துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று
(அதிகாரம்:நல்குரவு
குறள் எண்:1050)
பொழிப்பு (மு வரதராசன்): நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.
|
மணக்குடவர் உரை:
நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல், உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியாம்.
துறப்பாராயின் நன்றென்வாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்பமுறுதலன்றி இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு, இது துறப்பாராயின், இன்ப முறலா மென்று கூறிற்று.
பரிமேலழகர் உரை:
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை - நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்; உப்பிற்கும் காடிக்கும் கூற்று - பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம்.
(மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.)
இரா இளங்குமரன் உரை:
நுகர்தற்கு வேண்டும் வாய்ப்பு எதுவும் இல்லாதவர் அந்நுகர்வை முழுமையாக விடாது இருத்தல். பிறருடைய உப்புக்கும் புளித்த நீர்க்கும் கேடேயாகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
பதவுரை: துப்புரவு-நுகரப்படுவன; இல்லார்-இல்லாதவர்; துவர-முற்ற; துறவாமை-துறவு கொள்ளாதிருத்தல்; உப்பிற்கும்-உப்புக்கும்; காடிக்கும்-புளிப்பு நீருக்கும் (நீராகாரத்திற்கும்); கூற்று-.எமன்
|
துப்புரவு இல்லார் துவரத் துறவாமை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல்;
மணக்குடவர் குறிப்புரை: துறப்பாராயின் நன்றென்வாறாயிற்று. நல்கூர்ந்தார்க்குத் துன்பமுறுதலன்றி இன்ப நுகரும் நெறியுளவோ என்றார்க்கு, இது துறப்பாராயின், இன்ப முறலா மென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: நுகரும்பொருள் இல்லாதார் அப்பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல்;
பரிப்பெருமாள் குறிப்புரை: துறப்பாராயின் நன்று என்றது. நல்கூர்ந்தார்க்குத் துன்பமுறுதலன்றி இன்ப நுகரும் நெறியும் உளவோ என்றார்க்கு, இது துறப்பாராயின், இன்பு உறலா மென்று கூறிற்று.
பரிதி: மிடியினாலே துயரப்படுவார் மூன்று வகை ஆசையைத் துறவாமல் இருப்பது;
காலிங்கர்: தமக்கு உணவுக்கு உரம் ஆகிய கைப்பொருள் இல்லாதார் முதிரத் துறவாமை;
காலிங்கர் குறிப்புரை: துப்புரவு இல்லாதார் என்பது உண்டிக்கு உரம் ஆகிய கைப்பொருள் இல்லாதார் என்றது. துவரத் துறவாமை என்றது முற்றத் துறவாமை.
பரிமேலழகர்: நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும் அது செய்யாதொழிதல்;
பரிமேலழகர் குறிப்புரை: மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது. [செயற்பாலது- செய்யத்தக்கது; அதுவே-முற்றத்துறத்தலே; சுற்றந்தானே விட்டமையின் - சுற்றத்தார் வறியவரிடமிருந்து கொள்வது இன்மையானும் கொடுப்பது உண்மையானும் தானே நெகிழ விட்டமையால்; இரண்டனையும் - உப்பையும் புளித்த நீரையும்; மாளப் பண்ணுதலின் - அழித்தலால்; அதனை-துவரத் துறவாமையை; அவற்றிற்கு-உப்பிற்கும் காடிக்கும்]
'நுகரும்பொருள் இல்லாதார் பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல்' என்று பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'மிடியினாலே துயரப்படுவார் மூன்று வகை ஆசையைத் துறவாமல் இருப்பது' என்றார். 'தமக்கு உணவுக்கு உரம் ஆகிய கைப்பொருள் இல்லாதார் முதிரத் துறவாமை' என்பது காலிங்கர் உரை. பரிமேலழகர் 'நுகரப்படும் பொருள்களில்லாதார் தம்மாற் செயற்பாலது முற்றத் துறத்தலேயாகவும்' என்கிறார்.
இன்றைய ஆசிரியர்கள் 'வறியவர் முற்றும் துறவியாகாது இருத்தல்', 'நுகரப்படும் பொருளில்லாத வறியவர் நுகர்வை முற்றும் துறவாதிருத்தல்', 'உயிர் வாழ்வதற்கு அத்யாவசியமான (உணவுக்கும்) வழியில்லாத (நித்திய) தரித்திரர்கள் இல்லற ஆசைகளை முற்றிலும் விட்டொழித்துத் துறவறமாவது மேற்கொள்ள வேண்டும்', 'நுகரப்படும் பொருள்கள் இல்லாதார் முற்றும் துறவாமல் இருத்தல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
நுகர்தற்கு வேண்டும் பொருள் இல்லாதவர் அந்நுகர்வை முற்றும் துறவாதிருத்தல் என்பது இப்பகுதியின் பொருள்.
உப்பிற்கும் காடிக்கும் கூற்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியாம். [காடி-புளித்த நீர்]
பரிப்பெருமாள்: உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டி.
பரிதி: உப்புக்கும் காடிக்கும் கூற்று என்றவாறு.
காலிங்கர்: முன்னம் தாம் யாவர்மாட்டும் இனிது ஒழுகும் இனிமைக்கும் தமது நடுவு நிலைமைக்கும் ஒரு கூற்று; எனவே அஃது இவற்றைக் கொல்லும் என்பது பொருள் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இதில் உப்பு என்பது இனிமை. காடி என்பது நடுவு நிலைமை; அஃதாவது சிறு மக்கள் பலர் கண் புதைத்து நகையாடும் இடத்து அவருள் ஒருவனை 'இவன் காடிச்சால்' என்று நடு இருத்துவர்; நடுநிலை ஆக வழக்கு என்பது அறிக. துப்புரவு இல்லாதார் என்பது உண்டிக்கு உரம் ஆகிய கைப்பொருள் இல்லாதார் என்றது. துவரத் துறவாமை என்றது முற்றத் துறவாமை.
பரிமேலழகர்: பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம்.
பரிமேலழகர் குறிப்புரை: மானம் அழியாமையின் செயற்பாலது அதுவேயாயிற்று. முற்றத் துறத்தல் - சுற்றத்தானே விட்டமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், நின்ற தம் உடம்பினையும் துறத்தல். அது செய்யாது கொண்டிருத்தல் இரண்டனையும் மாளப் பண்ணுதலின், அதனை அவற்றிற்குக் கூற்று என்றார். இனி 'முற்றத்துறத்தலாவது துப்புரவில்லாமையின் ஒருவாற்றால் துறந்தாராயினார், பின் அவற்றை மனத்தால் துறவாமை' என்று உரைப்பாரும் உளர். இதனான் அஃது உளதாயவழிச் செய்வது கூறப்பட்டது.
உப்பிற்குங் காடிக்குங் கேடாக வேண்டியாம்/கூற்று/முன்னம் தாம் யாவர்மாட்டும் இனிது ஒழுகும் இனிமைக்கும் தமது நடுவு நிலைமைக்கும் ஒரு கூற்று/பிறர் இல்லினுளவாய உப்பிற்கும் காடிக்கும் கூற்றாம் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'உப்புக்கும் கஞ்சிக்கும் தண்டம்', 'பிறர் வீட்டிலுள்ள உப்புக்கும் புளித்த நீருக்கும் கேடேயாம்', 'அப்படிச் செய்யாவிட்டால் பிறர் வீட்டு உப்பிற்கும் புளித்த கஞ்சிக்கும் கேடாக (பிச்சையெடுக்க) வேண்டியதுதான்', 'பிறர் வீட்டில் உள்ள உப்புக்கும் காடிக்கும் (புளித்த தண்ணீர்) எமன் ஆகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
உப்புக்கும் புளித்த நீருக்கும் பிடித்த கேடேயாம் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நுகர்தற்கு வேண்டும் பொருள் இல்லாதவர் அந்நுகர்வை முற்றும் துறவாதிருத்தல் உப்புக்கும் புளித்த நீருக்கும் பிடித்த கேடேயாம் என்பது பாடலின் பொருள்.
'துவரத் துறவாமை' என்பதன் பொருள் என்ன?
|
வறுமை வந்துவிட்டால் நுகர்ச்சியைக் குறைத்துக்கொள்.
நுகர்ச்சிப் பொருள்கள் இல்லாத வறியவர் துய்ப்பதை முற்றிலும் துறக்காதவராக இருப்பது உப்புக்கும் காடிக்கும்தாம் கேடுண்டாவதற்கேயாகும்.
நுகர்தற்கு இல்லாதவர் அந்நுகர்வை முழுமையாக விடாது இருப்பது உப்புக்கும் புளித்த நீருக்கும் கூட கேடானதாம் என்பது இக்குறள் கூறவரும் செய்தி.
வறுமையுற்றபின் நுகர்ச்சிகளைக் குறைத்துக் கொண்டு முயன்று பொருள் தேடி நல்குரவிலிருந்து மீண்டு வரவேண்டும் என்பது வள்ளுவர் கருத்தாதல் வேண்டும்.
இக்குறளுக்குப் பலரும் 'வறுமையால் வருந்துகின்றவர்களுக்கு வாழ்வில் நுகரத் தக்க பொருள் ஒன்றும் இல்லை; ஆனால் மன உறுதி இல்லாத காரணத்தால், அவர்களுக்கு அந்தப் பொருள்களின் மேல் ஆசை நீங்கவில்லை; இதுவே அவர்கள் முற்றத் துறக்காமல் வருந்துவதற்குக் காரணம். இதனால் அவர்கள் இன்னும் உப்பையும் கஞ்சியையும் தேடி அவற்றிற்கு எமனாகத் திரிகின்றார்கள்; இத்தகைய கொடிய வறுமை வந்தால் துறவிகள் போல் பற்றற்று வாழ்க்கை நடத்துவது ஒன்றே வழி என்பது வள்ளுவர் கருத்து. ஆனால் மன உறுதி இல்லாதவர்களை நினைந்து அவர் இரக்கமே கொள்கின்றார்' என்னும் பொருள் தோன்ற உரைத்தனர்.
இக்குறள் வறுமையுற்றவர்கள் துறவு மேற்கொள்ளல் வேண்டும் என்றா சொல்கிறது?
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின் (ஊழ் 378 பொருள்: ஊழினால் அவர் அடையக்கூடியன நேராது கழிந்தால் நுகர்பொருள் இல்லா வறியவர் துறவியாகி இருப்பார்களே?) என்று ஊழ் அதிகாரக் குறள் ஒன்று கூறியது. இதன் பொருள்: '(போகு) ஊழினால் வறுமை அடைந்தவர் துறவியாகி இருப்பார்களே?' என்பது. அதுபோலவே இக்குறளும் 'வறுமையில் அல்லல் உறுபவர்கள், துறவியாகிவிடலாம்' என்ற கருத்தைச் சொல்வதாகக் கூறுவர் பலர். இக்கருத்தை விளக்கவந்தவர்கள் 'பொருள் தொகுத்து இன்புற்று வாழ இயலாதவர் பிறருக்குத் துன்பந் தராமல் வீட்டை விட்டுத் துறந்து போதலே நலம்' என்றனர். 'உண்பதற்கு உணவில்லாமல் வறுமையால் வாடுபவர் பிறப்பின் நலனை அடைய முடியாமலும், கடமையைச் செய்ய முடியாமலும், பிறருக்குச் சுமையாகவும் இருப்பதனால் யாருக்கு என்ன பயன்?' எனவும் வினவினர்.
நல்குரவுக் குறள் 'வறுமையால் நுகர்வதற்குரிய பொருள்கள் இல்லாதவர் துறப்பதே தக்கது' எனவும் 'அவர் அவ்வாறு செய்யாமலிருப்பது அவர் துன்பம் அடைதல் வேண்டும் என்னும் ஊழின் நியதியாற் போலும்' என்று ஊழ்க்குறள் கூறுவதாகவும் உரைத்தனர்.
ஊழ்க்குறள் ஊழால் உண்டாகும் துன்பங்களை அவர்கள் உற்றே ஆகவேண்டும்; ஊழின் ஆட்சி அவர்களைத் துறவில் சென்று ஊழின் விளைவுகளிலிருந்து விலகி ஓட விடாது; துறவு மேற்கொள்ளுதற்கும் ஊழ் உதவ வேண்டும் என ஊழின் வலிமையைச் சொல்வது.
இக்குறள் வறுமையுற்றால் நுகர்ச்சிகளைக் குறைத்துக்கொண்டு வாழ் என்பதைக் கூறுவது. இவ்விரண்டு குறள்களின் நோக்கங்களும் வேறு வேறானவை. இவ்விரண்டையும் இணைத்துப் நோக்க வேண்டுவதில்லை.
இன்னும் சிலர் 'வறுமையால் வாடித் தவிக்கின்றவர்கள் ஏன் இறந்தொழியக் கூடாது? என்று வள்ளுவர் சீற்றத்தோடு வினவுகிறார் என்று எழுதினர்.
வறியவரின் வயிற்றுப் பசியை மாற்றவாவது, துறவுக்கோலம் பயன்படட்டும் என்ற இரக்க உணர்வில் இப்படிக் கூறியிருக்கலாம் என்று துறவை ஏன் வலியுறுத்துகிறார் என்பதற்கும்
பிறர் வீடுதொறும் சென்றிரந்து, உப்புக்கும் கஞ்சிக்கும் அலமந்து நிற்பதைவிட, வாழ்க்கையைத் துறப்பதே அதாவது இறந்துபோவதே சிறந்தது என்று சாவை ஏன் தீர்வாகக் கூறுகிறார் என்பதற்கும் அமைதி கூறினர். வறுமை போக்கும் வழிமுறையாக துறவு உதவும் என்பது விந்தையான தீர்வு. குறள் அவ்விதம் கூறியிருக்க வழியில்லை. அதுபோலவே அவர் வறியவரைச் 'செத்துப்போ' என்று சொல்லியிருக்கவும் முடியாது.
ஒருவர் எய்தற்குப் பல காரணங்கள் உண்டு. இப்பாடல் போகுஊழின் செயலால் உண்டான வறுமைபற்றியது எனக்கொள்ளலாம்.
ஒருமுறை வறியவர் என்றென்றைக்கும் வறியவரே என்பதாக உரையாளர்கள் எண்ணி வறுமையுற்றவர் துறவு மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளனர் என்பதுபோல் தோன்றுகிறது.
இன்றைய வறுமையில் உழல்பவர் நாளை பொருளீட்டி நல்வாழ்வைத் திரும்பவும் பெறமுடியும் என்பதை அவர்கள் ஏன் கருதவில்லை எனத் தெரியவில்லை.
ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கண் அழியாமை, போன்ற அதிகாரங்களை எழுதிய வள்ளுவர் வறுமைக்கு மாற்றாகத் துறவையும் சாவையும் பரிந்துரைப்பாரா? மாட்டார்.
உப்பிற்கும் காடிக்கும் கூற்று:
உப்பு, காடி என்பன உணவுப் பொருள்களில் மிக மலிவானவை.
உப்பு என்பது இன்றியமையாதாயினும் சிறிதளவே பயன்படுத்த முடியும்.
புளித்துப்போன பழங்கஞ்சி 'காடி' எனப்பெறும். 'காடிக் கஞ்சியானாலும் மூடிக்குடி' என்பது பழமொழி.
'காடி என்பது காடியில் இடப்பட்ட ஊறுகாய் போலும். பெரும்பாணாற்றுப்படையில் வரும் 'காடி வைத்த கலன்' (பெரும்,57) என்ற தொடர்க்கு உரை கூறுங்கால், நச்சினார்க்கினியர் 'புளியங்காய் நெல்லிக்காய் முதலியன ஊறவிட்டு வைத்ததனைக் காடியென்றார் எனவே பொருள் கூறினார்' (காமாட்சி சீனிவாசன்).
கூற்று என்றது சாவை நிறைவேற்றும் தெய்வம் எனத் தொன்மங்கள் கூறுவது. கூற்று கூற்றுவன், இயமன், காலன் எனவும் அறியப்படுவது.
'நல்கூர்ந்தான் துறவாவிடின் புளித்த கஞ்சிக்கும் உப்பிற்கும்கூட இரந்து பிழைக்க வேண்டியதுதான்' எனச் சிலர் இதற்குப் பொருள் உரைத்தனர்.
இன்னும் சிலர் 'நாட்டின் உணவுக்கும் உப்புக்குமே கேடு' என்றனர்.
'உப்பிற்கும் காடிக்கும் கூற்று' என்ற பகுதி, மானம் போகுமாறு, ஏற்கனவே வறுமைக்கொடுமையில் உள்ளவனை, வள்ளுவர் திட்டுவதுபோல் உள்ளது. வறியவர்கள் இரங்கற்குரியவர்கள் அல்லவா? ஏன் அவர்களை வைகிறார்? புளித்துப் போன கஞ்சிக்கும் மிக எளிதாகக் கிடைக்கின்ற உப்புக்கும் வறியவன் எப்படிக் கூற்றாவான்?
பொருளால் இழிந்த நிலையினரை தாழ்வாகக் கூறியது பூமிக்குப் பாரம், சோற்றுக்குத் தண்டம் என்பன போன்ற வழக்கியல் போல் உப்புக்கும் கஞ்சிக்கும் தண்டம் எனக் கூறப்பட்டது. அவ்வளவே.
துப்பு + உரவு எனப் பிரித்து உணவுக்கு உரமாகிய கைப்பொருள் எனக் காளிங்கர் உரை செய்துள்ளார். இவரே குறள் 378-இல் துப்புரவு-நுகர்வு எனக் குறித்துள்ளார். நுகர்வு என்பதுவே பொருத்தம். துப்புரவு என்பது வள்ளுவர் தொடங்கிவைத்த, இக்காலத் தமிழில் வழங்காத, சொல் எனச் சொல்லறிஞர் கூறுவர்.
'நுகர்தற்கு வேண்டும் வாய்ப்பு எதுவும் இல்லாதவர் அந்நுகர்வை முழுமையாக விடாது இருத்தல். பிறருடைய உப்புக்கும் புளித்த நீர்க்கும் கேடேயாகும்' என்பது இக்குறளுக்கான இளங்குமரன் உரையாகும். நல்கூர்ந்தார் முயன்று வறுமையை ஒழிக்க எனக் குறிப்புணர்ந்து கருத்துரைக்கும் இவர் உரையே இக்குறளுக்கு ஏற்கத்தகும் (இரா சாரங்கபாணி).
|
'துவரத் துறவாமை' என்பதன் பொருள் என்ன?
'துவரத் துறவாமை' என்றதற்கு பற்றறத் துறவாது வருந்துதல், மூன்று வகை ஆசையைத் துறவாமல் இருப்பது, முற்றத் துறவாமை, முற்றத் துறத்தலைச் செய்யாதொழிதல், துறந்து சந்நியாஸம் பண்ணுதலைச் செய்யாதிருப்பது, முற்றத் துறந்து தவசியாகாமற்றிரிவது, வறியவர் முற்றுந் துறக்கக் கூடியவராக இருந்தும் துறக்காதது, முற்றத் துறவாது உயிரோடு இருத்தல், முற்றத் துறக்காமை, முற்றும் துறவியாகாது இருத்தல், நுகர்வை முற்றும் துறவாதிருத்தல், இல்லற ஆசைகளை முற்றிலும் விட்டொழித்துத் துறவறமாவது மேற்கொள்ள வேண்டும், நுகர்வை முழுமையாக விடாது இருத்தல், முழுதுந் துறவாதிருத்தல், முற்றும் துறவாமல் இருத்தல், முற்றிலும் துறக்க வேண்டியவராக இருந்தும் துறவாமல் குடும்பத்தில் தங்கியிருப்பது, முழுமையாகத் துறவிகள் ஆகாமல் இருப்பது, உலகப் பற்றை முற்றத் துறக்கும் நிலைமையிருந்தும் அங்ஙனஞ் செய்யாதிருத்தல்; முற்றும் துறக்காமல் இருப்பது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
துவரத் துறவாமை' என்ற தொடர் முற்றத் துறவாமை எனப்பொருள்படும். எதைத் துறப்பது பேசப்படுகிறது?
மணக்குடவர் இச்செய்யுளுக்குத் 'துறப்பாராயின் நன்றென்வாறாயிற்று' எனச் சுருக்கமான குறிப்பு ஒன்று தருகிறார். மேலும் இவர் 'துறப்பாராயின், இன்ப முறலாமென்பதாம்' என்றும் சிறப்புரையில் கூறியுள்ளார்.
இவர் 'பொருளின்மேற் பற்றறத் துறவாது வருந்துதல்' எனவும் குறித்திருப்பதால் 'பொருளின்மேற் பற்றை'த்தான் சொல்கிறார் என அறியலாம், அதாவது மணக்குடவர் உலகப் பற்றைத் துறப்பது பற்றிச் சொல்லவில்லை என்பது.
இக்குறளில் நுகர்வுத் துறவு வறுமைத் துன்பங்களிலிருந்து நீங்க ஓர் வழி என்பது சொல்லப்பட்டது.
'துவரத் துறவாமை' என்றது நுகர்வை முற்றும் துறவாதிருத்தல் என இங்கு பொருள் தரும்.
|
நுகர்தற்கு வேண்டும் பொருள் இல்லாதவர் அந்நுகர்வை முற்றும் துறவாதிருத்தல் உப்புக்கும் புளித்த நீருக்கும் பிடித்த கேடேயாம் என்பது இக்குறட்கருத்து.
ஊழின்செயலால் உண்டான நல்குரவு உப்புக்கும் காடிக்கும்கூட கையேந்த வைக்கும்.
வறியவர் நுகர்வை முற்றும் துறவாதிருத்தல் உப்புக்கும் கஞ்சிக்கும் கேடாம்.
|