தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து
(அதிகாரம்:கூடா நட்பு
குறள் எண்:828)
பொழிப்பு (மு வரதராசன்): பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக் கருவி மறைந்திருக்கும்; பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.
|
மணக்குடவர் உரை:
தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க.
மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு
காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க.
பரிமேலழகர் உரை:
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம்
மறைந்திருக்கும்: அழுத கண்ணீரும் அனைத்து - அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம்.
(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வழித்
தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும்,
அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தெளியற்க'' என்பது கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
பகைவர் தொழுவதற்குக் கூப்பிய கையகத்தும் படைக்கருவி மறைந்திருக்கும். அப்பகைவர் அழுத கண்ணீரும் அது போன்றே ஒன்றை மறைத்தற்கு இடனாகும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்; அழுத கண்ணீரும் அனைத்து.
பதவுரை: தொழுத-கும்பிட்ட; கை-கை; உள்ளும்-இடத்திலும்; படை-கொலைக்கருவி; ஒடுங்கும்-மறைந்திருக்கும்; ஒன்னார்-பகைவர்; அழுத-புலம்பிய; கண்ணீரும்-கண்களில் பெருகும் நீரும்; அனைத்து-அவ்வளவிற்று.
|
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்: [ஒடுங்கும் - மறைந்திருக்கும்]
பரிப்பெருமாள்: தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்:
பரிதி: தொழுத கையுள் ஆயுதம் அடக்கி;
காலிங்கர்: உள்ளம் பொருந்தாதோர் புறமே தொழுத கையினைக் கண்டால் குறிக்கொண்மின். அதுதானே கொலைக்கருவி அறிந்து ஒடுங்கக் கொண்மின்;
பரிமேலழகர்: ஒன்னார் குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும் படைக்கலம் மறைந்திருக்கும்:
பரிமேலழகர் குறிப்புரை: தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப் பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வழித் தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார். 'ஒடுங்கும்' என்றார். [தேற்றி - தெளியச் செய்து; உய்த்துணர்வுழி - உற்றறியும் பொழுது]
'தொழுதகையுள்ளும் கொலைக்கருவி ஒடுங்கும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'பகைவர் தொழுத கைக்குள் படையிருக்கும்', 'பகைவர்கள் தொழுவதற்குக் கூப்புகின்ற கைகளுக்குள்ளேயும் கொலைக் கருவி மறைந்திருக்கும்', 'பகைவர் கும்பிட்ட கையுள்ளும் தீயபடை அடங்கியிருக்கும்', 'வணங்கிய கைக்குள்ளும் கொல்லும் கருவி மறைந்திருக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
தொழுத கையுள்ளும் கொலைக்கருவி மறைந்து இருக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.
ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவர் அழுதகண்ணீரும் அத்தன்மையதாமென்று கொள்க.
மணக்குடவர் குறிப்புரை: மெல்லியராகத் தொழுதுவந்து ஒத்தார்போல ஒழுகுவாரது நட்பென்றவாறு. இது கூடாநட்பினால்வருங் குற்றங் கூறிற்று. கூடா நட்பினர் வேறு
காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படாரென்க. [தேறப்படார் - தெளியப்படார்]
பரிப்பெருமாள்: பகைவர் அழுதகண்ணீரும் அவ்வாறு கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மெல்லியராகத் தொழுத காலத்தினும் அழுதகாலத்தினும் தேறப்படார் என்பது. இத்துணையும் கூடா நட்பினது இயல்பு கூறப்பட்டது.
பரிதி: வஞ்சனை செய்யும் கண்ணீருமாக இருந்து சதிக்கும் ஈனர் உறவு விடுக என்றவாறு. [சதிக்கும் -சதி செய்யும்; ஈனர் - இழிந்தோர்] .
காலிங்கர்: மற்றவர் ஒன்று உற்ற இடத்து அழுத கண்ணீரும் அத்தன்மைத்து. எனவே அதுவும் உயிர்க்கு இறுதி செய்தற்கு அடிக்கொண்டதோர் கருவி என்றவாறு. [அடிக்கொண்டதோர்- அடித்தளமிட்டது போல்]
காலிங்கர் குறிப்புரை: இங்ஙனம் தொழுதலும் அழுதலும் அன்றி அவர் நகுதலும் அன்னது என்பதனை அறிவிக்கின்றது 'முகத்தினிய நகாஅ....'
பரிமேலழகர்: அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம்.
பரிமேலழகர் குறிப்புரை: பகைவர் தம் மென்மை காட்டித் தொழினும், அழினும், அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம். இதனான் 'அவரைச் செயலால் தெளியற்க'' என்பது கூறப்பட்டது.
'பகைவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு இடனாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவர் அழுத கண்ணீரும் படையாகும்', 'அவர்கள் அழுது வடிக்கிற கண்ணீரிலும் அதைப்போலவே கெட்ட எண்ணம் மறைந்திருக்கும்', 'அவர்கள் அழுத கண்ணீரும் அத்தகையதே', 'பகைவர் அழுத கண்ணீரும் அத்தகையது. (அழுது கண்ணீர் வடித்து ஏமாற்றிக் கொல்வர் என்பதாம்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
பகைவர் கண்ணீர்விட்டு அழுதிடுவதும் அத்தகையதே என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
தொழுத கையுள்ளும் கொலைக்கருவி மறைந்து இருக்கும்; பகைவர் கண்ணீர்விட்டு அழுதிடுவதும் அத்தகையதே என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?
|
தொழுவதையும் அழுவதையும் தம் உள்நோக்கம் மறைப்பதற்காகப் பயன்படுத்துவர் பகை நெஞ்சம் கொண்டோர்.
தம்மை தொழுவது போன்று காட்டிக்கொள்ளும் பகைவரின் கைகளின் உள்ளேயும் கொலைக் கருவி மறைந்திருத்தல் கூடும்; அவர் அழுவது போன்று விடும் கண்ணீரும் அத்தன்மையதே.
மனதில் வஞ்சத்தையும் பகையையும் வைத்துக்கொண்டு நட்புறவாடுபவர்கள் நண்பரைக் கொலைசெய்யவும் அஞ்சமாட்டார்கள். உள்ளத்தில் வெறுப்பை வளர்த்து வைத்து முகத்தில் புன்னகையுடன் நடமாடும் அவர்கள் கும்பிடுவதற்குக் கூப்புகின்ற கைக்குள்ளேயும் கொலைக் கருவி ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
அதுபோல் வஞ்சகமனம் கொண்ட அக் கூடாநட்பினர் பாசாங்கு செய்து அழும் கண்ணீருக்குப் பின்னால் உயிர்க்கு இறுதி செய்யும் எண்ணமும் இருக்கும். அக்கண்ணீரை நம்பி விடக்கூடாது; அதில் கொலைக்கருத்து மறைந்திருக்கும். உயிர் நீப்பதற்காகப் பின்பு எடுக்க விருக்கும் படைக்கலம், முன்பு கை குவிப்பாலும் கண்ணீர் வடிப்பாலும், மறைக்கப்படுவதால் அவற்றிற்குள் 'படையொடுங்கும்' எனப்பட்டது.
வழிபடு வோரை வல்லறி தீயே (புறநானூறு 10 பொருள்: நின்னை வழிபட்டொழுகுவோரை விரைய அறிவை) என்று வழிபடுவோரை அறிந்துகொள் என இச்சங்கப்பாடலும் அறிவுறுத்துகிறது.
குறளின் காலம் கடந்து நிற்கும் சொல்லுக்குச் சான்றாக விளங்குகிறது அண்ணல் காந்தியைக் கோட்ஸே என்ற கொடியன் குவித்த கைகளிலே ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு உயிர் முடித்த நேற்றைய வரலாற்று நிகழ்வு.
|
இக்குறள் கூறும் செய்தி என்ன?
புறத்தில் வணக்கமாக இருப்பதாகக் காட்டி மனத்தளவில் நெருக்கம் இன்றி வெளிநட்பு மட்டும் கொண்டு வஞ்ச எண்ணத்துடன் பழகுபவர்களைப் பற்றிய பாடல் இது.
பகையுள்ளம் கொண்டு பழகுபவர் நம்மை வணங்கும் கையினுள்ளே, அழிவுசெய் கருவி ஒளிக்கப்பட்டிருக்கும். நம் முன்னே தோன்றி அவர் அழுதுவிடும் கண்ணீரும் அவரது பகை எண்ணத்தை மறைப்பதற்காகத்தான். தன் உள்நோக்கத்தை மறைத்து பாதுகாவல் இல்லாத நேரத்தில் நண்பரின் உயிரை நீக்கிக் கொள்வதற்காகவே மெல்லியராகத் தொழுவர்; அழுவர். அவர் நம்பத்தகுந்தவர் அல்லர். நம் இரக்கவுணர்வைப் பெறும் வகையிலும் முயன்று பார்ப்பர்; எனவே விழிப்பாயிருக்கவேண்டும் என்பதாம்.
முன்னர் 'முகத்தின் இனிய' என்ற குறளால் (824) மனம் ஒன்றாதார் நகுதலை நம்பலாகாது என்றார். அதன்பின் சொல்வணக்கம் கண்டு ஏமாறவேண்டாம் எனச் சொல்லப்பட்டது. இங்கே தொழுத கைகளையும் அழும் கண்ணீரையும் பார்த்துத் தெளிந்துவிடாமல் அவரது நோக்கத்தைக் குறிப்பாலேயே உய்த்துணர்ந்து தன்னைக் காத்துக்கொள்க என்பது செய்தி.
|
தொழுத கையுள்ளும் கொலைக்கருவி மறைந்து இருக்கும்; பகைவர் கண்ணீர்விட்டு அழுதிடுவதும் அத்தகையதே என்பது இக்குறட்கருத்து.
கள்ளக் கும்பிடும் போலிக் கண்ணீரும் கூடா நட்பினர்க்கான அடையாளங்கள்.
பகைநெஞ்சம் கொண்டோர் தொழுது வணங்கிய கையுள்ளும் நம்மைக் கொல்லும் கருவி மறைந்திருக்கும். அதுபோலவே, அவர் நடித்து அழும் கண்ணீரிலும் நம் உயிர் முடிக்கும் வஞ்சகம் இருக்கும்.
|