறமற்ற முறையில் ஒழுகுபவனைபற்றி இப்பாடல் சொல்வதாகவும் இக்குறளுக்கு விளக்கம் கூறுவர்.

இக்குறள் இரங்கற்குரியதல்லாத வறுமையைச் சொல்வது.
ஒருவற்கு வறுமை வந்து எய்துவதற்குப் பல காரணங்கள் உண்டு. அறச்செயல்களுக்காகப் பெரிதும் செலவழித்துப் பொருளை இழந்து வறுமையுறுவோரும் இவ்வுலகில் உண்டு, கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு (நடுவுநிலைமை 117 பொருள்: நடு நிலையாக அற வழியில் நின்றவனது தாழ்வை உலகம் கேடாகக் கருதாது) என்னும் பாடலில் சொல்லப்பட்டுள்ளதுபோல நடுவுநிலை காரணமாக ஒருவன் தன் பொருள் நிலையில் தாழ்வுறும் நிலை உண்டாகும். அறம்சார்ந்து வறியவனானால் அவனை உலகோர் இகழ்வதில்லை. எந்த ஒரு தாயும் அவனை வெறுக்கமாட்டாள்.
போகூழ், உறுப்புக்கு குறைவு, விபத்து, இயற்கைச் சீற்றம் போன்றவற்றாலும் வறுமைநிலை ஏற்படுவதுண்டு. அது இரங்கத்தக்கது.
சோம்பியிருந்து, முயற்சியும் உழைப்பும் இல்லாமல் 'வறுமையுற்றேனே' எனப் புலம்புவதை யாரும் ஒப்பமாட்டார்கள், இவ்வாறு மடிமையான் வருவது தாயால் அருவெறுக்கப் படுமாயினும், திருந்தப் பெறுந் தன்மையது.
கள்ளுண்ணல், சூதாடல் (கவறாடல்), பொருட்பெண்டிர் தொடர்பு போன்ற தீய பழக்கங்களை மேற்கோண்டு ஒழுகுவது அறம்சாரா வாழ்வு. இவற்றால் செல்வம் விரைவில் கரைந்து வறுமையுண்டாகும். சமூக-சட்டங்களுக்குப் புறம்பாகப் பொருள்செய்து அக்குற்றங்களுக்காக ஒறுக்கப்பட்டு ஒருவன் வறுமையுற்றுத் துன்பப்பட்டால் அதுவும் அறஞ்சாரா நல்குரவாம். அறத்தொடு பொருந்தாத செயல்களினால் உண்டான வறுமையை அவனது தாயும் வெறுப்பாள். இது நல்லார்கண் பட்ட வறுமையினும் வேறானது.

'அறஞ்சாரா நல்குரவு' என்பது நன்னெறி சாரா செயல்களால் ஏற்படும் வறுமை என்ற பொருள் தருவது.

அறத்தோடு இயைபில்லா வாழ்வால் வறுமை உண்டானால் பெற்ற தாயாலும் வேற்றுஆள் போலப் பார்க்கப்படும் நிலை ஏற்படும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அறத்தொடு பொருந்தாத வாழ்வால் விளைந்த நல்குரவு இரங்கப்படாது.

பொழிப்பு

அறத்தோடு பொருந்தாத வாழ்வால் உண்டான வறுமையை உடையவன் பெற்ற தாயாலும் ஏதிலான் போலப் பார்க்கப்படுவான்.