மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று
(அதிகாரம்:கூடாநட்பு
குறள் எண்:825)
பொழிப்பு (மு வரதராசன்): மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர் கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித் தெளியக்கூடாது.
|
மணக்குடவர் உரை:
மனத்தால் பொருத்தமில்லாதவரை யாதொன்றன் கண்ணும் அவர் சொல்லினால் தெளிதற்பாலதன்று.
இது சொல்லினால் அறிதலரிதென்றது.
பரிமேலழகர் உரை:
மனத்தின் அமையாதவரை - மனத்தால் தம்மொடு மேவாதாரை; எனைத்து ஒன்றும் சொல்லினால் தேறல்பாற்று அன்று - யாதாரு கருமத்தினும் சொல்லால் தெளிதல் முறைமைத்தன்று, நீதிநூல்.
('நீதி நூல்' என்பது அவாய் நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச் செவ்விய சொல் எனக் கருதி, அவரைக் கருமங்களில் தெளிதல் நீதிநூல் முறைமை அன்று என்பதாம்.)
தமிழண்ணல் உரை:
தம்மோடு மனத்தினால் முழுவதும் பொருந்தாதவரை, எந்த ஒரு வகையிலும் அவர் பேசுவதை நம்பித் தெளியும் தன்மையுடையதன்று நட்பு.
அவர் நம்பவைப்பவர் போல் திறம்படப் பேசுவராதலின், அவர் பேச்சை நம்பித் தெளியற்க என்பதாம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று.
பதவுரை: மனத்தின்-உள்ளத்தால்; அமையாதவரை-நட்பமைவு இல்லாதாரை, பொருந்தாதவரை, மேவாதாரை; எனைத்துஒன்றும்- எந்த ஒன்றானாலும், எவ்வளவு சிறியதாயினும்; சொல்லினால்-சொல்லால்; தேறல்-தெளிதல்; பாற்று-இயல்புடையது; அன்று-இல்லை.
|
மனத்தின் அமையா தவரை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தால் பொருத்தமில்லாதவரை;
பரிப்பெருமாள்: மனத்தால் பொருத்தமில்லாதவரை;
பரிதி: மனத்தில் அடக்கமும் நற்குணமும் இல்லாதவரை;
காலிங்கர்: இவ்வாறு நெஞ்சினால் நட்பு அமைவு இல்லாதவரை; [அமைவு-அமைதி]
பரிமேலழகர்: மனத்தால் தம்மொடு மேவாதாரை;
'மனத்தால் பொருத்தமில்லாதவரை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'மனத்தில் ஒட்டாதவரை', 'மனத்தினால் தம்மொடு நட்பாய்ப் பொருந்தி வாராதவரை', 'மனதிற்கு ஒவ்வாதவராகிய பகைவரை', 'மனத்தில் நட்புக்கொள்ளாதவரை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
மனத்தில் நட்பாய்ப் பொருந்தி வாராதவரை என்பது இப்பகுதியின் பொருள்.
எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாதொன்றன் கண்ணும் அவர் சொல்லினால் தெளிதற்பாலதன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது சொல்லினால் அறிதலரிதென்றது.
பரிப்பெருமாள்: யாதொன்றின் கண்ணும் அவர் சொல்லினால் தெளியற்பாற்றன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சொல்லினால் அறிதலரிதென்றது.
பரிதி: ஒன்றாலும் கூடப்படாது என்றவாறு. [கூடப்படாது-நட்டல் கூடாது]
காலிங்கர்: அவர் சொல் பகுதியால் யாதானும் ஒன்று நட்குதல் பகுதியினை உடைத்து அன்று. [நட்குதல்-நட்புக்கொள்ளுதல்]
காலிங்கர் குறிப்புரை: எனவே ஒன்றும் குறிக்கொண்டு தம்மை ஓம்பிக் கொள்க என்பது பொருளாயிற்று. [ஒன்றும் குறிக்கொண்டு -பொருந்து வகையாராய்ந்து]
பரிமேலழகர்: யாதாரு கருமத்தினும் சொல்லால் தெளிதல் முறைமைத்தன்று, நீதிநூல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'நீதி நூல்' என்பது அவாய் நிலையான் வந்தது. பகைமை மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச் செவ்விய சொல் எனக் கருதி, அவரைக் கருமங்களில் தெளிதல் நீதிநூல் முறைமை அன்று என்பதாம்.
'யாதொன்றன் கண்ணும் அவர் சொல்லினால் தெளிதற்பாலதன்று' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எந்த அளவிலும் சொல்லினால் நம்புதல் கூடாது', 'அவரது வாய்ச்சொல்லினால் எந்த ஒன்றாலும் நம்புதல் முறையன்று', 'அவர்கள் எவ்வளவு நல்ல வார்த்தைகள் பேசினாலும் அந்தப் பேச்சைக் கொண்டு அவர்களை நம்பிவிடுவது நல்லதல்ல', 'அவர் சொல்லை வைத்து எவ்வளவும் நம்புவதற்கு இடமில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
எந்த ஒன்றையும் அவர் பேசுவது கொண்டு தெளிதல் கூடாது என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
மனத்தில் நட்பாய்ப் பொருந்தி வாராதவரை அவர் பேசுவது கொண்டு எந்த ஒன்றையும் தேறற்பாற்று அன்று என்பது பாடலின் பொருள்.
'தேறற்பாற்று அன்று' குறிப்பது என்ன?
|
உள்ளம் ஒன்றாத தொடர்புடையவரது பேச்சை எப்படி ஏற்கமுடியும்?
உள்ளத்தால் நெருக்கம் கொள்ளாதவரை, அவர்தம் பேச்சுக் கொண்டு எந்த ஒன்றையும் தெளியக் கூடாது.
நட்பு நாடிப் பழக வருபவர் உலகியல் திறமைவாய்ந்தவராகப் பேசுகிறார்; ஆனால் மனத்தால் உறவு கலவாமல் இருக்கிறார் என்பது தெரிகிறது. அதனால் அவர் பேசுவதை வைத்து எந்த ஒன்றிலும் அவரை நம்பவேண்டாம் என்கிறது குறள். சென்ற குறள் முகக்குறிப்பை மறைத்து ஏமாற்றுபவர் பற்றிச் சொன்னது. இப்பாடல் சொல் திறனால் தம் உள்நோக்கை மறைப்பவர் பற்றியது.
ஒருவர் சொல்வதெல்லாம் உள்ளக் கருத்து ஆகாது. நெஞ்சம் ஒன்று நினைக்கிறது. ஆனால் வெளிவரும் சொல் வேறொன்றாக இருக்கிறது. உட்கருத்தைப் புறப்படுத்துவதற்காக உள்ளது மொழி. உள்ளத்தை ஒளித்துக் காட்டும் பொய்த்திறமும் அதே சொல்லிற்கு உண்டு. உணர்ச்சியை வெளிப்படுத்த உருவான மொழி, அதனை மறைக்கப் பயன்படுத்தப்படுகிறது அல்லது உண்மையை மாற்றிக்காட்ட உதவுகிறது. சிலர் தன்னலத்தைப் பிறர்நலம் போலப் பேசும் சொல்திறம் பெற்றவராயிருப்பர். மனத்துக்கும் சொல்லுக்கும் இடை நின்று உரைக்கும் வஞ்சரான இவரது மொழி வாய்மையா அல்லவா என்பதைக் கண்டறிதல் கடினம். இத்தகையர் நம்முடன் பழகுபவராக இருந்தால் அவர் பேச்சைக் கொஞ்சம்கூட நம்பக்கூடாது. மனத்தின் அமையாதவர் சொற்களை நம்பி செயல்பட்டால் இடர்ப்பட வேண்டியிருக்கும்.
|
'தேறற்பாற்று அன்று' குறிப்பது என்ன?
'தேறற்பாற்று அன்று' என்ற தொடர்க்குத் தெளிதற்பாலதன்று, தெளியற்பாற்றன்று, கூடப்படாது, பகுதியினை உடைத்து அன்று, தெளிதல் முறைமைத்தன்று, தெளிகிறது முறைமைத்தன்று, தெளிதல் நீதியன்று, நம்பித் தெளியக்கூடாது, நம்பித் தெளியும் தன்மையுடையதன்று, தெளிந்தறிதல் இயலாது, நம்புதல் கூடாது, நம்புதல் முறையன்று, நம்பிவிடுவது நல்லதல்ல, தெளிந்து நம்புதல் ஆகாது, நம்புவதற்கு இடமில்லை, தெளிதல் கூடாது, நம்புதற்கு இல்லை, நம்பிவிடலாகாது, நம்பத்தக்க முறைமைத்தன்று அரசியல் நூல், நட்பாகத் தெளிந்துவிடக்கூடாது என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'காலிங்கர் உரை 'எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்றன்று' என்றியைக்கப் பெற்று, 'அவர்சொல் பகுதியால் யாதானும் ஒன்று நட்குதல் பகுதியினை யுடைத்தன்று என்னும் பொருள் தரும். இதன் கருத்து: அவர் சொல்லும் சொல்லின் பகுதியால் எவ்வகையானும் நட்புக் கொள்ளுந் தகுதியை உடைத்தன்று என்பது. அதாவது ஒருவகையானும் நட்புக்குரியதாகாது என்பதாம். இவரை இங்ஙனம் கூறச்செய்தது 'பாற்று' எனும் சொல். பாற்று-பகுதியினையுடையது' (தண்டபாணி தேசிகர்).
இரா சாரங்கபாணி 'சொல்லினால் எனைத்தொன்றும் தேறற்பாற்றன்று எனக் கூட்டிப் பேச்சால் எந்த ஒன்றையும் தெளியக்கூடாது என்று கொள்ளல் நன்று' என்பார்.
மனம் வேறு, சொல் வேறு என்றிருக்கும் வஞ்சகர் சொல்லை நம்பி எதிலும் தெளிவுபெற வேண்டாம் என்ற குறட்கருத்தைத் தருவது 'தேறற்பாற்று அன்று' என்ற தொடர்.
|
மனத்தில் நட்பாய்ப் பொருந்தி வாராதவரை எந்த ஒன்றையும் அவர் பேசுவது கொண்டு தெளிதல் கூடாது என்பது இக்குறட்கருத்து.
உள்ளத்தால் கூடாநட்பை சொல் கொண்டு கூட முயல்வோரை நம்பவேண்டாம்.
மனத்தால் நட்பாய்ப் பொருந்தி வாராதவரை அவரது வாய்ச்சொல்லினால் எந்த ஒன்றையும் தெளிதல் கூடாது.
|