இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0822



இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்

(அதிகாரம்:கூடாநட்பு குறள் எண்:822)

பொழிப்பு (மு வரதராசன்): இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம்போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

மணக்குடவர் உரை: நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு, பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க.
இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும்.
(அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: உறவினர்போல் நடித்து உண்மையாக உற்றாராய்ப் பயன்படாதவர் நேயம் பெண்ணியலார் மனம்போல் மாறுபடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்மனம் போல வேறுபடும்.

பதவுரை: இனம்-(நட்பு)உறவினர்; போன்று-போல; இனம்அல்லார்-(மனத்தினால்) உற்றார் அல்லாதவர்; கேண்மை-நட்பு; மகளிர்-மகளிர்; மனம்-உள்ளம்; போல-ஒக்க; வேறுபடும்-ஒருப்பட்டிராது, பிறிது ஆகும்.


இனம்போன்று இனமல்லார் கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு;
பரிப்பெருமாள்: நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு;
பரிதி: இனம்போலக் கூடியிருக்கையிலே மனம் பகையாயினார் உறவு;
காலிங்கர்: புறத்து ஒருவரோடு ஒத்தார் போன்று இருந்து அகத்து அவ்வினம் இல்லாதார் நடிக்கும் நடிப்பு;
பரிமேலழகர்: தமக்கு உற்றார் போன்று உறாதாரோடு உளதாய நட்பு;

'நட்டோர் போன்று மனத்தினான் நட்பில்லாதார் நட்பு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறவுபோல நடிக்கும் வஞ்சகரின் நட்பு', 'தமக்கு உற்றவர் போன்று இருந்துகொண்டு பகைவராய் நடப்பாரது நட்பு', 'நண்பரைப் போன்று நடிக்கும் நண்பரல்லாத பகைவருடைய நட்பு', 'உறவினர்போல் நடித்து உண்மையாக உற்றாராய்ப் பயன்படாதவர் நேயம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நட்புறவினர் போன்று பழகி உள்ளத்தில் நட்பில்லாதார் உறவு என்பது இப்பகுதியின் பொருள்.

மகளிர் மனம்போல வேறு படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க.
மணக்குடவர் குறிப்புரை: இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: பெண் மனம்போல வேறுபடும்; ஆதலால், அவருள்ளக் கருத்தறிந்து கொள்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நட்பாயொழுகுவாரது உள்ளக்கருத்தறிய வேண்டு மென்றது.
பரிதி: இருமனப் பெண்டிர் போலும் என்றவாறு.
காலிங்கர்: மகளிர் தமது உள்ளம் போல் இடம் காணின் வேறுபட்டு விடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: பொதுமகளிர் என்னாது மகளிர் எனப் பொதுவகையால் கூறியது குலமகளிரும் குணம் கெடுதல் கூடும் என்பது குறிப்பு என்று அறிக.
பரிமேலழகர்: இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும்.
பரிமேலழகர் குறிப்புரை: அவர் மனம் வேறுபடுதல் 'பெண்மனம் பேதின்று ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்' (வளையாபதி புறத்திரட்டு-பேதைமை,18) என்பதனானுமறிக. நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல். இவை இரண்டு பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.

'பெண் மனம்போல/இருமனப் பெண்டிர் போலும்/மகளிர் தமது உள்ளம் போல்/இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பரத்தை மனம்போல மாறுபடும்', 'அன்புடையராய் நடித்துப் பொருள்கவரும் இருமனப்பெண்டிர் மனம்போல வேறுபட்டு விடும்', 'மனைவியைப் போலவே நடிக்கும் மனைவியல்லாத வேசியின் மனம் போல வேறு நோக்கமுள்ளாதாக இருக்கும்', 'பெண்ணியலார் மனம்போல் மாறுபடும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மகளிர் மனம்போல் மாறுபடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நட்புறவினர் போன்று பழகி உள்ளத்தில் நட்பில்லாதார் உறவு மகளிர் மனம்போல் மாறுபடும் என்பது பாடலின் பொருள்.
'மகளிர் மனம்போல' குறிப்பது என்ன?

உள்ளத்தால் நட்பற்றவர் உண்மையாக இருக்க மாட்டார்.

உறவினர் போலவே காட்டிக்கொண்டு, மனத்திலே உறவு அல்லாதவராக இருப்பவரது நட்பானது மகளிரின் மனம் போன்று ஒருப்படாமல் நிற்கும்.
சிலர் உறவு போல் இருந்து உறவுகொள்ளாதவராய் ஒழுகுவார்கள். ஒத்தமனத்தினர் என்பது போல வெளியில் காட்டிக்கொண்டு உண்மையாக உறவு பாராட்டாதவர்களது நட்பு மகளிர் மனம்போல் வேறுபடும்.
பெண்ணின் கற்பைச் சிறைசெய்து காக்கமுடியாது. அவளுக்குத் தன் நிறை காப்பதே தலைசிறந்த பண்பு. குலப்பெண்டிர் மனம் திண்ணியராய் பிறர் உதவியின்றித் தம்மைக் காத்துக்கொள்வர். இக்குணம் கொண்ட பெண்ணை 'ஒருமை மகளிர்' என வள்ளுவர் சிறப்புப் பெயரால் உயர்நிலையில் அழைப்பார். சில பெண்கள் சிலவேளைகளில் உள்ளம் தடுமாறி மணம் கடந்த உறவுளில் ஈடுபடலாம். அவர்கள் ஒருமனப் பெண்டிர் அல்லர். அவர்கள் சபல புத்தியுள்ள, நிலையற்ற பெண்கள். இத்தகைய மகளிரைப் போன்றவர்கள் உள்ளத்தால் ஒன்றுபடாத நட்பாளர்கள் ஆவர். இனம்போலப் பழகி, அகத்தே நட்பற்ற இவர்கள் நம்பத்தகுந்தவர் அல்லர். அவர்களது உள்ளக் கருத்தறிந்து அவர்களுடனான நட்புறவை உடன் நீக்கிக் கொள்ளவேண்டும் எனக் குறிப்பால் அறிவுறுத்துகிறது இக்குறள்.

'மகளிர் மனம்போல' குறிப்பது என்ன?

இனம் போன்று இனமல்லார் கேண்மைக்கு மனம் வேறுபடுகிற மகளிர் மனம் உவமையாக்கப்பட்டுள்ளது. மனம் வேறுபடுதல் என்பது பாலியல் வரம்பு மீறுவதைக் குறிப்பதாகப் பொருள் காண்பர். அடைகொடாது வாளா மகளிர் என்று பாடலில் சொல்லப்பட்டுள்ள அந்த 'மகளிர்' யார்?
மகளிராய்ப் பிறந்தார்க்கெல்லாம் மனம் வேறுபடுதல் இயல்பு என்ற எண்ணம் உள்ளவர்கள் மகளிரின் பொதுமனநிலையையே இக்குறள் கூறுவதாகக் கொள்கிறார்கள். மற்றும் சிலர் பலமனம் கொண்ட பொதுமகளிரைக் குறிக்கும் என்றனர். மகளிர் மனம் என்பதற்கு மணக்குடவர் பெண்மனம் எனப் பொருள் கூறினார், பரிதி இருமனப் பெண்டிர் என்றார். காலிங்கர் உரை 'பொதுமகளிர் என்னாது மகளிர் எனப் பொதுவகையால் கூறியது குலமகளிரும் குணம் கெடுதல் கூடும் என்பது குறிப்பு' என்கிறது. மகளிர் என்றதால் குலமகளிர்க்கும் இக்குற்றம் ஏற்கும் எனக்காட்டுகிறார் இவர். பரிமேலழகர் 'இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல வேறுபடும்' என்று உரைப்பதால் அவரும் காலிங்கர் உரையை ஒத்துக் கொள்பவர் எனத் தெரிகிறது.

இரு மனப்பெண்டிர் (920) எனப் பொதுமகளிரை வள்ளுவர் அவர்களது மனநிலையில் வைத்துக் கூறுவார். வேறுபடும் மனம் கொண்ட பெண் பற்றி இங்கு சொல்லப்படுவதால், அது இருமனப் பெண்டிரையே அதாவது விலை மகளிரையே குறிக்கும் என பெரும்பான்மை உரையாளர்கள் கூறினர். மேலும் பிற நெஞ்சிற் பேணிப் புணர்வர் (917) என்னும் குறளையும் சுட்டிக் காட்டினர். இவர்கள் பெண்ணெனப் படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா; உண்ணிறை யுடைய வல்ல ஓராயிர மனத்த வாகும் எனும் சிந்தாமணிப் பாடலை(159)யும் பெண்மனம் பேதின் றொருப்பேன் என்னும்; எண்ணில் ஒருவன் என்ற வளையாபதிச் செய்யுளை(49)யும் எடுத்துக்காட்டுவர் இவற்றைப் படிப்போருக்கு பெண் ஒராயிரம் மனத்தவர் என்பது போலத் தோன்றும்.

ஒருமை மகளிர் (974) எனத் தன் கணவன் தவிர வேறு ஆடவரை விரும்பாத கற்புடைய பெண்டிரைக் குறள் குறிக்கும்.
விலைமகளிர் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றித் தங்களது தொழிலை அறிவிப்பவர்கள். அவர்களது நோக்கம் மறைவாக வைக்கப்படுவதில்லை. அவர்கள் உற்றார் போன்று உறாதாராக நடிக்க மாட்டார்கள்; அதற்குத் தேவையுமில்லை. எனவே அவர்களே இப்பாடலுக்கு உவமப் பொருளானார்கள் என்பது பொருந்தாது.
காலிங்கர் 'குலமகளிருங் குணம் கெடுதல் கூடும்' எனக் கூறுகிறார். குலமகளிர் போலக் காணப்பட்டு காலமும் இடமும் வாய்த்தபோது மனம் வேறுபடும் பெண்கள் போல, வெளியில் நட்புப் போல நடித்துக் காட்டும் இனம் போன்று இனமல்லார் சமயம் வாய்த்த போது கேண்மை இழந்து கேடு செய்வர் என்பது இக்குறட்குப் பொருத்தமான பொருள் ஆகலாம்.

'மகளிர் மனம்போல' என்பதில் உள்ள மகளிர் 'ஒருமைமகளிர் அல்லாத' பெண்டிரைக் குறித்தது.

நட்புறவினர் போன்று பழகி உள்ளத்தில் நட்பில்லாதார் உறவு மகளிர் மனம்போல் மாறுபடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மகளிர் குணம் வேறுபடுதல் போல் கூடாநட்பு மாறுபடும்.

பொழிப்பு

நட்பினர் போலப் பழகி மனதில் நட்பற்றவராக உள்ளவரது உறவு மகளிர் மனம்போல் மாறுபடும்.