இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1043தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை

(அதிகாரம்:நல்குரவு குறள் எண்:1043)

பொழிப்பு (மு வரதராசன்): வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால் அவனுடைய பழைமையான குடிப் பண்பையும் புகழையும் ஒருசேரக் கெடுக்கும்.

மணக்குடவர் உரை: தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்; நல்குரவென்று சொல்லப் படுகின்ற ஆசைப்பாடு.
நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால் ஆசையாயிற்று. தொல்- ஆகுபெயர். இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது.

பரிமேலழகர் உரை: நல்குரவு என்னும் நசை - நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை; தொல் வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும் - தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும்.
(நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். 'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்' (மணி.11-76) என்றார் பிறரும். தோலாவது 'இழுமென் மொழியால் விழுமியது நுவறல்' (தொல். பொருள். செய்யுள் .239) என்றார் தொல்காப்பியனாரும். இதற்கு 'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் உடம்பு கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக.)

வ சுப மாணிக்கம் உரை: வறுமைப்பிடி வழிவந்த குடிப்புகழையும் உடல் வனப்பையும் ஒருங்கே அழிக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்குரவு என்னும் நசை தொல்வரவும் தோலும் தொகையாகக் கெடுக்கும்.

பதவுரை: தொல்வரவும்-வழிவழி வந்தனவும், குடிவரவும், பழமையான வரலாறும்; தோலும்-வடிவழகும், சொல்லும்,புகழ்மொழியும்; கெடுக்கும்-போக்கும்; தொகையாக-ஒருங்கு, ஒருசேர; நல்குரவு-வறுமை; என்னும்-என்கின்ற; நசை-விருப்பம், ஆசை, கேடு.


தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்;
மணக்குடவர் குறிப்புரை: தோல்- ஆகுபெயர். இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது. [தோல் என்னும் சினைப்பெயர் அதனைப் பற்றிய அழகை யுணர்த்திய சினையாகுபெயர்]
பரிப்பெருமாள்: தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும் வடிவழகினையும் ஒருங்கு கெடுக்கும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: தோல்- ஆகுபெயர். இது குலத்தினையும் அழகினையும் கெடுக்குமென்றது.
பரிதி: பெருமையும் சரீரமும் கெடுக்கும்;
காலிங்கர்: தமக்கு அனாதி முதலாக வருகின்ற குடி வரலாற்று ஒழுக்கத்தையும் தமது வலியினையும் எல்லாம் ஒக்கக் கெடுக்கும்;
காலிங்கர் குறிப்புரை: தொல் வரவு என்பது தொன்றுதொட்டு வருகின்ற குடி வரலாறு; தோல் என்பது வலி என்றது.
பரிமேலழகர்: தன்னால் பற்றப்பட்டாருடைய பழைய குடிவரவினையும் அதற்கு ஏற்ற சொல்லினையும் ஒருங்கே கெடுக்கும். [பற்றப்பட்டாருடைய- பீடிக்கப்பட்டவருடைய; அதற்கு ஏற்ற - பழைய குடிவரவிற்குத் தகுந்த]
பரிமேலழகர் குறிப்புரை: 'குடிப்பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும்' (மணி.11-76) என்றார் பிறரும். தோலாவது 'இழுமென் மொழியால் விழுமியது நுவறல்' (தொல். பொருள். செய்யுள். 239) என்றார் தொல்காப்பியனாரும். இதற்கு 'உடம்பு' என்று உரைப்பாரும் உளர். அஃது அதற்குப் பெயராயினும் உடம்பு கெடுக்கும் என்றற்கு ஓர் பொருட்சிறப்பு இல்லாமை அறிக. [இதற்கு - தோல் என்பதற்கு; அஃது அதற்கு - தோல் உடம்பிற்கு]

தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும், வடிவழகினையும்/சரீரமும்/வலியினையும்/சொல்லினையும் ஒருங்கு கெடுக்கும் என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பழைய குடிச்சிறப்பையும் அதனால் வரும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்', 'நல்ல குடிப் பிறப்பினால் ஒருவனுக்குள்ள பெருமைகளையும் (அந்த நல்லகுடிக்கு இருந்து வரும்) புகழையும் ஏககாலத்தில் கெடுத்துவிடும்', 'பழைமையாய் வருகிற சிறந்த தொழிலையும், அதனால் வரும் புகழ்ச் சொல்லையும் ஒருங்கே கெடுக்கும்', 'பழங்குடிச் சிறப்பினையும் அழகையும் ஒரு சேரக் கெடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வழிவந்த குடிச்சிறப்பையும் அதனால் வரும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நல்குரவு என்னும் நசை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்குரவென்று சொல்லப் படுகின்ற ஆசைப்பாடு.
மணக்குடவர் குறிப்புரை: நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால் ஆசையாயிற்று.
பரிப்பெருமாள்: நல்குரவென்று சொல்லப் படுகின்ற ஆசைப்பாடு.
பரிப்பெருமாள் குறிப்புரை: நல்குரவு ஆசையைப் பண்ணுதலினால் ஆசையாயிற்று.
பரிதி: நல்குரவு என்றவாறு.
காலிங்கர்: யாதோ எனின் நல்குரவு என்று சொல்லப்படுகின்ற பிறர்மாட்டு ஒன்றை நச்சுதல் என்னும் புல்லிமையாகிய நசை உரு என்றவாறு. [நச்சுதல்-விரும்புதல்; புல்லிமையாகிய நசை உரு-இழிந்த விருப்பமாகிய வடிவம்]
பரிமேலழகர்: நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை;
பரிமேலழகர் குறிப்புரை: நசையில் வழி நல்குரவும் இல்லையாகலின், நல்குரவையே நசையாக்கி, அஃது அக்குடியின் தொல்லோர்க்கு இல்லாத இழிதொழில்களையும் இளிவந்த சொற்களையும் உளவாக்கலான், அவ்விரண்டனையும் ஒருங்கு கெடுக்கும் என்றார். [அவ்விரண்டினையும் -தொல்வரவையும் தோலையும்]

'நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வறுமை என்று சொல்லப்படும் ஆசை அதனை உடையானது', '(குற்றங்களைச் செய்த பாவத்தின் பயனாகிய) தரித்திரம் என்ற குற்றம் (குறை)', 'பொருள் சிறிதிருந்தும் வறுமையென்று உணர்தற்கு ஏதுவாய ஆசையானது', 'நல்குரவு என்று சொல்லப்படும் வேண்டியவற்றை விரும்புதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வறுமை என்று சொல்லப்படும் ஆசை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வறுமை என்று சொல்லப்படும் ஆசை, வழிவந்த குடிச்சிறப்பும் தோலும் ஒரு சேரக், கெடச்செய்யும் என்பது பாடலின் பொருள்.
'தோலும்' என்பதன் பொருள் என்ன?

ஆசைப்பட்டு வறுமையுற்றவன் அவனது முன்னோர்களது பெருமையையும் ஈட்டிய நற்பெயரையும் அழிப்பான்.

நிரம்பப் பொருள் வேண்டும் என்னும் ஆசையால் வந்த வறுமையானது வழிவழி வந்த உடைமையையும் குடிப்பிறப்பின் பெருமையையும் அதன் காரணமாக வந்துள்ள நற்பெயரையும் ஒருசேரக் கெடுக்கும்.
நல்குரவு என்னும் நசை:
இதற்கு நேர்பொருள் வறுமை என்று சொல்லப்படுகின்ற ஆசை என்பது. இத்தொடர்க்கு நல்குரவு என்று சொல்லப்படும் ஆசை எனப்பொருள் கூறி நல்குரவே நசை என்றார்கள் தொல்லாசிரியர்கள். 'ஆசையைப் பண்ணுதலான் நல்குரவு ஆசையாயிற்று' என்றும் 'பிறர்மாட்டு ஒன்றை விரும்புதல் என்னும் இழிந்த விருப்பமாகிய வடிவம்.' என்றும் 'ஆசையில்லாவிட்டால் நல்குரவும் இல்லையாகலின், நசை நல்குரவாயிற்று' என்றும் காரணங்காட்டுவர் இவர்கள்.
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை (பிரிவாற்றாமை 1156 பொருள்: பிரிந்து செல்லலை என்னிடம் வந்து சொல்லும் அளவுக்குக் கொடியமனம் கொண்டவராய் இருப்பின் அவர் திரும்ப வரும்வேளை அன்பு காட்டுவர் என எதிர்பார்ப்பது வீணான ஆசையே) என்ற பாடலிலும் நசை என்ற சொல் ஆசை என்ற பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. எனவே ஆசை என்னும் பொருளே பொருத்தம். '‘நல்குரவு என்னும் நசை’ என்பதற்கு, எதிர்மறை நடையில் வேண்டாமை யன்ன விழுச்செல்வம்.... (அவாவறுத்தல் 363 பொருள்: எதிலும் பெருவிருப்பம் கொள்ளாததைப் போன்ற விழுமிய செல்வம்....) எனக் கூறியிருத்தல் நோக்கியும் ஆசை என்னும் பொருளே தகுவதென்ப தறியலாம். வேண்டாமைக்கு எதிர்மறை வேண்டுதல். விரும்புதல்-ஆசை. விழுச் செல்வத்திற்கு எதிர்மறை நல்குரவு‘ என்பார் இரா சாரங்கபாணி.
நல்குரவு என்னும் நசை என்னும் தொடர் கூற வருவது என்ன? நல்குரவால் நசை என்பதையா, நசையால் நல்குரவு என்பதையா? இன்றியமையாத் தேவைகளான உணவு, ஆடை இவற்றில் ஆசை கொள்வது நல்குரவால் உண்டாகும் நசை. வறுமையில் உள்ளபோது ஆடம்பரப் பொருட்கள் மேல் ஆசை கொள்வதை நசையால் உண்டான நல்குரவு எனச் சொல்லலாம். இவ்விரண்டு ஆசைகளையும் இக்குறள் குறிக்காது எனச் சொல்லி கா சுப்பிரமணியம் பிள்ளை உரை கூறும் 'பொருள் சிறிதிருந்தும் வறுமையென்று உணர்தற்கு ஏதுவாய ஆசை' யையே வள்ளுவர் கூறுவது என்பார் தண்டபாணி தேசிகர். அவ்வுரை 'ஏதோ வாழ்க்கைக்கு வேண்டிய அளவிருந்தும் மிகைபட விரும்பும் ஆசையே நல்குரவு' என்ற கருத்தைத் தருவது. இந்த விருப்பம் ஒருவகை வறுமை எனக் கொள்ளலாம்.
இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான முதுமொழிக்காஞ்சி கூறும் பாடலின் கருத்தோடு ஒட்டி அமைந்துள்ளது. அது நசையிற் பெரியதோர் நல்குர வில்லை (இல்லைப்பத்து 7 பொருள்: ஆசையின் மிக்கதொரு வறுமை இல்லை) என்பது. பொருளுடன் வாழ்பவனாக இருந்தாலும், மனத்தில் ஆசை என்கிற வேட்கை தொடர்ந்துகொண்டே இருந்தால், அவனும் வறுமையாளனே!
அந்த வறுமைநிலையில் ஆசைப்பட்டால் தொல்வரவும் தோலும் கெடும் என்கிறது இக்குறள்.

ஆசை தவிர்த்து ‘நசை’ என்பதற்குக் குற்றம், கேடு எனவும் பொருள் கூறினர்.
கு ச ஆனந்தன் 'தொல்வரவும் தோலும் என்பவை முறையே ஓரின மக்களுடைய வரலாறு மற்றும் நூல்கள் ஆகும். 'நசை' என்ற சொல் குற்றம் என்ற பொருளிலும் சங்க இலக்கியங்களில் பயிலப்பட்டுள்ளது. எனவே நசை என்றால் குற்றம் என்பதே சரியான பொருள்' என்கிறார். வறுமை என்னும் (சமுதாயக்) குற்றம் பற்றிக் கொண்டால் பழமையான வரலாற்றையும் (தொல்வரவு), அறிவுசால் நூல்களையும் (தோலும்), ஒருசேர அழித்து விடும் என்பது இவரது விளக்கம்.

தொல்வரவும்:
இத்தொடர்க்கு தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பினையும். பெருமையும், தமக்கு அனாதி முதலாக வருகின்ற குடி வரலாற்று ஒழுக்கத்தையும், பழைய குடிவரவினையும், தன் வங்கிசத்தார் நடந்த நல்ல நடக்கையையும், பழைய குடி மரபினையும், பழைமையான குடிப்பண்பையும், தொன்று தொட்டுவரும் குடிச்சிறப்பினையும், பழைய குடி மரபினையும், வழிவந்த குடிப்புகழையும், பழைய குடிச்சிறப்பையும், நல்ல குடிப் பிறப்பினால் ஒருவனுக்குள்ள பெருமைகளையும், பழமையான குடிப்பிறப்பையும், பழைமையாய் வருகிற சிறந்த தொழிலையும், பழங்குடிச் சிறப்பினையும், தொன்றுதொட்டு வருகின்ற குடிப்பிறப்பின் வரலாற்றையும், குடியின் பழம் பெருமையையும், பழங்குடிப் பெருமையையும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர். தொல்வரவும் என்பதற்குப் பழைய குடும்பச் செல்வத்தையும் என்றும் பொருளுரைத்தனர்.

தொல் என்பது பழைய எனப்பொருள்படும்.
'வரவு' என்ற பொதுச்சொல்லுக்கு பிறப்பு, பெருமை, தொழில், வரலாறு, நடத்தை எனப் பொருள் கூறினர். இவையனைத்தும் சேர்ந்த ஒன்று பெருமை அப்பெருமையே அக்குடியின் வரலாறாக அமைவதால் 'வரலாறு' என்ற உரை சிறந்து நிற்கும். எனவே தொல்வரவு என்றதற்கு வழிவழிவந்த குடிச்சிறப்பு என்பது பொருளாம்.
வாழ்வுக்குத் தேவையில்லாதவற்றையும் கருதி பலர் நிறைய ஆசைப்படுகிறார்கள். அவை கிடைக்காத போது அதையும் வறுமை என்று கருதி துயர்ப்படுகின்றனர். எவ்வாறேனும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணுபவன் பொருள்கள் பெறவேண்டுமென்ற ஆசை கொண்டு பழைய குடும்பப் பெருமையையும், அதன்மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும்புகழையும் கெடுக்குமாறு குற்றப்படும்படி நடந்துகொள்வான். பசி வந்திட பத்தும் பறந்துபோகும் ஆதலால் இவ்வாசை குற்றம் புரிவதற்குக் காரணமாக இருக்கிறது என்பது உணர்த்தப்பட்டது. அந்த விருப்பமே முன்னோர் ஈட்டி வைத்த நல்லவற்றையெல்லாம் இழக்க ஏதுவாகிறது,

'தோலும்' என்பதன் பொருள் என்ன?

தோலும்:
'தோலும்' என்ற சொல்லுக்கு வடிவழகினையும், சரீரமும், தமது வலியினையும், குடிக்கு ஏற்ற சொல்லினையும், நல்ல வசனங்களையும், பழைய புகழினையும், புகழையும், இனிய விழுமியமொழி பேசும் பண்பினையும், உடல் வனப்பையும், புகழ்ச் சொல்லையும், அழகையும், புகழ் மொழியையும், தோற்றப் பொலிவையும், கல்வி நலனையும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
உடல் அழகு, வலிமை, புகழ் எனப் பொருள் கூறப்பட்டன. தோலைப்பற்றி நிற்பதாகி இடவாகு பெயராக அழகு என உரை கண்டனர் சிலர். தோல் என்னும் சினைப் பெயரை முதலாகிய உடலுக்காக்கி உடலின் உடைமையாகிற வலிமைக்கு ஆக்கினார் காலிங்கர். வறுமையால் உடல் அழகு கெடுவது உண்மைதான். ஆனால் குடிச்சிறப்போடு உடல் அழகையும் இணைத்துக் குறள் பேசும் என எண்ண முடியவில்லை. வலிமை என்பது இங்கு இயையுமாறில்லை. பரிமேலழகர் உரையில் 'தோலாவது 'இழுமென் மொழியால் விழுமியது நுவறல்' (தொல். பொருள். செய்யுள் .239) என்றார் தொல்காப்பியனாரும்' என்ற குறிப்பு உள்ளது. இவர் தோல் என்பதைப் புகழ்ச்சொல் எனக் குறிக்கிறார்.
வறுமையினால் பல பொருள்கள் மேலும் ஆசையுண்டாவதானாலும், அவ்வாசை பல இழி தொழில்களைச் செய்யத் தூண்டுதலாலும், குற்றச் செயல்களில் ஈடுபடச் செய்வதாலும் குடும்பப் புகழ் குன்றும் என்பது வெளிப்படை. தோல் என்றதற்கு இப்பொருள்கொள்வதே பொருத்தமாம். வறுமை வந்துற்றுழி வழிவந்த குடிச்சிறப்பு அதனுடன் இணைந்த புகழும் கெடும்.

தோலும் என்ற சொல் புகழும் என்ற பொருள் தருவது.

வறுமை என்று சொல்லப்படும் ஆசை வழிவந்த குடிச்சிறப்பையும் அதனால் வரும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஆசையில்லார்க்கு வறுமை இல்லை; ஆதலால் ஆசையும் நல்குரவுதான்.

பொழிப்பு

வறுமை வந்துழி அது வழிவந்த குடிப்பெருமையையும் நற்பெயரையும் ஒருங்கே அழிக்கும்.