பகைநெஞ்சம் கொண்டோர், சுற்றத்தார், அண்டைவீட்டார், பணிசெய்யும் இடத்தில் உடனிருப்போர், மற்றும் மனித உறவில் நாம் அடிக்கடி ஊடாட நேரும் பலர் உள்ளத்தால் நட்புச் செய்யாமல் புறத்து மட்டும் நண்பராகக் காட்டிக்கொள்வர். அவர்களிடம் எப்படி ஒழுகுவது என்பதைச் சொல்லும் பாடல் தொகுதி இது.
கூடாநட்பினரை நேரா நிரந்தவர்(கூடாமலிருந்து கலப்பவர்), இனம் போன்று இனமல்லார், அகத்தின்னா வஞ்சர்(மனத்தில் கொடிய எண்ணங்களை உடைய வஞ்சர்), மனத்தின் அமையாதவர், ஒட்டார்(அகத்து ஓர் ஒட்டு இல்லாதார்) என்று அழைத்து அவரது தன்மைகளைத் தெரியப்படுத்துகிறது இவ்வதிகாரம்.
வஞ்சக உள்ளத்தோடு உறவுகொள்பவர்களையே இவ்வதிகாரம் பெரிதும் பேசுகிறது. அவர்கள் தமக்கு வாய்க்குமிடம் பெறுமளவும் கூடியொழுகுவர்; அதன்பின் ஓங்கி அடிக்கும் பட்டடை ஆகிவிடுவர். அவர்கள் மனம் ஒருநிலைப்பட்டிருக்காது. கற்றவன் ஏமாற்றமாட்டான் என எண்ணவேண்டாம். மனத்தில் ஒன்றாதவர் சொல்லில் உண்மை இல்லை என்பதைப் பேசும்போதே அறிந்து கொள்ளலாம். பணிவாகப் பேசுகின்றான் என்பதற்காக அவன் சொல்வதை ஏற்க வேண்டியதில்லை. இவை அதிகாரம் தரும் செய்திகள்.
தீய நட்பு வெளிப்படையாகத் தெரியக் கூடியது. கூடா நட்பு என்பது நட்பு போலக் காட்டிப் பகையும் பழியும் கொண்டிருப்பது. இத்தகு நட்பினால் அழிந்தோர் வரலாற்றில் பலர்.
ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் காட்டப்படும் ஜூலியஸ் சீசர்- புரூட்டஸ் உறவு மனத்தொடு பொருந்தாத கேண்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சீசரின் உள்வட்ட நண்பனாக இருந்துகொண்டே மனத்துள் கொடிய பகையுடன், அவரைக் கொலை செய்த சூழ்சிக்காரர்களில் ஒருவனானான புரூட்டஸ் 'நீ கூடவா புரூட்டஸ்!' என சீசரை அதிரும்படி செய்ய வைத்தான். இயேசு கிறுஸ்துவைக் காட்டிக் கொடுத்ததும் யூதாஸ் உடனான கூடா நட்புத்தான்.
மனம் பொருந்தாக் கேண்மையரிடம் நாம் உள்ளன்புடன் பழகுவது நமக்குக் கேடு உண்டாக்கும். அவர்களிடம், நாமும் உண்மையாகப் பழகாமல், அவர்கள் போலவே மகிழ்ந்து பேசி உறவாடிக் காலம் வந்தபோது அவர்களின் நட்பினை அழித்தொழித்து விடவேண்டும் என்று கூடாநட்பை நீங்குவதற்கு ஒரு உத்தி சொல்கிறது அதிகாரப் பாடல் ஒன்று.
அதுபோலவே பகை நட்பாகுங் காலம் வந்தால், முகநட்புச் செய்து அகநட்பை நீக்கிக் கொள்ளலாம் என்கிறது இன்னொரு குறள்.