நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்
(அதிகாரம்:நல்குரவு
குறள் எண்:1046)
பொழிப்பு (மு வரதராசன்): நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்ன போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
|
மணக்குடவர் உரை:
நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும்.
ஏற்றுக்கொள்வாரில்லை என்றவாறாயிற்று. இது கல்வி கெடும்: சுற்றத்தாரும் கைவிடுவ ரென்றது.
பரிமேலழகர் உரை:
நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும்.
(பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.)
இரா சாரங்கபாணி உரை:
நல்ல பொருளினை மிகவும் தெளிந்து சொன்னாலும் வறுமையுடையார் சொல்லும் சொற்பொருள் பிறர்க்கு குறையாகப்படும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்.
பதவுரை: நற்பொருள்-நல்ல செய்தி, நல்ல பொருள்; நன்கு-தெளிய; உணர்ந்து-அறிந்து; சொல்லினும்-சொன்னாலும்; நல்கூர்ந்தார்-வறுமையுற்றவர்; சொற்பொருள்-உரை; சோர்வுபடும்-இன்மையைத் தலைப்படும், ஏற்றுக்கொள்ளப்படாமல் போகும், பயன்படாமல் போகும்.
|
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும்;
பரிப்பெருமாள்: நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும்;
பரிதி: நல்ல காரியங்களை நன்றாகச் சொன்னாலும்;
காலிங்கர்: மிக நன்றாகிய பொருளினைத் தமது நல்ல அறிவினால் நன்கு தெரிந்து சொல்லினும்;
பரிமேலழகர்: மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்;
'நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் பொருள் என்பதற்கு மெய்ந்நூற் பொருள் எனப் பொருள் கொள்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல பொருளை நன்றாகச் சொன்னாலும்', 'நல்ல விஷயத்தை நன்றாக ஆராய்ந்து அனுபவத்தோடு சொன்னாலும்', 'மெய்ந்நூற்பொருளை நன்றாக அறிந்து சொன்னாலும்', 'மெய்ந்நூற் பொருளை நன்றாக அறிந்து சொன்னாலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நல்ல செய்தியை நன்கு அறிந்து சொன்னாலும் என்பது இப்பகுதியின் பொருள்.
நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும்.
மணக்குடவர் குறிப்புரை: ஏற்றுக்கொள்வாரில்லை என்றவாறாயிற்று. இது கல்வி கெடும்: சுற்றத்தாரும் கைவிடுவ ரென்றது.
பரிப்பெருமாள்: நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஏற்றுக்கொள்ளார் என்றவாறாயிற்று. இது கல்வி கெடும் என்றது.
பரிதி: மிடியார் சொல் சோர்வு படும் என்றவாறு.
காலிங்கர்: அச்சொல்லுகின்றவர் வறியோர் ஆயின் அங்ஙனம் சொல்லுகின்றவர் சொற்பொருள் செவி ஏற்றுக்கொள்ளாது உக்குவிடும், கைப்பொருள் உடையாரிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும்.
பரிமேலழகர்: பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம். [கண்ணோடி-இரக்கமுற்று]
'நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வறியவர் சொல் ஏறாது', 'ஏழைகள் சொல்லும் விஷயம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது', 'வறியவர் கூறுஞ் சொல்லும் பொருளும் ஏற்றுக் கொள்ளப்படாது கழிக்கப்படும்', 'வறுமைப்பட்டோர் சொல்லும் சொற்பொருள் ஏற்றுக் கொள்ளப்படாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
வறுமையிலுள்ளவர் கூறுஞ் சொல்லும் பொருளும் ஏற்றுக் கொள்ளப்படா என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நற்பொருள் நன்கு அறிந்து சொன்னாலும் வறுமையிலுள்ளவர் கூறுஞ் சொல்லும் பொருளும் ஏற்றுக் கொள்ளப்படா என்பது பாடலின் பொருள்.
'நற்பொருள்' என்றால் என்ன?
|
கைப்பொருள் இல்லாதவரது வாய்ச்சொற்களை ஏற்பார் யாருமில்லை.
நல்ல செய்திகளைத் தெளிவாக அறிந்து சொன்னாரானாலும், வறுமைப்பட்டவர் கூறும் சொற்கள், ஏற்றுக்கொள்ளப்படாமல் போகும்.
வறுமையுற்றவர் சொல் எங்கும் எதிலும் எடுபடுவதில்லை. வறியவர்கள் நல்ல கருத்துக்களைத் தெளிவாக உணர்ந்து கூறினாலும் அவர்கள் பேசுவதைக் காது கொடுத்து யாரும் கேட்பதில்லை; அவர்கள் சொற்கள் பொருளற்றதாகவே கேட்பாரால் கருதப்படும். எனவே அவை பயனற்றுப்போகும்.
மேலும், இவர்தம் சொற்களைக் கேட்பவர்கள், இவர்தம் குறையையும் நிறைவு செய்ய வேண்டியதிருக்குமே என்று அஞ்சி இவரைக் கண்டாலே ஒதுங்கி விடுவார்கள்.
அவர்கள் நல்லனவற்றையே நன்குணர்ந்து சொன்னாலும் அவற்றைப் பிழைப்புக்கான வழியென்றே எண்ணுவர்.
மாறாக, சிறுசெல்வம் படைத்தவனானாலும் அவனது ஆகாப் பேச்சும் அழகானதாக ஏற்கப்படும் என்பதும் உலக நடைமுறையே.
இன்மையால் வரும் சிறுமை ஒன்று கூறப்பட்டது.
சொல்லும் பொருள் நல்லதாகவே இருப்பினும் அதை ஐயந்திரிபறத் தெளிவாக அறிந்து சொன்னாலும் சொல்பவர் வறுமையில் உழல்பவரானால் அவரும் கூறும் கருத்துக்களும் இகழப்படவே செய்யும். அவர்கள் தம் தன்னலத்திற்காகக் கூறுகிறார்கள் என்று நினைத்து அவர்களது உரைகளை உலகம் மதிப்பதில்லை. அவர்களது சொல்லிலே நல்ல தீர்வு இருந்தாலும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எல்லோருக்கும் அமைவதில்லை. இவ்விதமாக ஒருவரது வறுமைநிலை அவர் கூறும் நல்ல பொருளையும், சொல்லும் திறமையையும் பிறர் உள்ளங் கொள்ளாதவாறு செய்துவிடுகிறது.
|
'நற்பொருள்' என்றால் என்ன?
'நற்பொருள்' என்றதற்கு நல்ல பொருள், நல்ல காரியங்கள், மிக நன்றாகிய பொருள், மெய்ந்நூற் பொருள், நல்ல நூற் பொருள், நல்ல மெய்ம்மை சார்ந்த பொருள்கள், நல்லறச் செய்திகள், நல்ல அறிவு, சிறந்த பொருள், நல்ல நூல்களில் உள்ள பொருள், சிறந்த நூற்பொருள், உயந்த நூல்களில் நல்ல பொருள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
ஒருவன் நல்ல பொருள்களை நன்கு உணர்ந்து நன்றாகவே எடுத்துரைக்கிறான். ஆனால் அவன் வறியவன் அதாவது பொருள் ஏதும் இல்லாதவன். அவனது இல்லாமை காரணமாகவே அவன் சொற்களும் பொருளற்றதாகிப் போகிறது.
'நற்பொருள்' என்ற தொடர்க்கு நல்ல பொருள் என்பது பொருள்.
|
நல்ல செய்தியை நன்கு அறிந்து சொன்னாலும் வறியவர் கூறுஞ் சொல்லும் பொருளும் ஏற்றுக் கொள்ளப்படா என்பது இக்குறட்கருத்து.
நல்குரவு என்னும் பெருந்துன்பத்தில் உழல்பவரது கருத்து நன்கு மதிக்கப்படாது,
நல்ல பொருளை அறிந்து தெளிந்து சொன்னாலும் வறுமையுடையார் சொல் இகழப்படும்
|