இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1041இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது

(அதிகாரம்:நல்குரவு குறள் எண்:1041)

பொழிப்பு (மு வரதராசன்): வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்,

மணக்குடவர் உரை: நல்குரவுபோல இன்னாதது யாதெனின் நல்குரவுபோல இன்னாதது தானே.
(தானே - நல்குரவே) இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: இன்மையின் இன்னாதது யாது எனின் - ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்; இன்மையின் இன்னாதது இன்மையே - வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை.
(இன்னாதது - துன்பஞ்செய்வது. ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று)

தமிழண்ணல் உரை: பசி வாட்டும் வறுமை போலக் கொடியது யாதென்றால், வறுமையைப் போலக் கொடியது வறுமையேயன்றிப் பிறிதில்லை. வறுமைக்கொடுமைக்கு ஒப்புமை சொல்லப் பிறிதொன்று இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்னா தது இன்மையே.

பதவுரை: இன்மையின்-வறுமையைக் காட்டிலும்; இன்னாதது-கொடியது; யாது-எது; எனின்-என்றால்; இன்மையின்-வறுமைபோல; இன்மையே-வறுமையே; இன்னாதது-துன்பம் தருவது.


இன்மையின் இன்னாதது யாதெனின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்குரவுபோல இன்னாதது யாதெனின்;
பரிப்பெருமாள்: நல்குரவுபோல இன்னாதது யாதெனின்;
பரிதி: இன்மையாகிய பொல்லாப்புக்குள்ளும் பொல்லாப்பு யாது எனில்;
காலிங்கர்: ஒருவர்க்கு இல்லாமையிற் காட்டின் பொல்லாதது யாதோ எனின்;
பரிமேலழகர்: ஒருவனுக்கு வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்;
பரிமேலழகர் குறிப்புரை: இன்னாதது - துன்பஞ்செய்வது.

'வறுமை போல இன்னாதது யாது என்று வினவின்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வறுமைபோலக் கொடியது ஒன்று உண்டா?', 'ஒருவனுக்கு வறுமைபோலத் துன்பம் தருவது யாதென்றால்', 'தரித்திரத்தைப் போல் கொடுமை செய்வது எது என்றால்', 'வறுமையைப் போலத் துன்பம் தரத்தக்கது யாது என்றால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வறுமையைப் போலத் துன்பம் தருவது எது என்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

இன்மையின் இன்மையே இன்னாதது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்குரவுபோல இன்னாதது தானே.
மணக்குடவர் குறிப்புரை: தானே - நல்குரவே. இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.
பரிப்பெருமாள்: நல்குரவுபோல இன்னாதது தானே. (தானே - நல்குரவே)
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லை யென்றது.
பரிதி: மிடியே என்றவாறு.
காலிங்கர்: இல்லாமையின் பொல்லாதது பின்னும் அவ்வில்லாமையே; பிறிது ஒன்றும் இல்லை;
காலிங்கர் குறிப்புரை: இதனைப் பற்ற இன்னாங்கு உடையது என்றவாறு. [இன்னாங்கு- துன்பம்]
பரிமேலழகர்: வறுமை போல இன்னாதது வறுமையே, பிறிதில்லை.
பரிமேலழகர் குறிப்புரை: ஒப்பது இல்லை எனவே, மிக்கது இன்மை சொல்ல வேண்டாவாயிற்று. [சொல்ல வேண்டாவாயிற்று- கூறாமலே பெறப்படும்]

'வறுமை போல இன்னாதது வறுமையே' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதுபோலக் கொடுமையுடையது அதுவே', 'வறுமைபோலத் துன்பம் தருவது வறுமையேயாம்', 'தரித்திரத்தைப் போல் கொடுமை செய்வது தரித்திரமேதான்', 'வறுமை போலத் துன்பம் தரத்தக்கது வறுமையேயன்றிப் பிறிதில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வறுமை போலக் கொடியது வறுமையே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இன்மையைப் போலத் துன்பம் தருவது எது என்றால் இன்மை போலக் கொடியது இன்மையே என்பது பாடலின் பொருள்.
'இன்மை' குறிப்பது என்ன?

கொடிது கொடிது வறுமை கொடிது.

வறுமையைப் போலத் துன்பத்தைத் தருவது எது என்றால் வறுமையைப் போலத் துன்பத்தைத் தருவது வறுமையே ஆகும்.
இன்மை என்பது இல்லாமையைக் குறிக்கும் சொல். 'உடைமைக்கு' மறுதலையானது. அதிகாரம் நல்குரவு என்பதால் 'இன்மை' என்ற சொல் இங்கு பொருளேதும் இல்லாமையைக் காட்டுவதாம். வறுமை என்ற பொருள் தருவது. வறுமையானது நுகர்பொருள் ஏதும் இல்லாமையைச் சொல்வது. மாந்தரின் அடிப்படைத் தேவைகளான உணவும் உடையும் இல்லாவிடில் வாழ்க்கை மிகவும் கொடியதாகிப் போகும். இதை வள்ளுவர் வறுமையைப்போல் துன்பம் தருவது வறுமையே என்கிறார். அதாவது வறுமைக்கு உவமை கூறமுடியாது என்பது.
இன்மையைப் போலக் கொடியது ஏதேனும் உண்டா என்று கேட்பவரைப் போல முதலில் ஒரு வினாவை எழுப்புகிறார். நாம் அதற்கான விடையை எண்ணத்தொடங்கும் முன்னர் அவரே அதற்கு விடை தருபவரைப் போல 'இன்மையின் இன்னாதது யாது எனின்' - எனத் தொடங்கி இன்மைக்கு உவமை காணப் புகுந்து, அதன் கொடுமைக்கு எதை எதையோ உவமையாக எண்ணி எண்ணி, அவற்றுள் ஒன்றும் அதன் கொடுமைக்கு அருகில் வரமுடியாதென்பதை உணர்ந்து, இறுதியில் இன்மையின் இன்மையே இன்னாதது அதாவது அதற்கு அதுவே ஒப்பு என்று சொல்லி முடிக்கிறார் (கி வா ஜகந்நாதன்). பசித்துத் துடிக்கும் வறுமையைவிடத் துன்பம் தரக்கூடியது யாதென்றால், அவ்வறுமையேயாம். எத்துணையோ அருமையான உவமை சொல்லிய வள்ளுவருக்கு, பசிக்கொடுமையைவிடக் கொடியது எது என்பதை விளக்க உவமை கிடைக்கவில்லை. எனவே வறுமைத் துயருக்கு இணை வறுமைத் துயரே என்றார். துன்பந் தருவதில் வறுமையைவிடக் கொடியது வேறொன்றும் இல்லை என்பது கருத்து.

இக்குறள் 'தானே உவமை தனக்கு' என்றாற்போல இன்னாமையான் இன்மைக்கு ஒப்பாவது இன்மையே வேறு ஒன்றும் இல்லை என்கிறது.
இன்மையின் இன்மையே இன்னாதது என்று இங்கு சொன்னாரேனும் வள்ளுவரே பிறிதோரிடத்தில் இன்மையின் இன்னாத ஒன்றைக் குறித்துள்ளார். அப்பாடல்: இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோல்கீழ்ப் படின் (கொடுங்கோன்மை 558 பொருள்: முறை செய்யாத அரசின் கொடுங்கோலின் கீழ் வாழ நேர்ந்தால், பொருளின்மையினும் செல்வம்உடைமை துன்பம் தரும்). இன்மைக்கு உடைமையே இன்னாதது என்று அங்கு முரண்நகையாகக் கூறப்பட்டது.

வேற்று மொழியாளரான உமா சங்கர் ஜோஷி என்ற காந்தியவாதியை இக்குறளின் கருத்துவலிமை ஈர்த்ததால் அவரது சொற்பொழிவுகளில் இக்குறள் மேற்கோள் காட்டப்பெற்றது.

இக்குறளில் 'இன்மை'. 'இன்னாதது' ஆகிய இரு சொற்களை மட்டும் நயம்படப் பயன்படுத்தி வறுமையின் கொடுமையைத் தேர்ந்து தெளிவுறுத்துகிறார். இன்மை என்ற ஒரே சொல் திரும்பத் திரும்ப ஒரே பொருளில் வருமாறு பாட்டியற்றப்பட்டிருப்பதால் இதைச் 'சொற்பின் வருநிலை யணி'ச் செய்யுள் என்பர்.

'இன்மை' குறிப்பது என்ன?

இன்மை என்பதற்கு நல்குரவு, வறுமை, மிடி, தரித்திரம், பசி வாட்டும் வறுமை எனப் பொருள் கூறினர். இன்மை என்பது கல்வியின்மை, அறிவின்மை, பண்பின்மை என இல்லாமை பலவற்றையும் குறிப்பது. இங்கு பொருளின்மை பேசப்படுகிறது. பொருளின்மையிலும் இன்மையின் இன்னாதது இன்மையே என எல்லைப் பொருளாக உள்ள வறுமை வாட்டும் துன்பம் சொல்லப்படுகிறது. வறுமையானது உண்பதற்கும் உடுப்பதற்கும் இன்றித் துன்புறும் கொடுமையான நிலையாகும்.
உணவின்மை முழுமையான ஆடையில்லாமை ஆகியவற்றின் கொடுமையையும், வலியையும், துன்பத்தையும் அவற்றை நுகர்வோராலேயே உணர முடியும். எனவே இக்குறளின் பொருள் முழுமையாய் விளங்க ஒருவர் சோறுதண்ணீர், நல்ல உடை இல்லாமல் சில நாட்கள் இருக்கவேண்டும்.

படிப்போர் நெஞ்சை உருக்குவதாக உள்ள சங்கப்பாடல் ஒன்று காட்டும் வறுமைநிலையை இப்பொழுது காணலாம். ஒய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய அச்செய்யுள்:
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பான் முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
காழ் சோர், முது சுவர்க் கணச் சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி
ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளைக்கை கிணை மகள் வள் உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி கடை அடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
அழி பசி வருத்தம்
(பத்துப்பாட்டு சிறுபாணாற்றுப்படை 130-140)
வறுமையை ஒரு குடும்பப்பெண் எப்படி எதிர்கொள்கிறாள் என்பதைச் சொல்வது இப்பாடல்:
அது ஒரு சிறிய குடிசை வீடு. சமைத்து நாட்கள் பல ஆகி விட்டன. வீட்டில் உள்ள பொலிவு அற்ற அடுக்களையில் அண்மையில் ஈனப்பட்ட, கண்ணை திறக்காமல் சாய்ந்த காதை உடைய, குட்டி நாய் படுத்து தூங்குகிறது. அந்தக் குட்டி இதுவரை யாரும் கறக்காத தாய்நாயின் முலையில் இருந்து பால் குடிக்க முயல்கிறது. அந்த நாய்க்கும் பலநாள் உணவில்லையாதலால், அதனிடம் பால் இல்லை. குட்டி பால்அருந்த முயல்வதை அறியாத தாய் நாய் ஓசை எழுப்பக் கூட வலு இல்லாது படுத்துக்கிடக்கிறது. கட்டப்படாத சுள்ளியும் விறகுகளும் சிதறி கிடக்கின்றன. பழைய சுவர், புழுதி படிந்த, செல் அரித்த, ஈரமான காளான் நிறைந்த அடுப்படி. இதுதான் அவ்வீட்டின் தோற்றம். பசியால் மெலிந்த இடையை கொண்ட, வளையலை அணிந்த கைகளை கொண்ட அவ்வீட்டுப் பெண், அவர்கள் வீட்டில் உள்ள வேலியின் மேல் படர்ந்துள்ள கீரையைக் கிள்ளிக் கொண்டு வந்து, நீரை உலையாக ஏற்றி அதில் அதை உப்பில்லாமல் (உப்பு வாங்கக் கூட காசு இல்லை), வேகவைத்துச், சமைத்து, வீட்டில் உள்ள சுற்றத்தார்களோடு உண்ணுகிறாள். இக்காட்சியைப் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்துவிடுவார்களே என்று நாணம் கொண்டு பிறர் காணாதவாறு கதவை அடைத்துக்கொள்கிறாள்.

'இன்மை' என்பது இங்கு வறுமை என்ற பொருள் தருவது.

வறுமையைப் போலத் துன்பம் தருவது எது என்றால் வறுமை போலக் கொடியது வறுமையே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

துன்பத்துள் துன்பம் தருவது நல்குரவு.

பொழிப்பு

வறுமைபோலத் துன்பம் தருவது எது என்றால், வறுமைபோலத் துன்பம் தருவது வறுமையேயாம்.