இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1048இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு

(அதிகாரம்:நல்குரவு குறள் எண்:1048)

பொழிப்பு (மு வரதராசன்): நேற்றும் கொலை செய்ததுபோல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ! (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்,)மணக்குடவர் உரை: இன்றும் வரும்போலும்; நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை.
இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: நெருதலும் கொன்றது போலும் நிரப்பு - நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; இன்றும் வருவது கொல்லோ - இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்?
(அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று.)

சிற்பி பாலசுப்பிரமணியம் உரை: நேற்றும் (வறுமை காரணமாக) என்னைக் கொன்று தின்ற பசி இன்றும் வருமோ? (வறுமையின் அவலத்தைக் கூறுகிறது குறள்).


பொருள்கோள் வரிஅமைப்பு:
நெருதலும் கொன்றது போலும் நிரப்பு இன்றும் வருவது கொல்லோ.

பதவுரை: இன்றும்-இன்றைக்கும்; வருவது-வரும்; கொல்லோ-(ஐயம், கொல், ஓ இவை இரண்டும் அச்சக் குறிப்பைத் தருவன; நெருநலும்-நேற்றும்; கொன்றது-கொன்றது; போலும்-போன்ற; நிரப்பு-பட்டினி, பசி, வறுமை.


இன்றும் வருவது கொல்லோ:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்றும் வரும்போலும்;
மணக்குடவர் குறிப்புரை: இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.
பரிப்பெருமாள்: இன்றும் வரும்போலும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாடோறும் அச்ச முறுத்து மென்று கூறிற்று.
பரிதி: இன்றும் வரும் என்று விதனப்படுவார் என்றது.
காலிங்கர்: இன்றும் என்னை வந்து ஒறுப்பது கொல்லோ;
பரிமேலழகர்: இன்றும் என்பால் வரக்கடவதோ, வந்தால் இனி யாது செய்வேன்?

'இன்றும் வரும்போலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்றும் என்னை வாட்டுதற்கு வருமோ?', 'இன்றும் என்னிடம் துன்புறுத்த வருமோ?', ''இன்றைக்கும் வந்துவிடுமோ' (என்று நித்திய தரித்திரமுள்ளவன் நடுங்குவான்.)', 'இன்றைக்கும் வருமோ? (வருமாயின், யான் யாது செய்வேன் என்றவாறு)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இன்றைக்கும் வந்துவிடுமோ? என்பது இப்பகுதியின் பொருள்.

நெருநலும் கொன்றது போலும் நிரப்பு :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெருநற்றும் என்னைக் கொன்றது போலுற்ற நிரப்பிடும்பை.
பரிப்பெருமாள்: நெருநலும் என்னைக் கொன்றது போலும் நிரப்பிடும்பை.
பரிதி: நேற்று மிடியாக்கின மிடி.
காலிங்கர்: நெருநலும் வந்து கொன்றது போல உயிரையும் உடலையும் செறுத்தும் ஒறுத்தும் அடர்ந்தும் வருகின்ற வறுமைத் தொழில் என்றவாறு. [செறுத்தும்-சினந்தும்; ஒறுத்தும் -தண்டித்தும்; அடர்த்தும் நெருக்கியும்]
பரிமேலழகர்: நெருநற்றும் கொன்றது போன்று எனக்கு இன்னாதவற்றைச் செய்த நல்குரவு; [நெருநற்றும் - நேற்றும்]
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வின்னாதனவாவன, மேற்சொல்லிய துன்பங்கள், நெருநல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று. [மேற்சொல்லிய - 1045-ஆம் குறளில் சொல்லிய]

'நெருநலும் என்னைக் கொன்றது போலும் நிரப்பிடும்பை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நேற்றும் வந்த கொலை போன்ற வறுமை', 'நேற்றுக் கொன்றது போல வந்து வாட்டிய வறுமை', 'நேற்றும் வந்து என்னைக் கொன்றுவிடும் போலத் துன்பப்படுத்திய தரித்திரம்', 'நேற்று என்னைக் கொன்றாற்போல வருத்திய வறுமை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நேற்று வந்து என்னைக் கொன்றது போன்று துன்பத்தைச் செய்த பட்டினி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நேற்று வந்து என்னைக் கொன்றது போன்று துன்பத்தைச் செய்த நிரப்பு இன்றைக்கும் வந்துவிடுமோ? என்பது பாடலின் பொருள்.
'நிரப்பு' என்பதன் பொருள் என்ன?

பசியாற்ற ஒன்றுமில்லை; இன்றும் கொலை வதைதானா?

நேற்றும் என்னைக் கொலை செய்வதுபோல் வந்து துன்புறுத்திய வயிற்றுக்கில்லாமையானது இன்றைக்கும் என்னிடம் வந்து சேருமோ? யாது செய்வேன்?
கொன்றாற்போல நேற்று இருந்த பசிப்பிணி இன்றும் என்பால் வந்து விடுமோ? என்று உணவுக்கு வழியில்லாமல் உழன்று கொண்டிருக்கும் ஒருவன் அஞ்சி நடுங்கும் காட்சியை இக்குறள் கல்மனமும் கசிந்துருகுமாறு சொல்லோவியமாகக் காட்டுகிறது.
'நாள்தோறும் வந்து என்னைத் துன்புறுத்தும் பட்டினித் துன்பம் நேற்றும் வந்தது. இன்றும் தொடர்ந்தால் நான் என்ன செய்வேன்?' என்கிறான் அவ்வறியவன். கொன்றது போலும் என்றதால் அது கொலையும் அல்ல, இறப்பும் அல்ல. கொல்லாமல் கொல்வது போன்ற துயரமாம். வறுமை மனிதனை அணுவணுவாகச் சாகடிப்பது. அதனால் அவன் நாளும் துடிதுடித்துக்கொண்டே இருப்பான். நல்குரவு மனம் கலங்கச் செய்யும்: அது ஒருவனை என்ன செய்வது என அறியாமல் செய்துவிடும். ஒரு நாள் பட்டினியே சொல்லொணாத் துன்பம் என்னும்போது ஒவ்வொரு நாளும் பசியால் கொல்லப்படுவோம் என்று எதிர்நோக்கி இருப்பது எத்துணைக் கொடுமை?
நெருநலும் என்பது நேற்றும் என்ற பொருள் தருவது. இன்மைத் துன்பம் வறுமையாளனை நேற்று மட்டும் அல்ல அதற்கு முன்பும் வந்து வருத்தியிருக்கிறது என்பதை உம்மை தெரிவிக்கிறது. வருவது என்ற சொல் நாள்தோறும் வருவது நேற்றும் வந்தது. இன்றும் வரும் போலிருக்கிறது என்ற பொருளைக் காட்டிக் கொண்டிருக்கிறது. வந்தஅது நாள்தோறும் போய்க் கொண்டிருக்கிறது என்பதும் பெறப்படுகிறது.
பரிமேலழகர் 'நெருதல் மிக வருந்தித் தன் வயிறு நிறைத்தான் ஒருவன் கூற்று’ எனச் சூழ்நிலை காட்டி, புதிய நோக்குடன், குறட்கருத்தைத் தெளிவாக்குவார்.

பொழுது விடிகிறது. நுகர்வதற்குப் பொருளேதும் இல்லையாதலால், வறுமையால் வதைக்கப்படுபவனுக்கு, அது விடியல் இல்லை. புலரும்வேளையெல்லாம் அவன் நெஞ்சத்தில் ஒரு நடுக்கம் உண்டாகிறது. 'நேற்றும் கொலை செய்வது போல் வந்து துன்புறுத்திய உணவில்லாமை இன்றும் வந்து வருத்துமோ?' என்று எண்ணி அதன் கொடிய பிடியிலிருந்து தப்பியோட வழி தெரியாமல், மனம் கலங்கி நிற்கிறான். இக்குறள் வறுமையின் கொடுமை கூறவந்தது. அக்கொடுமை எண்ணிய பொழுதே துன்பத்தைத் தரவல்லது. வறுமையுற்றவனுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகித் துன்புறுவதைத் தாங்கமுடியாமல் செத்துப் பிழைப்பது போலாகிறது. வறுமைப் பிணி என்பது ஒருவகையில் சாவுதான்.
இங்கு வறுமையின் இன்னல்களைத் தாமே துய்ப்பவர் போன்று வள்ளுவர் மனம் துடிப்பதை உணர முடிகிறது. வறிய நிலையைத் தமக்கே ஏற்றிக் கொண்டு, வயிறு சுருங்கி, மனம் நொந்து பசியால் வாடும் மக்களுடன் ஒன்றுபட்டு, நேற்றும் வந்த பட்டினிநிலை இன்றும் தொடருமோ என்று வள்ளுவரே துடிப்பது போல் பசிக் கொடுமை காட்டப்பட்டுள்ளது. அவரே இவ்வளவு இன்மையை எதிர்கொண்டிருந்திருப்பாரோ என்று நம்மை எண்ண வைக்கும் அளவு துயரப் புலம்பல் கேட்கிறது. இதைவிடச் சிறப்பாக வேறு யாரால் அவலச்சுவையைக் காட்ட முடியும்? மற்ற பழம் புலவர்களும் வறுமையின் வேதனைகளைச் செய்யுள்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தாலும் அவை வறியவனது வயிற்றிக்கில்லாமையின் கொடுமையை இக்குறள்போல் நெஞ்சை உருகவைப்பதில்லை.

உணவின்றிவதைபடுவதே உண்மையான வறுமையாகும். பசிப்பிணியே அப்பெயர்க்கு உரியது. பலர் நாள்முழுவதும் உழைத்து அலைந்து திரிந்து கிடைத்தைக் கொண்டு இரவில் ஒருவகையாகப் பசியாற்றிக் கொள்கின்றனர். ஒருநாள் செல்வது அவர்கட்கு பெரும்பாடாகத் தோன்றும். வயிற்றுக்கில்லாமைக்கே இன்மைப் பெயர் பொருந்தும் (வ சுப மாணிக்கம்). அப்பட்டினிக் கொடுமை கொலையைக்காட்டிலும் கொடியது என்பதை உணர்த்த விரும்பிய வள்ளுவர் பசியால் வதைபடுவோர் பற்றிப் படிப்போர் நெஞ்சம் பதறும் மொழியில் உணர்ச்சி ஊட்டியுரைத்து இங்கு பாடியுள்ளார்.

'நிரப்பு' என்பதன் பொருள் என்ன?

'நிரப்பு' என்ற சொல்லுக்கு நிரப்பிடும்பை, வறுமைத் தொழில், நல்குரவு, பொல்லாத காரியத்தைச் செய்த தரித்திரம், வறுமை, பசி, ஏழ்மை என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நிரப்பு என்பது ஒன்றும் இல்லாததை மங்கல வழக்காகக் (நிரம்ப இருப்பதாக-நிறைவாக) கூறுவது.
இன்மை இல்லாமையையும் இடும்பை துன்பத்தையும் குறிப்பன. நிரப்பு நிறைவையும் குறைவையும் காட்டி நிற்கும் ஒரு சொல். அது இக்குறளின் இறுதியில் நின்று துன்ப நிறைவையும், பொருட்குறைவையும் காட்டுவதோடு வள்ளுவரது புலமையையும் காட்டுகிறது (கி ஆ பெ விசுவநாதம்).
நல்குரவு, ‘நிச்ச நிரப்பு’ என்று பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு (பொச்சாவாமை 532 பொருள்: தொடர்ச்சியான பட்டினி அறிவினை அழிப்பது போன்று கடமைகளில் கவனம் செலுத்தாது புறக்கணித்தல் ஒருவரது நற்பெயரைக் கெடுக்கும்) என்றும் 'நிரப்பிடும்பை’ என்று கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் (இரவு1056: உள்ளதை ஒளிக்கும் துன்ப நிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் பட்டினித்துன்பம் எல்லாம் ஒருசேரக் கெடும்) என்றும் பிற இடங்களில் ஆளப்பட்டது.

'நிரப்பு' என்ற சொல்லுக்குப் பசித்துன்பம் என்பது பொருள்.

நேற்று வந்து என்னைக் கொன்றது போன்று துன்பத்தைச் செய்த நிரப்பு இன்றைக்கும் வந்துவிடுமோ? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஒவ்வொரு விடியற்பொழுதும் அஞ்சி நடுங்கவைப்பது நல்குரவு.

பொழிப்பு

நேற்றும் வந்த கொலை போன்ற வறுமை இன்றும் எனக்கு இன்னல் விளைக்க வருமோ?