இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0827



சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்

(அதிகாரம்:கூடாநட்பு குறள் எண்:827)

பொழிப்பு (மு வரதராசன்): வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக் குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக்கூடாது.

மணக்குடவர் உரை: வில்லினது வணக்கம் தீமையைக் குறித்தமை ஏதுவாகத் தாழச்சொல்லுஞ் சொல்லைப் பகைவார்மாட்டு நன்று சொன்னாரென்று கொள்ளாதொழிக.
இது தாழச்சொல்லினும் தேறப்படா ரென்றது.

பரிமேலழகர் உரை: வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால்; ஒன்னார் கண் சொல் வணக்கம் கொள்ளற்க - பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க.
'(தம் வணக்கம் அன்று என்பது தோன்றச் 'சொல்வணக்கம்' என்றும் வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமைபற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார். வில்லினது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின்மேல் நிற்றலான். ஒன்னாரது குறிப்பும் அவரினாய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்கு குறித்த வணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம். இவை மூன்று பாட்டானும் 'அவரைச் சொல்லால் தெளியற்க' என்பது கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: வில்லானது வணங்கியிருப்பது அம்பினால் கெடுதி விளைக்கப் பயன்படுதற்கு; அதுபோலப் பகைவரது இனிய சொல்லும் ஆம்; ஆதலால் அவர்களது சொல் வணக்கத்தை உண்மையாக நம்பி ஏற்றுக் கொள்ளுதல் கூடாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க.

பதவுரை: சொல்-மொழி; வணக்கம்-பணிவு; ஒன்னார்கண்-பகைவர் மாட்டு; கொள்ளற்க-கொள்ளாதொழிக; வில்-வில்; வணக்கம்-வளைவு; தீங்கு-தீமை; குறித்தமையான்-கருதியமையாமல்.


சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாழச்சொல்லுஞ் சொல்லைப் பகைவார்மாட்டு நன்று சொன்னாரென்று கொள்ளாதொழிக.
பரிப்பெருமாள்: தாழச் சொல்லுஞ் சொல்வல்ல பகைவார்மாட்டு நன்று சொன்னாரென்று கொள்ளாதொழிக.
பரிதி: துர்ச்சனன் வணங்குவதால் நல்லவன் என்று சொல்லுவர்; அவனை நம்ப வேண்டா;
காலிங்கர்: முன்னரே வந்து சொல்லும் சொல் வணக்கத்தை அகம் பொருந்தார்மாட்டு என்றும் கைக்கொள்ளாது ஒழிக; [கைக்கொள்ளாது - மேற்கொள்ளாமல்]
பரிமேலழகர்: பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க.

'தாழச்சொல்லுஞ் சொல்லைப் பகைவார்மாட்டு நன்று சொன்னாரென்று கொள்ளாதொழிக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பகைவரின் சொற்பணிவு கண்டு ஏமாறாதே', 'பகைவரிடம் காணப்பெறும் சொல்லடக்கத்தை நல்லதாகக் கொள்ளக் கூடாது; தீமையே பயக்கும்', 'பகைவர்களுடைய சொல் வணக்கமுடையதாக இருப்பதும் தீமை செய்வதையே குறியாகக் கொண்டதாக இருக்குமானதால் அதை நம்பிவிடக்கூடாது', 'பகைவரிடம் காணப்படும் சொல் வணக்கத்தை நன்மை தரும் என்று கொள்ளாதே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகைவரது சொற்பணிவை நம்பற்க என்பது இப்பகுதியின் பொருள்.

வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வில்லினது வணக்கம் தீமையைக் குறித்தமை ஏதுவாக.
மணக்குடவர் குறிப்புரை: இது தாழச்சொல்லினும் தேறப்படா ரென்றது.
பரிப்பெருமாள்: வில்லினது வணக்கம் தீமையைக் குறித்தமை ஏதுவாக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தாழச்சொல்லினும் தேறப்படாது என்றது.
பரிதி: அது எதுபோல் என்றால் கொலை செய்வதற்கு வில் வளைத்ததனோடு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: என் எனின், வில் வளைந்த வணக்கம் எத்துணை உண்டு; அத்துணையும் கொலைக் குறித்து நின்றமையால் அது நினைக்கவேண்டும் என்றவாறு.
பரிமேலழகர்: வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால்; [ஏற்றவர்க்கு - எதிர்த்தவர்க்கு]
பரிமேலழகர் குறிப்புரை: தம் வணக்கம் அன்று என்பது தோன்றச் 'சொல்வணக்கம்' என்றும் வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமைபற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார். வில்லினது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின்மேல் நிற்றலான். ஒன்னாரது குறிப்பும் அவரினாய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்கு குறித்த வணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம். இவை மூன்று பாட்டானும் 'அவரைச் சொல்லால் தெளியற்க' என்பது கூறப்பட்டது. [வில்லியது குறிப்பு.-வில்லையுடையவனது குறிப்பு]

'வில்லினது வணக்கம் தீமையைக் குறித்தமையால்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வில்லின் வளைவு தீமைக்கு அறிகுறி', 'வில்லின் வளைவு தீமை செய்தலைக் குறிக்கொண்டமையால்', 'வில் வணங்குவது தீமை செய்வதையே குறியாகக் கொண்டது போல', 'வில்லினது வளைவு பிறர்க்குத் தீங்கு செய்தலை அறிவித்தமையால்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வில்லின் வளைவு தீமைசெய்தலைக் குறிக்கொண்டமையால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பகைவரது சொற்பணிவை நம்பற்க; வில்வணக்கம் தீமைசெய்தலைக் குறிக்கொண்டமையால் என்பது பாடலின் பொருள்.
'வில்வணக்கம்' என்றால் என்ன?

பணிவாகத்தானே பேசுகிறான் என்பதற்காக பகைவரிடம் மயக்கம் கொள்ளவேண்டாம்.

வில்லினது வளைவு தீங்கு செய்தலைக் குறிக்கும்; பகைவர்தம் வணக்கத்தோடு கூடிய சொல்லினை அப்படியே ஏற்கக் கூடாது.
வில்லை வளைப்பது எதற்காக? அம்பால் அது தாக்கும் ஆற்றலை மிகுவிப்பதற்காக. அதுபோல் பகைவர் நம்மிடம் மிகவும் சொல்லடக்கத்தோடு பேசினால் அவர் நமக்கு ஊறு செய்யக் காத்திருக்கிறார் என்று அறியவேண்டும். எனவே அவரது பணிவுச் சொல்லை அப்பொழுதே மறந்துவிட வேண்டும்.
வில் வணங்கிற்றே என்று பகைவர் கையில் உள்ள வில்லையும் அம்பையும் நினைக்காமல் இருக்க முடியுமா? பகைவர் உள்ளத்தால் வணங்குதல் இல்லை. அவர் சொல்லினால் பணிகிறார் என்றால் அது தீமைசெய்யும் குறிப்புடையதே என்பதை உணர்ந்து அவர் சொல்லைப் புறக்கணித்து எச்சரிக்கையுடன் நாம் உரையாடவேண்டும். பகைவனது பணிவான சொல் கேட்டு ஏமாறலாகாது; சொல்வணக்கம் தீமைக்கு அறிகுறி என்பது கருத்து.

'வணக்கம் என்ற சொல், வணக்கம் வளைவு என்னும் பொருளில் இரு வேறுபட்ட சொற்களோடு இணைந்துள்ளமை புதுமையானதாகும்' என்பர்.

'வில்வணக்கம்' என்றால் என்ன?

வில்லை வளைத்து அம்பு தெறிப்பர். தெறிக்க விட்ட அம்பு குறிக்கப்பட்ட பொருளைத் துளைத்துத் தாக்கி அழிக்கும். அம்பை எய்வதற்கு முன் அதை நன்கு வளைப்பர். வில் எவ்வளவு வளைகிறதோ அத்துணை விரைந்து அம்பு கடுமையாகத் தாக்கும். வளைத்த வில்லானது செலுத்தும் ஆற்றலைத் தனக்குத் தந்து சென்று தைக்கும் ஆற்றலை அம்புக்குத் தருகிறது. அதுபோலப் பகைவர் சொற்களின் பணிவு எவ்வளவுக்கு தோன்றுகிறதோ அவ்வளவு கேடு செய்யக் காத்திருக்கிறான் எனச் சொல்லப்பட்டது.

'வில்வணக்கம்' என்றது வில்வளைவு என்ற பொருளது.

பகைவரது சொற்பணிவை நம்பற்க; வில்லின் வளைவு தீமைசெய்தலைக் குறிக்கொண்டமையால் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கூடாநட்பினரின் சொற்பணிவைக் கண்டும் காணாததுபோல் இருந்துவிடுக.

பொழிப்பு

பகைவர் சொற்பணிவை நம்பவேண்டாம்; வில்லின் வளைவு தீமைசெய்தலைக் குறியாகக் கொண்டது போன்றதது.