இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1042இன்மை எனஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்

(அதிகாரம்:நல்குரவு குறள் எண்:1042)

பொழிப்பு (மு வரதராசன்): வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.

மணக்குடவர் உரை: நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன் இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும்.
தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.

பரிமேலழகர் உரை: இன்மை என ஒருபாவி - வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி; மறுமையும் இம்மையும் இன்றி வரும் - ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும்.
('இன்மையென ஒரு பாவி' என்பதற்கு மேல் 'அழுக்காறென ஒரு பாவி' (குறள்-168) என்புழி உரைத்தாங்கு உரைக்க. மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: வறுமை என்னும் ஒருபாவி ஒருவனுக்கு இம்மையும் மறுமையும் இன்பம் இலதாகும்படி வருவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்மை எனஒரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும்.

பதவுரை: இன்மை-வறுமை; என-என்று சொல்லப்படுகிற; ஒரு-ஒரு; பாவி-தீமையே செய்பவன், தீச்செயலாற் கொடியது; மறுமையும்-மேலுலக இன்பமும்; இம்மையும்-இவ்வுலக இன்பமும்; இன்றி-இல்லாமல்; வரும்-வந்தடையும்.


இன்மை எனஒரு பாவி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன்;
பரிப்பெருமாள்: நல்குரவென்று கூறப்படுகின்ற நிகரில்லாத பாவத்தை யுடையவன்;
பரிதி: இல்லாமை என்னும் தீய பாவி வந்தால்;
காலிங்கர்: இல்லாமை என்று எடுத்துரைக்கப்பட்ட இணை இறந்த பாவி;
பரிமேலழகர்: வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி;
பரிமேலழகர் குறிப்புரை: 'இன்மையென ஒரு பாவி' என்பதற்கு மேல் 'அழுக்காறென ஒரு பாவி' (குறள்-168) என்புழி உரைத்தாங்கு உரைக்க.

'வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வறுமை என்ற பேர்பெற்ற பாவி', 'வறுமை என்று சொல்லப் படுவதொரு பாவி', '(ஒருவன் செய்த) ஒரு பாவம்', 'வறுமை யென்று சொல்லப்படுவதொரு பாவி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வறுமை என்று சொல்லப்படுவதொரு மாபாவி என்பது இப்பகுதியின் பொருள்.

மறுமையும் இம்மையும் இன்றி வரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('விடும்' பாடம்): இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும். [நுகர்ச்சி-துய்த்தல்]
மணக்குடவர் குறிப்புரை: தன்மம் பண்ணாமையால் மறுமையின்கண்ணும் நுகர்ச்சியில்லாமையாயிற்று. இது நல்குரவு துன்பமாக்கு மென்றது.
பரிப்பெருமாள் ('விடும்' பாடம்): இம்மையின்கண்ணும் மறுமையின்கண்ணும் நுகர்ச்சி இன்றி விடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தானம் பண்ணாமையால் மறுமையினும் நுகர்ச்சி இல்லையாயிற்று. இஃது, இன்பம் இல்லையாக்கும் என்றது.
பரிதி: இம்மையிலும் மறுமையிலும் துன்பம் தரும் என்றவாறு.
காலிங்கர்: யாதொருவர்மாட்டு வரும்பொழுதே இம்மையாக்கமும் மறுமையாக்கமும் என்பன யாவுமின்றித் தானே வந்து கைக்கொண்டு நிற்கும் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவனுழை வருங்கால் அவனுக்கு மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும். [ஒருவன் உழை-ஒருவனிடத்து]
பரிமேலழகர் குறிப்புரை: மறுமை, இம்மை என்பன ஆகுபெயர். ஈயாமையானும் துவ்வாமையானும் அவை இலவாயின. 'இன்றிவிடும்' என்று பாடம் ஓதிப் 'பாவியால்' என விரித்துரைப்பாரும் உளர். [மறுமை-மேலுலகம்; இம்மை-இவ்வுலகம்; அவை- இன்பங்கள்]

'யாதொருவர்மாட்டு வரும்பொழுது மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லையாக வரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எப்பிறப்பிலும் தொடர்ந்து வரும்', 'ஒருவனைச் சேர்ந்தால் அவனுக்கு மறுமை இன்பமும் இம்மை இன்பமும் இல்லையாம்', 'தரித்திரம் என்ற பெயரால் இப்பிறப்பின் இன்பங்களையும் மறுபிறப்புக்கான எண்ணங்களையும் அவனுக்கு இல்லாமற் செய்துவிட வந்து சேரும்', 'மறு உலக இன்பமும் இவ்வுலக இன்பமும் இல்லாமல் செய்ய வரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மறுஉலக இன்பமும் இவ்வுலக இன்பமும் இல்லாமல் செய்யவரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வறுமை என்று சொல்லப்படுவதொரு மாபாவி மறுமையும் இவ்வுலக இன்பமும் இல்லாமல் செய்யவரும் என்பது பாடலின் பொருள்.
'மறுமையும்' குறிப்பது என்ன?

வறுமையுற்றவனுக்கு உலகம் முழுமைக்கும் இன்பம் இல்லை.

வறுமை என்று சொல்லப்படும் தீயவன் ஒருவனைப் பற்றிக் கொண்டால், அவனுக்கு இவ்வுலக இன்பமும், மேலுலக இன்பமும் இல்லாமற் போய்விடும்.
இன்மை என்ற சொல் இல்லாமையைக் குறிப்பது. அது இங்கு நுகர்தற்கு ஒன்றும் இல்லாமையைக் குறிக்க வந்தது. முந்தைய குறள் (1041) ஒப்புக் கூறமுடியாத வறுமைதரும் துன்பம் பற்றிப் பேசியது. இங்கு வறுமையின் கொடுமை வேறுவகையில் புலப்படுத்தப்படுகிறது.
'என' என்னும் சொல், சொல்வது, சொல்லப்படுவது, கருதுவது என்னும் கருத்தாக்கங்களில் குறளில் வழங்கப்படுகிறது.
'பாவி' என்பது தீமையே செய்துவருபவனை இகழ்ந்து விளிக்கும் சொல்.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும் (ஆள்வினையுடைமை 616 பொருள்: முயற்சி செல்வத்தினை உண்டாக்கும்; முயற்சி செய்யாமல் இருத்தல் ஒருவனை வறுமையுள் செலுத்திவிடும்) என்பதில் இன்மை என்பது போகூழாலன்றி முயற்றின்மையானும் வருவது எனக் கூறப்பட்டிருப்பதால், இங்கு இன்மை 'வரும்' என்று சொல்லப்படுகிறது.

வறுமை என்கிற தீயவன் வந்து சேர்ந்தால், அவனால் மறுமை வாழ்வு இம்மை வாழ்வு இரண்டும் கெடுகிறது. அதாவது இவ்வுலக வாழ்வு மேலுக வாழ்வுப் பயன்களைக் கெடுக்கின்ற வகையிலே வறுமை வந்து சேர்கின்றது. வறுமையால் மனித மதிப்பீட்டுக்குரிய உயர் பண்புகள் எல்லாம் மறைந்துபோம். அதனால் மேலுக இன்பம் அதாவது மறுமை இன்பம் இல்லையாகிறது. நல்குரவு என்னும் இடும்பை தங்கியிருக்கும் காலம் முழுவதிலும் இவ்வுலக இன்பத்தை நுகரமுடியாத நிலையைத் தோற்றுவித்து விடும். அதனால் இம்மை இன்பத்தில் இழப்பு உண்டாகிறது. பிறர்க்குக் கொடுத்துவப்பது மேலுலகு சென்று இன்பம்பெற வழிவகுக்கும்; தாமே துய்க்குமின்பம் இவ்வுலக இன்பமாம். இவை இரண்டும் வறுமையில் உழல்பவர்க்கு இல்லை. நல்குரவு என்னும்பாவி பின்னாளிலும் இந்நாளிலும் தன்னைக் கொண்டவனின் நலங்கெடுப்பான். ஆகவே சோர்வு கொள்ளாது நிமிர்ந்தெழுங்கள் என்றும் சொல்லியவர் நம்மைத் தாளாண்மை கொள்ளச் செய்கின்றார் என்றும் இக்குறளை விளக்குவர்.
முன்பு அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும் (அழுக்காறாமை 168 பொருள்: பொறாமை என்னும் பெரும் பாவம் செல்வத்தை அழித்துத் தீய இடத்துக் கொண்டு தள்ளிவிடும்) என்று பொறாமை என்ற தீக்குணம் பாவி என அழைக்கப்பட்டது. இங்கு பல துன்பங்களுக்குக் காரணமாகும் வறுமை பாவி எனப்படுகிறது. கெடுதல் செய்வதற்கென்றே இவை வருவதால் பாவி எனச் சொல்லப்பட்டது.

இன்றி வரும் என்பதற்கு 'இன்றிவிடும்' என்று பாடங்கூறி, பாவி என்பதனைப் பாவியால் என மூன்றனுருபு விரித்து வறுமை யென்று சொல்லப்படுவதொரு பாவியால் மறுமையின்பமும் இம்மையின்பமும் இல்லாதொழியும் என்றும் உரை கூறுவர்.

'மறுமையும்' குறிப்பது என்ன?

இப்பொழுது நாம் வாழ்வது இப்பிறப்பு எனப்படுவது. அதை இம்மை என்று அழைப்பர். இறப்புக்குப்பின்னும் வாழ்வு என்று நம்புவோர் இனிவரும் பிறவியை மறுமை என்பர். இக்குறளில் கூறப்படும் மறுமை இம்மை என்பன இடவாகுப் பெயராய் அவ்விரண்டிலும் நுகரப்படும் இன்பங்களைக் காட்டின. எனவே இம்மை என்பது இவ்வுலக வாழ்வின் இன்பத்தையும் மறுமை என்பது மேலுக வாழ்வின் இன்பத்தையும் குறிப்பதாக உள்ளன.
இம்மை என்பது மண்ணுலக வாழ்வு, மறுமை என்பது விண்ணுலக வாழ்வு எனப் பொருள்படுத்தியும் கூறுவர். பரிப்பெருமாள் என்னும் பழைய உரையாசிரியர் இவ்விரண்டின் 'இன்பமாவது மக்களாயும் தேவராயும் நுகரப்படுவது' என்றார். மறுபிறப்பு, பல்பிறப்பு என்பவற்றில் நம்பிக்கையற்றவர்கள் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் என்றதற்கு 'வாழும்போதே அன்றி மறைந்த பின்னரும் புகழின்பம் தரும்' எனப் பொருள் கூறுவர்.
'மறுமையும்இம்மையும் இன்றி' என்ற தொடர் இங்கு மறுமையும் இம்மையும் இன்பம் இல்லாமல் என்ற பொருள் தரும். எனவே மறுமையும் என்பது மறுமை இன்பமும் (இல்லை) எனப்பொருள்படும். இக்குறள் பொருளிலான் பற்றியதாதலால் அவனுக்கு அறச்செயல்கள் புரிய வழியில்லை. தன் பிழைப்புக்காகவும் குற்றச்செயல்கள் மேற்கொள்வானாகவும் இருப்பானாதலால் மறுமையின்பத்தை அழிக்கும் தீச்செயல்களும் அவனிடத்துப் பெருகும். இன்ன பிற காரணங்களால் அவனுக்கு வானுலக வாழ்க்கையை நுகர வாய்ப்பில்லை. எனவே மறுமை இன்பம் இல்லை.

இக்குறளில் மறுமையும் இம்மையும் துன்பம் தரும் என்ற பொருளில் ஈற்றடி உள்ளது. மாறாக, முன்பு சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் (இனியவை கூறல் 98 பொருள்: சிறுதன்மை இல்லாத இன்சொல் மறுபிறப்பிலும் இப்பிறப்பிலும் இன்பம் தரும்) என்பதில் மறுமையும் இம்மையும் இன்பம் தரும் என ஈற்றடி கூறியது. இங்கு துன்பம், அங்கு இன்பம்.
'இம்மையிலும் மறுமையிலும்' என்று தொடர் அமைப்பதே மரபு. அவ்விதம் உரைத்தலை மாற்றி, மறுமையும் இம்மையும் என இருகுறள்களிலும் சொல்லப்பட்டுள்ளது. மறுமையின் வறுமைத் துன்பம் பெரிதாகக் கருதப்படுவதால் மறுமையை முற்படுத்திப் பின்னர் இம்மை சொல்லப்படுகிறது என இதை விளக்குவர். அதுபோல் மறுமையின்பம் பெரிதாகக் கருதப்படுவதால் அங்கும் மறுமை முதலில் வந்தது என்பர்.

'மறுமையும்' என்ற சொல் இங்கு மேலுலக(இன்ப)மும் என்ற பொருள் தரும்.

வறுமை என்று சொல்லப்படுவதொரு மாபாவி மறுஉலக இன்பமும் இவ்வுலக இன்பமும் இல்லாமல் செய்யவரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நல்குரவின் கொடுமை, விண்ணுலக வாழ்வென வொன்றிருந்தால் அங்கும் தொடருமாம்.

பொழிப்பு

வறுமை என்று சொல்லப்படுவதொரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால் அவனுக்கு மறுமை இன்பமும் இம்மை இன்பமும் இல்லையாம்.