முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும்
(அதிகாரம்:கூடாநட்பு
குறள் எண்:824)
பொழிப்பு (மு வரதராசன்): முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்சவேண்டும்.
|
மணக்குடவர் உரை:
முகத்தால் இனியவாக நக்கு மனத்தால் இன்னாதவாக நினைக்கும் வஞ்சகரை அஞ்சவேண்டும்.
பரிமேலழகர் உரை:
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - கண்டபொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் இன்னாராய வஞ்சரை; அஞ்சப்படும் - அஞ்சல் வேண்டும்.
(நகையது வகை பற்றி 'இனிய' என்றும், அகத்துச் செற்றம் நிகழவும் அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம் குறிப்பறிதற் கருவியாய முகத்தானும் தோன்றாமையின் 'அஞ்சுதல் செய்யப்படும்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் குற்றத்திற்கு ஏதுவாய அவர் கொடுமை கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை:
முகத்தினால் மலர்ந்து இனியவாகப் பேசிச் சிரித்துப் பழகி, அதே சமயம் மனத்தினுள் தீயவற்றையே நினைக்கும் வஞ்சகர்களைக்கண்டு அஞ்சுதல் வேண்டும். அவர்களுடன் நட்புக் கூடாது. முகம் சிரிக்கும்போதே, அகம் தீங்கு செய நினைக்குமாம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா வஞ்சரை அஞ்சப்படும்.
பதவுரை: முகத்தின்-முகத்தால்; இனிய-இனிமையானவையாக; நகாஅ-சிரித்து; அகத்து-மனத்தில்; இன்னா-தீய; வஞ்சரை-ஏமாற்றுந் தன்மையுடையவரை; அஞ்சப்படும்-நடுங்கத்தகும்.
|
முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா வஞ்சரை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முகத்தால் இனியவாக நக்கு மனத்தால் இன்னாதவாக நினைக்கும் வஞ்சகரை;
பரிப்பெருமாள்: முகத்தால் இனியவாகச் சிரித்து மனத்திலே பொல்லாங்கு நினைக்கும் வஞ்சரை;
பரிதி: முகத்தில் சிரிப்பும் மனத்தில் கறுப்பும் உண்டான பேரை;
காலிங்கர்: முகத்தினால் இனியவராக மகிழ்ந்து நகுதலும் செய்து மனத்தின்கண் இன்னாத வஞ்சரைக் காணின்;
பரிமேலழகர்: கண்டபொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும் மனத்தால் இன்னாராய வஞ்சரை; [இன்னாராய - தீயராகிய]
'முகத்தால் இனியவாகச் சிரித்து மனத்தால் இன்னாராய வஞ்சரை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முகத்திலே புன்சிரிப்புக் காட்டி அகத்திலே கொடிய வஞ்சகரை', 'கண்டபோது முகத்தில் இனிமை காட்டிச் சிரித்து மனத்தில் எப்போதும் தீமைதரும் செயலைச் சூழ்கின்ற வஞ்சகர்களை', 'மனதில் தீங்கு செய்ய நினைத்துக் கொண்டு முகத்தளவில் இனிமையாகச் சிரிக்கின்ற கபடமுள்ள பகைவரை', 'பார்வைக்கு நல்லவர்போலச் சிரித்து விளையாடி உள்ளத்திற் கெடுதியுடைய வஞ்சகர்களுக்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
முகத்தில் இனிமை காட்டி நகுதல் செய்து உள்ளத்தில் தீயவற்றை நினைக்கும் வஞ்சகரை என்பது இப்பகுதியின் பொருள்.
அஞ்சப் படும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஞ்சவேண்டும்.
பரிப்பெருமாள்: அஞ்சவேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் நட்பாய் ஒழுகுவாரது உள்ளக்கருத்து அறியவேணும் என்றார். இஃது அறியுங்கால் குறிப்பினாதல் சொல்லினாதல் அறிய வேண்டும் அன்றே; அவை எல்லாவற்றானும் அறிதல் அரிது என்பார் முற்படக் குறிப்பினால் அறிதல் அரிது என்பதூஉம் கூறப்பட்டது.
பரிதி: எமனிலும் அஞ்சப்படும் என்றவாறு.
காலிங்கர்: அஞ்சப்படும் என்றவாறு.
பரிமேலழகர்: அஞ்சல் வேண்டும்.
பரிமேலழகர் குறிப்புரை: நகையது வகை பற்றி 'இனிய' என்றும், அகத்துச் செற்றம் நிகழவும் அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம் குறிப்பறிதற் கருவியாய முகத்தானும் தோன்றாமையின் 'அஞ்சுதல் செய்யப்படும்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் குற்றத்திற்கு ஏதுவாய அவர் கொடுமை கூறப்பட்டது. [அகத்துச் செற்றம்- மனத்தின் சினம்; மறுதலையாய நகை - மாறுபட்ட சிரிப்பு.]
'அஞ்சவேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அஞ்ச வேண்டும்', 'அஞ்ச வேண்டும்', 'அச்சமின்றி நட்பாக நம்பிவிடக் கூடாது', 'அஞ்சுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அஞ்சுதல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
முகத்தில் இனிமை காட்டி நகுதல் செய்து உள்ளத்தில் தீயவற்றை நினைக்கும் வஞ்சகரை அஞ்சப்படும் என்பது பாடலின் பொருள்.
'அஞ்சப்படும்' குறிப்பது என்ன?
|
வஞ்சனையுள்ளத்தை இன்முகத்திரையால் மறைத்துப் பழகுபவரிடமிருந்து விலகிநிற்க.
முகத்திலே இனிமை தோன்ற நடித்துச் சிரித்து மனத்தால் தீமையெண்ணும் வஞ்சகரை நட்க அஞ்சுதல் வேண்டும்.
பலர்க்குச் சிந்தனையெல்லாம் வஞ்சனையாக உள்ளது. அறிவின் ஆட்சிகொண்டு நல்லது செய்ய நினையாமல் பிறரை வஞ்சித்து வாழவே இவர்கள் விழைகிறார்கள். யார் நல்லவர் யார் ஏமாற்றுக்காரர் என்பது வெளித்தோற்றத்தில் புலப்படுவதில்லை. முகமலர்ந்து சிரிப்பவர் மனத்தால் பொல்லாத வஞ்சகர்களாக இருக்கிறார்கள். அவர்களது முகக் குறிப்புக்கள் மூலமோ அல்லது சொற்கள் மூலமாகவோ அவர்களது உள்ளக்கிடக்கையை அறிதல் இயலாதொன்றாக இருக்கிறது. நாம் நம்புகிறவர்களில் பலர் நம்மை ஏமாற்றவே விரும்புகின்றனர்.
இனிமையாகச் சிரித்துப் பழகும் அதேசமயம் அகத்திலே நமக்கு ஊறுவிளைக்க நினைப்பவரின் உறவினை, விளையும் தீமைக்கு அஞ்சி, விட்டு விட வேண்டும்.
புறத்தே பொருந்துவதுபோல் காட்டி அகத்து அகத்தே கூடாதிருப்பவருடனான தொடர்பு கூடாநட்பாகும். இவர் நேரில் காணும்போது சிரித்துப் பேசி, பகை நெஞ்சத்தால் நம்மை அழிக்க நினைப்பவராதலால் அஞ்சப்படவேண்டியவராவர்.
|
'அஞ்சப்படும்' குறிப்பது என்ன?
'அஞ்சப்படும்' என்ற சொல் நினைக்கப்படும் (169), வைக்கப்படும் (50), அஞ்சப்படும் (824), உணரப்படும் (1096) எனக் குறளிற் பயின்று வரும் சொல்லாட்சி போலவே உள்ளதால், அது அஞ்சவேண்டும் என்ற பொருள் தரும்.
நமக்குத் தீங்கு இழைக்க வேண்டும் என்ற நோக்கிலே முகநகப் பழகுபவர்களைப் பற்றிய பாடல் இது.
நெருங்கிய நண்பர்கள் போலவே நம்முடன் உறவாடுவதால் பகைநெஞ்சம் கொண்டவர்களைக் காணுகின்றபோது இனம் புரிவதில்லை.
நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்கள் போலத்தான் தோன்றுவார்கள்; உரையாடுவார்கள்; இனிமையான புன்முறுவலுடன் நகைத்துப் பேசி அவர்கள் மீது ஐயம் ஏதும் எழாமல் பார்த்துக்கொள்வர். ஆனால் நம் மனம் மாறிநிற்கும் நிலையில் அந்த வஞ்சகர்கள் நம்மை ஏமாற்றிவிடுவார்கள்.
நெஞ்சத்தில் இருப்பதை முகம் காட்டிவிடுமே என்றால் இவர்கள் முகமலர்ச்சி காட்டி உள்ளத்தில் உள்ள பகையை மறைத்து விடக்கூடிய அளவுக்கு ஆற்றல் பெற்ற வஞ்சர்களாவர்.
நட்பாக உறவாடிக் கொண்டிருக்கும்போதே தீயநோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டிருப்பர். அதனால்தான் இவர்கள் அஞ்சத்தக்கவர்கள் எனச் சொல்லப்பட்டது.
யாராக இருந்தால் என்ன என்று நட்பைத் தொடர்ந்தால் பின்னால் துன்பம்தான் உண்டாகும். அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.
'அஞ்சப்படும்' என்றது அஞ்சவேண்டும் என்ற பொருள் தருவது.
|
முகத்தில் இனிமை காட்டி நகுதல் செய்து உள்ளத்தில் தீயவற்றை நினைக்கும் வஞ்சகரை அஞ்சுதல் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.
கள்ள மனம் கொண்ட கூடாநட்பு காதத்தொலைவு தள்ளிவைக்கத்தக்கது.
முகத்தில் இனிமை காட்டி மகிழ்ந்து மனத்தில் தீமைதருவனவற்றை எண்ணும் வஞ்சகர்களை அஞ்ச வேண்டும்.
|